வியாழன், 9 ஜூன், 2016

தேவி நூறு

சமர்ப்பணம்

உலகில் பெண்கள் அனைவருமே
சக்தியின் வடிவங்கள்
அந்த சக்தியின் உருவாக விளங்கும்
தேவியரை "தேவி நூறு" என்ற
கவிதை மாலை சூட்டிப் பணிகிறேன்
சக்தியின் திருமேனியில் அணிவித்த
கவித்தொகுப்பை எங்கள்வீட்டில்
பாட்டி, அம்மா, மகள், மருமகள், அத்தை,
மாமி, அண்ணி, சித்தி, அக்காள், தங்கை,
பேத்திகள் என பெண் தெய்வங்களாக
பல்வேறு வடிவில் உலவி உறவுகளை
இணைக்கும் பெண்கள் அனைவருக்கும்
இந்நூல் சமர்ப்பணம்

தேவி நூறு

காப்பு

1. விநாயகன்
அலையாகி கலையாகி மலையாகி நிற்பாள்
        ஆழிசூழ் வையத்தில் அவளே எங்கும் இருப்பாள்
சிலையாகி உருவாகி சிந்தையில் நுழைவாள்
  சிங்கார முகமாகி சிரித்துஎனை ஈர்ப்பாள்
தலையால் வணங்கி தாளில்என் தேவியினை
துலங்கும் கவிமாலை துதித்து சூட்டிட
மலையவன் மகனே மூத்தவனே கணபதியே
        முன்னின்று வழிகாட்ட மூஞ்சுறுஏறி வருவாயே!

2. வாணி
வெண்தாமரை வீற்றிருந்து வீனையேந்தி கானம்தந்து
விரிவான ஏடெடுத்து விளங்கும் ஜபமாலையுடன்
                                      அன்னம் அருகிருந்து அறிவுக்கு வழிகாட்ட
                                        அழகான தோகை அற்புதமாக வண்ணம்தீட்ட
                                      எண்ணும் எழுத்தும் எழுகடல் ஞானமும்
                                        எமக்களித்து வாழ்விக்கும் ஏழிசைச் செல்வி
                                      கண்ணீர் கசிந்து காலமெலாம் தேவியரை
                                        கவிபாட கனிந்தருள்க கலைமகளே வந்தமர்க!

3. ஹரிஹரசுதன்

ஆக்கலும் அழித்தலும் அணைந்திட வந்துதித்த
 அற்புதமே! அகிலமே! ஆனந்த பொக்கிஷமே!
  நீக்கமற சபரிதனில் நிறைந்திருக்கும் சோதியே!
        நல்பதினைட்டு படிமீது நற்தவமியற்றும் ஞானியே!
                                         நோக்கும் இடமெலாம் நதியாக மலையாக
    நீலக்கடலாக விளையும் நிலமாக உயரினமாக
காக்கும் கரங்களோடு கனிகின்ற தாய்னமயை
  கவியினில் பதித்திட கரம்நீட்டி அருள்வாயே!

1. ஆயிரமாயிரம் பெயரோடு அகில்மெலாம் நிறைந்திருப்பார்
                                     பாயிரம் பலபாடி பணிந்துனை போற்றிடுவார்
உயிரெலாம் உள்தாங்கும் உயர்தாய்மை நீயாவாய்உன்
                                     கயிர்முனையில் பறந்திடும் காற்றாடி நானன்றோ

2. செந்தாமரையில் வீற்றிருந்து செவ்வாடை தனையணிந்து
                                     தந்தக் கரங்களில் தாமரைகளைத் தாங்கி
                                     சிந்தை கவர்ந்திடுவாய் செல்வமெனும் பெயரோடு
                                     எந்தெந்த நேரமும் எங்கெங்கோ பறந்திடுவாய்

3. சூலம் தனைஏந்தி சீற்றமுடன் சுற்றிடுவாய்
          நீலகண்டன் அருகில் நித்தியமாய் அமர்ந்திருப்பாய்
       பாலமாய் இருந்துஎன் பழவினை போக்கிடுவாய்
        காலமெலாம் கடந்து ககனத்தில் வாழ்ந்திருப்பாய்

  4. ஊருக்கு ஒருநாமமோடு உலாவரும் தேவியவள்
                                          சீர்மிகு குமரிமுதல் சிறப்பான இமயம்வரை
    தேரோடும் தெருவெலாம் திருஉலா வந்திடுவாள்
    கார்கால மேகமென கருணைமழை பொழிவாளே!

 5. முப்பெரும் தேய்வங்கள் முத்தொழில் அதிபதிகள்
      எப்போதும் இம்மூவரை ஏற்றிவிக்கும் மாயையவள்
       தப்பாது அவள்செயல் தரணியெங்கும் அவள்ஆணை
  ஒப்பிலா மகாமாயா ஒங்காரப் பரம்பொருளே

6. தூய்மையின் வடிவமாய் தூயவெண் பட்டினிலே
   தாய்மை உணர்வோடு துலக்கிடுவாய் அறிவாலே
        வாய்மை விளக்கேற்றி பொய்மைஇருள் விலக்கிடுவாள்
                                         சேயாக எமைஏற்று சிந்தை வளர்த்திடுவாள்

7. காலெடுத்து ஆடிய கதிர்சடை சிவனோடு
       கோலமுடன் கூத்தாடி காளியாய் எழுந்தவளே
     சூலமதைத் தாங்கிய செங்கண் கொப்பளிக்க
         காலனாய் நின்றவளே கடும்பகை வென்றனையே

8. வெண்ணிறக் களிறுகள் விரும்பி மலர்தூவ
     கண்ணின் கடைப்பார்வை கனிந்து நோக்கிடில்
பொன்னும் பொருளும் பொற் குவியலும்
         கண்ணிமைக்கும் நொடியீல் கைகளில் பொழியுமே!

9. ஆறுபத்து நான்கு அற்புதக் கலைகளை
           பொறுமையின் திலகமாய் போதித்து அருள்வாள்
                    வெறுப்பின்றி வெகுளியையும் விற்பன்னராய் மாற்றிடுவாள்
                   மறுக்காது மறைபொருளையும் மனதினில் ஏற்றிடுவாளே

10. விசாலமான கண்களுடன் விசாலாட்சி பெயரோடு
    பூசியநீறுமன் பிறைசூடிடும் பெருமானாம் சிவனான
    விசுவநாதனோடு மாசுநீக்க விரைந்தோடும் கங்கை
 காசிதனில் இருப்பவளே கனிந்தருளே வருவாயே

11. அகிலத்தின் உயிரெல்லாம் அமுதுண்டு உயிர்வாழ
                                         பாகீரதி நதியருகில் பொன்மேனி தன்னோடு
         வாகீஸ்வரியாய் அன்னமதை வாரித்தரும் அன்னையாய்
     யோகியென அமர்ந்த அன்னபூரணியே அருள்வாயே

12. காயும் கதிரவனாய் குளிர்கின்ற நிலவாய்
                                             பாயும் நதியாய் பனிசூழ் மலையாய்
       ஒயாதஅலை கடலாய் ஒளிரும் விண்மீனாய்
       மாயாத மனிதமாய் மாதாவாய் இருப்பவளே

13. புவியின் அடியினில் பொன்னாய் அமிழ்ந்திருபாள்
        மேவியெழும் பயிராவாள் மேன்மைமிகு மணியாவாள்
கூவிஅழைத்திட கைகள் குனிந்து உழைத்திட
       தேவியவள் மேலெழுவாள் திரவியமும் தந்திடுவாள்

14. உழைக்கும் கைகளில் உவந்து அமர்ந்திடுவாய்
    மழைகொண்ட மேகமென மனதில் தங்கிடுவாள்
        தழைக்கும் அன்பினில் தான்மகிழ்ந்து வீற்றிருப்பாள்
          பிழைபடின் முன்னவள்வர பறந்தோடி மறைந்திடுவாள்

15. நாமுகன் நாவினில் நயமோடு உறைபவள்
           வான்அளவு அறிவினை விரும்பினால் தந்திடுவாள்
              தண்ணிலவாய் குளிர்ந்து தரணியெலாம் காத்திடுவாள்
          எண்ணம் உறுதியாகில் எழுந்தருகில் வந்திடுவாள்

16. அறுபத்து மூன்று அடியவர் பணிந்துட
       பெருகும் அருவியென பதிகங்கள் பாடிவர
      நெருப்பான மேனியன் நெஞ்சம் உருகிட
         மறுபாதி தானாகி மாநிலம் காக்கின்றாயே!

 17. யுகம்தோரும் மாறிடும் உயர்தர்ம அதர்மங்கள்
                                           அகம்உயர அரும்பும் அமரகுணம் துவளும்
     முகம்கோணி அசுரகுணம் முப்பெரும் சக்தியாய்
   இகம்தரும் ககபரமிதில் இனியவளே போற்றி!

18. தேவரும் அசுரரும் தேடுகின்ற திருவே
       எவரும் தம்மிடமே வைக்க இயலா உருவே
      கவர்ந்தவர் காத்திட கணமேனும் தாராது
          புவனத்தை புரட்டிடும் பூமகளே அருள்வாயே

 19. ஆலகாலமும் அமுதமும் அலைகடலில் தோன்றிட
                                         கோல எழிலோடு கமலத்தில் உதித்தவளே
   நீலமேன நாரணனை நாடிச்சென்று அமர்ந்தவளே
      காலமும் கட்டுபடுத்தாத காரிகையே போற்றுகிறேன்

 20. சேற்றினில் பிறந்த செந்தாமரையே திருமகளே
                                           வற்றாத சேறு வாழும் தாமரையின்றி
  பொற்றாமரை சேறுஇன்றி பிறவாது மண்மீது
      பெற்ற செல்வமதில் பிணைந்ததே சேறும்மலரும்

21. செல்வம் வரும்போது சேரவருவாள் முன்னவளே
                                         பல்கிப் பெருகும் பொன்னும் பொருளும்
                                         பொல்லாத குணமும் போரும் தந்திடுவாள்
  செல்லாக் காசாக்கி சிந்தையை குழ்ப்பிடுவாளே

22. நெல்லில் இணைந்த நல்லரிசியும் உமியுமாக
   பல்சுவை கனிகளில் சுவையிலா விதையாக
 நல்ல கனிமங்களில் நாட்டமிலா துருவாக
               நல்லமுதும் ஆலகாலமாக நன்றே இணைவாய் நாயகியே

23. நெல்லை நகரினிலே எல்லையப்பன் அருகினிலே
வல்லவளாய் இருப்பவளே வளர்காந்தி மதியே
                                         சொல்லால் கவிபாட சுகந்தரும் அன்னையே
மெல்லிய மலராக மனதில்மணம் அருள்வாயே

24. கடல்ஆழ கயல்விழிகள் கருமீனாய் சதிராட
    மடலவிழ் கைகளில் மரகதகிளி விளையாட
           தடாதகை பிராட்டியாய் தென்சிவன் துணையானாய்
          கூடல்நகர் மதுரையில் கோலோச்சும் மீனாட்சியே

25. அஞ்சேலென அபயகரம் அளித்திட ஆலகால
           கஞ்சுண்டவனை நாயகனாக்கிட நற்தவம் புரிபவளே
          காஞ்சியிலே கால்தூக்கி காமாட்சியாய் நிற்பவளே
                பஞ்சாகிடுமே பழவினைகள் பார்வையின் கருணையிலே

 26. ஆதிசங்கார் போற்றீய அலங்கார செளந்தரியே
           போதனைகள் அவருள்ளே பொங்கியெழச் செய்தவளே
    நதிதீர கங்கையில் நன்மடங்கள் தோன்றிடவே
      மதியாக உள்ளிருந்து மனம்உயர்த்திய பகவதியே!

27. அலைகள் ஒடிவந்து அழகிய பாதம்தொட
         சிலையாக சிறுபெண்ணாக சிரித்திடும் குமரியே
          மலையாக கடலெழுந்து மண்மூடிப் போனாலும்
         கலையாக எழுந்து கதிரவனாய் ஒளிதருவாயே

 28. மாரியென கருணை மழைபொழியும் சூலியே
    மாரியென பெயர்ரோடு மனம்புகும் பைரவியே
காரிகையே சூலம் கைகொண்ட காளியே
    வாரியெனை எடுத்து வரம்தந்து காத்தருளே

29. சங்கும் சக்கரமும் சார்ங்கமும் கதையும்
   பொங்கும் சூலமும் புனிதமான வில்லும்
                                             ஒங்கிய வாளும் ஒங்கார வஜ்ரமும்
        தாங்கும் கேடயமும் தாங்கிய விஷ்ணுதூர்கா

30. கள்ளமும் கபடமும் கவர்ந்திட முடியாத
   வெள்ளம் வந்தாலும் வீணடிக்க இயலாத
   துள்ளும் தீச்சுடரும் தீண்டிட நெருங்காத
      அள்ளும் அறிவினை அளிப்பவள் வாணியே

31. வண்ணமிகு மலர்களும் வாசம்தரும் மல்லிகையும்
 விண்ணில் கண்சிமிட்டும் வான்சுடர் தாரகையும்
                                        எண்ணத்தை எழுப்பிடும் ஏற்றவர் நட்பும்
  வெண்மை நிறத்தாள் வாரித்தரும் செல்வமன்றோ

32. கடையூரில் காத்தருளும் கண்கவர் அபிராமி
                அடைகாக்கும் பறவையென அனைத்துயிரை காத்திடுவாய்
            மடை திறந்த வெள்ளமென மானிடத்தை நாடிடுவாய்
         அடைக்கலம் உன்னடியே அன்னையே சரணங்கள்

 33. எட்டுவகைத் திருவாகி ஏற்றமிகு நவநிதியாகி
       சட்டென வந்திருந்து சடுதியில் மறைந்திடுவாள்
     முட்டி முயன்றாலே முன்வந்து நின்றிடுவாள்
        வெட்டி விலகிடுவாள் வீணர்தமை வினாடியிலே

34. எல்லைகள் இல்லாத எங்கும்நிறை சக்தியவள்
   தில்லையின் காளியாய் திருநடனம் புரிந்தவள்
  புல்லைப் பூவாக்கும் பேரியக்கத் துவக்கமவள்
      தொல்லை ஒடிவிடும் தூயவள்அடி பணிந்தாலே!

35. மாமன்னர் போற்றிட மலைமீது அமர்ந்தவளே
          சாமுண்டி தனைவென்று சாமுண்டஸ்வரி ஆனவளே
   சேமமுற மைசூரின் சீர்பெரும் தலைவியவள்
        காமம் குரோதம்நீக்கி கருணைமழை பொழிவாளே!

36. துங்கபத்ரா நதியோரம் தூய்மை வடிவாகி
 ஒங்கும் அறிவாக ஒளிவீசும் சாரதையே
      எங்கும் மறையோலி எதிரொலிக்கும் மாதேவி
     பொங்கும் பேரழகில் பொலிகின்ற வானதியே

37. காவியமும் ஒவியமும்நின் கண்ணசைவில் உருவாகும்
                                      தாவிவரும் குழந்தையும் தனிமழலை உதிர்த்திடும்
                                      புவியெங்கும் பாராட்டும் புலமைகள் விரிவாகும்
                                      மேவிய மனங்களில் மேன்மையை தந்தருள்வாள்

38. மயிலாகி தோகையுடன் மயிலையில் குடிகொண்ட
                                        குயிலே கற்பக கொழுந்தே புவியில்
   உயிரோடு இணைந்து உள்ளியங்கும் ஜீவான்மாவை
      கயிராகி பரமாத்மாவுடன் கனிந்திணைப்பாய் அற்புதமே

39. அட்டமா சித்திகளை அருள்கின்ற பெருந்தேவி
           நாட்டமுடன் நல்வாழ்வில் நான்குநிலை வைத்தவளே
            தொட்டிலும் பிரம்மச்சிரியமும் தூயஇல் வாழ்வும்கண்டு
           விட்டுவிலகி கான்ஏக ஆன்ம விடுதலை தந்தருள்வாள்

40. வித்யா லக்ஷ்மியாய் விரும்பி அறிவுதருவாள்
     ஏத்தும் மழலையோடு சந்தான லக்ஷ்மியாவாள்
   மத்தகஜம் மலர்தூவ மலர்மீது கஜலக்ஷ்மியே
       அத்தனையும் அள்ளித்தரும் ஐஸ்வரிய லக்ஷ்மியே

41. வீரம்தனை விளைக்கும் வீரலக்ஷ்மி ஆகிவருவாள்
  தரமான வெற்றிதரும் விஜயலக்ஷ்மி ஆகிடுவாள்
           புரட்டும்நில பியிர்முளைக்க பெரும்தான்ய லக்ஷ்மியாவாள்
       கரங்கூப்பி பணிந்திட ஆதிலக்ஷ்மியாய் அருள்புரிவாள்

42. கொட்டும் பனியும் குளிர்ந்த காற்றும்
             வாட்டும் வெயிலும் வான்நிலவின் தண்மையும்
          தொட்டு விளையாடும் தூயநின் மேனியிலே
                சிட்டாக உள்புகுந்து சிந்தனையை உயர்த்திடுவாள்

 43. வசந்தத்தின் மலர்ச்சிகள் வண்ணமகள் கோலங்களே
 அசைந்தாடும் மலர்மணம் அள்ளிவரும் நாயகியே
அசையாத மலைகளில் அரும்பசுமை மரங்களும்
                                        இசையாக என்னுள்ளே ஏகாந்தம் தந்திடுமே!

44. மனம்ஒரு புதிய மணமிகு மென்மையான மலரே
    இனம்கண்டு இனியதோர் இன்பத்தை அடைந்திட
                                          கணமேனும் பிரியாத கனவுலகை மறந்தே
தினம்உள் புகுவாய் தியானத்தின் வழியாலே

45. தன்னலத்தின் செயல்பாடு தழுவிடும் தோல்வியை
 தன்னலத்தின் நினைவே தடையாகும் வெற்றிக்கு
                                        எண்ணத்தில் தடுமாற்றம் ஏற்படுத்தும் பிழைகளை
        தன்னைமறந்து உனைநினைக்க தழைத்திடும் மகிழ்ச்சியே

46. ஆதிசக்தியாய் அவனியில் அண்ட பகிரண்டமும்
                                          துதிக்கின்ற நவக்கிரக நவ சக்தியாய்
 விதியை மாற்றவல்ல வீணரை மாய்க்கவல்ல
 மதிவுடைய மாதரசி மனதிலிருந்து காப்பாயே!

47. காலையும் மாலையும் கரும்இருள் இரவும்
          சோலையும் மலர்களும் சேர்ந்தினிக்கும் கனிகளும்
      அலைமோதும் கடலும் ஆகாயவிண் வெளியும்
           தலைவியின் மறுவடிவம் தயைதந்து அருள்வாயே

48. வேல்போலும் வேப்பிலையில் விரும்பிக் குடியிருப்பாள்
மால்அவன் தங்கையாய் மாதவியாய் உடனிருப்பாள்
 மால்தரும் அன்னையாய் பார்வதியாய் தானிருப்பாள்
                                       நூல்தரும் பயனாக நீயெனக்கு ஆனாயே

 49. முப்புறம் எரித்தவனை முக்கண்ணன் ஹரனை
                                           எப்போதும் பிரியாது எழிலாக எழுந்து
                                           அப்பன் மேனியில் அரைபாதி ஆனவளே
                                           ஒப்பிலா மணியே ஒடிவந்து அருள்வாயே

50. அடியவர் மனதில் அன்போடு அமர்ந்தவளே
     அடியவர் வழியினில் அடிபணிந்து நின்றாலே
          நொடியினில் உனைச்சேர நூறுஅடி முன்வருவாய்
            கொடியிடை தேவியே கோடிமுறை வணங்குவேனே

      51. வெள்ளிப்பனி மலைமீது விளையாடும் வெண்முகிலென
       வெள்ளை ஆடையில் வாரியிழைத்த வண்ணங்களாய்
துள்ளி விளையாடும் தூயஅன்னம் வாகனமாய்
     அள்ளித்தந்து அறிவினை ஆன்மாவை உயர்த்துவயே!

  52. கடல்கடந்து சென்று களிப்புற்ற நாட்கள்
     மடல்கண்டு ஏதோ மனதில் சலனங்கள்
           திடமான உள்ளமோடு தீர்க்கமான நிறைவோடு
              அடலேறுஎன உயர்ந்து அனைவரும் வாழஅருளே!

53. எடுத்த முடிவுகள் எல்லாமே சரியாகிட
   எடுத்த மானுடம் எடுத்திட இயலுமோ?
        அடுத்து வருகின்ற அனைத்து விளைவுகளை
        தொடுத்து அறிந்து தருபவள் தேவியன்றோ?

54. இன்று செய்தவை இன்பம் தரலாம்
               இன்று பின்னாளில் நீண்டதுயரும் தொடரலாம்
           இன்றும் நாளையும் இயக்குவது நீயன்றோ
                  கன்றாக கதறுகிறேன் கனிவோடு வழிநடத்தவயே

 55. கனவோ நினைவோ காலத்தின் கற்பனையோ
 அனலாக உள்ளம் அலைவீசத் துடிக்குமோ
        புனலாக ஒடியோடி பயன்கருதாது செய்ததெல்லாம்
             உனதுஆணை என்றறிந்தேன் உயர்அமைதி அருள்வாயே!

56. விருத்தி அபிவிருத்தியென வேண்டிய செல்வமெலாம்
                                       இருத்திட வந்திங்கு இன்பம்தரும் இனியவளே
      கருத்தோடு உழைப்பவரோடு காலமெலாம் இருப்பாயே
தருவாக தழைத்தோங்கி திரவியம் அருள்பவளே!

57. அலைந்திடும் ஆன்மாவை அரவணைத்து சேர்த்திட
    ஆலையமெலாம் வீற்றிருந்து அன்போடு காத்திருந்து
                                        காலையும் மாலையும் கனிந்து தொழவைத்து
                                        வாலைக் குமரியாய் வழிகாட்டி நின்றாயே

58. தடுமாறும் உள்ளத்தை தடுத்து ஆட்டுகாள்ள
  மடுவும் மலையுமாய் மாயா வாழ்வுவாட்ட
        கருமையான தோற்றமும் கனிவான தோற்றமும்
        எடுத்துவந்த அன்னையே எந்தனை உயர்விப்பாயே

 59. உள்ளமெனும் பூமியில் உண்மையை மூடிவிடு
  எள்ளவும் பயனில்லை எடுத்தே உரைப்பதில்
     மெள்ளபல உறவுகள் மென்மையாக நீங்கிவிடும்
   தள்ளாத தாயவளே தரணியில் துனையாவாள்

60. உண்ணும் உணவும் உள்வெளி செல்லும்
      தண்ணிய மூச்சும் தாகம்நீக்கும் தண்ணீரும்
          கண்ணில் காட்சிகளும் காதுவழி ஒலிகளுமாய்
       என்னுள்ளே நீயிருக்க எங்கோ தேடினேனே!

61. ஒற்றையாகி வந்திங்கு ஒராயிரம் உறவுகண்டு
  பெற்றவர் உற்றவர் பெரும்நட்பு எனப்பெருகி
                                           ஏற்றமிகு வாழ்வும் எல்லையிலா புகழும்
          பெற்றேன்இனி தனிவழி புறப்பாட்புல் துணைநீயன்றே

62. புல்பூண்டு தானாகி பூக்கும்மரம் கனியாகி
         வெல்லும் விலங்காகி விண்ணில் பறப்பனவாகி
   எல்லாப் பிறப்புமாகி எழுபிறப்பும் கடந்து
           பொல்லா மனிதமாகி போனேனே பிறப்பருப்பாயே

63. கருவாகி உருவாகி கருத்தறிந்து மனிதனாகி
     மருவிலா மனமின்றி மயங்கி அலைகின்றேன்
   செருவான சிறப்பாகி சகமெலாம் தானாகி
          இருப்பவளே என்னுள்ளே இனிதுறைந்து காப்பாயே

64. அழுதே பிறந்தேன் ஆறாத்துயர் கண்டேன்
       தொழுது உனைத்தேடி தேகமதை வருத்தினேன்
     பழதாகிப் போனேன் பாவத்தில் மகிழ்ந்தேன்
                 குழந்தையாக எனைநினைத்து கூட்டிச்செல்ல வருவாயே

65. புதுகை நகரினிலே புவனேஸ்வரி தாயாகி
            எதிர்வரும் அரைக்காசு எழில்மிகு பிரகதாம்பாளாகி
      கதிர்வரும் வேளையில் கோகர்ணப் பதியாகி
    துதிபாடும் பக்தரின் துயர்நீக்கும் தேவியரே

66. நோயென்றும் நொடியென்றும் நான்விழுந்து தவிக்கையில்
                                     தாயாக முன்வந்து தலைதடவி நிற்பாயே
                                     காயமிதனை விட்டுநீங்கி காலடியில் சரணடைய
                                     நேயமுடன் வருவாயே நாடிவிடுதலை அருள்வாயே

 67. மகுடமென நாகமது முன்னின்று ஒளிவீச
              தகுதியுடன் மனதுக்கு தக்கதுணையாக மானசாதேவி
     வகுத்திடும் வாகனமாய் வனப்புலி முன்வர
         புகுந்துடன் வருவாய் பாவங்களை நீக்கிடுவாய்

68. கதிரவனை வணங்கிட காயத்திரி மந்திரத்தின்
    துதிக்கின்ற தேவியாய் தூயநல் காயத்திரியாய்
   மதிமுகம் ஐந்தோடு மாயவளாய் இருப்பவளே
  எதிர்வந்து எமக்கு எல்லாஅறிவும் அருள்கவே

69. கங்கை கரையருகில் கால்கடுக்க நின்றாலும்
    பொங்கும் நூரைநீரில் புனிதமான நினைவும்
                                           முன்க்கி எழுந்து முன்வினை நீங்கிட
                                           தங்கும் அருளின்றி தானாக இயலாதே!

70. திருவருள் தந்திட திருவருளாக வருவாயே
     திருவரம் பொழிந்திட திருவரமாக வருவாயே
     ஒருவரம் வேண்டிட ஒருநுறு வரம்அருள்வாயே
           ஒருபோதும் உன்னைமறவாத மறதியை போக்குவாயே

71. காலச் சக்கரத்தை கணப்போழுது நிறுத்தி
     காலமான காலத்தை கண்டிட பின்னோக்கி
சீலமுடன் சென்றிட செய்த முடிவுகள்
      பலவும் தவறாகும் பாதையை காட்டுவாயோ

 72. வெண்பனி முகட்டில் வீற்றிருக்கும் வைஷ்ணவி
      வெண்குகை வாழ்ந்திருந்து வரமளிக்கும் மாதாவே
                                          கண்சிவந்த புலிமீது கோலஎழில் சந்தோஷி
     கண்திறந்து காம்நீட்டிஉன் காலடியில் சேர்ப்பாயே

73. மலரோ மணமோ மாதவப் புனலோ
            இலவம் பஞ்சாக இகத்தினில் அலைகின்றேன்
           காலன் வரும்போது கனிந்து உனைநினைக்க
                   சீலமோடு என்நினைவை சிந்தையில் நிறுத்திடுவாயே

74. என்னை உருவாக்கி எதிரிலா ஆன்மாவை
         பொன்னான உடல்தந்து பூவுலகில் ஆடவிட்டாய்
    உன்னை மறந்தேன் உலகியலில் வீழ்ந்தேன்
           உன்னுள்ளே எனைச்சேர்க்க என்னுள்ளே வருவாயே

75. ஆண்டுபல கடந்தாலும் அன்பினும் மாறவில்லை
       தொண்டனாய் தூயவனாய் தொடர்ந்து தேடுகின்றேன்
   கண்டதே கோலமென கனவினில் மிதக்கின்றேன்
     அண்டங்கள் ஆள்பவளே அமைதிதந்து அருள்வாயே

76. உறையூர் மண்ணில் உறைக்கின்ற திருமகளே
        மறைபொருளை கீதையாய் மானிலத்தில் தந்தவன்
        தரையினில் இருகாவிரி தாவியனைய துயில்பவன்
      பறைஒலிக்க பாவையுனை தேடிவரும் பேரழகே!

77. பசுவின் அங்கமெலாம் பாவியிருக்கும் கோமாதா
     அசுவினி தேவதைமுதல் அனைத்து தெய்வங்களும்
    மாசுநீக்க மகிமையோடு மகிழ்ந்துறையும் தேவியே
     தேசுமிக செல்வமெலாம் தானேவந்து அருள்வாயே!

  78. கூத்தனுரில் குடிகொண்ட கோடியறிவு சரஸ்வதியே
 சித்தமதில் பேரறிவை சிறப்போடு அளிப்பவளே
                                         புத்துலகு படைக்கும் பிரம்மன் நாவினில்
    புத்தகமாய் அமர்ந்தவளே புத்தியில் வந்தமர்வாயே

79. அலையாக துயர்வந்து அகிலத்தில் வாட்டாது
   அலையில் பிறந்தவளே ஆதரிக்க வருவாயே
  கலையாத கனவாக கருத்தில் நிலைப்பாயே
சிலையாக என்னுள்ளே சீராக அமர்வாயே!

80. உண்ணும் உணவாக உறங்கும் உறக்கமாக
  எண்ணும் எண்ணமாக எழிலான மனமாக
     பண்ணும் பாட்டுமாய் பக்தியின் தோற்றமாய்
       கண்ணுள்ளே இருந்து காலமெலாம் காப்பாயே!

81. ஆயிரநாமம் உடையாள் ஆழகியபாதம் தொட்டு
  வயிரமென ஒளிவீசி வரலக்ஷ்மியாகி அமர்ந்து
                                          ஒயிலாக நடைதந்து ஒங்காரப் பொருளாகி
 கயல்விழி கடைக்கண் கனிவோடு தந்தருளே

82. கருணையின் வடிவாகி கமலத்தில் அமர்ந்து
      திருவென செல்வமாகி திசையெலாம் நிறைந்து
மருவாக மாதவன் மேனியில் உறைந்து
   வருகின்ற தேவியே வரமருள் அன்னையே

83. ஒராயிரம் கைகளோடு ஒராயிரம் ஆயுதங்கள்
                                           கோர உருவம் குதித்தாடும் கூந்தல்
                                           வீரத்தின் விளைவாக வெளிநீளும் நாவு
                                           மறத்தின் மாயை மாகாளித் தாயே!

84. எலும்பும் தசையும் எழுகின்ற நரம்பும்
             தோலும் ஐம்புலனும் திகைப்யூட்டும் அவயங்கள்
         மேலும் மூடிநிற்க மேன்மையான மேனியின்
        நாலும் அறிந்திட நல்லறிவும் தந்தனையே

85. மாலைகள் சுட்டி மங்கலத் திலகமோடு
       சேலையும் அணிவித்து சிங்கார அணிபூட்டி
                 சோலையிலும் மலையிலும் கழன்றிடும் அலையிலும்
             கலையாக இருப்பவளே கைகூப்பி வணங்குவனே

86. பிறப்பும் இறப்பும் பின்தொடர்ந்து வந்திட
           பிறவாத பெருவாழ்வில் பேரின்பம் தனையடைய
 மறந்தும் மீண்டும் மறுபிறவி இல்லாத
         அறம்செய அருள்வாய் அமர்த்துவம் தருவாயே!

  87. அங்கம் மெலிந்திட அறந்தவம் செய்திலேன்
   எங்கும் எவருக்கும் எளிதில் உதவிலேன்
         கங்கையில் மூழ்கியே கருமவினை தீர்ப்பேனே
          பொங்கும் தேவியவள் புனிதமாக்கி அருள்வாயே

 88. காவல் தெய்வமாகி ககனமெலாம் வீற்றிருப்பாய்
                                          பூவலம் வந்துனக்கு பூவோடு எடுப்பேன்
  சேவகம் செய்பவளாய் சிரித்து உடன்வருவாய்
பூவுலகு வாழ்ந்திட பூமாரியாக வந்தருள்க!

89. கண்ணின் மணியாக காக்கும் இமையாக
    முன்வரும் மூக்காக மூச்சாகும் காற்றாக
        எண்ணத்தை வெளியிடும் எளியவாய் நாவாக
            என்னுள்ளே அற்புதமாய் இயங்கும்சக்தி நீயன்றோ

90. கையிரண்டு காலிரண்டு காதுகண் இரண்டென
          ஒயிலான மூக்கிண்துளை இரண்டென வெளிவைத்து
  உயிருள்ள அங்கங்கள் உள்ளேமூடி வைத்து
   பயிராக மனம்வைத்து பக்திவழி தந்தனையே!

  91. சண்டிதேவியாய் கங்கை சலசலக்கும் ஹரித்வாரில்
                                         கண்டவர் மகிழ்ந்திட கனகமலை மீதெழுந்து
  மீண்டும் படியேற மானசதேவி யெனப்பெயரோடு
 பெண்ணின் பேருருவாய் பரிமளிக்கும் தேவியரே

92. நீரில் மூழ்கினும் நெருப்பில் கருகினும்
              காரீருளில் தவித்தாலும் கலங்கிமனம் துடித்தாலும்
   நேராக வந்துஎன் நிலையினை தெரிந்து
           சீராக காப்பாற்றி செங்கரங்களில் தாங்கிடுவாள்

93. காய்ந்தும் பெய்தும் ககனமதில் விளைவித்தும்
       ஒய்ந்தும் சோர்ந்தும்நான் ஒடிஒளிந்து போகாமல்
                                           பாய்ந்திடும் நதியாக பரிவோடு விரைந்து
      தாயாக வந்திருந்து தான்அணைத்து காத்திடுவார்

 94. பெண்ணாகப் பிறந்தவளுக்கு கலைசெல்வம் நீதந்தாய்
                                        எண்ணம் உயர்ந்திட எமுத்தறிவு நீதந்தாய்
                                        உண்ணும் உணவும் உணர்வும் நீதந்தாய்
                                        வண்ண உலகுநீங்க வானுலகும் நீதந்தருளே

                                      95. சிட்டுக் குருவியாக சிறகடிக்க விழைகின்றேன்
 மொட்டவீழ் மலரின் மணமாக விழைகின்றேன்
  ஒட்டான உறவுகளை ஒதுக்கிட விழைகின்றேன்
  சட்டென விடுதலை சந்திக்க விழைகின்றேன்

96. கருணை விழிகளின் கடைக்கண் பார்வையும்
                                           வருதுயர் நீக்கும் வரமருளும் கரங்களும்
  கருவாகி உள்ளமர்ந்த கருவறை தெய்வமாய்
    அருவமாகி இருப்பவளே அடைக்கலம் நீதானே!

97. பசுமரத்தின் நிழலாக பல்கனிச் சுவையாக
       வீசுகின்ற தென்றலாக வண்ணமிகு மலர்களாக
மாசுநீக்கும் நீராக மனமெங்கும் நீயாக
        தேசுமிகு தேவியரே தேடிஉமை அடைந்தேனே!

 98. கருப்பையில் காத்திருந்தாய் காரிருளில் ஒளிதந்தாய்
                                        உருவாகி வெளிவந்திட உடல்உயிர் நீதந்தாய்
மருவிலா உன்நினைவை மனதினுள் நீவைத்தாய்
உருகும் என்ஆன்மாவை உன்னுள்ளே சேர்ப்பாயே

99. அம்மையே அருட்கடலே அனைத்துமான தேவியரே
   இம்மைக்கும் மறுமைக்கும் இனியதுணை ஆனவரே
                                        சும்மா இருப்பதே சுகம்என உணர்ந்தேன்
  அம்மாஎன கதறுமுன் அழைத்துசெல் அன்னையே!

 100. பிறவியின் பயனை பேரருளில் உணர்ந்தேன்
      பிறாவாத வரம்பெற பற்றுகிறேன் பாதகமலம்
  மறவாத நிலைபெற மாதவலின் சரணமே
      துறந்தேன் அனைத்தும் தூயவள் அடிசேரவே

நூற்பயன்

101. தேவியின் நூற்றினை தூயமேனி மனதுடன்
     நாவினால் நவின்று நாள்தோறும் துதித்திட
       புவிஏழு பிறவியிலும் புகழோடு வைத்திடுவர்
         மேவிநம் ஆன்மாவின் மேன்மையை அருள்வரே

102. திண்ணியமாய் அனுதினமும் தேவியர் நூறுபாடலை
 எண்ணத்தில் தூய்மையுடன் இணைந்து பாடிடவே
    பெண்மையின் பேரறிவோடு பாரினில் பெரும்புகழும்
                                        எண்ணியபடி அருள்வரே ஏற்றமிகு தேவியரே!

முடிப்பு

103. தந்தமுக வேழமாய் தலைவனான கணபதியும்
சுந்தரனாய் சபரியில் சோதியான ஐயனும்
    சந்தமதில் கருத்தாக சஞ்சரித்த சரஸ்வதியும்
        எந்தனுள் ராதையாகி எழுதவைத்த தேவிநூறினை

104. முந்தியெழுந்து மேனிதுலக்கி மனரெலாம் தேவியரை
                                        வந்தனை செய்து வாயால் பாடிட
                                        சிந்தனை வளரும் செல்வம்பல பெருகும்
                                        அந்தமிலா ஆனந்தம் ஆன்மாவும் பெற்றிடுமே!

                                      31.3.2016                               ராதாகவி
                                      கோவை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக