வியாழன், 9 ஜூன், 2016

ஸ்ரீ கண்ணன் நூறு

ஸ்ரீ கண்ணன் நூறு

சமர்ப்பணம்

எனது அன்னை திருமதி. குஞ்சம்மாள் - அவர்களின் இஷ்ட தெய்வம் கண்ணன் - பூப்போட்டு அவரைத் தொழாத நாளில்லை - சுகம், துக்கம், கஷ்டம், துன்பம் இன்பம் என எல்லா நேரத்திலும் அவர் வாயிலிருந்து வெளிப்படும் சொல் "கண்ணா".
தனது இனிய குரலால் கண்ணனைப்பற்றி அதிலேய லயித்து அவர் பாடியபாடல்கள் இன்றும் என்காதுகளில் ஒலிக்கின்றது.
இளவயதில் கணவனை இழந்து தனது மூன்று குழந்தைகளையும் தன்தாயின் பொறுப்பில்விட்டு அதன்பின் பள்ளிப்படிப்பை முடித்து, நர்ஸ் பயிற்சிபெற்று நூற்றுக்கணக்கான கிராம மருத்துவமனைகளில், தொழிலில் ஆர்வம், ஈடுபாடு சேவை மனப்பான்மையுடன் பணியாற்றி ஆயிரக்கணக்கான பெண்களுக்கு மகட்பேறு பார்த்து பிறந்த ஆண்குழந்தைகளுக்கு 'கண்ணன்' என்றும்பெண் குழந்தைகளுக்கு 'கண்ணம்மா' என்றும் பெயரிட்டு மகிழ்ந்தவர். அவரால் பயன்பெற்ற பெண்கள், 'அம்மா அம்மாவென்று' உருகியதை என் இளமைக்காலத்தில் நேரில் கண்டு உணர்ந்தவள் லட்சிய மனஉறுதியோடு எங்கள் மூவரையும் படிக்கவைத்து உயர்நிலைக்கு கொண்டுவந்ததோடு, தன் பணியை சேவையாக நினைத்து தன்னையே அர்ப்பணித்து கொண்ட என்தாய் குஞ்சம்மாள் அவர்களுக்கு.
"ஸ்ரீ கண்ணன் நூறு" என்ற இக்கவிதை அந்தாதி நூல் சமர்ப்பணம்.


கோவை                                                                               ராதாகவி
12.6.2015


முன்னுரை

பத்து அவதாரங்களில் இளமையும் துள்ளலும் ஆடலும் பாடலும் குறும்புச் செயல்களும் எனத் துவங்கி கீதை கூறும் பரம்பொருளாய் உயர்ந்து நிற்கும் அவதாரம் - கிருஷ்ணாவதாரம்.
கிருஷ்ணனைப் பற்றி ஆயிரமாயிரம் நூல்களும் பாடல்களும் பன்மொழிப் புலவர்களாலும் பக்தர்களாலும் தினம் தினம் புதிதுபுதிதாக எழுதப்பட்டு பாடப்பட்டு வருவது பெருகிக் கொண்டேயிருக்கிறது.
படிப்பவர் மனதில் இனிமையை தோற்றுவிக்கும் கண்ணன்பெயர் சொல்லும் எந்தப்பாடலுமே அற்புதங்கள்தான்.
அந்த நினைவில் எளியேன் ஸ்ரீ கண்ணன் நூறு (108) அந்தாதி கவிதைகளை எழுதிடத் துணிந்தேன்.
பத்தோடு பதினொன்றாக படித்து இன்புறுக

கோவை                                                                                ராதாகவி
14.6.2015


காப்பு

ஸ்ரீ கணபதி

                                        தந்தம் ஒடித்து பாரதம் எழுதிய கணபதி
                                        எந்தன் உளமதில் எழுத எழுந்த ஆசைதனை
                                        சந்தம் கூடியே கண்ணன் மேல் நூறுபாடல்
                                        வந்தே அருள்க வலம்புரி விநாயகனே!

ஸ்ரீ வாணி

மகர வீணையில் மதுர ராகம் எழுப்பும் வாணி
  சிகரமென சிங்கார லீலை புரிந்திட்ட கண்ணனை
                                         பகர விழைவு பாடல் நூறு பாடியே
     அகரமாய் வந்து என்னுள் அமர்ந்தருள் அன்னையே!

ஸ்ரீ ஐயப்பன்

                                          மாமனைத் தாயை மனம்ஒப்பி பாடிட
                                          கோமகனை கோகுல கோபாலனை பாடல்நூறில்
                                          தேமதுரத் தமிழில் தூயகவிதை தொடுத்திட
                                          மாமலை சபரிநாதா மகரசோதியாய் வந்தருள்க!


ஸ்ரீ கண்ணன் நூறு (அந்தாதி)


1. காத்திடுவான் என்றுமே

அன்னையின் ஆருயிர் தெய்வம் அழகிய கண்ணன்
                                       என்றுமே தொழும் இணையிலா பாலகன்
                                       அன்னையர் இருவர் பெற்ற ஆராவமுதன்
                                       கன்றுகள் மேய்ப்பவன் காத்திடுவான் என்றுமே!

2. சிந்தையில் புகுவானே

                                        என்றுமே இளையவன் ஏதும் நிகரற்றவன்
                                        குன்றம் எடுத்து குலத்தைக் காத்தவன்
                                        தென்றலாய் திகழ்பவன் தேனாய் இனிப்பவன்
                                        சென்று வணங்குபவர் சிந்தையில் புகுவானே!

3. தோழனோடு சிரிப்பானே

                                        புகுவான் இடைச்சியர் புதுமனை தேடியே
 லகுவாக வெண்னைதிருடி லாகவமாய் உண்பான்
                                        பகுத்து அளித்து பாலகரோடு களிப்பான்
தொகுத்து அருள்பவன் தோழரோடு சிரிப்பானே!

4. பூமியில் திகழ்பவனே

                                         சிரித்து மகிழ்ந்து சிறாரோடு விளையாடி
                                         வரித்து வரும் வனிதையர் குற்றங்களை
                                         சரிக்கட்டி அன்னையிடம் சாகசமாய் பேசிடுவான்
                                         புரியாத புதிராய் பூமியில் திகழ்ந்தானே!

5. பாலகனாய் திகழ்ந்தானே

      திகழ்கின்ற திலகம் திக்கற்றவர்க்கு துணையாவான்
                                          புகழ்மிகு புனிதன் பூமிக்குத் தலைவன்
    தகழ்வான காளிங்கன் தலைமேல் நடமாடியவன்
பகவானே இன்று பாலகனாய்த் திரிந்தானே!

6. வளமான அரசனே

 திரியிட்ட விளக்கின் தீபமென ஒளிவீசுபவன்
 உரியுடைத்து மண்ணில் உளம்புகும் கள்வன்
 கரியானை மதமடக்கி கம்சனை அழித்தவன்
வரிசைகள் பெருகின்ற வளமான அரசனே!

7. கருணை மழை பொழிவானே

அரசனாகி மதுராவை ஆண்டுவந்த தேவன்
      பரமனாய் கோகுலத்தில் பாலலீலை காட்டியவன்
       முரசொலிக்க பாண்டவரை முன்னின்று காத்தவன்
             கரங்குவித்து தொழுதாலே கருணைமழை பொழிவானே!

8. மானிடனாய் வாழ்ந்தானே

      பொழியும் பூபாலன் பாஞ்சாலியின் ஆத்மநண்பன்
அழியும் சபைதனில் ஆடைதந்து காத்தவன்
                                           வழியும் வாழ்வும் விளைவும் தானாகி
           ஊழிமுதல்வன் மானிடனாய் உலகினில் வாழ்ந்தானே!

9. இசைந்தளித்த தெய்வமே!

   வாழ்வின் பாலலீலை வண்ணமாய் ஆடிநின்றான்
        தாழ்வென்றும் உயர்வென்றும் தரம்காணாப் பெரியவன்
  இகழாது குசேலனை இணையாக அனைத்தவன்
இகபர செல்வங்கள் இசைந்தளித்த தெய்வமே

10. உணர்ந்தால் உயர்வோமே!

     தெய்வச் செயல்களை துள்ளும்சிறுவன் செய்திட்டான்
பொய்யாக்கி பூதகியை பதறவைத்து வென்றான்
கொய்ய வந்த அரசர் கூட்டத்தை அடக்கியவன்
  உய்யவழி சரணாகதி உணர்ந்தால் உயர்வோமே!

11. பாதாள சிறை தந்ததே

உயர்ந்த ஆசனம் உல்லாசத் திருமணம்
       நயந்த தமையன் நல்தங்கைக்கு செய்வித்தான்
பயந்தனன் விதைத்தது பகர்ந்த அசரீரீ
  பயந்தவன் செயல் பாதாளசிறை தந்ததே!

12. சினந்து அழித்தனனே

தந்தக் கட்டிலில் தாங்கி வளர்ந்தவள்
          நொந்தனள் தரையில் நயந்துருகிய கணவனுடன்
   வந்தன குழந்தைகள் வரிசையாக ஆறும்
          சிந்தையில் இரக்கமிலான் சினந்து அழித்தனனே!

13. யசோதையிடம் வளர்ந்தானே

அழித்தவை மறைந்தன அழகிய ஏழும்எட்டும்
   வழிவழி வளர்ந்திட வாய்த்தஇடம் சேர்ந்தனவே
  வழிதந்த யமுனையிடை வசுதேவர் கைமாற்ற
        எழிலான கண்ணனும் எசோதையிடம் வளர்ந்தானே!

14. விளக்காக ஒளிதருமே

    வளர்பிறையோ வானத்து மின்சுடரோ வந்துதித்த
      இளங்கதிரோ பூமியில் இயக்கவந்த ஒருவிசையோ
உளங்கண்ட கோபாலன் உலவிய கோகுலம்
 விளங்காத மனதிற்கு விளக்காக ஒளிதருமே!

15. தூளாக்கிய கருமுகிலே

 ஒளிதரும் சக்கரம் ஒருகையில் ஏந்துவான்
     களிப்போடு சகடையை கைகளால் உருட்டியே
      எளிதாக கருதிவந்த ஏறுஅணைய சகடாசூரனை
   துளியும் வருந்தாது தூளாக்கிய கருமுகிலே!

16. சிங்காரமாய் ஆடியவனே

      கருமுகில் வண்ணன் கொக்காக வந்தவனை
உருத்தெரியா தழித்த உத்தம பாலகன்
          உருவோரை அச்சுருத்தி வாழ்ந்த காளிங்கன்மீது
            சிறுபாதம் தைதையென சிங்காரமாய் ஆடியவனே!

17. கொண்டாடிய கோபாலனே

ஆடிய பாதங்கள் அடிபணிந்து வணங்கிட
      நாடிய செல்வமெலாம் நலமோடு தந்திடுவான்
பாடியே திரிந்து பல்லாயிரம் கோபியர்
      கூடியே மகிழ்ந்து கொண்டாடிய கோபாலனே!

18. செவிகளுக்கு இனிக்குமே

பாலனாய் லீலைகள் பரமனாய் தத்துவங்கள்
        கோலவாய் மண்ணுண்டு கோடி அகிலம் காட்டினாய்
     காலமெலாம் யமுனை கண்டுமகிழ்ந்த நிகழ்வுகள்
 சீலமென கேட்கும் செவிகளுக்கு இனிக்குமே!

19. நொடியில் தூக்கியவனே

         இனித்திடும் வெண்ணையுண்டு இளங்கன்று பின்சென்று
    கனிவோடு ஆனிறைகள் கானத்தால் வயப்படுத்தி
பனிமலர் வனங்களில் பாலகரோடு சுற்றியே
         நுனிவிரலில் கோவர்த்தனம் நொடியில் தூக்கியவனே!

20. இருந்து காப்பாயே!

    தூக்கிய மலையினை தூவும்வான மழையால்
தாக்கிய வருணன் தன்கர்வம் அடக்கியே
காக்கும் சக்தியென காட்டிய செல்வனே
       நோக்கும் இடமெலாம் நயந்திருந்து காப்பாயே!

21. தானிழுத்து அணைப்பாளே

       காப்பிட்டு மையிட்டு கருங்குழலில் மயிலிறகிட்டு
   ஒப்பிலா முகந்தனில் ஒளிவிடும் திலகமிட்டு
செப்புச்சிலை இடுப்பில் சீரான பட்டுடுத்தி
           தப்பிஒடும் தாமோதரனை தானிழுத்து அணைப்பாளே!

22. ஆட்கொள்ளும் அருளாளனே

   அணையாக ஆதிசேடன் அரவணையில் துயின்றவன்
       அன்னையவள் தாலாட்டில் ஆனந்தமாய் துயில்கின்றான்
சின்னக்கை கொட்டி சிணுங்கும் கிண்கிணியோடு
அன்னநடை நடந்து ஆட்கொள்ளும் அருளாளனே!

23. கலிதீர்க்கும் கண்மணியே

அருள்தந்து ஆதரிப்பாய் அதிர்கேசி குதிரையை
     தெருட்டியே வெற்றிகாண்பாய் திகழும் கேசவனாய்
   மருட்டிய மடுவின் முதலையின் வாய்பிளந்தாய்
  கருமணியே எங்கள் கலிதீர்க்கும் கண்மணியே!

24. கடுகிவந்து நிற்பாயே

கண்ணின் மணியாகி கருத்தில் பொருளாகி
 விண்ணின் சுடராகி விளக்கத்தின் ஒளியாகி
        எண்ணும் எண்ணங்களில் எழுச்சியின் விளைவாகி
  கண்ணன் என்றவுடன் கடுகிவந்து நிற்பாயே!

25. கானத்தில் மயக்கிடுவாயே

நிற்பாய் கிடப்பாய் நானிலத்தில் இருப்பாய்
  அற்பர்களை அழித்திட அதிசயவழி காண்பாய்
கற்பகத் தருவாகி கைகளில் பலனளிப்பாய்
         கற்றைகுழல் அசைந்திட கானத்தில் மயக்கிடுவாயே!

26. அருள்தரும் இனியவனே

மயக்கிய கோபியர் மனமுவந்து ஆடிப்பாட
 தயக்கம் ஏதுமின்றி தூயராசலீலை செய்தாய்
                                          கயவர் கலங்கிட கைகளில் சக்கரம்
      இயங்கும் ஒளியில் இன்னருள்தரும் இனியவனே!

27. காதலனாய் திளைத்தவனே

       இனிமையாய் இளமையாய் இனியமுனை நதியோரம்
   முனிவரும் தேவரும் முக்திகாணும் அற்புதமாய்
தனிசேவை நடத்திய தயாளனே முகுந்தனே
    கனிபோலும் ராதாவின் காதலில் திளைத்தவனே

28. விநயமுடன் சென்றனனே

      திளைத்தே அன்பால் திரிந்தனை ஆயர்பாடியில்
களைத்த கம்சன் கருத்தின் இயக்கத்தில்
   தளைபட்ட அக்கூரர் தஞ்சமென கண்ணனை
               விளைபயிரை வினைதீர்க்க வேண்டிகூட்டி சென்றனனே!

29. கொடுங்கோலனை பாலகனே

    சென்றனன் கம்சனைக் கண்டனென் மதயானையை
    வென்றனன் மார்பினில் வீறுகொண்டு அமர்ந்தனன்
நின்றனன் நெஞ்சின் நீசங்களை துடைத்தனன்
         கொன்றனன் ஆட்சியின் கொடுங்கோலனை பாலகனே!

30. குளிரக்கண்டு உருகினனே

   பாலகனைக் கொண்டாடி பாமரரும் மகிழ்ந்தனர்
  கோலாகலம் குதூகலம் கொப்பளித்த திருநாள்
சீலமீகுவசு தேவகியும் சிறைமீண்டு வந்தனர்
        கோலஎழில் கோபாலனை குளிரக்கண்டு உருகினனே!

31. தழைத்திட காட்டினனே

   உருகிநின்ற பெற்றோரை உளமாறத் தழுவினன்
 பெருநகர் மதுராவின் பொறுப்பினை ஏற்றரை
கருமேக வண்ணன் காலமெலாம் நிற்பவன்
தருவாகத் தருமம் தழைத்திட காட்டினனே!

32. சரம்பொழியச் செய்தானே

காட்டிய பாதை கீதையென உரைத்தனன்
      நாட்டிடு கடமையை நான்என்ற நினைவுஇன்றி
 பூட்டுக நாண்என்று புனிதவழி கூறினாய்
           சட்டென்று பாரதப்போர் சரம்பொழியச் செய்தனனே

33. செம்மையே தொடருமே

செய்தவை யாவுமே சூதுபோல் தோன்றிடும்
   செய்தவை யாவுமே செய்தசெயல் பயன்தானே
  செய்தவை முன்னே சேரவரும் பலன்பின்னே
     செய்தவை முரண்படும் செம்மையே தொடருமே!

34.  மகிழ்ந்து நாட வைப்பாயே

     தொடக்கமும் முடிவும் துணையாகி இருப்பவன்நீ
      நடப்பதும் நடத்துவதும் நாடகமாக்கி மகிழ்பவன்நீ
கடப்பதும் கடவாமல் கிடக்கச் செய்பவன்நீ
          மடநெஞ்சம் எனது உனை மகிழ்ந்து நாட வைப்பாயே!

35. வானளந்தவனை காண்பேனோ

         வைத்தென்னை வாழ்விப்பான வேதனைகள் மீட்டிடுவான்
வைகறையில் எழுந்து வாயாறப் பாடவைப்பான்
        வையகத்தில் சுகமெலாம் வகைவகையாய் வந்தளிப்பான
           வைகுந்தம் தருவானோ வான் அளந்தவனைக் காண்பேனோ!

36. உளமதில் வருவாயே

 காணும் கணகளும்நீ கேட்கும் காதுகளும்நீ
     பேனிப் பேசும்வாய்நீ பேசாதுமுககும் மூக்கும்நீ
     நாணாது புரளும்நாவும்நீ நல்சுவை உணர்வும்நீ
       ஊண்என உணரும்மெய்நீ உளாமதில் வருவாயே!

37. கருத்தினில் நினைத்தாலே

        வருவான் குழலிசை வான் மழையாகப் மொழிவான்
தருவான் அன்பினை தாளினை சரணடைய
     துரும்பிலும் இருப்பவன் தூணிலிருந்து வந்தவன
      கரும்பாக இனிப்பவன் கருத்தினில் நினைத்தாலே!

38. தூயவனும் அவனே

        நினைத்ததை நியதியுடன் நிலைப்படுத்தி காட்டுவான்
          நினையாமல் விட்டதையும் நேரத்தில் தோற்றுவிப்பான்
     வினையினை முடித்திடும் வேதநாயகன் வெளியே
துணையாகி வருகின்ற தூயவனும் அவனே!

39. அவனியை காத்திடுவானே

அவனே அன்று அவனியை உண்டவன்
 அவனே அன்று அவனியை உமிழ்ந்தவன்
அவனே அன்று அவனியை அளந்தவன்
     அவனே என்றும் அவனியை காத்திடுவானே!

40. வேகம் அறியேனே

 காத்திட கருடன்மீது கடுகியே வந்தவன்
பூத்தமலர் வைத்து பூசித்த கஜேந்திரன்
    ஏத்திய குரலில் ஆதிமூலமே எனஅழைக்க
வித்தகனே நீவந்த வேகம் அறியேனே!

41. அபயம்தந்த காட்சியே

                                         அறியேன் அன்றுநீ அரசவை தூதனாகி
      நெறியுடை பாண்டவர்க்கு நீதிவேண்டி சென்றதையே
அறியேன் அன்றுநீ அரசவையில் பாஞ்சாலிக்கு
 அறிவிலார் கொடுமைதீர அபயம்தந்த காட்சியே!

42. ரசித்து வென்றவனே

காட்சிக்கு எளியவன் கருணையில் உயர்ந்தவன்
 மாட்சிமை நிறைந்தவன் மனம்விரும்பி அன்புடன்
சாட்சியான விதுரனோடு சாப்பிட்டு மகிழ்ந்தவன்
    ராட்சதரை அழிப்பதையும் அனுபவித்து வென்றவனே!

43. எழுகின்ற துணையாவானே

                                       வென்றான் சிசுபால வீணனை செவிமடுத்து
                                       நின்றான் நூறுமுறை நிந்தனையை தாயின்உறுதி கருதி
                                       சென்றான் தங்கை சுபத்திரை மணமுடிக்க
என்றும் நல்லவர்க்கே எழுகின்ற துணையாவானே!

44. மன்னவனே மாதவனே

துணையாக ருக்மணியை தூக்கிவந்து கைபிடித்தான்
 இணையாக பாமையை இரதமேறி இதயம்கொண்டான்
                                      கணையாக பேரன்பும் கனியாக மெய்யன்பும்
மணையாகக் கொண்டவனே மன்னவனே மாதவனே!

45. பரமபதம் அடைவோமே

மாதவமும் வேண்டுமோ மலர்முகம் கண்டபின்பு
    கோதாவை கொண்டவனை குளிர்மாலை ஏற்றவனை
ராதாவை அறிந்தவனை ராகத்தில் மகிழ்பவனை
பாதங்கள் பணிந்தாலே பரம்பதம் அடைவோமே!

46. தானிறிந்த பின்னாலே

      அடைவது ஏதுமில்லை அடைக்கலம் அளித்தபின்பு
 கடையன் என்னையும் கைதூக்கி விடுவானே
மடையின் வெள்ளமென மனதில் பொங்கும்
தடையற்ற பக்தியை தானறிந்த பின்னாலே!

47. என்னைக் கலங்க விடுவாயோ

     பின்னால் வருவதை பெருமானே நீயறிவாய்
பின்னும் அறியாது முன்னும் அறியாது
   என்னுள்ளே கலங்கி என்றும் வாடுகிறேன்
              என்னோடு நீயிருக்க என்னைக் கலங்க விடுவாயோ?

48. தாமோதரா நீதானே

         விடுவாயோ வந்தென்னோடு விளையாடி மகிழ்வாயோ
 மடுவினில் ஆடியநல் மாணிக்கமே வாழ்வின்
 நடுவினில் சிக்கியே நான்தளர்ந்து வீழ்கிறேன்
தடுமாற்றம் நீக்குபவன் தாமோதரா நீதானே!

49. பரந்தாமா அருள்வாயே

நீதான் துனையென்று நம்பியே துதிக்கிறேன்
      தீதொன்றும் வாராதென்று திடமாய் இருக்கின்றேன்
    சூதென்று தெரிந்தும் துஷ்டரையும் காக்கின்றாய்
  பாதம் பணிகின்றேன் பரந்தாமா அருள்வாயே!

50. உள்ளிருந்து நகைக்கின்றாயே

                                           அருள்நீ பொருள்நீ ஆனந்தம்நீ அற்புதம்நீ
  இருளில் ஒளியும்நீ இடர்வரின் துணையும்நீ
கருமேக வண்ணன்நீ குழலிசை மன்னன்நீ
        உருவான எதிலுமே உள்ளிருந்து நகைக்கின்றாயே!

51. சிலிர்த்திடவா முகுந்தனே

                                      நகைசூட்டி யசோதை நல்லழகு பார்க்கநீ
தகைவாக கையிலெடுத்து தந்துநாவல் கனிபெற்றாய்
பகையறியா தயாளனே பாஞ்சஜன்யம் கொண்டவனே
 சிகையில் ஆடும்மயிலிறகு சிலிர்த்திடவா முகுந்தனே!

52. தேவர்சாபம் தீர்த்தனையே

முகுந்தனே தாயவள் முறுக்கிய தாம்பினால்
உகந்து உரலோடு உனைக்கட்டி வைத்தனள்
மிகுந்து துணிவோடு மருதமரம் மோதினாய்
 தகுந்த நேரமதில் தேவர்சாபம் தீர்த்தனையே!

53. கைகூப்பினேன் கனிந்து தருவாயே

                                       தீர்த்திட என்கவலை தீர்க்கதரிசி நீவருவாயா
                                       பார்த்து வேண்டுவதை பாசமுடன் அளிப்பாயா
    நீர்வழியும் கண்களோடு நெஞ்சில்உன் சிந்தனையோடு
 கார்முகில் வண்ணனே கைகூப்பினேன் கனிவாயே!

54. பரம்பனை நீங்கிவா

கனிகின்ற நெஞ்சினால் கபடத்தின் நாயகனாய்
                                         இனியும் நாடகம் இனிதே தொடர்வாயோ
                                         தனியே இனிநான் தாளேன் துயிலாதே
                                         பணியும் எந்தன்முன் பாம்பணை நீங்கிவா!

55. தந்திடும் அனந்தசயனனே!

நீங்கிடும் துயரெலாம் நீர்மேல் எழுத்தாக
    சங்கும் சக்கரமும் சார்ங்கமும் தாங்குபவனே
  பொங்கி நீஎழ பொன்கரத்தின் அபயமெனை
         தாங்கிடும் வேண்டுவதை தந்திடும் அனந்தசனனே!

56. பொன்னொளி காட்டுவாயே

                                         சயனித்து இருப்பாய் சகலமும் அறிவாய்
                                         நயந்து அழைத்தால் நாடியே வந்திடுவாய்
உயர்ந்தவன் நீஎன்று உணர்த்திட விடமாட்டாய்
  பயந்தனை போக்கிட பொன்னொளி காட்டுவாயே!

57. கர்ணனுக்கும் போர்களத்திலே

காட்டுவாய் விஸ்வரூபம் கலங்கிய அர்ச்சுனனுக்கு
 காட்டுவாய் திருதராட்டிர குருடனுக்கும் விதுரனுக்கு
   காட்டுவாய் தேவகிவசுதேவருக்கு கடுஞ்சிறை இருனில்
     காட்டுவாய் கொடைநிறை கர்ணனுக்கும் போர்களத்திலே!

58. வடிவழகைப் பார்த்திடவே

                                           போராடித் தளர்ந்த பேதை எந்தனுக்கு
நேராக வந்து நின்ஒருமுகம் காட்டாயோ
    யாராக இருந்தாலும் யாசித்தால் தருகின்றாய்
       வாராயோ எந்தனிடம் வடிவழகைப் பார்த்திடவே!

59. புன்னகையில் மறைத்தாயே

பார்த்தனுக்கு சாரதியாய் புரவிரதம் ஒட்டினாய்
   தூர்த்தரிடை தவித்த திரெளபதிக்கு துகிலளித்தாய்
             கார்குழலை கொண்டையிட்டு கவின்மயிலிறகு பறக்கவிட்டு
      போர்க்கால யுக்திகளை புன்னகையில் மறைத்தாயே!

60. கருமணியே கண்ணபிரானே

 மறைத்தனை உத்தரையின் மகத்தான கருவினை
   குறையின்றி பாண்டவர் குலம்வாழ வழிவகுத்தனை
   சிறைபட்ட பெற்றோரை சிங்காரமாய் விடுவித்தாய்
  கறையிலா மனம்தா கருமணியே கண்ணபிரானே!

61. உயர்தர்மம் காத்திடுவாயே

பிரானே பெரும் பாம்பணையில் துயில்பவனே
     பிரளயத்தில் ஆலிலையில் பாலகனாய் மிதப்பவனே
                                         புரளும் கடல்சூழ் புவியினில் அதர்மம்ஒங்க
   அரங்கேறி அவதரித்து உயர்தர்மம் காத்திடுவாயே!

62. புண்ணியனே தேடி வந்தேனே

    காத்திருப்பாய் பாற்கடலில் கால்வருடும் திருவோடு
   பூத்திருப்பாய் புவியெங்கும் பக்தர்கள் வருவாரென
எத்திசையும் தேடிடுவாய் எங்கேஎன் அடியார்என
புத்தியில் உணர்ந்தேன் புண்ணியனே வந்தேனே!

63. நாராயணா ஏற்பாயே

   தேடித்தேடி முனிவரும் தேவரும் தவங்கிடக்க
பாடிப்பாடி பக்தர்கள் பரவசமாய் ஆடிப்பாட
கூடிக்கூடி கோவிலில் கோடிப்பேர் தரிசிக்க
 நாடிநாடி நானும்சரண் நாராயணா ஏற்பாயே!

64. கண்ணனே விடுவிப்பாயே

ஏற்றிடவும் ஒருவனே எட்டிதள்ளவும் ஒருவனே
          சுற்றம்உறவு எனப்பாச சிறையில்வைப்பவனும் ஒருவனே
                                         பற்றிலா மனம்தரும் பரமனும் ஒருவனே
   கற்றிலேன் விடுபடவே கண்ணனே விடுவிப்பாயே!

65. மரணம்தழுவ வைத்தாயே

வீடுஐந்து தருகவென வீணரைக் நீகேட்டுநின்றாய்
   நெடும்ஊசி குத்தும் நல்இடமும் இல்லையென்றான்
   கடும்சொல் துரியனுமே கரைகடந்த ஆணவத்தான்
மடுவில் மறைந்தும் மரணம்தழுவ வைத்தாயே!

66. என்னுள்ளம் நுழைவாயோ

 வைத்தவர் நெஞ்சங்களில் விரும்பியே அமர்ந்திடுவாய்
உத்தமருக்கு உதவிடவே உலகெங்கும் காத்திருப்பாய்
                                      தத்துவ ஞானியாக தரணிக்கு கீதைதந்தாய்
ஏத்துவனே இருகைகூப்பி என்னுள்ளம் நுழைவாயோ?

67. அன்புடன்வா சகன்நாதா

நுழைவாயோ என்நெஞ்சில் நீங்கியே போவாயோ
பிழைப்ட்ட பிறவிநான் பாவங்களின் சுமைதாங்கி
          தழைக்கும் துளிரெல்லாம் தாயானஉன் கருணை மழையால்
 அழைக்கிறேன் அமைதிதர அன்புடன்வா சகன்நாதா!

68. துவாரகா நாயகன் தாள் பற்றிடவே

சகத்தினை வாழவைக்க சகன்நாதனாகி வந்தாய்
                                        சகத்தினை உண்டாய் சகத்தினை உமிழ்ந்தாய்
  சகத்தின் உயிர்களை சத்யவாசனாகி காத்திடுவாய்
      தகுந்த தருணமிது துவாரகா நாயகன் தாள் பற்றிடவே!

69. மரணபயம் போக்கிடுவாயே

                                        தாள்பற்றி பூசிக்க தேவகீநந்தன் வருவான்
வாள்பற்றி வந்தவரை வீழ்த்திவென்ற புண்ணியன்
  தோள்பற்றி துணையாவான தோன்றாத தெய்வமாய்
 மாள்கின்ற உயிருக்கு மரணபயம் போக்கிடுவாயே!

70. தரணியில் விழச்செய்தாயே

போக்குவதும் நீக்குவதும் புல்லாங்குழல் இசைஉனக்கு
                                     சிக்கென அன்பால் சிறைபிடித்த சகதேவனை
                                     பக்கத்தில் வைத்தே பாரதப்போர் முடிவெடுத்தாய்
தக்கவீரன் அபிமன்யுவை தரணியில் விழச்செய்தாயே!

71. கடமைசெய்யென உரைத்தாயே

                                         வீழ்ந்தவர் எழுவதும் வீணர்கள் வீழ்வதும்
                                         சூழ்கடல் உலகின் சூத்திரமாய் நீவகுத்தாய்
தாழ்வும் உயர்வும் தன்கரும வினையென்றாய்
     வாழ்வின் தத்துவம் கடமைசெய் என உரைத்தாயே!

72. காலமெலாம் உனை துதிப்பதுவே

     உரைத்தனை கீதையே உயர்ஞான பொக்கிஷத்தை
மறையாத ஆன்மா மாண்டபுபெற வழிதந்தாய்
      தரையில் வந்ததெல்லாம் தன்வினையை ஏற்றிடும்
          கரையேற வழிஒன்று காலமெலாம் உனை துதிப்பதுவே!

73. கதிமோடசம் கண்டனரே

துதித்து உயர்ந்தவர் தொல்லுலகில் எத்தனையோ
   மதித்து உன்அருள் மகிமைகண்டவர் எத்தனையோ
      விதித்தது எனஎண்ணி வேதனைபட்டவர் எத்தனையோ
கதிநீயென்று வந்தவர் கதிமோட்சம் கண்டனரே!
                                   
74. வண்ணனே யானும் ஒருவளா

                                          கண்டேன் எனமகிழ்ந்து கவிதை பாடியவர்
 கொண்டேன் எனமாலை கழுத்தில் சூட்டியவர்
தண்டனிட்டு தொழுது தாலாட்டி மகிழ்ந்தவர்
            வண்டுவிழி சுழன்றாடும் வண்ணனே யானும் ஒருவளா?

75. திருஅடியார்கள் ஆவேனே

  ஒருவர்பின் ஒருவராய் ஒர்நினைவால் உன்னையே
ஒருநாளும் மறவாது ஒயாதுபாடிய பக்தர்குழாம்
  திருநாளாய் உந்தன் திருலீலைகளை தம்வாழ்வில்
  திரும்பக் கண்டுணர்ந்த திருஅடியார்கள் ஆவேனே!

76. பிருந்தாவன மலராகவே!

                                          ஆவேனா நீமேய்த்த ஆனிரைக் கன்றாக
                                          ஆவேனா நீசூடும் அழகுதுளசி தளமாக
 ஆவேனா நீஊதும் புல்லாங்குழல் மூங்கிலாக
ஆவேனா நீநடந்த பிருந்தாவன மலராகவே!

77. கோகுலத்தில் ஏதேனுமாகிடவே

  ஆகவே விழைகின்றேன் ஆடிவரும் யமுனைநீராக
ஆகவே நினைக்கின்றேன் அடியார்கள் பாடலாக
                                        ஆகவே துடிக்கின்றேன் ஆயச்சியர் மத்தாக
       ஆகவே அருள்வாய் கோகுலத்தில் ஏதேனும் ஆகிடவே!

78. வந்தென்னை ஆட்கொள்வாயே

ஏதும் அறியாத ஏற்றம்ஏதும் இல்லாத
    சூதும் வாதும் சூழ்உலகில் சுழல்கின்றேன்
போதும் இத்துயர் பூவிழிக் கண்ணனே
         வாதிட இயலாது வந்தெனை ஆட்கொள்வாயே!

79. அடியாரின் துணை ஆனவனே

                                         ஆட்கொள்ள நீவந்த ஆயிரமாயிரம் கதைகள்
  காட்சியாய் கண்டுனக்கு கண்ணீரால் அபிஷேகம்
சாட்சியாய் நிற்கின்ற சரக்கவிதை கோடிகோடி
     ஆட்சிகண்ட அரசனே அடியாரின் துணையானவனே!

80. சுருட்டியும் சென்றாயே

  துணைநீயே எனநினைந்த தூயவர் வரலாறுபல
      சேனையெனப் பெருகிய சேவடியார் கூட்டம் கூறும்
கணவனே நீயென கனவுகண்ட கன்னிபாடல்
   வணங்கா புலவன்பின் பாய்சுருட்டி சென்றாயே!

81. உந்தன் தனிச் செயல்களே

   சென்றுநீ மேய்த்தனை செம்பசுக்கன்று வான்திறக்க
குன்றினைத் தூக்கியே குடையாகப் பிடித்தனை
  நன்றோ நீசெய்தமை நங்கையர் ஆடைமறைத்து
  ஒன்றும் புரிவில்லை உந்தன் தனிச்செயல்களே!

82. நான்கூறும் நிலைதானே

                                         செயல்நீ செய்ததின் சீர்விளைவுநீ சீர்தூக்கின்
     முயற்சிநீ முடிப்பவன்நீ முன்னின்று நடத்துபவனும்நீ
அயற்சி நானடைந்தால் அங்கும்நீ வரவேண்டும்
நயந்து நாராயணஎன நான்கூறும் நிலைதானே!

83. தன்னடியாரை ஏற்றிடுவாய்

தானே வந்துஉதித்தாய் தன்பெற்றோரை நீதேர்ந்தாய்
தானே வளரும்இடம் தன்னையும் தேடிக்கொண்டாய்
                                      தானே பகைகளை தன்வழியே முடித்தாய்
                                      தானே உகந்து தன்அடியாரை ஏற்றிடுவாய்!

84. கீதையில் கூறி தெளிவித்தாயே

                                        ஏற்றிட முடியாத எண்ணற்ற செயல்கள்
                                        போற்றீடத் தெரியாத புரியாத நிகழ்வுகள்
                                        மாற்றீட வகையிலா மாபோரின் யுக்திகள்
கூற்றில் வைத்தஉன் கீதையில் தெளிவித்தாயே!

85. காப்பாயே தயாநிதியே

 தெளிவிநீ தோற்றம்நீ தேடும் இடமெங்கும்நீ
களிப்புநீ குழல்மேவும் கானம்நீ காலமும்நீ
           அளிப்பவன்நீ காப்பவன்நீ அழிப்பவனும்நீ அநகாயனும்நீ
 ஒளியாகி உட்புகுந்து காப்பாயே தயாநிதியே!

86. சேவடியில் வீழ்ந்தேனே

தயாநிதியே தரணியில் தோன்றிய தெய்வமே
   மாயமான வாழ்வினை மாமலையென நம்பினேன்
காயாம்பூ வண்ணனே கதிர்ஒளியாய் நீவந்தாய்
சேயாக நான்ஆனேன் சேவடியில் வீழ்ந்தேனே!

87. பரப்பிரம்மனே வந்தமர்வாயே

 வீழ்ந்தஎனை தூக்கிவிட்டு வீண்வாழ்வை நீக்கிவிடு
                                       தாழ்ந்த மனதைத் தாக்கி மாற்றீவிடு
 சூழ்ந்திடும் காரிருளை கழல்திகிரியால் விரட்டிவிடு
    பாழ்நிலையை ஒழித்து பரமன்உனைச் சேர விடுவாயே!

88. சிறுபாதங்களில் சேர்ப்பதும் நீயே

                                      சேர விடாமல் செய்வாயோ செகத்தில்
                                      பூரண அவதாரம் பத்தெடுத்த புருஷோத்தமா
நரஹரியே நானிலத்தில் நீயின்றி உயிரேது உனைப்
பரவும் நெஞ்சத்தில் பரப்பிரம்மனே வந்தமர் வாயே!

89. பரமன் உன்னைச் சேரவிடுவாயே

                                     அமர்வாய் அன்று அகிலம் அளந்தவனே
                                     சமர்செய்து உன்னை சாமானியன் வெல்வதேது
                                     அமரர் துயர்தீர அழகிய வாமனன்ஆனாய்
சுமப்பதும் சுடராக்கி சிறுபாதங்களில் சேர்ப்பதும் நீயே!

90. நின் சேவடி சரணடைந்தேனே

  நீயே கதியென்று நாளெல்லாம் நினைக்கின்றேன்
 நீயே கதியென்று நாளெல்லாம் தொழுகின்றேன்
                                         நீயே கதியென்று நாளெல்லாம் பாடுகிறேன்
 நீயே கதியென்று நின்சேவடி சரணடைந்தேனே!

91. கோவிந்தனே ஆட்கொள்வாயே

 சரணாகதி தத்துவத்தை சாதித்த ஸ்ரீராமனாய்
   கரத்தில் வில்லோடு ககனமதில் வாழ்ந்தவனே
                                          சிரம் தாழ்ந்து சிந்தை ஒருங்கிணைய
   கரம் கூப்பினேன் கோவிந்தா ஆட்கொள்வாயே!

92. எந்தனையும் கொள்வானே

 கொள்ளவே ஸ்ரீதேவியை கூர்மமாய் வந்தவனே
 தள்ளும் மந்தரமலை தாங்கிடும் ஆமையானாய்
  அள்ளிய அமுதத்தை அளித்திட மோகினியானாய்
எள்ளி நகையாடாது எந்தனையும் கொள்வானே!

 93. மாதவனே ஏற்பாயே

மீனாக ஆமையாக மேதினியை காத்தாய்
கானத்தில் நிறைந்து காற்றிடை கலந்தாய்
ஊனோடு உடலோடு உயிரையும் தந்தாய்
    மனதார வேண்டுகிறேன் மாதவனே ஏற்பாயே!

94. மாறி இனைந்த மதுசூதனா

                                         ஏற்றிய தோளில் என்றும் கோடரியுடன்
   கூற்றுவனாய் அலைந்த கூர்மையான பரசுராமனே
தேற்றும் துணைவனாய் தேவனாய் ஆதிசேடன்
      மாற்றமில் பலராமனாய் மாறி இணைந்த மதுசூதனா!

95. உத்தமனே போற்றுவேனே

மதுராவின் மன்னனே மலைசபரியை தந்தவனே
                                        ஒதும்மறை போற்றும் ஒங்காரப் பொருளே
                                        சூதுநிறை உலகினை சுத்தமாக்கும் கல்கியாய்
  உதிக்கின்ற மாமணியே உத்தமனே போற்றுவேனே!

96. அணைப்பதும் நீதானே

    போற்றுவேன் அனந்தகோடி பேர்சொல்லி உந்தனையே
                                       ஏற்றுவேன் என்றென்றும் எனநெஞ்சில் வைத்தே
தேற்றுவார் வேறில்லை தேவகிநந்தனா நீயல்லால்
                                       ஆற்றுவதும் அன்போடு அணைப்பதும் நீதானே

97. நற்கதி அளிக்கும் வாசுதேவனே

                                       நீதானே கமலகாந்தன் நீதானே லோகநாதன்
                                       நீதானே நாரதன்போற்றும் நாராயணன் என்றும்
நீதானே உயிர்காக்கும் நற்பணியின் சர்வேஸ்வரன்
  நீதானே வந்தெனக்கு நற்கதியளிக்கும் வாசுதேவனே!

98. கண்ணபிரானே உன்னருளே

                                       தேவனாய் வந்து திருஉருவம் தாங்கியே
கோவலம் வரஎன்றும் காலநேமியாய் திகழ்பவனே
                                       சேவகம் செய்திடும் செம்மனத்தார் உளம்புகுந்து
கவசமென காத்திடும் கண்ணபிரானே உன்னருளே!

99. உவந்துநீ உறைவாயே

 அருளோடு பொருளாகி அனைத்திலும் நீயாகி
திருவோடு இணைந்த திருமாலின் வடிவாகி
                                          தருகின்ற கற்பகத் தருவாகி வந்தவனே
    உருகினேன் உள்ளமதில் உவந்துநீ உறைவாயே!

100. குமரனே வைத்திடுவாய்

     உறையாக நீயிருப்பாய் உள்ளிருக்கும் உயிராவேன்
மறையாது நீகாப்பாய் மாதவம் என்செய்தேன்
சிறையான வாழ்வினை சீராக்கி ஒளிதருவாய்
  குறையேதும் இல்லாது குமரனே வைத்திடுவாய்!

101. காக்கும் நீஎன் அன்னையே

வைத்திடுவாய் எந்தனையும் வானுலகில் உன்னடியில்
கைத்தலமதில் கண்ணனே கருத்தோடு துதிக்கின்றேன்
                                     எத்தனை துயர்வரினும் எனக்கு நீயேதுணை
                                     கத்தும் குழவியான காக்கும் நீயென் அன்னையே!

முடிப்பு

1. தாமோதரனை போற்றினேனே!

அன்னைக்கு சமர்ப்பணமாய் அந்தாதி பாடிவைத்தேன்
கண்ணனின் அருட்கடலை கவிதை ஆக்கிவைத்தேன்
                                      எண்ணும் எண்ணங்கள் என்றும் உயர்வுபெற
   தண்துளாய் மாலைதவழ் தாமோதரனை போற்றினேனே!

2. வாணியும் தந்திடும் அருளே

 போற்றும் பக்தருக்கு பேரின்பம் நல்கிடுவான்
காற்றீல் கானமாய் கலந்தே துணையாவான்
                                          ஏற்றும் அந்தாதி எழுதிட கணபதியும்
       வீற்றிருக்கும் ஐயனும் வாணியும் தந்திடும் அருளே!

3. கவிராதையின் அர்ப்பணம்!

 அருளின் அடைக்கலம் அழகனின் கவிமாலை
 பொருளோடு விளைந்த பரந்தாமன் பிரசாதம்
                                          கருத்தின் வெளிப்பாடு கற்றவர் வாழ்த்திட
        கருமணியின் திருவடிக்கு கவிராதையின் அர்ப்பணம்!


                                  25.6.15
                                  கோவை                                      ராதாகவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக