புதன், 22 பிப்ரவரி, 2017

பதினெட்டுப்படி அரசனே!

1. சபரிமலை தன்னில் சாஸ்தாவான ஐயப்பனே
         சரணமுடன் பதினெட்டுப் படியேற மகிழ்பவனே
       தபத்தால் உனைக் காணேன் தாயன்புத் தெய்வமே
            துளசிமாலை அணிந்தேன் தூயவனைக் கண்டேனே
 பாபம் தொலைத்திட பதினெட்டுப் படிகளில்
         பரிவார தெய்வமோடு பார்த்திருக்கும் பாலகனே
                  சாபமும் சோகமும் சடுதியில் விலகிட
            சோதியாய் விளங்கும் சன்னதியை வணங்குவனே!

2. நாகயட்சியாகி படிஒன்றில் நலங்காக்கும் நாயகியே
    நல்லவரைக் காத்திட நீசன் மகிஷனை வதைத்து
   மகிஷாசுர மர்த்தனியாய் படியிரண்டில் இருப்பவளே
 மணிகண்டன் மனம் மகிழும் அன்னதானமதில்
       அகமகிழும் அன்னபூர்ணாவாய் அன்னத்தின் அதிபதியாய்
அழகாக படிமூன்றில் அமர்ந்திடும் அன்னையே
              ஆக்கலும் அழித்தலும் அன்றாடத் தொழிலாகி
                அநியாயம் போக்கிட அவதரித்த காளியாய்
              பக்தனுக்கு துணையாக பகல்இரவு எந்நேரமும்
   படிநான்கில் இருப்பவளே பாசமுடன் காப்பவளே

3. பயங்கர உருவமோடு பயங்காட்டும் கிருஷ்ணகாளி
  பக்தர்களின் பயம்நீங்க படிஐந்தில் இருப்பவளே
 பெயருண்டு யட்சியென பார்வதியின் உக்ரவடிவம்
    படிஆறில் வீற்றிருந்து சக்திபைரவி காத்திடுவாள்
               ஐயப்பா சாஸ்தாவை ஐயமின்றி வழிபட
  அருட்குரு தாத்தரேயர் அகங்கனிந்து வழிகாட்ட
     மெய்யாக ஈடுபட்ட மேன்மைமிகு கார்த்தவீர்யாஜுனர்
    மகிழ்வோடு படிஏழில் மகிமையுடன் வீற்றிருப்பார்

     4. கருப்புசாமியாய் பூதசேனையின் கருத்துமிகு தலைவனாய்
 கிருஷ்நாபன் பெயரோடு காக்கும் பாதுகாவலன்
              விருப்புடன் படிஎட்டில் வீற்றிருக்கும் நாயகனே
   வெல்லும் போர்வீரனாய் வீரஅசுரர் குலத்தவனாய்
 குருவாகி அமர்ந்தவன் குமரன்அருள் பெற்றவனாய்
    குருசாஸ்தா படிஒன்பதில் இடும்பனாக நிற்பவனே
              உருப்பல கொண்ட உயர்பூதபேய் தலைவனாய்
                உக்ரபைரவ அம்சமாக உருவான பரிவாரம்
              உருகும் வேதாளமாகி உலகுகாக்கும் ஐயனின்
 உயர்படி பத்தினில் உல்லாசமாய் இருப்பவனே

5. நாகராஜன் சர்ப்பதோஷம் நீக்கும் நாகர்தலைவன்
        நன்மைதரும் படிபதினொன்றில் நகர்ந்திடும்ராஜனே
   மோகினி பாலகனுக்கு மலைமேல் கோவிலெடுத்த
  மாமுனி பரசுராமர் மாதாவான ரேணுகாதேவி
  மகாசித்தர் ரேவணரிடம் மந்திர உபதேசம்பெற்று
       மாமலை சபரியில்படி பன்னிரண்டில் இருப்பவளே
மகாவிரதம் ஏற்றிடும் மணிகண்டன் பக்தருக்கு
     மெல்லக் கனவினிலில் மாஒளியாய் வந்திருந்து
               மகாநல்வழி காட்டும் மங்கை ஸ்வப்னவராகி
         மேலெழும் படிபதிமூன்றில் மகிழ்ந்தே குடியிருப்பாள

6. காளியை வென்றிடும் கடுமையான உக்ரதேவி
          காப்பதில் தன்னிகரிலா தாய்மை பிரத்யங்கராதேவி
      ஒளியான படிபதினாங்கில் ஒளியாகி காத்திடுவாள்
      ஒங்கார சோதியவன் ஒர்படியில் வீற்றிருப்பாள
 வளமான வாழ்வுதர விளங்கும் நெற்கதிர்ஏந்தி
    வராகப் பெருமானின் வலம் அமர்ந்த பூமாதேவி
    உளமாற படிபதினைந்தில் உறைந்திடும் தேவியே
உலகின் தீமைகள் உத்தமனின் பக்தரை
                தளமாக நிறைந்து தயங்காமல் காத்திட
         தனியழகர் அஸ்திரத்தேவர் தனிப்பெயர் அகோரம்
  களமெலாம் கனியபடி பதினாறில் நின்றிடுவான்
    காலமெலாம் காவலாக கடுகியே வந்திடுவார்

7. பரமேஸ்வரன் கைகொண்ட பாசுபதம் எனும்தனுசு
   பகைவரை அழித்திட பாய்ந்துவரும் வில் அது
               தரணியில் வந்துதித்த தன்மகன் ஐயப்பன்
   தங்கிடும் சபரிமலை தங்கமான படிபதீனேழில
 அரங்கமென அமைந்திருக்கும் அழகான நிலையே
அரனின் ஆயுதம் அவன்கை மிருதயுஞ்ஜயம்
               விரும்பியது அடைய வைக்கும் உடல்நலம்
     விருத்தியாகும் பக்தனின் வைராக்யம் போற்றியே
   மேருவென தெய்வநிலை மேன்மையை அளிக்கும்
           மேலானபடி பதினெட்டில் பாரியென கருணைபொழியும்

8. பதினெட்டு படிதன்னில் பரிவாரத் தெய்வமோடு
பக்தர்கள் ஏறிவர பாசமோடு காத்திருந்து
      துதிப்பவர்க்கு நீயேஅது 'தத்வமஸி'என தெளிவித்து
       துன்பமெலாம் நீக்கி தூயமனதோடு இன்பமாக்கி
                குதிகால் மடக்கி யோகப் பட்டயமோடு
                   குன்றினில் அமர்ந்த குருவே பூதநாதா
     மதியோடு இருமுடியோடு மகிழ்வோடு உனைநாடி
        மங்கல சோதிகாண மலைநாடும் ஐயப்பமாருக்கு
                கதியாக நீயிருந்து கைதூக்கி விடுகஎன
        கரங்கூப்பி சரணம்கூறி கால்களில் வீழ்கின்றேன்

தந்தருள்வாய்!

                                                             தந்தருள்வாய்!

நந்தி பின்னிருக்க நளினமாய்சிவம் சாய்ந்திருக்க
   நாகம் கழுத்திலாட நற்கங்கை தலையிலாட
சந்திரப் பிறை சடையிலாட சதிராடும் குழையாட
   செம்மேனி எங்கும் சீர் உத்திராட்சம் உவந்தாட
முந்திவரும் புலித்தோல் முழங்கால் வரையிலாட
   முன்காலில் சிலம்புகள் முறுவலித்து சதிபோட
 சிந்தையில் புகுந்தாட சிவபேருமானே வந்தாடு
    சிவராத்திரி நன்னாளில் சிவபதவி தந்தருளவே!

                                                                                                        ராதாகவி