வெள்ளி, 12 ஜூலை, 2019

அந்த நாள்

அந்த நாள்

1. மண்பானையென உடல் உள்ளே
மனமென்னும் ஆன்மா
திண்ணமான ஆயுள் என்னும் நீர்
திட்டமிட்டு உள்நிரப்பி
கண்ணுக்குத் தெரியாத சிறு துளை
கடவுளே போட்டும் வைத்தான்
எண்ணம் எதும் அறியாமலே
என்றும் வெளியேறும் நீர்

2. நிலையாக காலமெல்லாம்
நிரம்பியிருக்கும் என நம்பிக்கை
மலை மலையாய் திட்டங்கள்
மானிட வாழ்வு தீட்டும்
வலை விரித்த மாயையில்
வலு.வில் விழுந்து மகிழும்
கலையென்றும் சிலையென்றும்
காலமெல்லாம் களிப்புறும்

3. வளிவந்திட வேப்பம் பூ
வீதியெல்லாம் விழுவது போல்
துளி துயர் வந்தாலும்
துள்ளி துடித்து கதறும்
துளித்துளியாய் நீர் அடியில்
தெளித்தால் போல் நீங்குவதை
களிப்பின் மிகுதியில்
காணாது மகிழ்ந்திருக்கும்

4. பானையில் நீர் குறைய
பந்தபாசம் விலகிவிடும்
துணையாக வந்ததெல்லாம்
தூர நின்று பார்த்திடும்
அணையாக இருந்த உறுப்புகள்
ஆங்காங்கே தளர்ந்துவிடும்
கணையாக துயர் அம்புகள்
கண்முன்னே துளைத்திடும்

5. துளையிட்ட பானை நீர் தீரும் அந்த
தினமும் வந்ததென அறியும்
மணை வீடு வாசல் உறவு
மனதை விட்டு அகலும்
அணைத்துக் காத்திட ஒருவனே என
அறியும் அன்று ஆன்மாவே
இணைத்து கைகூப்பி இறைவா
இறுதி நாளில் உடன் இரு என அழும்

6. தினம் அதை மனம் அறியும்
தீவிர சிந்தனை ஏதுமின்றி
மனம் ஒன்றி விடும் பரமனிடம்
மயக்கம் ஏதும் இனி இல்லை
சினம் என்பது அவனிடமில்லை
சிக்கெனப் பிடித்திடுவான்
இனம் காணா இன்பமதில்
இறுதி நாளில் நிலைத்திருப்பாய்!

                            ராதாகவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக