வெள்ளி, 30 செப்டம்பர், 2016

புலர்ந்திடும் கதிரே

புலர்ந்திடும் கதிரே

எண்ணத்தில் விளையாடும் எழில்மிகு கண்ணா
   வண்ணத்தில் மயிலிறகு வளைந்தாடும் குழலா
  கண்களில் காந்தமென கவர்ந்திடும் கண்மணியே
   மண்மீதுஎன் மனதுள்ளே மலர்ந்திட வருவாயே
   புன்னகையில் பொலிவாக புலர்ந்திடும் கதிரே
  புண்பட்ட உள்ளத்தை புனிதமாக்க வருவாயா
 கணந்தோரும் மாறிவரும் காரிருள் நீக்குவாயே
  தண்ணிலவு முகத்தானே தாளடியில் வீழ்ந்தேனே

வீசும் கதிரொளி விநாயகர்

வீசும் கதிரொளி விநாயகர்

வீசும் கதிரொளி விளங்கும் கரங்களும்
   பூசிய வயிறும் பழமோடு மோதகமும்
    மாசினை நீக்கிட முன்வரும் துதிக்கையும்
   நேசமிகு பார்வையும் நீங்காத கனிவும்
    வாசமிகு அருகும் வளமான எருக்கும்
        பூசிய திருநீரும் புவிமணக்கும் சந்தணமும்
    கேசமதில் விளங்கும் இளம்பிறை நிலவும்
    தூசாக என்துயர் தீர்த்திட வருமே!

வானளந்த வாமனன்

வானளந்த வாமனன்

  வானளந்தவனை நினைந்திட வாமனன் அருள் பெருகும்
    ஊன்கலந்த உடலில் உள்ளொளி வீசுமே
  ஓணத்தில் பிறந்தவனை ஓர்மூவடி கேட்டவனை
    கண்முன் விரிந்து ககனமெலாம் நிறைந்தவனை
அன்பால் அரக்கனுக்கு ஆழ்கருணை தந்தவனை
   மனதால் துதித்திட மாயமாய் வருவானே
 தானளந்த புனிததீர்த்த திருவடி தருவானே
  மோனத்தின் தவமாகி மோகம் தீர்ப்பானே!

இனிய நவராத்திரியே வருக!

இனிய நவராத்திரியே வருக!

கலையாக மலையாக அலையாக வருவாள்
     கமலத்தின் உதித்தவன் கனிநாவில் இருப்பாள்
    மலைவேந்தன் மேனியில் மறுபாதி ஆகிடுவாள்
         மாதொரு பாகனாகி அவன் மேதினியில் சிறப்பான்
         அலைகடைய அமிர்தமாகி அழகியதிருவாகி எழுவாள்
    அனந்தன் மார்பினில் அமர்ந்திருந்து கனிவாள்
        சிலையாகி கோவில்களில் சிங்காரமாய் பொலிவாள்
     சிந்தனைக்கு எட்டாத செல்வியர் மூவரன்றோ!

அஷ்ட லக்ஷ்மியாய் அனைத்திலும் அவளாவாள்
     ஆயகலை அறுபத்துநான்கும் அவளாகி ஒளிர்வாள்
 துஷ்டரை வேரருக்க தூயசக்தி உருவாகிடுவாள்
     துயர்நீக்க நவசக்தி துர்க்கையாகி தோன்றிடுவாள்
  நிஷ்டையும் நியமமும் நெஞ்சினில் ஏற்றியே
     நற்தூய மனதால் நாளும் துதித்திட
  இஷ்டமாய் முத்தேவியர் இனிதே வந்திருந்து
     இன்பமெலாம் பொழிகின்ற இனிய நவராத்திரியே வருகவே!