வியாழன், 23 ஜூன், 2016

பிரசன்ன மகா கணபதி



ஸ்ரீ பிரசன்ன மகா கணபதி நூறு
காப்பு

பிரசன்ன மகா கணபதி

ஸ்ரீ பிரசன்ன மகாகணபதி நூறு
சமர்ப்பணம்

எங்களை தன் குழந்தைகளுக்கும்
மேலாக பேணிகாத்து படிக்க
வைத்து இன்று நல்லநிலையில்
விளங்க ஆதாரசக்தியாக, உடல்
உழைப்பாலும், உன்னத அன்பாலும்
உயர்த்திய எனது பாட்டி (அவர்எனக்கு அம்மாதான்)
திருமதி. செல்லம்மாள் அவர்களுக்கு இக்கவிதை நூல்
              சமர்ப்பணம்


ஸ்ரீ பிரசன்ன மகாகணபதி நூறு
எழுதக் காரணம் ஒரு சில கருத்துக்கள்

அன்னதானம் செய்யவேண்டும் என்ற எண்ணம் சிலநாட்களாவே மனதில் தோன்றியது. வழக்கம்போல் காலையில் கணபதியை தொழுதபோது "அன்னதானம் துவங்கு" என்று ஒருகுரல் கேட்டது 14.4.2015 முதல் 31.5.2015 முடிய 48 நாட்கள் தினசரி 10 பேருக்கு தயிர்சாதம் என்கைகளால் தயார்செய்து ஸ்ரீ பிரசன்ன மகா கணபதியின் அருளோடு கொடுத்து நிறைவு செய்ய அந்த மகாகணபதியே உடனிருந்து செய்வித்து விட்டார்

அந்தபேரருளுக்கு என்னால் என்ன செய்யமுடியும்? அவரை துதித்துதான் நன்றிகூறமுடியும். எனவே "ஸ்ரீ பிரசன்ன மகாகணபதி நூறு" என்ற 100 பாடல்களை கொண்ட கவிதைதொகுப்பு கடந்து 23.4.2015 - 25.5.2015 முடிய இக்கவிதைகளை எழுதியுள்ளேன். ஸ்ரீ மகா கணபதி திருப்பாதங்களில் இக் கவிமாலையை சூட்டுகிறேன் எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் அவரைத்தொழும் அனைவருக்கும் அவரவர் விரும்பும் தகுதியாவைற்றை அளித்து ஆசிர்வதிப்பார் என்ற நம்பிக்கையுடன் வணங்கி இக்கவிதைநூலை அவர்சன்னதியில் சமர்ப்பிக்கிறேன்

1.6.2015                                          ராதாகவி



ஏகதந்தம் பொருந்த எடுத்த தந்தம்ஒடித்து
  ஏற்றமிகு பாரதம் எழுதிய விநாயகா
மகாஞானியே மாசிலா மரத்தடி பெருமானே
  மனதில் எழுந்த மாபெரும் ஆசை
சகத்தினில் அறிவும் சக்தியும் அருள்கின்ற
  சுந்தரனே உன்னை சந்தக்கவி நூறுபாட
அகத்தினில் வைத்தேன் அன்னபோடு துணைவந்து
  அழகுநூல் வளரபிரசன்ன மகா கணபதி வருகவே!

வாணி

அன்னமோடு வெண்ணிற அழகு தாமரையில்
  அமர்ந்து ஆர்வமோடு அமரவீணை மீட்டும்
இன்னிசை வாணியே இலக்கிய நாயகியே
  இனியகவி நூறுபாடி இளங்கணபதியை தொழுதிட
என்னுள்ளே விருப்பம் எழுத்தின் வடிவே
  ஏழிசை வல்லபியே எந்தன் கவிதையில்
இன்முகங் கொண்டு இசையோடு கலந்து
  இன்னருள் புரிவாய் இளங்கலை அரசியே!

ஸ்ரீ பிரசன்ன மகா கணபதி நூறு

1. கணபதியே சரணம்

கணபதி நூறுபாட கணநாயகனே அழைக்கின்றேன்
  கருப்பொருளாக நீயாவாய் கவிதையில் ஏறிடுவாய்
மணக்கும் சந்தணம் மங்கலக் குங்குமம்
  மாசக்தி திருநீரும் முகமதில் தாங்கியே
வணக்கம் செய்வோருக்கு வேழமுகம் காட்டியே
  வீதியெல்லாம் வீற்றிருந்து வேண்டும் வரந்தந்து
கணத்தில் மனச்சுமை காணாமல் போக்கி
  காலமெலாம் காத்திடுவாய் கணபதியே சரணம்

2. சிந்தையில் நிலைப்பாயே!

வியாசருக்கு பாரதம் வேகமாய் எழுதிடவே
  விளங்கும் வலதந்தமதை விரும்பிஒடித்து
ஒயாமல் எழுதிட ஒர்எழுத்தாணி ஆக்கியே
  ஒவ்வொரு அடியினயையும் ஒப்பிமனம் பொருளுணர
மாய உலகினில் மாந்தர் உயர்ந்திட
  மாபெரும் காவியம் மலர்ந்திடஉதவினாய்
சேயாக உன்னடியில் சேவித்து எழுந்தாலே
  சீலமிகு வேழனே சிந்தையில் நிலைப்பாயே!

3. எழுச்சி தரும்...

வேப்பமர அடியில் விளங்கு அரசு மரத்தடியில்
  வேழமுகத்தோடு விற்றிருப்பாய் வருவோர் போவாரை
தோப்பு கரணம்போட்டு துதித்து செல்வோரை
  தேங்காய் சிதறவிட்டு தேவையை கூறுவாரை
தப்பான எண்ணங்களை தள்ளிவைத்து சிலநொடி
  தாடையில் போட்டு தனக்காக வேண்டுவோரை
எப்போதும் பார்த்து எழிலாக சிரித்தபடி
  எம்நம்பிக்கை வளர எழுச்சிதரும் தும்பிக்கையானே?

4. சுகம்தரும் செல்வமே!

கணநாதாஎன கையெடுத்து கும்பிட்டு கனிவோடு
  கன்னத்தில் போட்டால் கழுவேற்றும் குற்றத்தையும்
கணத்தில் நீக்கிடுவாய் காலம் பார்த்தே
  கண்முன் பலனைக் காட்டி மகிழ்விப்பாய்
தணலாக சிவந்து தவிக்கும் நெஞ்சினையும்
  தண்ணிழல் மரத்தடியில் தானிருந்துதண்ணீராய்
சுணக்கம் இன்றி சீக்கிரமாய் ஒடிவந்து
  சுகம்தரும் செல்வமே சித்திவிநாயகா போற்றி

5. நிறைவாக்கி வைப்பாயே

பழம் வேண்டி பாலமுருகன் மயில்மீது
  புயலாய் பூஉலகை பிரதட்சிணம் செய்யஏக
வேழ முகத்தோனே விரும்பிஇரு கைகூப்பி
  வேத நாயகனை வெற்றிதரும் சக்தியை
தொழுது மும்முறை துல்லியமாய் சுற்றிவந்து
  தொல்லுலகை சுற்றியே துரிதமாய் முதல்வந்தேன்என
பழமதை எனக்கே பாசமுடன் தருவீர்என
  பற்றினாய் உரிமையோடு பரிவுடன் பெற்றோரை
தொழுது எழுந்து துவங்கிடும் பணிகள்
  தொய்விலா வெற்றி தருமென மெய்ப்பித்த
குழந்தை மனமுடையாய் குணவானே போற்றிடுவேன்
  குறைவிலா வாழ்வினை நிறைவாக்கி வைப்பாயே!

6. வாழ்வின் கதி நீயே!

வள்ளியை மணம்புரிய விரும்பிய வேல்முருகன்
  விதவிதமாய் வேடமிட்டு வழிபல தேடியும்
எள்ளளவும் எண்ணிய எண்ணம் கூடாத
  ஏமாற்றம் கண்டதும் ஏகதந்தன் உனைநினைக்
துள்ளிஒடி வந்தாய் தூயவளை விரட்டிட
  தம்பியவன் கைகளில் தாங்கியே பிடித்தான்
வள்ளியை மனம்புரிய வடிவேலனுக்கு துணையானவனே
  வலம்புரி விநாயகனே வாழ்வின் கதிநீயே!

7. பார்வதி பாலகனே!

மோதகப் பிரியனே மோகம் களைந்தவனே
  மரத்திடியில் வீற்றிருந்து மந்தகாசம் புரிபவனே
வேதத்தின் முதல்வனே வித்தகனே வேழமுகத்தானே
  விரும்பிய வரமருளும் விநாயகனே கணபதியே
காதசைத்து வருகின்ற கனிமுக வேழமே
  கருத்தில் அறிவினை கரம்நீட்டித் தருபவனே
 பாதத்தில் வீழ்ந்திட பரவசம் கொள்பவனே
    பக்தரை காத்திடும் பர்வதி பாலகனே

8. தொடர்ந்து அருளும் தூயநம்பிக்கை!

ஏழடுக்கு கோபுரமும் எளியஅரச மரத்தடியும்
  எங்கும் கோவிலாய் எழுந்தருளி வரமளிப்பாய்
வேழமுகம் கொண்டு விந்தைகள் புரிந்திடுவாய்
  வேதத்தின் பொருளாவாய் பிரணவத்தின் வடிவானாய்
பழமும் பாலும் பரிவுடன் ஏற்பாய்
  பழவினை அணைத்தும் பனியாக கரைத்திடுவாய்
தொழுகின்ற கைகளுக்கு துணைவரும் தும்பிக்கை
  தொடர்ந்து அருளும் தூயநம்பிக்கை போற்றி

9. சிவபாலன் காட்சி தருவான்!

காத்து வரிசையில் காத்துக் கிடந்து
  கடவுளைக் காண்என காலமும் மாறியது
காத்து வாங்கும் பரத்தடி கணபதியையும்
  கதவிட்டு பூட்டிவைத்து காணவிடாமல் செய்வதேன்
பூத்தமலர் வைத்து புதுச்சூடம் தனைஏற்றீ
  பூமியில் வீழ்ந்து பக்தியுடன் வழங்கிடவும்
சித்தம் கன்னியாதோ சிலநேரம் தொழுதிடவே
  சற்றே பொறுத்திரு சிவபாலன் காட்சிதருவான்

10. என்னையும் ஆட்கொள்வாய்!

கனிக்காக பெற்றோரை கைகூப்பி வலம்வந்தாய்
  கைகூப்பும் எந்தனுக்கு கருணைதர வருவாயே
இனிக்கின்ற தேனும் இன்சுவைப் பாலும்தந்த
  இளமை துறந்த இனியஒளவைக்கு தமிழ்தந்தாய்
தனிமரமாய் துணையாவும் துறந்த நிலையில்
  தும்பிக்கை நீட்டியே துணையாக வருவாயே
இனிவரும் நானெல்லாம் இகபர சுகம்நீக்கி
  ஏகதந்த கணபதியே என்னையும் ஆட்கொள்வாயே!

11. பரம தயாளனே!

வேதாகமப் பொருளே வேண்டுவன தருபவனே
  விநாயகனே நின்பாதமதில் வீழ்ந்து வணங்குவேனே
மோதகம் விழைவோனே மோகம் தவிர்த்தவனே
  மோனத் தவம்செய்யும் முதலான தெய்வமே
சாதகம் செய்வோர்க்கு சக்தி அளிப்பவனே
  சந்தியிலும் அமர்ந்து சகலமும் அருள்பவனே
பாதகம் செய்தாலும் பாசமுடன் தண்டித்து
  பாமரருக்கும் அருளுகின்ற பரம தயாளனே!

12. வெள்ளெறுக்கு மாலைசூடி...

வெள்ளெறுக்கு மாலையை விரும்பி சூடிடுவாய்
  வேம்புஅரசு மரந்தேடி விநயமுடன் வீற்றிருப்பாய்
வெள்ளைத் திருநீறும் வாசமிகு சந்தணமும்
  வண்ணக் குங்குமமும் வகையாக அணிந்திருப்பாய்
தள்ளி அசைந்தாடும் தாராளமான செவிகளும்
  தந்தமோடு இணைந்த தும்பிக்கையும் முன்வர
எள்ளி நகையாடும் எழிலான தொந்தியும்
  எந்தனை ஏற்றிட எப்போதும் காத்திருக்கும்

13. துவங்கும் யாவும்...

துவங்கும் யாவும் துல்லியமாய் நடைபெற
  தும்பிக்கை நாயகனை துதித்து துவங்கிட
கவனத்தில் வைத்து கருத்தோடு செயல்பட
  கணநாயகன் துணையிருந்து காலமெலாம் நிறைசெய்வான்
புவனத்தின முதல்வனாய் புத்தியினை அளிப்பான்
  பொருளோடு பொருளும் பொலிந்திட செய்வான்
அவனவன் விதியை அனுபவிக்க விட்டு
  அந்தியில் அவனே அன்போடு காத்திடுவான்

14. குழந்தைகள் விரும்பும்...

குழந்தைகள் விரும்பும் குரும்பான உருவம்
  குளக்கரை மரத்தடி கும்பிட்டு தொழுதிட
அழகாய் தனியே அமைதியுடன் இருப்பான்
  அவரவர் தொட்டு ஆராதனை செய்திட
பழகிய தோழனாய் பாசமுடன் ஏற்பான்
  பட்டென்று காதினை பற்றியே கைதொட்டு
எழுந்தமர்ந்து கரணம் எண்ணியபடி போட்டிட
  என்றும் மகிழ்ந்து எமைகாக்கும் விநாயகனே!

15. அனந்தகோடி வணக்கம்!

கருணைக் கடலாகி கஜானன் என்றாகி
  காரணப் பொருளாகி கருத்தின் நிறைவாகி
உருவான அனைத்தையும் உயர்வாக்கும் நெறியாகி
  உள்ளத்தின் அன்பை உணர்ந்து உதவியாகி
தருகின்ற வரமாகி தும்பிக்கை நாயகனாகி
  துள்ளும் மூஷிகள் துணையான வாகனமாகி
அருள்கின்ற ஆனைமுகனே அருந்தவமே அன்னை
  ஆதிசக்தி மைந்தனே அனந்தகோடி வணக்கம்

16. காயத்திரி வடிவமே!

காயத்திரியின் புனிதமாய் காண்கின்ற விக்னேஸ்வரா
  கஜமுகனாய் உலாவரும் கண்நிறை விநாயகனே
பாயாது கண்ணேறுஎன பாலகன் உன்உருவம்
  பார்க்கும் இடமெல்லாம் பதிவேற்றி வைத்திவடுவார்
ஒயாதநவ கிரகங்கள் ஒடித்திடும் தோஷங்கள்
  ஒர்முறை வலம்வந்து உன்னைத் தொழுதாலே            தன்னம்பிக்கை தந்து தயவோடு காத்திருப்பாய்

17. அருகம்புல் மாலையுடன்...

அருகம் புல்மாலை ஆசையுடன் அணிந்திடுவாய்
  அணிவித்து வணங்குவோருக்கு அள்ளித்தந்து அருள்புரிவாய்
குருவாக நீயிருப்பாய் குன்றிலும் அமர்ந்திருப்பாய்
  குமரன் வேலனுக்கு குறும்புடன் உதவிநின்றாய்
வருகின்ற வினையெலாம் வந்தவழி போகச்செய்வாய்
  வலம்வந்து வணங்கினால் வரமழை பொழிந்திடுவாய்
தருகின்ற பொருள் காணாய் தங்கிடும் மனம் காண்பாய்
  தந்தம் ஒன்றோடு தரணியெலாம் காத்திருப்பாய்

18. மூஷிக வாகனன்

நந்தியின் கொம்பிடை நளினமாய் பார்வதி
  நங்கை நயந்திட நடமிடும் சங்கரனே
சந்திர மெளலீஸ்வரனே சிவமான பொருளே
  சங்கடம் தீர்த்திடும் சந்திப் பிரதோஷகனே
சந்திரனை கங்கையை சடையினில் தாங்கியவன்
  சகத்திற்கு அளித்திட்ட சக்திஉமை பாலகனே
முந்திவரும் முதல்வனே மூஷிக வாகனனே
  முப்பொழுதும் உனைத்தொழ முன்வந்து அருள்வாயே!

19. சிதறு தேங்காய்...

சிதறு தேங்காய் சீரோடு உடைத்து
  சிங்கார உருவமான சீலனே உன்முன்னே
கதறி அழுது கருத்தில் கொண்டுள்ள
  காரண காரியங்கள் கடைத்தேற உதவுஎன
பதறி நிற்பார் பலமுறை தொழுதிருப்பார்
  பஞ்சமுகங் கொண்ட பால சந்திரனே
உதறி விடமாட்டாய் உண்மைக்கு துணைநிற்பாய்
  உள்ளம் மகிழ்ந்திட உடைக்கும் தேங்காயே!

20. சின்னஞ்சிறு மோதகங்கள்!

அரிசிமாவு கிளறி அதனுள் தேங்காயும்
  இனிக்கும் சர்க்கரையும் இளக்கி பூரணமாக்கி
கூர்வாக குழித்து குழிந்த கிண்ணத்துள்
  கூட்டி வைத்து குடுமியுடன் கூராக்கிமூடி
சீரான ஆவியில் சிறப்பாக அவித்தெடுத்து
  சின்னஞ்சிறு மோதகங்கள் சேவித்து படைத்திடுவேன்
இருபுறமும் ஆடுகின்ற இருசெவி இனித்திட
  இனிய குரலெடுத்து இசையும் பாடிடுவேன்
கருவறையில் வீற்றிருந்து கண்முன் மூஷிகன்காண
  கலங்கிய எந்தனுக்கு கனிந்தருள் தருவாயே!

21. முக்தியே தந்திடுவாய்!

சந்தியிலும் கோவில் சுற்றுசுவரிலும் ஒய்யாரமாய்
  சங்கடம் ஏதுமின்றி சன்னதியாய் ஏற்றிடுவாய்
தொந்தி விநாயகனே தும்பிக்கை மூர்த்தியே
  துவங்கிட ஒருசெயல் துணைநீயின்றி வேறில்லை
ஏந்திடும் வேள்வியிலும் ஏழையின் பூசையிலும்
  ஏகாந்தமாய் மஞ்சளில் எழுந்தருளி நீயிருப்பாய்
முந்திஉன் முன்னர் மூலகணபதியே எனில்
  முக்தியே தந்திடுவாய் மூஞ்சூறு வாகனனே

22. நல்வாழ்வு தருவாயே!

வளமை தருகின்ற வல்லபை கணபதியே
  விக்ன விநாயகனே வினைதீர்க்கும் பெருமானே
குளத்தருகே வீற்றிருக்கும் குமாரத் தெய்வமே
  குஞ்சரனே உமையாள் கொஞ்சும் பாலகனே
அளவாக ஆய்ந்து அறிவைத் தந்திடுவாய்
  ஆர்பரிக்கும் ஆணவத்தை அப்போதே களைந்திடுவாய்
நீளமான அருகம்புல் நாளும் அணிவிப்பேன்
  நான்முகனை வென்றவனே நல்வாழ்வு தருவாயே!

23. முனைந்து வழிபடுவோம்!

முயற்சிப் படிதனில் முதல்அடி நான்வைத்தால்
  முன்னே வந்துநீ முன்னேற வழிதருவாய்
தயங்காது தளராது தவமென நிணைந்து
  தன்னிறைவு கண்டிட தினமும் செயல்பட
இயங்கும் சக்தியாக இருக்கும் தெய்வமவன்
  இன்பம் கூட்டிவந்து இனிமை பொழிந்திடுவான்
மயங்காத மனமுடன் மாறாத நேர்மையுடன்
  முதல்வன் வழியினில் முனைந்து வழிபடுவோம்!

24. வருவாய் துணையாக...

கதிர்வேலன் சோதரனே கன்னிமூல கணபதியே
  காற்றாட வீற்றிருந்து கருணை புரிபவனே
மதியெனக்கு அருளியே மயக்கம் தீர்க்கின்றாய்
  மந்தகாசப் புன்னகை மினிரப் பார்க்கின்றாய்
துதிக்கை முன்நீட்டி துளிர்விப்பாய் நம்பிக்கை
  துதிபாடி தொழுதிட தூயவனே நீயருள்வாய்
விதியின் விளையாட்டு விநாயகன் உன்முன்னே
  வெறும்தூசு எனஅறிவேன் வக்ரதுண்டனே வருவாய் துணையாக

25. கற்பக விநாயகனே!

பிரம்மனும் அடிபணிந்து பரமகுருவாக ஏற்றான்
  பாலவேல்னும் அண்ணனின் பக்கபலம் வேண்டினான்
அரனும் உன் ஆணைக்கு அஞ்சி காத்திருந்தான்
  அன்னையின் அன்பினில் ஆதிசக்தியே திகைத்தாள்
வீரமுடன் வீணர்களை விரட்டி வீழ்த்தினாய்
  விவேகனாப செயலின் விளைநிலம் நீயாவாய்
கரங்கூப்பி உன்னைக் கும்பிட தம்பாது
  கேட்டவரம் தந்தருள்வாய் கற்பக விநாயகனே!

26. பஞ்சமுக கணபதியே!

முக்குருணி பிள்ளையாய் மதுரையில் தோன்றிடுவாய்
  மலைக்கோட்டை மேலமர்ந்து மனக்கவலை நீக்கிடுவாய்!
திக்கஜங்களாய் எல்லா திசைதோறும் நீயிருப்பாய்
  தேனோடு பாலும் தேடியே ஏற்றிடுவாய்!
பக்கத்தில் நீயிருந்து பயமெலாம் நீபோக்கிடுவாய்!
  பாசமுடன் எம்மையே பாதுகாத்து நின்றிடுவாய்
பக்தியினால் உன்னை பாசமுடன் சேரலாம்
  பஞ்சமுக கணபதியே பார்வையால் காத்திடுவாய்

27. சிந்தனைக்கு விருந்தாவாய்!

மூலையிலும் முடுக்கிலும் முச்சந்தி பாதையிலும்
  மூஞ்சுறு வாகனமுடன் முன்னாலே வீற்றிருப்பாய்
மலைமேல் நீயிருப்பாய் மரநிழலில் தங்கிடுவாய்
  மகாகணபதி நீஇல்லாத மக்கள்ஊர் உண்டோ?
கலைக் கோயில் கேட்கவில்லை கட்டிய
  கூரையோடு மேடையிலும் கம்பீரமாய் நீயிருப்பாய்
சிலையாக அமர்ந்து சிறுயானை முகமோடு
  சிந்தனைக்கு விருந்தாவாய் சங்கரன் மைந்தனே!

28. நல்லறிவு எய்திட...

செல்வ கணபதியே சீர்மிகு குணநிதியே
  சந்தணப் பொட்டும் சிவந்த குங்குமமும்
புல்லால் மாலையும் புதுஅருளி மாலையுடன்
  புவனத்தின் அதிபதியே புதுமையின் இருப்பிடமே
சொல்லும் பொருளும் எண்ணும் எழுத்தும்
  செறிந்த கல்வியை செம்மை குணங்களை
எல்லாம் வக்கவனே ஏங்கும் எந்தனுக்கு
  என்றும் நல்லறிவு எய்திட அருள்வாயே!

29. ஆற்றல் தருவாயே!

சித்தியும் புத்தியும் சிறப்பான துணையாக
  சேர்ந்து காட்சிதரும் சித்திர விநாயகா
எத்தனை அறிவாற்றல் ஏற்றமிகு கலைகள்
  எல்லாம் பெற்றிட என்னுள்ளம் தேடும்
சித்தம் நீகொண்டால் சேர்ந்து அவைவரும்
  செல்வமும் பலமும் செயல் திறனும்என
அத்தனையும் அருள்வாய் ஆனைமுகப் பெருமானே
  அனுதினம் பணிவேன் ஆற்றல் தருவாயே!

30. குஞ்சர முகங்கள்!

பஞ்ச முகமும் பத்துக் கைகளும்
  பாசமிகு நெஞ்சும் பலமான நம்பிக்கைதரும்
குஞ்சர முகங்களில் கொஞ்சும் தும்பிக்கையும்
  குறுக்கிய தந்தமும் குமிழில் அமுதமும்
பஞ்ச பூதங்களும் பல்வேறு ஆயுதமும்
  பத்து கைகளில் பாங்காகத் தாங்கி
அஞ்சேல்என அபயகரம் அருளும் கஜானனே
  அடிமையே என்றும் அழகிய பாதங்களில்!

31. ஒரே ஒரு மாங்கனியில்...

ஒரேஒரு மாங்கனியில் ஒர்உண்மை தெளிவித்தாய்
  ஒப்பற்ற மாதாபிதாவே ஒங்குயர் உலகுஎன
இருக்கும் இடத்திலெயே இருவரையும் வலம்வந்து
  இருளடைந்த மனங்களில் இன்பஒளி ஏற்றிவிட்டாய்
எருக்கு மாலைக்கும் எடுத்த அருகுக்கும்
  எளிதாக கனிந்திடும் ஏகாந்தப் பிரியனே
செருக்கினை அழித்து செம்மைப் படுத்துவாய்
  சங்கரி தவப்புதல்வா சன்னதியே எங்கதியே!

32. சிவகுகன் சோதரனே!

சிவகுகன் சோதரனே சித்தி விநாயகனே
  சிவசங்கரன் புதல்வா செவ்வேழ முகத்தானே
சிவகுரு நாதனே சக்திஉமை மைந்தனே
  சிறுவேம்பு மரமும் சீர்அரச மரமும்கூட
சிவந்தஅரளி மாலையுடன் சற்குருவாய் அமர்ந்தவனே
  சிவநேசனே விக்னஈஸ்வரனே நீயன்றோ
சிவயோகி அன்புடன் சேர்ந்த உருவம்நீ
  சிந்தை கனிந்து சிரமீது இருப்பாயே!

33. சங்கடஹர சதுர்த்தி நாயகன்!

சங்கடஹர சதுர்த்தியில் சக்திபாலனைக் கண்டேன்
  சந்தணமும் பாலும் தேனும் திருநீறும்
பொங்கும் மழையென புனிதநீர் அபிஷேகம்
  பொட்டும் பூவும் புதுவஸ்திரமும் பூண்டு
எங்கும் வண்ணமலர்மாலை எழிலான மேனியில்
  எதிரே ஒளிவீசும் ஏற்புடைய வெள்ளிகவசம்
பொங்கலும் சுண்டலும் புதுப்படையல் சமர்ப்பித்து
  பல்வேறு தீபஆர்த்திகள் பவித்திரமாய் காட்ட
தங்கும் உலகில் தம்கையில் ஏதுமில்லை
  தயாளனே கருணையோடு கணபதியே தந்தருள்வாய்

34. நர்த்தன கணபதியே!

கால்தூக்கி ஆடும் கனகசபையான் திருமகனே
  கலைமயில் மேலாடும் கதிர்வேலன் சோதரனே
மேல்ஏறி நாகம்தலை மேலாடும் மால்மருகனே
  மேதினியில் ஆடிடும்   பராசக்தி பாலனே
நூல்களில் ஆடிடும் நூண்ணறிவு பெட்டகமே
  நர்த்தனம் புரிந்திட நயந்துநீ விழைந்தாயோ
கால்தூக்கி உடல்கனம் தூக்கி தையத்தாஎன
  காலத்தை ஆட்டுவிக்கும் நர்த்தன விநாயகனே!

35. அடியார்கள் யாமே!

கானத்தில் உருவான கீதம் நீயே!
  கற்பனையில் உருவாகும் கலைகள் நீயே!
மோனத்தில் மூழ்கிடும் மேதையும் நீயே!
  மோகத்தை வென்றிடும் முழுஞானியும் நீயே!
ஞானத்தின் முதலும் பொருளும் நீயே!
  ஞாயிறு முதலான கோள்களும் நீயே!
வானத்தின் மழையாக வரமருள் நீயே!
  வந்தனை செய்திடும் அடியார்கள் யாமே!

36. பாதை காட்டுவாயே!

வெண்ணீறு பூசிடும் விகட விநாயகனே
  வேழ முகத்தோடு விளங்கும் கஜமுகனே
மண்ணிலும் உருவாகி மஞ்சளிலும் உருவாகி
  மனமெல்லாம் மகிழ்வோடு மரத்தடியில் இருப்பவனே
தண்பிறை சூடியவனும் தயைகாட்டும் சக்தியும்
  தனயனாய் போற்றிடும் தும்பிக்கை நாயகனே
பண்ணில் உனைப்பாடி பாதங்களில் பணிந்தேன்
  பக்கத்தில் நீயிருந்து பாதையை காட்டுவாயே!

37. மூலமே! முதல்வனே!

கன்னியர் உன்னிடம் கணவனனை வேண்டுவார்
  காளையர் உன்னிடம் காசுபணம் வேண்டுவார்
அன்னையர் உன்னிடம் அவர்மக்கள் நலம்வேண்டுவார்
  ஆன்மீகர் உன்னிடம் அமைதியை வேண்டுவார்
மன்னவர் உன்னிடம் மக்களாட்சி வேண்டுவார்
  மண்பூமியோர் உன்னிடம் மாமழை வேண்டுவார்
முன்னவனே உன்னிடம் முக்தியை வேண்டுவேன்
  மூலமே முதல்வனே முன்வந்து தந்தருள்வாய்

38. கைகூப்பித் தொழுவேன்!

கலங்கிடும் உள்ளமதை கருணையால் குளிர்வித்தாய்
  காலத்தின் மாற்றத்தால் கலக்கங்கள் நீக்கிடுவாய்
நிலங் காணும் நீர்மழையெனப் பொழிவாய்
  நீங்காது துணையிருந்து நாளெல்லாம் காப்பாய்
வலம்வந்து வணங்குவோர் வாழ்வுக்குநீ துணையாகவாய்
  வலம்புரி விநாயகனே வருவாயோ அருள்தரவே
குலம் தழைக்க குன்றென உயர
  காலமெலாம் கணபதியே கைகூப்பிதொழுவேனே

39. பரிவு தெய்வம் நீயே!

நல்லதையே நினைக்க நல்லதையே பேச
  நல்லதையே செய்திட நாயகனே லம்போதரா
வல்லவனே வந்துஎனக்கு வரமருள் தருவாயே
  விக்னம் நீக்கும் வியப்பான முதற்பொருளே
நில்லாமல் ஒருகணம் நின்னையே நினைந்திருப்பேன்
  நன்மை செயல்புரிய நாளும் துணைவருவாய்
பல்லாயிரம் முறை பாசமுடன் வணங்குவேன்
  பாரினில் கண்கண்ட பரிவு தெய்வம் நீயே!

40. வரசித்தி விநாயகனே!

புயலுக்கு முன்வரும் புதுமையான அமைதியா?
  பெருமழை வருமுன் பேரிடியும் மின்னலுமா?
நியதியான வாழ்வின் நீரோட்டத்தில் செல்கிறேன்!
  நேர்மையான செயல்கள் நீங்கிப் போவதேன்?
தயக்கமும் தற்காப்பும் தத்தளிக்க வைப்பதேன்?
  துளிர்கரும்பு தேடிடும் தெய்வ நாயகனே!
பயத்தினைப் போக்கி பலன்யாவும் நலமாக
  வரசித்தி விநாயகனே வரமருள வருவாயே!

41. 'லம்போதரா'...

லம்போதரா லயமிகு லலித குமாரா
  லலிதாம்பிகை மைந்தா லாவண்ய ரூபா
அம்மம்மா உன்வடிவம் அதிசய விசித்திரம்
  அழகுமுகம்வேழம் அவயவங்கள் மானுடம்
மும்மைக்கும் முழுமைக்கும் முதல்வனான முதல்உருவம்
  மூலையும் சந்தியும் மனவிரும்பும் இருப்பிடம்
எம்மைக் காத்திட எடுத்திட்ட திருவடிவம்
  என்றும் துணையிருக்க எழில்பாதமதில் சரணம்!

42. சிரம் தொட்டு ஆசி தருவாயே!

கஜானனா கஜவதனா கணபதியே கபிலனே
  காலமெலாம் பஜனை கைதட்டிப் பாடிடுவேன்
பூஜையும் செய்திடுவேன் புண்ணியனே நின்அருள்வேண்டி
  பாலச்சந்திரா வக்ரதுண்டா பாவமெலாம் போக்கிடுவாய்
விஜயனே வெல்லும் விநாயகனே விசித்திரனே
  வெற்றியின் அதிபதியே விரும்பி வந்தருள்வாய்
கஜலட்சுமி வீற்றிருக்கும் கருவறையை தேடிவந்தேன்
  கற்பகமே தும்பிக்கையால் சிரம்தொட்டு ஆசிதந்தருவாயே

43. நல்லாசி தருவாயே!

பிரணவத்தின் பெருமை பேசும் 'எண்கண்'-ல்
  பிரதான மூர்த்தி சுப்பிரமணியான் சோதரனே
பிரணவத்தின் உருவை பேர்வடிவாக கொண்டவனே
  புரளும் தும்பிக்கை வலம்புரி இடம்புரியாக
பிரணவத்தை முன்காட்டும் பிறைநெற்றி விநாயகனே
  படைத்திடும் பிரம்மன் படைத்திட்ட கலைகளை
பிரபஞ்சத்தில் பயின்றிட பிரயத்தனம் செய்வோர்க்கு
  பிரியமுடன் வந்தே நல்லாசி தருவாயே!

44. குலம்வாழ அருள்வாயே!

ஆடிடும் மயில்காண ஆனந்திக்கும் முருகன்
  அழகுவீணை இசையில் அகமகிழும் வாணி
மடியில் விளையாடி மகிழும் கோபாலன்
  மாதவம் செய்வதில் மெய்மறக்கும் சிவன்
வடிவான தாமரையில் வாழ்கின்ற லட்சுமி
  வீணரை அழிக்கும் வீரத்தின் சக்தி
கூடிவந்த தெய்வம் கணபதி நீயன்றோ
  கோடிமுறை பணிவேன் குலம்வாழ அருள்வாயே!

45. மனமகிழ்ந்து...

ஆதிமூல சக்தி அவன் அளிப்பான் முக்தி
  ஒதி உணர்ந்து நின்றால் அவன்ஒடிவந்து அருள்வான்
பாதி தந்தமதில் அவன் பாரதம் எழுதிமுடித்தான்
  போதி மரத்தடியில் அவன் புன்னகை பூத்துஇருப்பான்
நீதி அருளும் மூர்த்தி அவன் நித்தம் நம்மைகாப்பான்
  காதினைப் பற்றியே கரணம் அவன்முன் போட்டு தொழுவாய்
வீதியில் வெட்டவெளியில் அவன் வீற்றிருந்து பார்ப்பான்
  விதியை மாற்றும் மதியுடையான் அவன் மனமகிழ்ந்து ஆசிதருவான்!

46. வாய்விட்டு அழைத்து...

ஞானியானய் அமர்ந்து ஞானம்தரும் ஞானதீபா
  ஞானமில்லா பேதையாய் ஞாலமெலாம் சுற்றினேன்
வானின்மழை நோக்கும் வாடிய பயிர்போல்
  விஷ்ணுப்பிரியா உன்னை வேண்டியே வந்தடைந்தேன்
காணுமிடமெலாம் நீயிருக்க காணாத குருடனானேன்
  கடைசியில் கண்டேன் கலாதரா சுதாகரனே
வீணில் அலையவிடாது வந்திடுக என்னருகே
  வாய்விட்டு அழைத்து வரமருள் புரிகின்றாயே!

47. பிரம்மச்சரிய சொரூபனே!

பார்வதிப் பிரியனே பாரெல்லாம் இருப்பவனே
  புராதனனே வாழ்வில் பிரம்மச்சரிய சொரூபனே
கூர்மையான பார்வை கூடிவீசும் காதுகள்
  குழைந்து நீண்டு வளைந்த துதிக்கை
கார்கால மேகமென கருத்த வேழமுகம்
  கரம்நான்கு முன்வந்து காட்டும் அபயஹஸ்தம்
தார்கொன்றை அரளிஅருகு தளிர்மாலை சூட்டி
  தாள்பணிந்து தொழுதேன் தரணியில் அருள்வாயே!

48. அறிவுச் செல்வம் அருள்வாயே!

ஒம்சிவ நந்தனா ஒம்சத்ய பராக்கிரமா
  ஒம்கார வடிவமே ஒதுகின்ற வேதமே
ஒம்சர்வ சித்தாய ஒம்ஜஸ்வர்ய மகேஸ்வரா
  ஒடிவந்து சரணடைந்தேன் ஒப்பிலா சத்யரூபா
ஒம்மங்கள நாயகா ஒம்வரசித்தி விநாயகா
  ஒடித்த தந்தமோடு விளங்கும் ஏகதந்தா
ஒம்சிவப் பிரியனே ஊரெல்லாம் இருப்பவனே
  ஒப்பற்ற அறிவுசெல்வம் ஒதியெனக்கு அருள்வாயே!

49. நாயகனாய் வீற்றிருந்து

நாயகனாய் வீற்றிருந்து நல்லறிவு தருகின்றாய்
  நாளும் பொழுதும் நற்காவல் புரிகின்றாய்
தாயாகத் தான்வந்து துயரினைத் துடைக்கின்றாய்
  தும்பிக்கை வீசியே துணையாக நடக்கின்றாய்
வாயால் துதித்திட வார்த்தைகள் போதவில்லை
  வாஞ்சையுடன் உன்னடியில் வாழ்வெலாம் வீழ்ந்திருப்பேன்
நோயற்ற உடலும் நேர்மையான உள்ளமும்
  நலிந்தோருக்கு உதவும் நன்னெஞ்சும் தருவாயே!

50. இனித்திடும் யாவும் தன்னாலே!

இதோஒர் அழகிய இனிய முன்மாதிரி
  ஈன்ற பெற்றோரே ஈடில்லாஉலகு எனக்காட்டியவர்
இதோஎன விரைந்து இளவலுக்கு உதவியவன்
  இருக்கின்ற தந்தமதை ஒடித்து எமுத்தாணியாக
இதிகாசம் எழுதிட வால்மீகிக்கு துணையானவன்
  இகவர சுகமெலாம் இளம்துதிக்கையல் அடக்கியவன்
இதுஎது எனஎண்ணாது எதிலும் எளிமையானவன்
  இதயம்தனைத் தந்துவிடு இனிக்கும் யாவும்தன்னாலே

51. அஷ்டமங்கலம்

அஷ்டமங்கலம் பொருட்களில் அழகாக நீயிருப்பாய்
  அனைவருக்கும் மங்கலங்கள் அள்ளியள்ளி தந்திடுவாய்
இஷ்டமாய் உன்னை இடைவிடாது பணிவோருக்கு
  இனிமையான நன்மைகள் இங்கிதமாய் பெருகிவரும்
கஷ்டங்கள் விலகிவிடும் கடன்தொல்லை நீங்கிவிடும்
  காணும் வாழ்வின் சுழற்சி கணத்தில் மாறிவிடும்
நிஷ்டையின் தவப்பயன்கூட நீங்காத நோய்நீங்கும்
  நாடியே தரவல்லவனே மங்கலதாயா வணங்குகிறேன்

52. ஐந்தெழுத்து மந்திரம்

நமச்சிவாய எனும் நாலெழுத்து நாமம்
  நாளெல்லாம் சொல்ல யமபயம் நீங்கும்
நமோ நாராயண எனும் எட்டெழுத்து நாமம்
  நல்லோருடன் வைகுந்த பிராப்தி தரும்
சரவணபவா எனும் ஆறெழுத்து மந்திரம்
  சங்கடம் தீர்த்து சாந்தி தந்திடும்
கணபதியே எனும் ஐந்தெழுத்து மந்திரம்
  காதில் கேட்டவுடன் கனிந்துவந்து காத்திடும்

53. நின் ஒளியே!

கடலில் பிறந்திட்ட கனிமுத்து நீயாவாய்!
  கருமேகமிடை மின்னுகின்ற கடும்மின்னல் நீயாவாய்
கடலில் உதித்து கடலில் மறையும்
  கதிரவன் ஒளியும் கணநாதா நீயாவாய்
கடலில் ஒடமென கண்கவர் வெண்ணிலவும்
  கண்சிமிட்டி ஒளிவீசும் கணக்கற்ற தாரகைகளும்
கடல்மலை நிலம்வான்என கண்கண்ட இடமெல்லாம்
  காணும் ஒளியெல்லாம் கஜவதனா உன்ஒளியே!

54. விலையிலா நவரத்தினமே!

முக்கடலில் மூழ்கி நல்முத்து நானெடுத்தேன்
  மூலகணபதி அதில் முறுவலிக்கக் கண்டேன்
சுக்கலாக பாறையை குடைந்து வைரம்எடுத்தேன்
  சித்திவிநாயகன் அதில் சிரிப்பதைக் கண்டேன்
பக்கத்தில் கடல்முழ்கி பவளத்தை நான்எடுத்தேன்
  பவித்திர நாயகன் பாலகணபதி அதில் கண்டேன்
திக்கெலாம் சென்றுதேடி திரவிய ரத்தினம் நான்எடுத்தேன்
  தும்பிக்கையான் ஆடிவந்து அதில் துள்ளுவதைக்கண்டேன்
காக்கும் நவரத்தினம் கணநாதன் நீயிருக்க
  காலமெலாம் வெறும்கல்தேடி அலைந்தேனே
வாக்கும் வல்லமையும் வளமையும் நல்லறிவும்என
  விலையிலா மாணிக்கம் வழங்குபவன் நீயன்றோ!

55. தவமே தவம் செய்ய!

தவமே தவம்செய்யும் தவக்கோல கணபதியே
  தவமறியா பேதையருக்கு தவம்செய்ய போதனையா?
சிவமே என்றுநீ சிவநாமம் ஜபித்தாயா?
  சிந்தையில் எம்மை சீர்பெறச் செய்வதற்கு
உவந்திடும் மோகமதை உதறிய ஞானசீலா
  உள்ளத்தின் பேரொளியை உணர்த்திடவந்தாயா?
தவழ்ந்திடும் குழந்தையாம் தாய்தந்தையாக நீவந்து
  தரணியிலே உயர்த்திட தாளடியில் பணிவோமே

56. தியானிப்பேன்!

ஒய்ந்ததுஎன நான்மகிழ்வேன் ஒளிந்திருந்து வந்துவிடும்
  ஒயாத நோய்கள் ஒழியாத துயர்கள்
ஒயும்நாள் எதுவென ஒங்காரனே நீயறிவாய்!
  ஒன்றும் அறியாமல் ஒயாமல் புலம்புகின்றேன்
ஒயவேண்டும்என நீநினைத்தால் ஒயும் நாள்வரும்
  ஒயாமல் தொழுவேன் உந்தனையே நாளும்
ஒய்வாக நானிருக்கும் ஒப்பிலா நாள்காண
  ஒயாமல் தியானிப்பேன் ஒம்கணபதியே நீவரவே!

57. பச்சை பசுந்தளிர்!

பச்சை பசுந்தளிர் பகல்இரவு பாராமல்
  பயன்நோக்கி ஒய்விலா முயற்சியில் மூழ்கிடும்
இச்சையை பூர்த்திசெய்ய இறையருள் கூடிவர
  இன்னிசை கணபதியே இதயத்தில் நீவருக!
பச்சைப் புல்லும் பாங்கான எருக்கும்
  பக்தியுடன் படைத்து பூஜைகள் செய்திடுவேன்
பச்சை மண்அதனை பயன்தரும் சிற்பமாய்
  பாரினில் விளங்கிட பாலசந்திரா நீயருள்வாய்!

58. எல்லையற்ற பரம்பொருளே!

சதுர்த்தியில் பிறந்துஎன்னை சதுரங்க காயாக்கினாய்
  சங்கடஹர சதுர்த்தியில் சன்னதியில் தொழுகின்றேன்
சதுர்மறை போற்றும் சத்யா சத்யசீலா
  சற்றேகண் திறப்பாய் சகலமும் வந்துசேரும்
புதுவாழ்வும் புத்துணர்வும் புலங்களின் கூர்மையும்
  போற்றும் உடல்நலமும் பிறருக்கு தொல்லைதராத
எதுவும் எனக்களிப்பாய்1 எஞ்சிய நாட்கள்இனி
  எல்லையற்ற பரம்பொருளே என்றும் உன்காலடியில்

59. நாடு நம் பெயர் பேசும்!

நம்பியாண்டார் வேண்ட நைவேதியம் நீஉண்டாய்
  நம்பி அவர்கேட்க நல்திருவாசக ஏடுகாட்டினாய்
நம்பிக்கையின் சின்னம் நன்மைதரும் தும்பிக்கை
  நயந்தே எமக்கும் நல்லறிவு தந்திடும்
நம்பி நற்செயல் நாளும்செய்ய முன்வந்தால்
  நாம்செய்த செயலால் நாடுநம் பெயர்பேசும்
நம்முன் அமர்ந்து நாடெல்லாம் காட்சிதரும்
  நாயகனை வேழமுகத்தானை நாளும் தொழுவோமே!

60. தாள்தொடு நாள்வளரும்!

நாள்காட்டியில் தாள்கிழிய நாளொன்று சென்றது
  நம்மனம் நாடுவது நன்மையே புதுத்தாளில்
தாள் கிழியும் மறுநாள் தந்ததுஎன்ன நேற்றுஎன
  தனியே யோசித்தால் தன்னலமா பிறர்நலமா
வாள் பிடித்த போரா வாய்வீச்சு பேரொலியா
  வெற்றியின் படியில் வீணடித்த ஆட்டமா
தள்ளிடு அனைத்தையும் தலைவன் கணபதி தாள்தொடு
  தாள்கள் வளரும் தனிவாழ்வும் சிறக்கும்

61. அபயஹஸ்தம்

கருணையால் நோக்கும் காருண்ய கணபதி
  குவிந்திடும் நல்லாசி கரங்களில் தருகின்றாய்
திருஉருவாய் அலைமகள் திருக்கரத்தில் தங்கிட
  தெய்வீக கலைமகள் கரநடுவில் காட்சிதர
மறுவிலா மலைமகள் மலர்விரலில் மலர்ந்திட
  மனதார காலையில் மனமுருகி பிரார்த்திக்க
கருவறையில் இருந்து கடவுளாய் அனைவரையும்
  கைகூப்பி நான்தொழ அபயஹஸ்தம் அருளுகின்றாய்!

62. திரிகால மூர்த்தியே!

நாகலிங்க பூவடிவிலான நமச்சிவாய மைந்தா
  நாகங்கள் புடைசூழ நயந்துறையும் நாயகா
ஆகம விதிகளோடு ஆலையங்களில் இருப்பவனே
  ஆவணி சதுர்த்தியில் அவதரித்த குருவே
மோகத்தை வென்ற மதகஜன் வடிவே
  முன்னே வந்திருந்து மேதினியை காப்பவனே
தாகத்திற்கு நீர்போல தக்க தருணமதில்வந்து
  தயைபுரிந்து காத்திடுவாய் திரிகால மூர்த்தியே!

63. காலடியில் ஏற்றிடுவாய்!

எண்ணைக் காப்பினை எழில்மேனியில் சாத்திடுவார்
  எண்ணக் காப்பினை எழுத்தில் சூட்டுவேன்
வெண்ணீறு சந்தணம் வண்ணக்குங்குமம் வைத்திடுவார்
  வண்ணச் சொற்களால் வளர்கவிதை சூட்டுவேன்
வெண்ணையும் பாலும் வெண்தயிரும் ஊற்றுவார்
  வார்த்தைகளை கோர்த்து வண்ணமாலை சூட்டுவேன்
பண்ணும் பாட்டும்ஒதி பல்வகை ஆர்த்தி சுழற்றுவார்
  பாவும் இசையும்கூட பலகவிதை சூட்டுவேன்
மின்னும் கற்பூரம் முன்னே ஏற்றுவார்
  மனமெலாம் நிறைவாக மலர்கவிதை சூட்டுவேன்
கண்ணே கணபதியே கவிமழையே கஜானனே
  கவிதையோடு எந்தனையும் காலடியில் ஏற்றிடுவாய்!

64. எதுவானாலும் தருவாய்

மதுசூதனன் மருகனே மாமயிலோன் கோதரனே
  மாதேஸ்வரன் மைந்தனே மகேஸ்வரிப் பிரியனே
கதலியும் பாலும் கசிந்திடும் தேனும்
  கற்பூர ஆரத்தியும் கண்முன் படைத்து
நிதம் வந்துஉன் நற்கோவில் வலம்வந்து
  நாளும் உன்னையே நினைந்து தொழுதிட
எதுவேண்டும் எனகேட்குமுன் எதைவேண்டுமானாலும் தருவாயே
  எதையும் முடிப்பவனே ஏகதந்த முகத்தோனே!

65. தளராத மனம்தா!

வெள்ளை மலரெடுத்து வெண்நூலில் தொடுத்து
  விநாயகனே உந்தனுக்கு வெண்மாலை சூட்டிடவே
எள்ளளவும் நினையாத ஏற்றமிகு நேரத்தை
  எந்தனுக்கு ஒருவாய்ப்பு எளிதாகத் தந்தாயே
வெள்ளமெனப் பெருகும வீணான துயரெல்லாம்
  விக்னேஸ்வரா உந்தன்முன் வீசும்காற்றின் தூசாகும்
தள்ளி விடாதே தாயாக எனைக்காப்பாய்
  தளராத மனம்தந்து தாளடியில் சேர்த்திடுவாய்

66. துடித்திட வைப்பதேன்?

மனம்மாறி உன்னருளால் மாற்றங்களை ஏற்க
  மனதில்உறுதி எடுத்தபின் மறுபடியும்சலனங்கள்
மனதில் உருவாகி மயக்கம் தருவதேன்?
  மாற்றம் பெறவும் வழியில்லாத பேதையா?
கனவிலும் நினைவிலும் கருத்திலும் தெரிந்துநான்
  கயமைச் செயல் கணமும் செய்தேனில்லை
தினமும் சொல்லால் தீராத துயர்தந்து
  துடித்திட வைப்பதேன் தும்பிக்கை நாயகனே!

67. வாசம் தர வேண்டுகிறேன்...

வேண்டுதல் வைத்தாலும் வேளை தவறாது
  வேண்டித் தொழுதாலும் விநாயகன் நீதந்தாலன்றி
வேண்டியவை கைகூடுமோ வேழத்தின் வடிவே
  வேண்டக் கூடாததை வேண்டிநான் கேட்கவில்லை
வண்ணத் தோட்டமாய் விளங்கிய இல்லம்
  வீசும் புயல் மழையில் வீணாகப் போனதேன்?
வண்ணமலர் மாலையாக விரிந்துபிரிந்த மலர்கள்
  வண்ணநூலில் இணைந்து வாசம்தர வேண்டுகிறேன்

68. தன்னை ஈர்த்த நேரம்

சந்தண அபிஷேகம் சங்கரன் மைந்தனுக்கு
  சங்கடம் தீர்த்திடும் சமிக்கையின் திருக்கோலம்
செந்தூரம் திருநீறு செவ்விளநீர் பால்தயிர்
  சேர்த்த பழமும்தேனும் சேர்ந்த பஞ்சாமிர்தம்
கந்தம்வீசும் பன்னிருடன் கண்கவர் ரோஜாமாலை
  கைநிறைய மல்லிமுல்லைஅரளி கவசம் வெள்ளியென
தந்த நாயகன் தனிக்கோலம் இன்றுகாண
  தன்னுளம் ஈர்த்தநேரம் துயரெலாம் தூசானதே!

69. தருவாயே நிம்மதி!

முழுமையான சரணாகதி முற்றுப் பெறவில்லையோ
  மனதின் மூலையில் மறைந்திருக்கும் குறையோ
முழுகிவிட்டேன் பாசம் பந்தம் பற்று என்பதெல்லாம்
  மனதின் உள்ளிருந்து மேலே வரவில்லையோ
முழுமுதற் கடவுளே மூஞ்சூறு வாகனனே
  முகத்தில் கண்ணீர்வழிய மனசஞ்சலம் ஏன்அளிக்கின்றாய்
தழுவும் மதலையாக தினமும் தவிக்கின்றேன்
  தகுதியானதை எனக்களித்து தருவாயே நிம்மதி!

70. கணமும் மறவேனே!

இதிகாச பாரதம் பதிக்க ஈடில்லா வியாசமுனி
  இங்கிதமாய் உன்னை இசையோடு துதிக்க
துதித்தவர் பலன்எய்த தும்பிக்கை தந்தம்ஒடித்து
  துல்லியமாய் பொருளுணர்ந்து தூயஎட்டில் பதித்தவனே
மதியினை நெற்றியில்கொண்ட மாபெரும் பாலச்சந்திரா
  மதகஜனனே மோக மையல் துறந்தவனே
கதியென வந்தடைந்துபின் கைகொடுத்து காத்திடு
  கனவிலும் நினைவிலும் கணமும் மறவேனே!

71. இலையெல்லாம் தெய்வமே!

ஆலிலையில் கோபாலன் ஆனந்தமாய் துயில்வான்
  அழகான மாவிலையில் அலையரசி வாழ்ந்திடுவாள்
சூலியான துர்க்கை தூயவேப்பிலையில் துள்ளிடுவாள்
  சுகமான வில்வத்தில் சதாசிவம் மனமகிழ்வான
கலியின் துயர்தீர் கண்முடி புத்தரும்
  கலகலக்கும் அரசஇலை போதியடியில் ஞானமடைந்தான்
சிலதுளசி தளமதில் ஸ்ரீ விஷ்ணு மெய்மறப்பான்
  சிலிர்க்கும் வெற்றிலையில் சர்வமங்களம் நிறையும்
ஒலிக்கும் தென்னை ஒலையை சுவைத்திடுவாய்
  ஒளிர்பச்சை அருகம்புல்லினை ஒடிவந்து நீஅணிவாய்
இலையெல்லாம் தெய்வத்தின் இறைவடிவம் எனஉணர்ந்தேன்
  இதயத்தில் நீவந்து எப்போதும் காத்திடுவாய்!

72. நாலும் உணர்ந்தவன் நீ...

நான் மறையில் நிறைந்த நற்பொருளோ நீ
  நான் மறையின் முடிவான பொருளோ நீ
நானாவித தர்ம சாத்திரப் பொருளோ நீ
  நன்கமைந்த இதிகாச புராணங்களோ நீ
நானறிந்த எட்டெழுத்து ஆரெழுத்து ஐந்தெழுத்தில்
  நன்றாக மறைந்திருக்கும் நாயகனோ நீ
நானறிந்தது ஏதுமில்லை நீயறிவாய் விநாயகனே
  நாலும் உணர்ந்தவன் நீஇரங்கி அருளாயே!

73. ஏழேழு பிறவிகள்!

ஏழேழு பிறவிகள் எடுப்போம் என்பார்
  எத்தனையாவது பிறவி இது எனக்கு எனஅறியேன்
அழகான பிறப்பும் அடுத்துவரும் இறப்பும்என
  அங்கும் மிங்கும் ஆடுகின்ற ஊஞ்சலாக
உழலும் எந்தன் உள்மனதைப் பலகையாக்கி
  உறுதியான கயிறு உன்பாசத்தால் கட்டி
இழுத்து ஆட்டுபின் இறுதியில் நிறுத்திவிடு
  இனியவனே கணேசா இருதாளில் இணைத்துவிடு!

74. எல்லோரும் உன்னுள்ளே!

புலிமீது அமர்ந்த பொன்மேடு ஐயப்பனும்
  புதுமயில் மீதமர்ந்த படைவீடு முருகனும்
பொலி காளைமீது அமர்ந்த கயிலை நாதனும்
  பறக்கும் கருடன் மீதமர்ந்த பரந்தாமனும்
கிலிதரும் சிம்மத்தில் அமர்ந்த காளிமா சக்தியும்
  கஜமுகன் அருகினில் அமர்ந்திடும் திருமகளும்
பொலியும் அன்னமதில் அமர்ந்த பிரம்மனும்
  புன்னகையோடு அவன்நாவில் அமர்ந்த வாணியும்
எலிமீது அமர்ந்துவரும் ஏகதந்தன் உன்னுள்
  எல்லோரும் இருக்க பணிவென் உந்தனையே!

75. சோதித்து பார்ப்பதேன்?

எல்லோருக்கும் அறீவுரை எளிதாக கூறவல்லேன்
  எதையும் பற்றற்று எண்ணிடுவீர் என்பேன்
வல்லவன் நமக்கனித்த வாழ்வின்நாள் ஒவ்வொன்றும்
  வரமாக நினைத்தே வாஞ்சையுடன் இருப்பீர்என்பேன்
பல்லாயிரம் நிகழ்வுகள் பதிந்தவை பின்னோக்கி
  பார்த்து அலசுங்கள் பரவசம்கொள் என்பேன்
சொல்லும் சொற்கள் சேர்ந்தவருக்கு பயந்தரலாம்
  செல்லாமல் என்னுள்ளே சோதித்து பார்ப்பதேன்?

76. ஒளிமயம் ஆக்கிடுவான்!

கற்பூரம் காலடியில் ஏற்றி கணபதியை தினம்தொழ
  கற்பனை வளம்தந்து கவியரசு ஆக்கிடுவான்
பொற்பாதம் தனைப்பணிந்து பதிகங்கள் பாடிட
  பொன்மனம் தந்து பொருளெல்லாம் நல்கிடுவான்
நற்கோவில் வலம்வந்து நாள்தோறும் வழிபட
  நல்லஎண்ணம் ஒன்றே நன்னெஞ்சில் தோற்றுவிப்பான்
உற்றதோர் அன்பையே உண்மையாக வேண்டிட
  உலகையே உறவாக்கி ஒளிமயம் தந்திடுவான்

77. தூயவனே வந்தருள்வாய்!

பசுமதி மைந்தனே பிரம்ம ரூபனே
  பஞ்சபாதகம் அழிப்பவனே புராதனமானவனே
விசுவரூப உமைபாலனே விஷ்ணுப் பிரியனே
  விக்னமின்றி செயல்களை விரைவில் நிறைவாக்குபவனே
காசுபணம் கருத்தில் கொள்ளாத கனவானே
  நேசமான நெஞ்சை நிலையாக்கி கொள்பவனே
தூசாகப் பறந்திடும் துயரங்கள் யாவுமே
  தும்பிக்கை நாயகனே தூயவனே வந்தருள்வாய்!

78. ஒன்பதுவாசல் கோட்டை...

ஒன்பது வாசல் ஒய்யாரமான கோட்டை
  ஒளிரும் ஆன்மா ஒப்பிலா உள்ளிருக்கும்தெய்வம்
கண்ணிரு வாசல் கணபதியுனைக் காண
  காதிருவாசல் கஜானனா உன் புகழ்கேட்க
முன்னிறு மூக்கு மூலவனே உனமணம்முகர
  முன்புரளும் நாக்கு மூலதாரமே உனைப்பாட
பின்னிறு வாசல் பொலிவில்லாதன் நீக்கிடஎன
  பக்குவமாய் படைத்து நீதந்த புகழ்உடலை
என்னவோ செய்து எல்லாவற்றையும் மறந்து
  எல்லையிலா துயர்களை எதிர்கொண்டு சுமந்து
கண்ணீர்விட்டு காத்திடுஎன கதறி நின்றால்
  கதிரொளி ஆன்மா கணத்தில் நீங்கிட
வண்ணஉடல் வாடும் வந்தமண்னை சென்றடையும்
  விலையிலா ஆன்மா விநாயகனைச சேர
ஒன்றும் செய்யாமல் ஒயந்து கிடந்தேனே
  ஒங்காரப் பரம்பொருளே ஒடிவந்து எனைக்காப்பாயே!

79. சிரிக்கும் துறவி நீ!

சிரிக்கும் துறவிநீ சிந்திக்கும் புரவிநீ
  சொல்லின் பொருள்நீ பொருள்தரும் தருமம்நீ
தரிகெட்ட குதிரையாய் தப்புவழி போகாமல்
  தடுத்து நிறுத்திடும் தத்துவ கடிவாளம்நீ
திரிகால மூர்த்திநீ தூமகேது ஆனவனும்நீ
  தன்னையே நினைத்து தன்னிறைவிலா மானுடனை
சரிசெய்து சுகம்பெற சாத்திரம் தந்தவன்நீ
  சதுர்த்தி நாயகன்நீ சங்கடம் தீர்ப்பவனும் நீயே!

80. கோடானு கோடி நன்மையே!

பிரம்மனும் விஷ்ணுவும் பரமசிவனும் குருவாக
  பராசக்தியும் முருகனும் பிரகஸ்பதியும் குருவாக
அரக்கர்குரு சுக்கிர ஆச்சாரியார் குருவாக
  அனைத்து சப்தகுருகாண ஆயிரம்கோடி நன்மைவருமே
பிரணவத்தின் வடிவாகி பொருளாகி விளங்கும்
  பக்தநிதி சத்ய பராக்கிரம பஞ்சஹஸ்தா
வரசித்தி விநாயகனே வரமருளும் குருவாகஉனை
  வணங்கிப் பெறுவோம் வரையிலாகோடி நன்மையே!

81. என்னையும் பணித்தருள்!

வானும் வானில்வரும் வெண்ணிலவும் கதிரவனும்
  வீசுகதிர் ஒளியும் ஒளியில் வாழும்
மானிலமும் மானிலத்தில் விலங்கும் பறவையும்
     மானிடரும் மானிடத்தில் மனமும் மனதில்
தேனான எண்ணமும் தெவிட்டாத கற்பனையும்
  தீஞ்சுவை பாடலும் பாடல்தரும் நன்மையும்
ஞானத்தின் உருவே நின்னருளால் பெருகும்
  ஞாலத்தில் நன்மை செய்ய என்னையும்  பனித்தருளே!
                     

82.கணபதியே போற்றி

காற்றும் நீறும் கனலும் மழையும்
    கடலும் அலையும் கானகமும் மலையும்
வற்றாத நதியும் விளைகின்ற நிலமும்
    வான்மதியும் வீசும் கதிரும்
பொற்றாமரை முதலான பொலிகின்ற மலர்களும்
    பசும்புல் வெளியும் பழங்களும் காய்களும்
கற்றிட நூலும் கனிந்திட இதயமும்
     கணக்கின்றி அருளிய கணபதியே போற்றி!

83. பாதையை தேடிவிடு!

அடியவரும் சித்தரும் ஆண்டாண்டு காலமாய்
     அவனியில் சுற்றிவந்து ஆன்மாவின் தேடலுக்கு
வடித்தெடுத்த நூல்களான வார்ப்புகள் ஆயிரமாயிரம்
     வாழ்நாள் போதாது விழியால் பார்த்திடவும்
செடிக்கு தேவையான செழுநீர் போலவே
     செயல்பட உந்தனுக்கு சிறந்ததை தேர்ந்தெடுத்து
படித்து பாராயணம் பசுபதிமகனுக்கு செய்திடு
      பரமனடி சேர்ந்திட பாதையை தேடிவிடு!

84. கருத்தில் நீயிருந்து...

வெந்ததைத் தின்று வீணே அலைந்திருந்தேன்
      வெற்றியின் வாகைக்கு வழியேதும் தேடிலேன்
சொந்தம் பந்தமென்று செக்குமாடாக சுழன்றேன்
     சொந்தம் உலகினில் சுயம்புவான நீயென்று
வந்தது ஞானம் வாழ்வின் இறுதியில்
      வாராமல் போகாமல் வழிகாட்ட வந்தாயே
கந்தனுக்கு மூத்தவனே காலத்தை கடந்தவனே
       கருத்தில் நீயிருந்து காலமெலாம் காத்திடுவாயே!

85. சன்மார்க்கம் காட்டுவாயே!

எரிகின்ற தணலும் எதிர்வீசும் காற்றும்
  ஏகமாய் பொழியும் எழிலான மழையும்
புரிகின்ற மயில்நடனம் பொலிகின்ற வனமும்
  புதுப்புது மலர்கள்தரும் புனிதமான மணமும்
புரியாத மொழியில் பேசுகின்ற பறவைகளும்
  பூவுலகில் நீபடைத்த பொக்கிஷங்கள் அன்றோ
சரியான பொருளை சேர்த்திட அறிகிலேன்
  சத்யனே கணநாதா சன்மார்க்கம் காட்டுவாயே!

86. சிறிதேனும் உண்டா?

பிறவியின் இறுதியில் பாரினில் இருப்பதை
  பிரத்யகூமாக உணரும் பக்குவம் தந்துவிட்டாய்
பிறந்து நான்என்ன பிறருக்கு செய்தேன்
  பட்டியல் போட்டுஇனி பயனில்லை அறிவேன்
பறக்க நினைக்கும் பறவையை இனியும்
  பிடித்து வைத்து பலவீனம் ஆக்குவதேன்?
சிறப்பாக முடித்திட சித்திவிநாயகன் நீயிருக்க
  சிந்தித்து வேண்டுவது சிறிதெனும் உண்டோ?

87. தயாபரனே வருவாயே!

கூட்டுப் பறவையாய் குதித்து விளையாடி
  காட்டிலும் மேட்டிலும் கலகலத்து இருக்காமல்
பூட்டி வைத்த பொன்கூண்டில் பூரித்திருந்தேன்
  பழம்பால் காட்டிட பகட்டில் வாழ்ந்திருந்தேன்
விட்டு விடுதலையாக விருப்புடன் துடிக்கின்றேன்
  வெளியே கதவுதனை வந்துநீ திறப்பாயோ?
தட்டிஎன தோளில் தயவோடு கைவைத்து
  தாளடியில் சேர்க்க தயாபரனே வருவாயே!

88. சும்மா இருக்கச் செய்வாயா?

எல்லாம் உன்செயல் என்பதை நானறிவேன்
  எதுவும் நீயின்றி அசையாது எனஅறிவேன்
புல்லும் பூண்டும் பூவிலகும் உன்கண்ணசைவில்
  புரிந்தும் மீண்டும் புரியாமல் வேண்டுகிறேன்
வல்லவன் நீயின்றி வாய்ப்பது ஏதுமில்லை
  வாய்விட்டு நின்செவியில் வந்துநான் பேசுகிறேன்
சொல்லாமல் செய்கின்ற சிவசக்தி பாலனே
  சோர்வுநீக்கி என்னை "சும்மா இருக்கச்" செய்வாயா?

89. நான் மறப்பது இயலுமா?

பால்மணம் மாறாத பச்சிளம் குழந்தையின்
  பொக்கைவாய் சிரிப்பில் பத்தினியின் குங்குமத்தில்
கால்தடுமாறி நடக்கும் முதியோரின் தளர்வில்
  காடுமலை எங்கும் கண்ணிலிருந்து மறைந்து
வாலறிவினை நாடும் சித்தர்தம் செயலில்
  வானும் பூமியும் வருகின்ற மழையும்
நீலவான் மதியும் நீள்கதிர் சூரியனும்
  நான்காணும் கணநாதன் உன்னை நான் மறப்பது இயலுமா?

90. நல்லதைத் தந்திடுவாய்!

விரக்தியின் உச்சத்தில் வேதனையில் எனைவைப்பாய்
  வேண்டுவது எல்லாமேஉன் வேடிக்கை விசித்திரமே
இரக்கம் உனக்கில்லையென இரவுபகல் புலம்புகிறேன்
  இதுவும்என் அறியாமை இணங்கியே அறிவேன்
சருக்கலா சாகசமா சாதனையா சுயம்புவே
  சத்யனே நீஅறிவாய் சஞ்சலத்தை நீக்கிவிடு
நெருக்கமான "நம்பிக்கையை" நெஞ்சில் நிறுத்திவிடு
  நாடுவதில் நல்லதை நீயே தந்தருள்வாய்

91. மென்மையாக சேர அருள்வாயா?

கோடை மழையின் குளிர்துளி என விழுந்து
  குமுறும் உள்ளத்தை குளிர்விக்க மாட்டாயா?
காடை கவுதாரிஎன காட்டுப் பறவைகளாய்
  கவலையின்றி பறந்திட கருஞ்சிறகு தாராயா?
சாடைபேசி பழியை சாற்றிட ஆள்தேடி
  சகதியில் புரளுமெனை சட்டென தூக்கிடுவாயா?
மேடையில் அமர்ந்திருக்கும் மெளனகுருவே மகாவீரா
  மெல்லநின் மலரடி மென்மையாக சேர அருள்வாயே!

92. சேரவேண்டும் உன்னடியில்!

தினமும் வந்துஉன் திருவடி தொழுது
  திருப்புமுனை தருகவென தெளிவாக வேண்டுகிறேன்
மனமும் நெஞ்சும் மாறும் மாற்றத்தை
  மயங்காது ஏற்றிட மனோபலம் வேண்டுகிறேன்
தனம் வேண்டேன் திடஉடல்நலம் வேண்டுகிறேன்
  தள்ளாடும் நிலையிலும் 'தன்னம்பிக்கை' வேண்டுகிறேன்
சினத்தை போக்கி சீரானஅன்பு வேண்டுகிறேன்
  சிரித்த முகத்தோடு உன்னடி சேர வேண்டுகிறேன்

93. கணத்தில் என்னை மாற்றிவிடு!

மண்ணில் நான் மறைந்து விழவேண்டுமெனில்
  முளைக்கும் விதையாக மண்மீது விழவேண்டும்
மண்ணில் வீழ்ந்தவிதை முளைத்து எழவேண்டும்
  மரமாக செடியாக மாபெரும் விழுதாக
கண்ணிற்கு சோலையாக கடும்வெயிலில் நிழலாக
  கனிதந்து சுவைதந்து காலமெலாம் நிலைக்கவேண்டும்
கண்கண்ட தெய்வமே கணபதியே உன்கோவில்
  காணும்மர விதையாக கணத்தில்எனை மாற்றிவிடு!

94. நந்திமகனே அருள்வாயே!

நடந்ததும் நடப்பதும்இனி நடக்கப் போவதும்
  நாயகன் நீநடத்தும் நாடகம் அன்றோ
நடந்ததற்கு யார்யாரோ காரணமென புலம்புலும்
  நடப்பதற்கு நான்பொறுப்பு இல்லையென நம்புவதும்
நடக்கப் போவது நன்மைதர நினைப்பதும்
  நீங்காது தொடரும் நாளின் நிகழ்வுகளாக
நடக்க வேண்டியதை நீநடத்த இருக்கையில்
  'நம்பிக்கை' எனதுபலம் நந்திமகனே அதனை நீ அருள்வாயே!

95. ஆதிசக்தி கணபதியே!

அறிவுநீ ஆற்றல்நீ அதிசய வடிவம்நீ
  ஆரம்பம்நீ முடிவும்நீ ஆக்குவதும்நீ அழிப்பதும்நீ
செறிந்த மரநிழலில் சிற்றுருவில் இருப்பவன் நீ
  சென்று வழிபட எளிமையாய் தோன்றுபவன்நீ
தறிகொட்டு ஒடும்மனதை தடுத்து வைப்பவன்நீ
  தள்ளாத வயதில் தாங்கி இருப்பவன்நீ
அறிவிலாத பேதைநான் அடைக்கலம் அருள்வாயே
  ஆதிசக்தி கணபதியே அனுதினமும் தொழுவேனே!

96. துதிக்கை நீண்டுவர...

துதிக்கை நீண்டுவர தூக்கியெனை காக்கின்றாய்
  துயரில் துடிக்கையில் துடைக்கின்றாய் என்விழிநீரை
மதியின்றி மாவுலகின் மயக்கத்தில் இருந்தேன்
  மெளனியாய் வந்துநீ மார்க்கம் காட்டுகிறாய்
விதியென்று ஒன்றிருக்க வீண்கவலையை விரட்டுகிறாய்
  விதிப்படி வாழ்ந்து வல்லவனே உனையே
துதித்திடும் உடலும் தூயமனமும் இறுதிவரை
  தந்தே வைத்துபின் தாள்களில் சேர்த்துவிடு

97. புல்லாய் என்னை நினைத்து...

கீதை கேட்டுயர கீர்த்திஅர்சுனன் நானில்லை
  கதைகருவில் கேட்டு கதிபெற பிரகலாதன் இல்லை
பதைப்புடன் கண்வைத்த பாசக்கண்ணப்பன் நானில்லை
  பாஞ்சாலிபோல் கதறிஅழ பக்தியும் எனக்கில்லை
கோதையாய் மாலைசூட்டிய நம்புதலும் எனக்கில்லை
  கனிதந்து முக்திகண்ட கானகசபரி நானில்லை
பேதையாய் வாழ்ந்திருந்து பயன்ஏதும் பெறவில்லை
  புல்லாய் எனைநினைத்து பாதத்தில் சேர்த்திடுக!

98. முதுமையில் மனங்குளிர...

உன்னையே நம்பி உன்காலடி தொழுதேன்
  உன்னிடம் என்குறையை உணர்ந்தபடி கூறிவிட்டேன்
சின்ன வேண்டுதல் செவியினில் போட்டுவிட்டேன்
  சிந்தையின் உட்புகுந்த செல்வமே நம்புகிறேன்
என்னை ஆட்கொள்ள ஏகதந்தனே நீயன்றி
  எனக்குத் துணையாக எதுவும்இனி இல்லை
மண்ணிலும் மஞ்சளிலும் மறைந்தெழும் கணபதியே
  முதுமையில் மனங்குளிர முதல்வனே ஆட்கொள்வாய்

99. நின்னடியில் வீழ்ந்திட...

காலன் வரும்நேரம் கடுகிவருவது அறிவேன்
  கணம் ஒவ்வொறும் கனகப்பொன் எனஅறிவேன்
பாலன் உந்தனையே பக்தியால் பணிந்தேன்
  பரமனடி சேர்ந்திட பாசமுடன் அருள்வாயே!
கோலமிகு குடும்பம் கோவிலாக்கி தருவாயே
  கண்மூடும் முன்னே கலகலப்பை காணஅருள்வாயே
நீலகண்டன் மகனே நெஞ்சில் பற்றினைநீக்கி
  நின்னடியில் வீழ்ந்திட நல்லவனே அருள்வாயே

100. சற்குருவே ஏற்றிடுவாய்!

நம்பிக்கை நாயகனாய் நாடெங்கும் வீற்றிருப்பாய்
  நல்லவர் நெஞ்சினில் நடமாடி மகிழ்ந்திருப்பாய்
தும்பிக்கை சுழற் துயரங்கள் நீக்கிடுவாய்
  தூயவனே நல்லறிவு துதிப்போர்க்கு நல்கிடுவாய்
இம்மியும் நகராது இகபர உலகினில்
  இசைவான உன்னசைவு இல்லாது போகுமெனில்
சம்மதித்து உன்னிடம் சந்தக்கவி நூறுபாடி
  சன்னதியில் சரணமிட்டேன் சற்குருவே ஏற்றிடுவாய்!

முடிப்பு

வெற்றியின் உருவான விக்னேஸ்வர பகவானே
  வளர்கவி நூறுபாடி விரும்பித் தொழவந்தேன்
உற்றகவி உருப்பெற உதவியது நீயன்றோ
  உடனிருந்து எழுதவைத்து உயர்கலை தேவியன்றோ
கற்றகல்விப் பயன்எனில் கனிந்தருளல் உன்கருணைஎன
  கணபதியே கண்டேன் கலக்கம் துறந்தேன்
பற்றற்ற பாதமதை பாடிய கவிமாலை
  படிப்போருக்கு நலமெலாம் பெற்றிட அருள்வாயே

ஸ்ரீ பிரசன்ன மகா கணபதி கோவிலில்
கிடைத்த அருள்வாக்கு

"மெய்யான தாபமும் முயற்சியும் இருக்குமாயின தகுதியானதை தந்திட தானே வந்து குதிப்பான்"