வியாழன், 9 ஜூன், 2016

ஸ்ரீ முருகன் நூறு

ஸ்ரீ முருகன் நூறு

சமர்ப்பணம்
எனது தந்தையாய் தோழனாய் தனது
இளமைப்பருவ நிகழ்வுகள் - வெளியூரில்
வாழ்ந்த நிகழ்ச்சிகள் - அந்தகாலக்
கட்டகிராமிய கலைகள் - என எத்தனையோ
செய்திகனை சுவைபடதன் வார்த்தைகளால்
என் கண்முன் காட்டியவர் எனதாத்தா, அவர்
(எனது 'அப்பா'தான்) என் கல்வி
தொழில், குடும்பவாழ்வு என ஒவ்வொரு
கட்டத்திலும் கூர்ந்து கவனித்து
வழிநடத்தி என்மீது தனிப்பட்ட
அன்புசெலுத்தி, எனது உயர்வில்
பெருமை கொண்டவர் என் தாத்தா
ஸ்ரீனிவாச அய்யங்கார் அவருக்கு
'ஸ்ரீ முருகன் நூறு' எனும் கவிதைநூல்
ஸ்மர்ப்பணம்!

காப்பு
1. கணபதி

வெற்றி வேலனை வீரத்தின் திருமகனை
  வாய்பாடித் துதித்திட வளர்கவி நூறு
பொற்றாமரையில் பொலிந்த பொன் ஆறுமுகனே
புத்தமிழில் பாடிட புத்தியில் வந்திடுக
கொற்றவை மகனே குணவானே கணபதியே
கூறும் சொல்லில் கூடிவந்து நீயிருந்து
ஏற்றமிகு விநாயகனே எந்தன் உளந்தனில்
என்றும் இருந்து ஏட்டினில் வந்தருள்வாய்!

2. வாணி

வெண் தாமரையில் வீற்றிருக்கும் தேவி
விளங்கும் ஏடும் வெண் ஜெபமாலை தாங்கி
மண் மயங்கும் மதுரகானம் உந்தன்
மகர வீணையில்மீட்டி மகிழும் அன்னையே
வண்ண மயிலானை வானவர் சேனாபதியை
வெற்றி வேல் வீரனை வளர் சேவற்கொடியோனை
எண்ணத்தில் வைத்து எழில்கவி நூறுபாட
என்னுள் வந்திருந்து எழுதவைப்பாய் தாயே!

ஸ்ரீ முருகன் நூறு

1. செந்தூர் பெருமானே!

வேலினைக் கையிலேந்தி வேலாயுதம் ஆனவனே
  வேல் அளித்த அன்னை வேல்விழியாள் பார்வதி
வேலில் தன்சக்தியை வீரனாக்க உனக்களித்தாள்
வென்றுவரும் வெற்றி வீரனை உருவாக்கும்
வேள்வியாக அன்னையர் விளங்கிட வேண்டுமென
வேலனைத் தந்தே வியன்உலகு உணரவைத்தாள்
வேலால் சூரனை வீழ்த்திபின் கருணையால்
சேவலும் மயிலுமாக்கிய செந்தூர் பெருமானே!

2. மயிலின் மூலம்...

மயிலேறி வருகின்ற முருகா உன்தோகை
                                              மயிலின் கவர்ச்சி மாந்தரை மயக்கிட
    மயிலில் போதை பெண்நடனம் எல்லாமிருக்க
             மமதையில் தனக்கேயென மெய்மறந்து வாழ்ந்தபின்
  நோயினில் நொந்து நிலவாழ்வு நீங்கியபின்
         நிரந்தரம் ஏதுமில்லை நீத்தார் உலகிலும்இல்லை
                                           மயிலை அடக்கிய மலைவாழ் முருகா
          மயிலால் மாயவாழ்வு காட்டுகிறாய் பெருமானே!

3. கந்தவேல் கல்விவேல்!

கந்தனின் கைவேல் கல்வியின் அடையாளம்
 கூர்மையான நுனி கூர்மைமிகு அறிவாகும்
 பிந்திவரும் அகன்றபகுதி பரந்த மனப்பான்மை
    பின்நீளும் கைப்பிடி பல்வேறு நூல்படிப்பாகும்
  தந்திடும் கதிர்வேலன் தகுதியை உயர்ந்த்திடவே
           தக்கதோர் ஞானபண்டிதனாய் தரணியில் நிற்கின்றாய்
 வந்தனை செய்வோம் வடிவேல் முருகனையே
      வஜ்ரவேலுடன் வந்து வாழ்விப்பாய் பெருமானே!

4. கார்த்திகேயனே!

பொன்னிறப் பட்டுத்திய பெரும்இடுப்பு கொண்டவரே
பொங்கும் கலிதோஷம் பூரணமாய் நீக்குபவனே
                                      பொன்னிறத் திருமகள் பூரிக்கும் திருமால்
 போற்றிய மருகனே பொற்றாமரை சரவணத்தில்
                                      மின்னும் கார்த்திகை கன்னியர் வளர்த்திட
     மேன்மைமிகு கார்த்திகேயனே மங்களம் உந்தனுக்கே
                                      என்றும் எமக்கருள எழுந்தருளி வருவாயே
எல்லா மலைமேலும் ஏறியமர்ந்த பெருமானே

5. மனக்கோயில்

மனதில் கோயிலை மானசீகமாய் நிர்மாணித்து
மங்கல குடமுழுக்கு மகிமையோடு செய்திட
   தினமும் வேண்டிய திருத்தொண்டர் 'பூசலார்'போல்
   தேடிவந்த மன்னனும் திகழ்கின்ற தேவனுருவை
 மனக்கோயிலில் கண்டே மகிழ்ந்த மன்னன்போல்
        முருகா எனநினைந்து முழுமனதால் தொழுகின்றேன்
மனத்துயர் போக்கியே மலர்ச்சியை அருள்வாய்
          மனவாஸேஸ்வரன் மேவும் திருநின்றவூர் பெருமானே!

6. அக்னிப் பூவாக.....

அக்னிப் பூவாக அழல்தீப் பிழம்பில்
    அழகாக தோன்றிய அதிசய பாலகனே
      மிக்கஅழகு மன்மதனை மிஞ்சிய குமாரனே
               மலைதோரும் குடியமர்ந்த மலைமகள் மைந்தனே
       தக்கவேல் கொண்டு தேவர்தம் தலைவனாகி
     தூர்த்தரை அழித்த திருப்புகழ் நாயகனே
      எக்கணமும் உன்னையே எந்தன் இதயமதில்
             ஏற்றுவித்தேன் ஏகாந்தம் அருள்வாய் பெருமானே

7. காலடியில் சரணடைந்தேன்!

தேனும் பாலும் தெவிட்டாத சர்க்கரையும்
   தீஞ்சுவை பழமும் தொங்கும் பேரிட்சையும்
       பேணும் பஞ்சாமிர்தம் பழனிவாழ் முருகனுக்கென
    பல்லாயிரம் பக்தர்கள் பால்காவடி தாங்கிவர
  தானேஒரு தனியான தெய்வமென நின்றாயே
      தம்மனதில் உன்னையே தலைவனாக போற்றிட
                                          காணும் துறவியாய் காட்சிதரும் கந்தனே
         காலடியில் சரணடைந்தேன் காத்தருள் பெருமானே

8. நம்பிக்கை நாயகனே!

வானளாவ உயர்ந்து வேலோடு நின்றாய்
    வந்து தொழுவோர்க்கு வரமருள நின்றாய்
                                            கோனாக தேவர் குலத்தினை காத்தாய்
        குன்றுகண்ட இடமெலாம் குடிபுகுந்து நின்றாய்
     வானகத்து தாரகையாய் வளர்ந்து வந்தவனே
        வாழ்வின் பொருளுணர வைத்த ஸ்வாமிநாதா
 நானாக உனைநாடி நாவால் பாடுவேனா
       நம்பிக்கை நாயகனே நீவந்தருள் பெருமானே

9. குமரேசப் பெருமானே!

வேடனாய் வேலனாய் விருத்தனாய் வேடமிட்டாய்
  வள்ளியை மணமுடிக்க வடிவேலாய்நீ முயன்றாய்
  ஆடாத அவள் நெஞ்சை அடையவும் முடியவில்லை
ஆரணங்கு தனைவெல்ல ஆதரவும் வரவில்லை
                                       தேடல் தெய்வமாய் தும்பிக்கையானைத் தொழ
                                         துவங்கும் செயல் தடையின்றி நிகழும்
                                       கோடொடித்த தேவன் கூப்பிட ஒடிவர
       குறவள்ளிதனை மணமுடித்தாய் குமரேசப்பெருமானே!

10. காவடிப் பிரியனே!

தப்பட்டை தாரை தாம்தூம்என முழங்க
தாங்கும் காவடிகள் தோளில் ஆடிவர
கொட்டி முழக்கி கோலாகலமாய் ஆடியே
கூட்டம் கூட்டமாய் கோடிப்பேர் தினம்
எட்டு திசைகளிலும் எழிலாக வருவாரே
எந்திய வேலோடு ஏழைக்கு அருள்தர
      வட்டமிடும்வண்ணமயில் வாகனனே வருவாயே
        வரமெல்லாம் தந்து வாழ்விப்பாய் பெருமானே

11. அடியேன் நான்!

திருப்புகழ் பாடிய திருஅருணகிரி நானில்லை
      திருமுருகாற்றுப் படைதந்த நக்கீரன் நானில்லை
         கூறும்குமார சம்பவம்தந்த கவிகாளிதாசன் நானில்லை
               கொட்டும் அருவியென குமரேசசதக குமரகுரு நானில்லை
                தெருவெல்லாம் முருகன்புகழ் முழங்கிய கிருபானந்தவாரியார்
             தேன்தமிழில் உன்னைப்பாடிய தேவர்யாரும் நானில்லை
                   கருப்பொருளாய் உனை கவிதையாக்கிய ஒளவையும் நானில்லை
    காலில் பணிகின்ற அடியேன்நான் பெருமானே!

12. பன்னிருகை பெருமானே!

பூபாளம் எழும்ப பூங்குயில் குரலெழுப்ப
 படைவீடு ஆறிலும் பண்மணி ஒசைஎழ
   கோபாலன் மருகன் கோலமயில் வாகனன்
   கோடிசூர்ய பிரகாசன் பன்னிரு விழிமலர
                                            மாபால முருகன் முகம்ஆறு விளங்க
                                             மலையெங்கும் சந்தணம் மணக்க வந்து
    வாபாலா எனஅழைக்க வரமருள வேண்டும்
      பக்தர் மணம்மகிழ் பன்னிருகை பெருமானே

13. பத்தமலை முருகா!

   கன்னித்தமிழ் நாடுவிட்டு கடல்க்டந்த மலேசியாவில்
குகையில் வேலாகி கொண்டாடும் கோவிலாகி
                                       அண்ணாந்து பார்க்கும் அடிநூற்று நாற்பது உயர்
                                         அடிமுதல் முடிவரை அழகிய வேலோடு
                                       மின்னும் தங்கநிறம் மிளிரும் நிமிர்ந்தநிலை
 மண்ணுலகம் போற்றும் பத்தமலை முருகனாகி
                                       உன்னுருவை பூசிக்கும் உரியவயது ஆண்கள்
    உடன்மணம் முடிக்க உன்னருள்தரும் பெருமானே!

14. செந்தணலாய் நின்ற...

சந்தணம் மணக்கும் சண்முக நாதனே
        செந்தூரில் குடிகொண்ட செவ்வேள் கந்தனே
    சிந்தையால் ஆசிதந்து சிவசக்தி தந்தவேல்
      சீருடன் உன் கைவேலாகி சிவந்து எழுந்து
  முந்துவரும் சூரனை முழுவதும் அழித்து
    மயிலாக்கி சேவலாக்கி முக்தியும் தந்து
   செந்தணலாய் நின்ற செந்தூர் வடிவேலா!
        சேவடியில் பணிந்தேன் சீர்மிகு பெருமானே!


15. பஞ்சாமிர்தப் பெருமானே!

பழந்தனை வேண்டி பாரெலாம் சுற்றிவந்தாய்
                                           பழமோ மூத்தவன் பங்காகிப் போக
   பழத்தை முன்னிருத்தி பழனியில் குடிபுகுந்தாய்
     பாலனாய் நின்றவனே பாலதுறவி வடிவினிலே
                                          பழமான நீஆடிய புதுமையான நாடகமோ
         பக்தருக்கு அருள்தர பெரும்ஆண்டியின் கோலமோ
                                          பழமும் தேனும் பாலும் கற்கண்டும்
              பதமான சர்க்கரையும்சேர பஞ்சாமிர்தமான பெருமானே!

16. திருத்தணி முருகா!

தினவெடுத்த தோளுக்கு தீனியாக சூரன்போக
தீப்பொறி வடிவானவன் தீச்சினம் தாளாது
களவுஎடுத்த கன்னிகை குறவள்ளி தனைஏற்று
குஞ்சரியை இந்திரன் கைபிடித்து பரிசளிக்க
                                         உளங்கனிந்த குமரன் உவகையும் கூடிவர
     உயர்வான மங்கையரோடு திருத்தணி மலைமிது
களங்கண்ட பேரழகன் களைப்பாற தாமைர்ந்த
    கவின்மிகு திருத்தணி கதிர்முருகப் பெருமானே!

17. திருப்பரங்குன்றப் பெருமானே!

          குடைந்தெடுத்த கோவிலில் குடிகொண்ட சுப்ரமண்யா
 கோபுரம் மின்னும் திருப்பரங் குன்றமதில்
நடையழகு மிக்க நளினமான தேவயானை
                                             நற்கரம் பற்றிய நற்புகழ் திருமுருகா
   படையெடுத்து வென்ற பராக்கிரம சிவகுமாரா
                                             பரிசாக இந்திரன் பரிசளித்த ஐராவதம்
தடையேதும் இன்றி தயங்காமல் அருள்தர
                                             தங்கவேல் தாங்கி வரும் பெருமானே!

18. பழமுதிர் சோலை குமரவேளே!

கள்ளழகர் மாமனுடன் கைகோர்த்து உலவிடவோ
      கவின்மிகு பழமுதிர் கலைச்சோலை குடிகொண்டாய்
 உள்ளத்தில் அன்போடு உயர்நங்கை இருவரோடும்
   உலவிடும் மயில்மீது உன்னதமாய் வீற்றிருப்பாய்
                                        வெள்ளமெனப் பெருகும் வற்றாத அருவிகளும்
                                          விலங்கும் பறவையும் வேண்டிய பழங்களும்
   கொள்ளையிடும் காட்சியும் கோலாகல வனங்களும்
        குலவிடும் பழமுதிர்சோலை குமரவேள் பெருமானே!

19. சுவாமிநாதப் பெருமானே!

சர்வபாவம் நீக்கும் சடாக்ஷ்ர மந்திரம்
             சரவணபவ என்னும் சண்முகநாதன் திருமந்திரம்
                 சர்வேஸ்வரன் பாதம்பணிய சற்குருவாய் அமர்ந்தவனே
            சகலகலா வல்லவனே சுவாமிமலை குருநாதா
         கூர்மதியுடை குமரா கதிர்வேலா பிரணவத்தின்
          குறிப்பான பொருளை கங்கைசூடன் அறிந்திட
    சீராக உணர்த்தியவனே சிங்கார வேலனே
          சீர்ஒங்க அறிவுதருக சுவாமிநாத பெருமானே!

20. மருதமலையானே!

சித்தர் வாழ்ந்திருந்த சிங்காரத் தேவன்மலை
    சீர்பெரும் மருதாசலம் வாழுகின்ற மருதமலை
 தித்திக்கும் தேன்வடிவம் திகட்டாத பால்முகம்
      தேவனாய் சுப்ரமணிய சுவாமியாய் வீற்றிருப்பாய்
 எத்திக்கும் உள்ளோரும் ஏறிவந்து வணங்கிடும்
எதிர்வரும் பாம்பாட்டி ஏற்றமிகு சித்தருடன்
                                         சித்திரை நிலவாக சிரித்து வரமருளும்
     சின்னஞ் சிறுவேலா சிரம்பணிவேன் பெருமானே!

21. கனகவேல் கந்தனை...

குன்றிருக்கும் இடமெலாம் கோவில் கொண்டவனே
 குறைதீர்க்க உயரத்தில் குடிகொண்டு அமர்ந்தாயே
                                       வென்றிடும் பகையெலாம் வேலில் அடக்கம்
 வேலால் எம்வினைகள் விரைந்து முடித்திடுவாய்
    கன்றுதேடும் பசுவாக கார்த்திகேயா உனையடைந்தேன்
                                        கவிதைப் பொருளான கனகவேல் கந்தனே
                                       என்றும் உன்னடிகள் ஏற்றமென எண்ணுவார்க்கு
                                        எளிதில் வந்தே எதிர்நிற்பாய் பெருமானே!

22. ஆறுமுகமே!

அன்னையாய் ஒருமுகம் அத்தனாய் ஒருமுகம்
           அண்ணனாய் ஒருமுகம் ஆருயிர் நண்பனாய் ஒருமுகம்
  என்னைகாக்க ஒருமுகம் எட்டுதிக்கும் ஒருமுகம்
      என்கண் செல்லுமிடம் எல்லாம் உந்தன் ஆறுமுகம்
                                        பன்னிருகை கொண்டு பக்தரை காத்திடவே
     பச்சைமயில் மீதமர்ந்து பரிபாலிக்கும் பாலமுருகா
    உன்னத உருவானவனே உயிர்காக்கும் உயர்ந்தவனே
உன்னில் உருகினேன் உன்னதப் பெருமானே!

23. மலையெல்லாம் வீடாக்கி

அன்பான மைந்தனாய் அமர்ந்த குருவாய்
        ஆசை சோதரனாய் அரவனைக்கும் காதலனாய்
        இன்பமான கணவனாய் இணைந்திடும் நண்பனாய்
      இதயத்தில் குடியேறும் ஈடில்லா தெய்வமாய்
துன்பம் துடைக்கும் தூயவனாய் உலகில்
                                             துஷ்டரை அழிக்க துடிக்கும் வீரனாய்
      மன்னிக்கும் குணமுடைய மாமயில் வாகனனே
          மலையெலாம் வீடாக்கி மகிழ்கின்ற பெருமானே!

24. உள்ளமதில் அமர்வாயே!

சேவலும் மயிலும் சேர்ந்து விளையாட
       சிவனும் சக்தியும் சேர்ந்து உனைத்தாலாட்ட
  தேவானை வள்ளி சேர்ந்து உன்அருகிருக்க
தேடும் பக்தர்கள் சேர்ந்து உனைநாட
   கூவும் பறவையினம் கூடும் சோலையிலும்
     கடலும் அலையும் கலந்தாடும் இடமதிலும்
       மேவும் மலையெலாம் முருகனாய் அமர்ந்தாயே
         மெல்லஎன உளமதிலும் அமர்ந்திடு பெருமானே!

25. சிந்தையிலே ஒர்கோவில்

செந்தூர் மணலும் சுவாமிமலை கல்லும்
    சோலையின் மரமும் சூழ்பழனி மண்ணும்
              விந்தைமிகு பரங்குன்றப் விரிபாறையும் திருத்தணிநீரும்
  வளமாக கலந்து வியத்தகு கோயில்என
  சிந்தையில் ஒருகோயில் சிங்கார வேலனே
      சிறப்பாக கட்டிடுவேன் சீர்பெறும் படைவீடாக
                                           கந்தனே ஏற்பாயா காட்சியும் தருவாயா
         கதிரேசனே கனிந்து வந்தருள்வாய் பெருமானே!

26. அச்சமில்லை!

சூரியனின் ஒளியும் சிறுநிலவின் குளுமையும்
                                          சேர்ந்து அமைந்த சுப்ரமணிய ஸ்வாமி
  மாரியென கருணையை மண்டியிடப் பொழிவாய்
  மலர்தூவி பூசிக்க மணம்வீசும் அருள்தருவாய்
   கோரிக்கை வைத்தாலும் குழம்பியே தவித்தாலும்
கையில் வேல்ஏந்தி காத்திட ஒடிவருவாய்
   நேரில் காண்பதுபோல் நெஞ்சினில் வீற்றிருப்பாய்
   நேயமாய் நீயிருக்க அச்சமில்லை பெருமானே!

27. நீயில்லா இடமுண்டோ?

நீயில்லா இடமுண்டோ நாயகனே உலகினிலே
 நீலக்கடல் அருகில் நீண்டுபரந்த புல்வெளியில்
   மயிலாடும் சோலையில் மாகனிகள் சூழ்நிலையில்
  மலைஎன கண்டாலும் மால்முருகா நீயிருப்பாய்
       தாயில்லா பிள்ளையில்லை தமிழில்லா மொழியில்லை
                                         தங்கவேல் குமரா தரணியில் நீயில்லாமல்
 கோயில் ஏதுமில்லை கருணைதர தெய்வமில்லை
                                         கூர்வேல் குமரேசா காத்திடுக பெருமானே!

28. உயர்வளிப்பாய்!

பன்னீரில் குளிப்பாயோ பால்தேனில் மிதப்பாயோ
      பஞ்சாமிர்தம் தருகின்ற பல்சுவையில் திளைப்பாயோ
   என்னேரமும் சந்தணம்பூசி எட்டுதிக்கும் மணப்பாயோ
எழிலான திருநீறணிந்து ஏற்றத்தை தருவாயோ
முன்கையில் வேல்தாங்கி முனைந்து நிற்பாயோ
   முழங்கும் மணியோசை மயக்கத்தில் இருப்பாயோ
         உன்னையே நினைந்திருக்கும் உன்னடியாரை நினைப்பாயோ
       உள்ளத்தில் வைத்திருந்து உயர்வளிப்பாய் பெருமானே!

29. தானறியேன்!

கேட்பது உன்கால் கிண்கிணி ஒசையா
            காதில் வந்தொலிப்பது கைபிடித்த வேல்ஒலியா
                                             பாட்டாக வருவது பாலன் உன்புகழா
           படபடவென சேவல்கொடி பறக்கின்ற கோலமா
        பொட்டமைந்த மயிலாடும் பேரானந்த நடனமா
          புன்னகைக்கும் ஆறுமுகம் பூரிக்கும் காட்சியா
         திட்டமுடன் ஏந்திய தினவெடுக்கும் பன்னிருகை
          தாங்கிடும் ஆயுதமா தானறியேன் பெருமானே!

30. ஒரு துணையாவாய்!

ஈராறு விழிகாணஎன் இருவிழி ஏங்கும்
  ஈராறு கரங்காணஎன் இருகரம் கூப்பும்
 ஒராறு முகங்காண ஒடிவந்து பணிவேன்
    ஒம்எனும் பிரணவத்தை ஒதிடும் குருவே
 பாராது நீயிருந்தால் பதறியே துடிப்பேன்
          பக்கத்தில் நீவந்தால் பரவசத்தில் முழ்கிடுவேன்
                                            ஒராறு படைவீடு ஒங்காரத் திருவீடு
                     ஒவ்வொன்றும் நான்காண ஒருதுணையாவாய் பெருமானே!

31. என்னுள்ளே நீ வந்து....

ஒன்பதுவாசல் கோட்டையாக ஒர்உடலை தந்தாய்
ஒதியுன் அருள்பெற உள்ளே உயிர்வைத்தாய்
இன்பமும் துன்பமும் இடமாறும் நிலைவைத்தாய்
இகபர சுகங்காண இனியதோர் முறைதந்தாய்
                                       பன்னிறு தோளும் பன்னிறு விழிகளும்
                                         பக்தனை வழிநடத்த பக்கத் துணையாகும்
                                       என்னுள்ளே நீவந்து எழுப்பிய பின்னாலே
       எளிதாக உனைஅடைய எனக்கருளினாய் பெருமானே!

32. உடனிருப்பாய் பெருமானே!

திருநீறும் சந்தணமும் தகதகக்கும் குங்குமமும்
                                          நுதலான நெற்றியில் நின்று ஒளிவீச
                                        குருவாக கோலமயில் குமரனாக வீரனாக
கடும்வேல் ஏந்தியே கடும்போர் புரிந்தவனே
                                        இருபுறம் இலங்கும் இருதேவியர் துணையாக
 இருக்கும் இடமெல்லாம் இடர்நீக்கும் தலமாக
                                        உருவாகி வந்தவனே உள்ளம்புகும் கந்தனே
           உன்னையே சரண்டைந்தேன் உடனிருப்பாய் பெருமானே!

33. வாரியெடுத்தவனே!

 வைகாசி விசாகம் வரும்ஆடிக் கிருத்திகை
       வைபவ தைப்பூசம் விளக்கேற்றும் கார்த்திகை
                                           வையம் புகழ்சஷ்டி விரும்புகின்ற விரதம்
                                            வீரமிகு சூரனின் வெற்றி சம்ஹாரம்
  வையாபுரி வள்ளி வளைக்கரம் தொட்டநாள்
      தேவாதி தேவன் திருமங்கையை மணந்தநாள்
                                           வையகம் காத்திட வைரவேல் தாங்கியே
         வரமருள வருகஉமை வாரியெடுத்த பெருமானே!

34. சேவற் கொடியோனே!

சிவமைந்தனை சிக்கல் சிங்கார வேலனை
          சுந்தரனை ஜொலிக்கும் சொர்ணமயில் வாகனனை
           சிவபாலனை சக்திவேலால் சூரபத்மனை வென்றவனை
         செந்தூர் வடிவேலனை சுப்பிரமணிய ஸ்வாமியை
        சிவகுமாரனை வள்ளிமஞ்சரி சேர்ந்திடும் முருகனை
               சோலைமலை செல்வனை சென்னைகோட்ட வேந்தனை
                                          சிவநேசனை செவ்வேளை செங்கல்வ ராயனை
      சேவற் கொடியோனை பணிவேன் பெருமானே!

35. எங்கள் பெருமானே!

 குமரனே குணக்குன்றே குழ்ந்தையாகி வந்தவனே
குறுவேல் கையிலேந்தி குறுநகை புரிபவனே
                                        உமாபதி நெற்றியில் உயிர்பொறி எழுந்து
 உன்னத சரவணத்தில் உருவாகி தவழ்ந்தவனே
சமர்செய்ய சக்திவேல் சுனமோடு தாங்கியவனே
சிவனாண்டியும் ஆனவனே சண்முக நாதனே
                                        எமைகாக்க எப்போதும் வந்தருள்க
                                         எழில்மிகு பாலனே எங்கள் பெருமானே!

36. மனதினில் வா!

உண்ணாமல் உறங்காமல் ஒருவாய்நீர் அருந்தாமல்
                                        உந்தன் சன்னதியில் ஒவ்வொரு அடியாக
 எண்ணமெலாம் உன்நினைவாக வலம்வந்து நின்றேன்
    எங்கெங்கும் நிறைந்திருக்கும் எழில்மயில் வாகனனே
கண்முன்னே காட்சிதர கருவறையில் வீற்றிருப்பாய்
                                        காமமெலாம் காத்தருள கதிர்வேலன் நீயிருக்க
                                      மண்மீது வாழ்க்கை மயக்கம் தருவதில்லை
 மங்கலத் தணிகாசலா மனதினில்வா பெருமானே!

37. மயிலேறும் பெருமானே!

இருகண் கொண்டு ஆறுமுகனைக் காண்பேனா
         இருகை கொண்டு பன்னிருகையனைத் தொழுவேனா
                                         திருநீறு பூசியே திருவருளை யாசிப்பேனா
           திருக்கோவில் மணியோசை இருசெவியில் கேட்பேனா
உருமாறிய சேவல் உயர்மயிலைக் கேட்பேனா
       உன்னருள் பெறுவதற்கு உன்னோடு போரிடுவேனா
    முருகாஎன அழைப்பேன் மலைதோரும் தேடுவேன்
     மனமுவந்து எனக்கருள் மயிலேறும் பெருமானே!

38. தந்திடுவாய் தரிசனம்!

ஐந்தெழுத்து மந்திரமும் எட்டெழுத்து மந்திரமும்
     ஐயனே உன்னோடு அணிவகுத்து இணைந்ததென்ன
  கந்தனேஉன் ஆறெழுத்து மந்திரத்தை அனுதினமும்
        காலைமாலை ஒதுகின்றென் கருணையே வந்திடுமோ
செந்தமிழ் செல்வனே சிறுகுறிஞ்சி நிலத்தோனே
                                         சங்கரம் மைந்தனே சக்திவேல் தாங்கியே
                                        தந்திடுவாய் உந்தன் தரிசனம் எப்போதும்
    தாளடியில் வீழ்ந்திருப்பேன் தவசிலப் பெருமானே!

39. எந்தனையும் ஏற்றருள்வாய்!

குன்றக்குடி அமர்ந்த குருபரனே குமாரனே
  குறைதீர்க்க படியேறி குன்றமர்ந்த சீலனே
வென்ற சூரனுக்கும் வெற்றிவழி தந்தாயே
    வேலும் மயிலுமென வாழ்த்திட வைத்தாயே
கன்றினுக்கு இரங்கும் காராம்பசு நீயாவாய்
      களத்தில் சமர்செய்து தேவரை மீட்டெடுத்தாய்
              என்றென்றும் சிந்தனையில் ஏற்றிவைப்பேன் உந்தனையே
          ஏழையேன் எந்தனையும் ஏற்றிடுவாய் பெருமானே!

40. எதிர் வருவாய்!

சென்னையில் குடிகொண்ட சீர்கந்தகோட்ட சீராளா
ஜெகமெலாம் உன்னடியில் செந்தூர் வடிவேலா
                                       மன்னும் உயிரெல்லாம் மனதில் ஆட்கொண்டாய்
                                         மாதவமே வண்ண மயிலோனே கந்தவேளே
                                       மின்னலென ஒளிவீசும் மரகதவேல் வேலவனே
                                         மயங்கும் குறவள்ளி மணளனே தயாளனே
                                       என்னையும் ஏற்பாயே ஏதுமறியா பேதைநான்
   என்வினை தீர்த்தருள எதிர்வருவாய் பெருமானே!

41. வழிகாட்டு பெருமானே!

தஞ்சமென வருவோர்க்கு தக்கஇடம் நீயருள்வாய்
                                         தாகத்தை தீர்த்திடும் தண்ணீரும் நீயாவாய்
     அஞ்சேலென அருள்வேலோடு அபயகரம் காட்டிடுவாய்
   அத்தனை பிழைகளையும் அப்போதே மன்னிப்பாய்
                                       கஞ்சமலை காந்தமலை கற்பூர மலையெலாம்
                                         கந்தா உன்னருள் கனிகின்ற நிலைகண்டேன்
                                       வெஞ்சமர் புரிந்து வெற்றிகண்ட வீரவேலே
 விருப்புடன் எனைஏற்று வழிகாட்டு பெருமானே!

42. கயிறருந்த காற்றாடி!

மெய்ஞான சித்தரை மேதினியில் நானறியேன்
       மெய்யான தொண்டரை முன்சென்று நானறியேன்
                                         பொய்யான வாழ்வும் புகழும் சிறப்பென
    பேணி தொண்டரை சித்தரை நான்தவிர்த்தேன்
   வாய்ப்புகள் வந்தும் வல்லவரை நான் இழந்தேன்
       வானமும் பூமியும் வலக்கையில் என இருந்தேன்
கயிறருந்தது கையிலிருந்த காற்றாடி பறந்தது
 கண்காணாத இடத்தில் காணாமல் போனது
   பயிருக்கு உயிர்தரும் வான்மழையே வேலவனே
        பணியும் எனைத்தூக்கி பதமருள்வாய் பெருமானே!

43. திருவடிப் பாதங்கள்!

கண்ணழகு காண கருத்தெல்லாம் மயங்கும்
கழுத்தழகு காண கவிதை உடன்பிறக்கும்
     வெண்மதி முகமழகு வேதனையை போக்கடிக்கும்
        வேல்கொண்டகையழகு வீணரைத் தோற்கடிக்கும்
                                          வண்ணமய மயிலழகு வானவில்லை தோற்றுவிக்கும்
 வாயின் பவளநிறம் வர்ணஜாலம் காட்டும்
                                          திண்ணென்ற தோளழகு தினவெடுத்து பூரிக்கும்
       திருவடிப் பாதங்கள் தரும்பேரிபைம் பெருமானே!

44. என்னுள் வருவாயே!

ஒங்கார நாதமாய் ஒலியாய் பரவியே
              ஒப்பிலா வடிவமாய் ஒருமுகமாய் ஆறுமுகமாய்
      இங்கும் அங்குமாய் இணையிலா பேரமுதாய்
             இயங்கும் தத்துவமாய் இருந்தும் இல்லாததுமாய்
பொங்கும் கடலில் பொலியும் வானில்
           பிரகாசிக்கும் கதிரவனாய் பொழியும் நிலவாய்
         எங்கெங்கும் ஒளிவீசும் எண்ணிலா தாரகையாய்
                 எழுந்தருளும் ஒளியே என்னுள்வருவாய் பெருமானே!

45. இயக்கிடு என்னையே!

மேனியழகைப் பாடவா மேன்மையைப் பாடவா
   மங்கையர் இருவரை மணம்புரிந்ததைப் பாடவா
கனிவேண்டி சுற்றியதை கோலெடுத்து நின்றதை
               கணநாதனை வேண்டியதை கயிலைநாதனுக்கு குருவானதை
 தனிநின்று சூரபதுமனை தயைகாட்டி வென்றதை
                                          தமிழால் பாடவா தலைவணங்கிப் பாடவா
    இனியும் எனைவிட்டு இவ்வுலகெலாம் அலையாதே
      இனிதே உள்ளிருந்து இயக்கிடுஎன்னை பெருமானே!

46. விடமுடியாது!

வேலாக நீயிருந்தால் விரும்பிபிடியாக நானிருப்பேன்
வேடனாக நீவந்தால் வில்லம்பாக நானிருப்பேன்
                                     கோலோடு நீ நின்றால் கூடவே நான்நிற்பேன்
                                        கருவறையில் நீயிருந்தால் கருப்படியாக நானிருப்பேன்
                                     பாலாக நீயிருந்தால் பழமாக நான்கலப்பேன்
                                        பூசும் நெற்றியில் புதுசந்தணம் நீயானால்
                                     பொலியும் குங்கும் பொட்டாக நானிருப்பேன்
 பாலகுமாரா நீஎன்னை விடமுடியாது பெருமானே!

47. கடைக்கண் பார்த்தருள்!

சஷ்டி விரதமும் சீர்கார்த்திகை விரதமும்
                    சிந்தையில் உன்நினைவோடு சிரத்தையோடு கடைபிடிப்பேன்
       கோஷ்டியாக காவடிதூக்கி கோவில் வந்திடுவேன்
        கோலமிகு வைகாசி விசாகம் கொண்டாடிவேன்
                                           சஷ்டி கவசமும் சகலவித துதிகளும்
           சலிக்காமல் பாடியே சன்னதியில் வலம்வருவேன்
            நிஷ்டையில் நீயிருந்தாலும் நெடுநேரம் காத்திருப்பேன்
           நீவிழிதிறந்து கடைக்கண் பார்த்தருள் பெருமானே!

48. கண்முன்னே வந்து....

இன்று தீரும் நாளை தீரும் என
                  இழித்தடிப்பார் ஏதுமின்றி இறுதியில் நாள்கழியும்
        நின்று துயர்நீக்க நிலத்தில் யாருமில்லை
                நீலமயில் வாகனனே நீயின்றி துணையில்லை
            என்றும் நம்பிக்கையாய் என்னுள்ளே நீயிருக்க
               ஏதேதோ சொல்வார் ஏற்றமிலா சொல்கேட்டு
 கன்றி கலங்கி கரைந்து போகாமல்
             கண்முன் வந்தருள் கதிர்வேல் பெருமானே!

49. வெற்றிக்கனிதருவாய்!

வளராத செடிநட்டு வாய்ச்சொல்லில் பந்தலிட்டு
          வண்டி வண்டியாய் வண்ணமலர் கொய்வேன் என்பார்
தளராத மனத்தையும் தளரவைத்து நோகடிப்பார்
    தக்கவர் தகாதவர் என தரம்பார்க்கத தெரியாமல்
                                        உளமார நம்பியே உலகில் வாழ்ந்துவிட்டேன்
                                          உடல் தளர்ந்தும் உள்ளம் தளரவில்லை
                                        களம் வென்ற கந்தனே கையில்வேல் தாங்கி
                                          கணத்தில் நீவந்து வெற்றிக்கனி தருவாய் பெருமானே!

50. நல்லதாக நடந்திட...

திடமான மனம்தா தீப்பொறியில் வந்தவனே
        தேர்ந்த உடல்நலம்தா தாமரையில் வளர்ந்தவனே
                                          கடக்கும் பாதைகள் கரடுமுரடு ஆனாலும்
     கனிவாக்கி அருள்தர கதிர்காமம் உறைபவனே
                                          நடக்கும் செயல்கள் நல்லதாக நடந்திட
 நாளும் நல்கிடுவாய் நான்மறை நாயகனே
                                          மடக்கும் மாயைகள் மயக்கும் தீவினைகள்
        மறந்தும் எனைஅணுகாதருள்முருகப் பெருமானே!

51. நம்பிக்கை!

குதித்தாடும் மயிலிருக்க குமரேசன் வேலிருக்க
                                         துதிப்போர்க்கு நீயிருக்க தூயவனே - மதிகெட்டு
மாநிலத்தில் மயங்கி மறைந்திட விடமாட்டாய்
                                         நானிருப்பேன் எனும் நம்பிக்கை நீதானே!

52. நீ அருள விலகும்!

எத்தனையோ வலிகள் எந்தன் உடம்பினிலே
                                          சித்தனே சிவகுகனே சிங்கார வேலனே - புத்தியும்
                                          தத்தித் தடுமாறி துடித்து தவிக்கின்றேன்
                                          வித்தகனே நீ அருள விலகும் அவைதானே!

53. சேவிக்கும்வரையிலே!

வளர்பிறை வளர்கின்ற வாழ்வில் எப்போதும்
                 உளம்மகிழ் செயல்கள் உறுதியென எண்ணினேன் - தளபதியாகி
   தேவர்தம் துயர்தீர்த்த தேனார்சோலை முருகனே
     சேவற்கொடியோனே உனை சேவிக்கும்வரையிலே!

54. நாடியே வாராது!

கந்தனை கையில் கனகவேல் தாங்குபவனை
       விந்தை வடிவோனை வேலுமயிலானை - சந்ததுமும்
                                         பாடியே சரவணபவ பதித்தே வைத்திட
                                         நாடியே எவ்வினையும் வாராது தானே!

55. அகத்தில் இருத்த...

         சரவணத்தில் வளர்ந்தவனை சிவப்பொறியில் வந்தவனை
          சூரனை வென்றவனை சக்திவேல் கொண்டவனை - ஒராறு
                                        முகம் பெற்றவனை மூநான்கு கரத்தானை
                                        அகத்தில் இருத்த அணுகாது வினையே!

56. பொற்றாமரைச் செல்வமே!

பார்க்கும் இடமெல்லாம் படைவீடாய் தோன்றும்
                                        கார்த்திகேயா கதிர்வேலா கந்தப்பா - சீர்பெறும்
                                        நெற்றியில் பொறியாக நீரினில் கலந்துதித்த
                                        பொற்றாமரைச் செல்வமே வந்தருள்கவே!

57. எழில் முருகா!

    கண்ணிமைக்கும் நேரத்தில் கிரெளஞ்சமலை தகர்த்து
             மண்ணாக்கி பொடிசெய்த மலைவாழ் முருகா - கண்ணிருந்தும்
                                        உன்னை கைதொழாது உலகினில் வாழ்ந்தேன்
                                        என்னையும் ஏற்பாயோ எழில்முருகா?

58. சிலையாகிப் போனாயோ?

பாடித் தொழுதேன் பெருங் காவடியுடன்
                ஆடித் தொழுதேன் அறுபடை வீடுடையானே - தேடித்தேடி
  அலைந்தும் தேவனே அருள்தர தாமதமேன்
  சிலையாகிப் போனாயோ செந்தூர் முருகா?

59. இருகை தொழுதேன்!

 கொஞ்சி விளையாடி குழந்தையாய் இருப்பாய்
அஞ்சி ஒட அசுரரை வெல்வாய் - பஞ்சாமிர்த
                                         பிரியனே பேதையென் பிழை பொறுப்பாய்
                                         இருகை தொழுதேன் ஏற்றிடுவாயே!

60. ஆட்கொள்வாயே!

தாரகைகள் ஏந்திட தாமரையில் வளர்ந்தாய்
      சூரனை வென்றிட சக்திவேல் கொண்டாய் - தீரனே
                                          குமரனே உந்தன் குன்றேறி வந்தேன்
                                          அமரனே என்னையும் ஆட்டுகொள்வாயே

61. கரம்தந்து காத்தருள்!

கதிர்காமம் உறைகின்ற கதிர்வேலா சண்முகா
        உதிர்கின்ற மரமாகி உழல்கிறேன் உலகிலே - எதிரிலா
                                         வீரனே என்னையும் வீணாகிப் போகாமல்
                                         கரம்தந்து காத்தருள் தணிகாசலனே!

62. துதிபாடி வந்தேன்!

பழம்வேண்டி மயில்மீது பாரெலாம் சுற்றிவந்தாய்
                  வேழமுகன் பழம்வெல்ல வெஞ்சினம் நீ கொண்டாய் - பழனியெனும்
பதிவேண்டி நீசென்றாய் பாலஞானியாய் நின்றாய்
                                       துதிபாடி வந்தேன் துயவனே அருள்கவே!

63. கோடி தீர்த்தங்கள்!

கோடி தீர்த்தங்கள் கோவில்கள் சென்றேன்
             தேடி முன்னோர் தெய்வ சன்னதி கண்டேன் - நாடிவரும்
                                           பக்தரை நல்வழிப் படுத்திடவே கடலின்
                                           பக்கத்தில் நின்றருளும் செந்தூரானே!

64. கடைத்தேற வைப்பாயே!

மதுரமென இனிக்கும் மயில்வாகனன் நாமம்
             ததும்பிடும் கருணை துலங்கும் விழிகளில் - பதுமையென
                                          விளங்கும் தேவயானி வள்ளி மணவாளா
 களங்கம் நீக்கியெனை கடைத்தேறவைப்பாயே!

65. தவக்கோல பாலா!

ஆறுமுகம் கொண்டு ஆட்கொள்ள வந்தவனே
        அறுபடை வீடுகளில் ஆடிவரும் குமரனே - ஆறுதலதர
அவனியில் நீயின்றி யார்வருவார் கூறுவயோ
                                         தவக்கோல பாலாநீ தாங்கி அருள்வாயே!

66. எந்த வடிவில் வருவாயோ?

சந்தணமும் ஜவ்வாதும் சக்திசிவன் திருநீறும்
              சொந்தமெனக் கொண்ட சுகந்தமண சிவபாலா - எந்தவடிவில்
 உனைக் கண்டாலும் உள்ளம் கரைந்துபோகுதே
   எனை ஆட் கொள்ள எந்த வடிவில் வருவாயோ?

67. உலா வரக் கண்டேனே!

        சோலைமலைத் தென்றலும் செந்தூரின் கடல்அலையும்
                தலையான குருவாக தானமர்ந்த சுவாமிமலையும் - கலையான
                                         திருத்தணி வேலும் தண்டமேந்தும் பழனியும்
    கருத்தினில் பரங்குன்றமும் உலாவரக் கண்டேனே!

68. வண்ணமயில்!

வண்ணமயில் ஏறிவந்து வாழ்வை இனிக்கவைத்து
                    எண்ணமெலாம் உந்தனையே எந்நேரமும் நினைக்கவைத்து - கண்ணில்
                                       கருணையே காட்டி காலமெலாம் காத்திட
                                       வருகை தந்தனையோ வடிவேலனே!

69. பாலகுமாரனே!

தந்தை நீ தாயும்நீ தாங்கும் தெய்வம்நீ
            விந்தைநீ வேதம்நீ விளையும் செயல்நீ - சிந்தையில்
காணும் சோதிநீ கதிர்வேல் முருகன் நீ
பேணிஎனைக் காப்பாய் பாலகுமாரனே!

70. வள்ளி மணாளா!

காலையும்நீ மாலையும்நீ கரையும் இருளும்நீ
                காலைக்கதிர்நீ வான்மதிநீ காற்றும்நீ கனலும்நீ - சோலைவளர்
                                         சுந்தரனே நீயின்றி சுகவாழ்வும் உண்டோ
                                         வந்தெனக்கு வரமருள் வள்ளி மணாளா!

71. வானின் சுடரே!

நந்திமகன் வேழனுக்கு நற்தம்பி வேலனே
                 அந்திவான் நிறத்தோனே அழகிய செவ்வேளே - செந்தாமரை
                                           தனில் வளர்ந்த திருக்குமரா கந்தா
வானின் சுடரே வந்தெனைக் காத்தருளே

72. நானும் அடக்கமே!

  அண்ட பகிரண்டம் ஆறுமுகந்தனில் அடக்கம்
                           அண்டியவர்க்கு கருணைஒளி ஆறிருவிழிகளில் அடக்கம் - அண்டகோடி
உயிரினமும் உந்தன் உள்ளத்தில் அடக்கம்
    உயிர்வான உந்திருவடியில் நானும் அடக்கமே!

73. முன்னிருக்க அஞ்சேன்!

சோதியிலே ஒளிவீசும் சுடரே குகனே
             ஆதிசிவம் மைந்தனே ஆறுமுக வேலனே - கதியாக
        பன்னிரு தோளும் பலமிக்க பன்னிருகைகளும்
  முன்னிருக்க அஞ்சேன் மயில்வாகனனே

74. பழனி ஆண்டவனே!

    கண்களில் கருணையிருக்க கரங்களில் அருளிருக்க
            வண்ண மயிலிருக்க வெற்றிதரும் வேலிருக்க - எண்ணத்தில்
எழுந்தருளி எமைகாக்க எழில்குமரன் நீயிருக்க
 பழவினைகள் அண்டிடுமோ பழன் ஆண்டவனே!

75. தகுந்த வேளையிது!

உதரத்தில் உயிரினில் உள்ளே கலந்திருக்கும்
             மதுர மொழியானே மனக்கலக்கம் உணர்ந்தவனே - அதிரப்
                                          புகுந்து அரக்கன் உயிர்பறித்த அமரனே
தகுந்த வேளையிது காத்தருள் காங்கேயனே!

76. ஒருமுறை முருகாவென...

       ஒருமுறை முருகாவென ஒங்கி குரலெழுப்ப
                  ஒராயிரம்முறை ஒடிவந்து அருள்தருவான் - கரந்தனில்
        வேல்தாங்கி விளையாடும் வேலாயுதம் நின்
கால் பணிந்தேன் கருணைக்கடலே!

77. கண்ணே மணியே!

கண்ணே மணியே கதிர்வேல் முருகனே
               பண்ணே பழம்பொருளே பார்வதி மைந்தனே - எண்ணும்
      போதெல்லாம் என்னுள்ளே புகுந்தருளி என்றும்
தீதொன்றும் வாராமல் காத்தருள்வாயே!

78. கரகமும் காவடியும்...

கரகமும் காவடியும் கூர்வேல் அலகுகளும்
             அரோகரா ஒலியோடு ஆடிவரும் பக்தர்கள் - முருகாஎனத்
தொழுது தூயவன் துணைநாடி வருகின்றார்
                                          அழும்முன்னே வந்து ஆதரித்தருளே!

79. காலில் விழுந்தேன்...

விண்ணும் மண்ணும் வேந்தர்போல் வாழ்வும்
                எண்ணிலா செல்வமும் எதுவும் நான்வேண்டேன் - தண்ணிலவு
போல்வந்து ஜொலிக்கும் பாலதண்ட பாணியே
                                         காலில் விழுந்தேன் கடைத்தேறவைப்பாயே!

80. சேவடியில் சேர்ப்பாயே!

 எதுவேண்டும் என்றே என்னை நீகேட்டால்
            எதைநான் வேண்டுவேன் எழில் குமரேசா - சதுரங்கக்
 காயாக எனைநகர்த்தி காலம் கடத்தாமல்
சேயாக உந்தன் சேவடியில் சேர்ப்பாயே!

81. நற்கதி அருள்வாயே!

 சேவலும் மயிலும் சேர்ந்து விளையாட
              காவடியும் கரகமும் கணக்கின்றி ஆடிவர - தேவாதம்
துயா தீர்த்து திருத்தணி அமர்ந்தவனே
   நயந்து உருகினேன் நற்கதி அருள்வாயே!

82. துயர்தீர்க்கும் தூயவனே!

                   முல்லைமலர் மாலைசூட்டி முத்துமாலை அணிவித்தேன்
                                 பல்மலர் சூழ்ந்திருக்கும் பழமுதிர் சோலைதனில் - வெல்லும்வேலோடு
                 புள்ளிமயில் மீதமர்ந்த புனிதவள்ளி தேவயானையுடன்
துள்ளிவருக துயர்நீக்கும் தூயவனே!

83. சென்னிமலை வாசனே!

     கார்முகில் வண்ணனின் கருத்தினிய மருகனே
               தேர்ஒடும் கடலாடும் திருச்செந்தூர் முருகனே - பார்புகழ்
     பன்னிருகை வேலனே பன்னிருவிழி  அருளும்
சென்னிமலை வாசனே சேவடிதந்தருளே!

84. பறந்தது பழவினைத் துயர்!

                                கருவாசல் திறந்து காரிருளில் வந்துவிட்டேன்
                                உருமாறி உலகினில் உழன்று தடுமாறுகின்றேன் - பெரும்பொருளே
                                திறந்தது நின்உள்ளத் திருக்கோவில் வாசலுமே
                                பறந்தது பழவினைத் துயர்தானே!

85. வழித்துணையாகி...

                                    அரோகரா என்றுசொல்ல ஆகுயிர் சிலிர்க்கும்
அரன்ஈந்த மைந்தனே ஆறுமுகக் கடவுளே - சூரன்தன்னை
                                    அழித்த சுந்தரா அமரர் தலைவனே
                                    வழித்துணையாகி வந்துநின்னோடு சேர்த்திடு!

86. நிறையாக்கி அருள்...

கண்டவர் கரைசேர்வர் காலமெலாம் சுகம்பெறுவர்
  அண்ட நாயகன் ஆறுமுகனைத் தொழ - விண்ணவர்
                                       குறை தீர்த்த குமரன் கோலமயில் முருகன்
                                       நிறை யாக்கி அருள நின்றானே

87. துயரெல்லாம் போக்கிடுவான்!

தியானமும் தவமும் தினம்தினம் பூஜையும்
           வாயால் பாடியும் வழிபட்டேன் முருகனையே - ஒயாத
    தீவினைகள் ஒழித்தே தேவனவன் காத்திடுவான்
தாவியே வந்து துயரெலாம் போக்கிடுவான்!

88. அருள்தர வருவாயே!

   கணேசன் முன்னின்று கன்னிவள்ளி மணம்புரிய
       கணத்தில் வந்துமுடித்தகணபதி தம்பியே - குணமிகு
முருகா வள்ளிதேவயானையோடு மயிலேறி
 அருள்தர வருவாயே அறுபடைவீடுடையானே!

89. மன்னித்து அருள்வாயே!

தெரியாமலும் தெரிந்தும் செய்ததவறுக்கு
           உரிய தண்டனை பெற்றேன் இப்போது - பெரியோனே
           கருணையுடன் காக்கவரும் உன்னை குறைகூறுவேன்
   முருகா அதனையும் மன்னித்து அருள்வாயே!

90. கால்களில் பணிந்திருப்பேன்!

  கடலும் மலையும் கானகமும் சோலையும்
          அடலேறு உந்தன் அழகிய படைவீடு - தடக்கையில்
வேல் கொண்டு வினைதீர்த்து காத்தருள
         கால்களில் பணிந்திருப்பேன் கந்தனே வருவாயே!

91. கைகுவித்து வணங்குவேனே!

ஆடும் மயிலும் அசையும் கொடியில் சேவலும்
    நாடும் வேலும் நங்கிணைந்து அருளும் கரங்களும்
பாடும் பக்தரும் கேட்கும் பன்னிரு செவிகளும்
கூடும் குமரனை கைகுவித்து வணங்குவேனே!

92. முடிவைத்து வணங்குவேனே!

உடல்வலியும் உள்ளத்தில் துயர்களும் அடுத்தடுத்து
                                      கடல் அலையென வந்துஎனை புரட்டி சென்றிடும்
                                      திடவேல் கொண்ட திண்தோள் குமரா நின்
  மடலெழில் பாதங்களில் முடிவைத்து வணங்குவனே!

93. எண்ணிடும் எண்ணமும்...

    எண்ணிடும் எண்ணமும் எழுகின்றதேவையும் தினம்
பண்ணிடும் செயலும் பலன் எதிர்பார்ப்பும் என
நண்ணியே வாழ்வு நாளும் கழியும் நேரமதில்
       வண்ணமயில் வடிவேலா நின்னடியே வணங்குவேனே!

94. காக்கும் கந்தனை...

வாடாத மலர்என விளங்கும் முகமலர்கள்
 தேடாத செல்வமென தேடிவரும் தோள்கள்
நாடாத பக்தியும் நவிலாத திருப்புகழும்
              கூடாத என்னையும் காக்கும் கந்தனை வணங்குவேனே

95. நாடிவந்து வணங்குவேன்!

    வானும் மண்ணும் விண்மதியும் தாரகையும் என
 தேனும் பாலும் தெவிட்டாத கனியும் இணைய
                                          மானும் மழுவும் ஏந்தியான் மகனே
நானும் உன்னை நாடிவந்து வணங்குவேனே!

96. புத்தியில் வந்துறையும்...

முத்தோ பவளமோ முன்முறுவல் ரத்தினமோஎன
  சித்தம் தடுமாறும் சிக்கல் சிங்காரவேலனை - காண
நித்தம் உனைப்பாடி நாளும் தொழுதுஉருகுகிறேன்
   புத்தியில் வந்துறையும் புண்ணியனை வணங்குவனே!

97. திருப்பாதம் வணங்குவேனே!

                                     வருவாயோ வாராமல் மறைந்து நின்றுபார்ப்பாயோ
                                     முருகா எனக்கூவி முழுமனதில் வேண்டினேன்
 அருமைதனை அறியாத அறிவிலியாய் இருந்துவிட்டேன்
திருவேல் கொண்டவனே திருப்பாதம் வணங்குவேனே!

98. எட்டும் வரமளிப்பாய்!

எட்டுக்குடி வேலவனே எழில்மிகு குமரனே
  தட்டுத் தடுமாறி தள்ளாடும் என் ஆன்மாலை
    விட்டு விடுதலையாகி வெற்றிதரும் உன்பாதம்
    எட்டும் வரமளிப்பாய் எனநான் வணங்குவேனே!

99. வேலன் முகங்கண்டு...

கால நதியில் கடுகிச்செல்லும் ஒடமென
        கால் வைத்த நாள்முதல் காற்றாக பறக்கின்றேன்
       கோலமிகு வாழ்வென காலத்தை வீணாக்கினேன்
     வேலன் முகங்கண்டு வீழ்ந்து வணங்குவேனே!

100. அருட்பாதம் வணங்குவேனே!

     முருகனே மான்விழியாள் மணாளனே மலைமேல்
 குருவாக அமர்ந்த குமாரவேலே முகம்ஆறும்
       வருகவென அழைத்தும் வீணாக்கினேன் சரணடைய
அருகில் வந்து அருட்பாதம் வணங்குவேனே!

101. அடியாள் கவிமாலை...

ஆறுமுகப் பெருமானே ஆனைமுகன் தம்பியே
அழகுதமிழ் கவிதை அணிமலர் நூறெழுதி
முறுவலடன் திகழ்முருகா முத்தமிழே உனக்கு
முன்வந்து சூட்டினேன் முதல்வன் கணபதி
சிறப்பாக சிந்தையில் சோந்திருந்தான் அருளிட
             சுவடியோடு வீணைமீட்டும் சரஸ்வதியின் கனிவும் கூட
                                        அறுபடை வீடுடையாய் அழகுவேல் குமரனே
      அடியாள் கவிமாலை ஏற்றருள்வாய் பெருமானே!

முடிப்பு

குமரனை செந்தூர் கடல் கண்டவனை
              கவிதைமலர் நூறெடுத்து கன்னித்தமிழ் நாரெடுத்து
        கமகமக்கும் பொருள் கருத்தின் மணம்சேர்த்து
                கட்டியெடுத்து கவிமாலை கையெடுத்து சூட்டினேன்
                அமரர் துயர்தீர்த்தவனே அன்பருக்கு துணையாவைனே
              அன்போடு ராதை சூட்டும் அன்புமாலை ஏற்றிடுக!
       உமாபதி மகனே உள்ளத்தில் உனைநினைத்து
               உருகுவார் கவிமாலை பாடிகளித்திட அருள்வாயே!

              
                                       6.6.2015
                                       கோவை                                        
                                   ராதாகவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக