வியாழன், 17 டிசம்பர், 2020

நினைவுநாள்

 நினைவுநாள்

வாமனன் என்னும் வாஞ்சைமிகு தெய்வம் வாழ்நாள் எல்லாம் வாழ்ந்தது எமக்காக ! 

வானளாவிய அன்பு வாரித்தரும் பரிவு

       வந்தவர் சுற்றம் எனவேற்றுமையிலா உறவு! 


கணமேனும்ஓய்விலா கடினமான உழைப்பு! 

      கல்வி தொழில் பயிற்சிகள் கற்றது சுயமாக! 

என்ன வேலையென எண்ணிக்கையில்லாமல்

      எதையும்செய்யும்கைகளும் அறிவும்! 


2 தயக்கமின்றி தானாக வந்துதவும் தன்மை! 

       தாயும் தந்தையுமாகி அனைவரையும்வளர்த்த பாங்கு! 

தனக்கென எதையும் தேடவில்லை! 

     தடையில்லா  பாசமெலாம் மற்றவர்க்கு! 

எழுபத்து எட்டு ஆண்டுகள் எம்மோடு வாழ்ந்து

எண்ணத்தில் நிறைந்திருந்தது எங்கோ சென்று விட்டாய்! 

தொழும்  உம்நினைவில்தொடர்கிறது எம் வாழ்வு

      தெய்வமாக இருந்து என்றும் காப்பாயே!

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

new phone

  .புதியதாக வந்த போன் புதிய செய்திகள் கற்று தந்த து

வெள்ளி, 13 செப்டம்பர், 2019

ஓணத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

குடையோடு குறிலாக வந்து                                 நெடிலாகவளர்ந்த வாமனன்
அடிதாங்க முடியளித்த மாவலி
அரசாண்ட இடம் காண வரும் நாள்!
கொடிமலர்கள்அத்தப்பூகோலமாகிட
கூடிக் களிக்கும்ஓணத்திருநாள்!
வடிவான நீள் வாழையிலையில்
வகையான ஓணசதாஉண்ணும் நாள்!

2
ஆடி வரும் நதியில் நீள் ஓடம்
ஆர்ப்பரித்து ஓடும் திருநாள்!
வடிவான வெண் ஆடை மகளிர்
வட்டமிட்டு வாழ்த்தி ஆடும் நாள்!
கூடிய பாரதம் குளிர்ந்து மகிழ
கூடிவரும் ஓணத்திருநாள்!
பாடிமகிழ்வோம்பல்வகைஉணவோடு
பாரெல்லாம் வாழ்க! வாழ்க!
                                  ராதாகவி
அனைவருக்கும் ஓணத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!

வியாழன், 5 செப்டம்பர், 2019

உறுதுணையாக

உறுதுணையாக

அஆகற்பித்தவர்
ஆசிரியர்
அகபுற ஒழுக்கம்
புகட்டியவர்
ஆசிரியர்
அன்னை தந்தைக்கு
பின்னவர் ஆசிரியர்
அவரை வணங்க
அறிவுறுத்திய முன்னவர்
ஆசிரியர்
எண்ணும் எழுத்தும்
தந்தவர் ஆசிரியர்
ஏணிப்படியாகி ஏற்றியவர்
ஆசிரியர்
பண்பும் கலையும்
காட்டியவர் ஆசிரியர்

2
வேற்றுமைகளை
களைபவர் ஆசிரியர்
விளையாட்டை போற்றியவர்
ஆசிரியர்
கற்றவன் உயரக்கண்டு தினம்
கண்ணீர் மல்கி களிப்பவர்
ஆசிரியர்
பெற்ற நாட்டின் பாசம் மிகுந்திட
பாட்டில் தினம் வழி வகுத்தவர்
ஆசிரியர்
உற்ற உறவாக என்றும்
உறு துணையாக
உள்ளத்தில் இருப்பவர்
ஆசிரியர்

3
கண்ணெனும் கல்வியே
உயர் செல்வமென
காலத்தில் தந்தவர்
ஆசிரியர்
எண்ணங்கள் உயர்வையே
நோக்கிட
எத்தனையோ வழி காட்டியவர்
ஆசிரியர்
பண்ணில் இசைத்து பாடிட
பாரினில் கண்முன் தெய்வம்
ஆசிரியர்
விண்ணில் பறந்தாலும்
விந்தைகள் புரிந்தாலும்
வெற்றிக்கு அடியிட்ட
ஆசிரியரை பணிவோம் இன்று!
                            ராதாகவி

ஆசிரியர் தின வாழ்த்துகள்

ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

இதயத்தில் வருவாயே இளங்களிறே!

இதயத்தில் வருவாயே
இளங்களிறே!

ஆனை முகத்தோனே
    அறிவே வடிவானவனே  !                                                               
பானை வயிறோனே
    பகலவன் ஒளியானவனே!
தேனின் சுவையோனே
  தும்பிக்கை உடையோனே!
முனைந்து ஒடித்த தந்தமதில்
முதல் காவியம் எழுதியவனே!

2
கணையும் அங்குசமும்
கரங்களில் கொண்டவனே!
இணையும் விசிறியென ஆடும்
  இருசெவி உடையோனே!
  இனிய மோதகப்பிரியனே!
முன்னைக் கும் முன்னவனே!
மூல ஓம் வடிவானவனே!
கண்மூடி கரணம் போட
கனிந்து வந்து அருள் பவனே!

3.
திணைவள்ளிதேவாணைசூழ் 
திருக் குமரனுக்கு மூத்தவனே!
அணைக்கும் அன்பு சபரி
    அருள் ஐயப்பன் சகோதரனே!
மணையாளை இடம் கொண்ட
மலையவன்  சிவன் மகனே!
இணையிலா இளங்களிறே எம்
இதயத்தில் வருவா யே!

ஞாயிறு, 21 ஜூலை, 2019

கலாம் நினைவுகள்

                    கலாம் நினைவுகள்

கனவு காணுங்கள்

கற்றலின் எல்லையை தொடுவேன் என
ககனத்தில்  வெற்றியை பெறுவேன் என

பெரியதையே சிந்திப்பேன் என
பெரும் ஆற்றலைப் பெறுவேன் என

அண்ட சராசரங்களை வெல்வேன் என
அனைத்திலும் என் முத்திரையை பதிப்பேன் என

உயர்ந்த இலக்கினுக்கு போராடுவேன் என
உயிரினத்தின் பெருமையை உணர்வேன் என

உலகத்தோர் அனைவரும் என் உடன் பிறப்பு என
உண்மையை என்றும் என் உணர்வு என

பெற்ற தாயை, மொழியை போற்றுவேன் என
பிறந்த பொன்னாட்டின் பெருமை காப்பேன் என

      கனவு காணுங்கள்
                                            ராதாகவி

வெள்ளி, 12 ஜூலை, 2019

அந்த நாள்

அந்த நாள்

1. மண்பானையென உடல் உள்ளே
மனமென்னும் ஆன்மா
திண்ணமான ஆயுள் என்னும் நீர்
திட்டமிட்டு உள்நிரப்பி
கண்ணுக்குத் தெரியாத சிறு துளை
கடவுளே போட்டும் வைத்தான்
எண்ணம் எதும் அறியாமலே
என்றும் வெளியேறும் நீர்

2. நிலையாக காலமெல்லாம்
நிரம்பியிருக்கும் என நம்பிக்கை
மலை மலையாய் திட்டங்கள்
மானிட வாழ்வு தீட்டும்
வலை விரித்த மாயையில்
வலு.வில் விழுந்து மகிழும்
கலையென்றும் சிலையென்றும்
காலமெல்லாம் களிப்புறும்

3. வளிவந்திட வேப்பம் பூ
வீதியெல்லாம் விழுவது போல்
துளி துயர் வந்தாலும்
துள்ளி துடித்து கதறும்
துளித்துளியாய் நீர் அடியில்
தெளித்தால் போல் நீங்குவதை
களிப்பின் மிகுதியில்
காணாது மகிழ்ந்திருக்கும்

4. பானையில் நீர் குறைய
பந்தபாசம் விலகிவிடும்
துணையாக வந்ததெல்லாம்
தூர நின்று பார்த்திடும்
அணையாக இருந்த உறுப்புகள்
ஆங்காங்கே தளர்ந்துவிடும்
கணையாக துயர் அம்புகள்
கண்முன்னே துளைத்திடும்

5. துளையிட்ட பானை நீர் தீரும் அந்த
தினமும் வந்ததென அறியும்
மணை வீடு வாசல் உறவு
மனதை விட்டு அகலும்
அணைத்துக் காத்திட ஒருவனே என
அறியும் அன்று ஆன்மாவே
இணைத்து கைகூப்பி இறைவா
இறுதி நாளில் உடன் இரு என அழும்

6. தினம் அதை மனம் அறியும்
தீவிர சிந்தனை ஏதுமின்றி
மனம் ஒன்றி விடும் பரமனிடம்
மயக்கம் ஏதும் இனி இல்லை
சினம் என்பது அவனிடமில்லை
சிக்கெனப் பிடித்திடுவான்
இனம் காணா இன்பமதில்
இறுதி நாளில் நிலைத்திருப்பாய்!

                            ராதாகவி