சனி, 26 நவம்பர், 2016

நந்தி வாகனனே

நந்தி வாகனனே

மதியாலே மாம்பழம்பெற
மாதாபிதா உலகுஎன
                          துதியோடு சுற்றிவந்து
   தூயஞானப் பழம்பெற்ற
ஒதியுணரவே ஒம்காரமாய்
        ஓளிமதிசிவன் உமைமடியில்
   குதித்தெழுந்து குந்தியிருக்கும்
   கூர்மதி கணநாதனோடு

கணங்களின் தலைவனாம
  காளைநந்தி பெருமான்மீது
                         வணங்கும் ஆதிகுருவே
வளர்சக்தி தான்இணைய
                         கணமும் எமை பிரியாது
காத்திட அமர்ந்திருக்கும்
                         மணமிகு மங்கைபாகனே
       மலையவனே வணங்குகின்றேன்

வியாழன், 17 நவம்பர், 2016

பதினெட்டுப்படி அரசனே

பதினெட்டுப்படி அரசனே!

1. சபரிமலை தன்னில் சாஸ்தாவான ஐயப்பனே
         சரணமுடன் பதினெட்டுப் படியேற மகிழ்பவனே
       தபத்தால் உனைக் காணேன் தாயன்புத் தெய்வமே
            துளசிமாலை அணிந்தேன் தூயவனைக் கண்டேனே
 பாபம் தொலைத்திட பதினெட்டுப் படிகளில்
         பரிவார தெய்வமோடு பார்த்திருக்கும் பாலகனே
                  சாபமும் சோகமும் சடுதியில் விலகிட
            சோதியாய் விளங்கும் சன்னதியை வணங்குவனே!

2. நாகயட்சியாகி படிஒன்றில் நலங்காக்கும் நாயகியே
    நல்லவரைக் காத்திட நீசன் மகிஷனை வதைத்து
   மகிஷாசுர மர்த்தனியாய் படியிரண்டில் இருப்பவளே
 மணிகண்டன் மனம் மகிழும் அன்னதானமதில்
       அகமகிழும் அன்னபூர்ணாவாய் அன்னத்தின் அதிபதியாய்
அழகாக படிமூன்றில் அமர்ந்திடும் அன்னையே
              ஆக்கலும் அழித்தலும் அன்றாடத் தொழிலாகி
                அநியாயம் போக்கிட அவதரித்த காளியாய்
              பக்தனுக்கு துணையாக பகல்இரவு எந்நேரமும்
   படிநான்கில் இருப்பவளே பாசமுடன் காப்பவளே

3. பயங்கர உருவமோடு பயங்காட்டும் கிருஷ்ணகாளி
  பக்தர்களின் பயம்நீங்க படிஐந்தில் இருப்பவளே
 பெயருண்டு யட்சியென பார்வதியின் உக்ரவடிவம்
    படிஆறில் வீற்றிருந்து சக்திபைரவி காத்திடுவாள்
               ஐயப்பா சாஸ்தாவை ஐயமின்றி வழிபட
  அருட்குரு தாத்தரேயர் அகங்கனிந்து வழிகாட்ட
     மெய்யாக ஈடுபட்ட மேன்மைமிகு கார்த்தவீர்யாஜுனர்
    மகிழ்வோடு படிஏழில் மகிமையுடன் வீற்றிருப்பார்

     4. கருப்புசாமியாய் பூதசேனையின் கருத்துமிகு தலைவனாய்
 கிருஷ்நாபன் பெயரோடு காக்கும் பாதுகாவலன்
              விருப்புடன் படிஎட்டில் வீற்றிருக்கும் நாயகனே
   வெல்லும் போர்வீரனாய் வீரஅசுரர் குலத்தவனாய்
 குருவாகி அமர்ந்தவன் குமரன்அருள் பெற்றவனாய்
    குருசாஸ்தா படிஒன்பதில் இடும்பனாக நிற்பவனே
              உருப்பல கொண்ட உயர்பூதபேய் தலைவனாய்
                உக்ரபைரவ அம்சமாக உருவான பரிவாரம்
              உருகும் வேதாளமாகி உலகுகாக்கும் ஐயனின்
 உயர்படி பத்தினில் உல்லாசமாய் இருப்பவனே

5. நாகராஜன் சர்ப்பதோஷம் நீக்கும் நாகர்தலைவன்
        நன்மைதரும் படிபதினொன்றில் நகர்ந்திடும்ராஜனே
   மோகினி பாலகனுக்கு மலைமேல் கோவிலெடுத்த
  மாமுனி பரசுராமர் மாதாவான ரேணுகாதேவி
  மகாசித்தர் ரேவணரிடம் மந்திர உபதேசம்பெற்று
       மாமலை சபரியில்படி பன்னிரண்டில் இருப்பவளே
மகாவிரதம் ஏற்றிடும் மணிகண்டன் பக்தருக்கு
     மெல்லக் கனவினிலில் மாஒளியாய் வந்திருந்து
               மகாநல்வழி காட்டும் மங்கை ஸ்வப்னவராகி
         மேலெழும் படிபதிமூன்றில் மகிழ்ந்தே குடியிருப்பாள

6. காளியை வென்றிடும் கடுமையான உக்ரதேவி
          காப்பதில் தன்னிகரிலா தாய்மை பிரத்யங்கராதேவி
      ஒளியான படிபதினாங்கில் ஒளியாகி காத்திடுவாள்
      ஒங்கார சோதியவன் ஒர்படியில் வீற்றிருப்பாள
 வளமான வாழ்வுதர விளங்கும் நெற்கதிர்ஏந்தி
    வராகப் பெருமானின் வலம் அமர்ந்த பூமாதேவி
    உளமாற படிபதினைந்தில் உறைந்திடும் தேவியே
உலகின் தீமைகள் உத்தமனின் பக்தரை
                தளமாக நிறைந்து தயங்காமல் காத்திட
         தனியழகர் அஸ்திரத்தேவர் தனிப்பெயர் அகோரம்
  களமெலாம் கனியபடி பதினாறில் நின்றிடுவான்
    காலமெலாம் காவலாக கடுகியே வந்திடுவார்

7. பரமேஸ்வரன் கைகொண்ட பாசுபதம் எனும்தனுசு
   பகைவரை அழித்திட பாய்ந்துவரும் வில் அது
               தரணியில் வந்துதித்த தன்மகன் ஐயப்பன்
   தங்கிடும் சபரிமலை தங்கமான படிபதீனேழில
 அரங்கமென அமைந்திருக்கும் அழகான நிலையே
அரனின் ஆயுதம் அவன்கை மிருதயுஞ்ஜயம்
               விரும்பியது அடைய வைக்கும் உடல்நலம்
     விருத்தியாகும் பக்தனின் வைராக்யம் போற்றியே
   மேருவென தெய்வநிலை மேன்மையை அளிக்கும்
           மேலானபடி பதினெட்டில் பாரியென கருணைபொழியும்

8. பதினெட்டு படிதன்னில் பரிவாரத் தெய்வமோடு
பக்தர்கள் ஏறிவர பாசமோடு காத்திருந்து
      துதிப்பவர்க்கு நீயேஅது 'தத்வமஸி'என தெளிவித்து
       துன்பமெலாம் நீக்கி தூயமனதோடு இன்பமாக்கி
                குதிகால் மடக்கி யோகப் பட்டயமோடு
                   குன்றினில் அமர்ந்த குருவே பூதநாதா
     மதியோடு இருமுடியோடு மகிழ்வோடு உனைநாடி
        மங்கல சோதிகாண மலைநாடும் ஐயப்பமாருக்கு
                கதியாக நீயிருந்து கைதூக்கி விடுகஎன
        கரங்கூப்பி சரணம்கூறி கால்களில் வீழ்கின்றேன்

ஞாயிறு, 6 நவம்பர், 2016

சபரி பயணம்



சபரி பயணம்
காலையில் கன்னிமூல கணபதியை தொழுது
      ஹரிஹர மைந்தனை ஐயப்பனைக் கண்டிட
மாலை அணிந்து மனதினில் நினைந்து
      மேனி துலக்கி மங்கல விரதமேற்று
காலையும் மாலையும் கருத்தொடு அனுதினமும்
       குளிர்நீரில் ஆடி குங்குமசந்தணம் திருநீறு பூசி
சோலை மலர்தூவி சரணகோஷம் எழுப்பி
       சோதிச் சுடரை சிரம்தாழ்ந்து  வணங்குவனே

வணங்கி எழுந்து   நூறுஎட்டு சரணம்கூறி
       வள்ளிமணாளன் சோதரனை  வீழ்ந்து வணங்கினேன்
சுணங்காத விரதம் சூழ்கின்ற தெய்வீகம்
       சடுதியில் சென்றன சுகமான பத்துஐந்து நாட்கள்
கணங்கள் மாறியது காலமும் கைகூடியது
       கருத்துடன் வந்தகுரு கைகளால் இருமுடி
மணக்கும் மலருடன் மாலைசூட்டி தலைஏற்றி
       மகிழ்டுவோடு புறப்பாடு  மறக்காத நிலைப்பாடு

நிலையாக வீற்றிருக்கும் நிர்மல மூர்த்தியை
       நியதியோடு கண்டிட நீள்தொலைப் பயணம்
சோலையான பாதைகளில் சுகமாகச்  சென்றது
       சிலிர்க்கும் பம்பையில் சிரத்தையுடன் நீராடி
சிலையாக வீற்றிருக்கும் கன்னி முல கணபதிகண்டு
       சிறுசிறு படியேற சிந்தையில் அவன் நினைவு
மலைமீது அமர்ந்திருக்கும் மாயப்புலி வாகனனை
       மனமெலாம் கரைந்திட மலைமுகட்டில் கண்டோமே

கண்டோம் கண்களால் காருண்ய   சோதியை
       கலமெலாம் வழிகாட்டும் கண்கண்ட  தெய்வமதை
எண்ணமெலாம் சிலிர்க்க எழுந்திட்ட உண்ர்வுகள்
       எடுத்தியம்ப இயலாத எழிலான காட்சி
சின்னஞ்சிறு சிற்பமாய் சிந்தையுள் புகுந்து
       சிற்ப்பான பேரின்பம் சிறகடிக்க உள்நுழைந்தாய்
கணப்பொழிதில் தனைமறந்து கரைந்திட செய்துவிட்டாய்
       காலடியில் சரணடைந்தேன் காணிக்கை எற்றாயே

ஏற்றம் எம்வாழ்வில்  என்றுமே உன்னாலே
       என்றும் துணைவந்து எமைகாத்து அருள்வாயே
பெற்றவரும் உற்றவரும் புவியினில் நீதானே
        போற்றி வழிபட பொன்னம்பலனே வருவாயே
பற்றற்ற வாழ்வும் பக்தியில் நாட்டமும்
        பணிந்திடும் எனக்கருள பாலகனே வருவாயே
உற்றதோர் இறுதிமூச்சு உள்ளவரை பிறருக்கு
        உதவிடும் நிலையும் உள்ளமும் அருள்வாயே




முத்தாக வந்த முதல்மூவர்

முத்தாக வந்த முதல்மூவர்
சித்தார்த்தி ஆண்டு சிறப்பான  ஐப்பசிதிங்கள்
      சீர்மிகு காஞ்சியில் சிங்கார திருவெஃகா
 புத்தம்புதிய பொற்றாமரை பொய்கையில் அம்சமாகி
      புத்தோணமதில் பிறந்து அவதரித்த பொய்கையே
நித்தம் அலை புரளும் நீள்மல்லை திருக்கடலில்
      நீலோற்பவ மலரினில் நீள்கதாயுத அம்சமாகி
முத்தான அவிட்டமதில் மகிழ்ந்தெழுந்த பூதமே
      மறுநாள் சதயமதில் மயிலைநகர் கேணியில்
சித்தம் குளிர்விக்கும் செவ்வல்லி மலர்தனில்
      சீர்வாள் நந்தகத்தின் சீரான அம்சமாகி
குத்துவிளக்கென மலர்ந்த குளிர்வான பேயே
      கருவரை புகுந்து  ஜனிக்காத அயோநிஜர்களே
 
திருக்கோவலுர் தன்னில் திவ்யநாமம் பாடியே
     திருவருளால் ஒருங்கினைந்த திவ்யபிரபந்த முதல்வர்களே
ஒருவர்பின் ஒருவரை ஓர் அறையில் கூட்டியே
      ஒடிவந்து தன்னையிணைத்த ஒங்காரப் பெருமானை
கருவினில் அறிவுடையார் களிப்போடு பாடியே
     ககனத்தை   அன்பை கனிவோடு விளக்காக்கி
வார்கடலை  ஆர்வமதை வார்த்திடும் நெய்யாக்கி
      வருகின்ற கதிரவனை வளர்சிந்தையை   திரியாக்கி
சீர்மிகு பரந்தாமனுக்கு   சிந்தையுருக  சுடரேற்றி
       சீரான சுடரொளியில் சீராளனைக் கண்டுகொண்ட
பார்புகழ்  முதலாழ்வார்கள்    பிறந்திட்ட திங்களில்
      பிரபந்தமதில்  கலந்து  பிறவிக்கடல் நீந்துவோமே





     
\

கந்தசஷ்டி முருகா



கந்தசஷ்டி  முருகா
கார்த்திகை பெண்கள் கைவளர்ந்த குமரா
பார்வதி கைசேர்த்த பாலகனே சரவணா
ஆறுமுகம் ஒன்றான ஆதிமூல கார்திகேயா
கூர்வேலால் சூரனை கொடியாக்கிய கந்தா
கார்கண்டு ஆடிடும் கானமயில் வேலா
சீர்வளர் தேவசேனா சேர்ந்தினைந்த சிவகுமரா
குறமகள் வள்ளியோடு கூடிமகிழும் குகனே
திருசெந்தூர் கடலாடும் செந்தில் ஆண்டவனே

ஆனந்தக் கூத்தாடி அழகான காவடியும்
தேனோடு தினைமாவு தித்திக்கும் கனிவகையுடன்
மான்விழி மாதரோடு மயிலமரும் ஷண்முகனே
உன்னையே நினைந்து உனைநாடும் பக்தர்தமை
கண்ணாலே கனிவாக காத்திடும்  முருகா
எண்ணத்தில் என்றும் எழுதிய காவியமே
வண்ணத்தில் என்னுள்ளே வாழ்கின்ற ஒவியமே
பண்ணுடன் பாடினேன் கந்தசஷ்டி நாளினிலே