ஞாயிறு, 31 ஜூலை, 2016

ஆடிப் பூரத்து அழகிய பூவே

ஆடிப் பூரத்து அழகிய பூவே!

பூவனம் தன்னில் புனிததுளசி செடியருகில்
    பூவாகி நீவந்தாய் பெரியாழ்வார் மகளானாய்
பூமாலை சூட்டியே பூவையே நீமகிழ்ந்தாய்
     பாமாலை கேட்டே பரந்தாமன் கைபிடித்தான்
       பூவையரோடு நோன்பிருந்து பூரத்தில் பிறந்தவளே
    பூலோக நாயகனை புவியில் தானடைந்தாய்
    பூவிழிகள் கண்டநின் புதுக்கனவை வண்ணமாய்
            பூமகளே வாரணமாயிரமாய் பண்போடு அருளினாயே!

ஆன்மிக மலர்                அட்டை பட கவிதை
30.7.16                                              ராதாகவி

வியாழன், 28 ஜூலை, 2016

வடிவேல் முருகா

வடிவேல் முருகா
          
         வண்டுவிழி  அசைந்தாட   வாயிதழ் விரிந்தாட
             வலக்கரம்   ஓம்மென வடிவேல் இடக்கரமதில்நிற்க
         நீண்டுநிற்க  மார்போடு நீலமயில் உறவாட
             நெற்றிதனில் சந்தணமும் நீரும்குங்குமமும் நிமிர்ந்தாட
         கொண்டையாக குழலாட குதிக்கும் முத்தாட
             கொண்டடும் பக்தரை கூடிவந்து காத்திட
         தண்டை குலுங்கும் தாள்களில் பணிந்தேன்
             தங்கத் தேஏறி தனயனைக்  காக்கவருகவே
  
                                              ராதாகவி

அறு வடிவான அழகான முருகா

அறு வடிவான அழகான முருகா

        பழத்தின் வடிவாகி பழனியில் நின்றாய்
            பழமுதிர் சோலைதனில் பலமரவடிவாகி  உயர்ந்தாய்
        அழகிய சொல்வடிவாகி சுவாமிமலையில்  பேசினாய்
            அரியதிருப் பரங்குன்றமதில் அரும்துணை வடிவானாய்
        முழங்கும்கடல் செந்தூரில் மூலஒளி  வடிவாகினாய்
             மகுடமென திருத்தணியில் மங்கல கலசநீர் வடிவானாய்
        குழந்தையாய் குமரனாய் கோலவேல் வீரனாய்
             கொடுமை தீர்க்கும் குகனே தெய்வ வடிவானாயே

ஞாயிறு, 24 ஜூலை, 2016

ஆதிகுருவே!

                                                   ஆதிகுருவே!

ஆதிகுருவே ஆலமரமடி அமர்ந்த அறிவே
   ஆலமுண்ட பரம்பொருளே அகிலத்தின் சுடரே
 போதிக்கவந்த பெருமானே பிறைசூடிய சடையோனே
    பாம்பும் நெருப்பும் பல்சுவடியும் சின்முத்திரையும்
 நீதியினைப் புகட்டிட நின்கரங்கள் தாங்கிட
    நான்கு சீடர்வழி நானிலம் வாழ்ந்திட
 ஆதிஅந்தம் இல்லாத அருமறை கடந்தவனே
    அருட்பார்வை அருள்வாயே தென்திசை தக்ஷிணாமூர்த்தியே!

ஆன்மிக மலர்
அட்டைபட கவிதை
23.7.16                                                  ராதாகவி

ஆடிஅழைக்க

                                            ஆடிஅழைக்க!

ஆடிஅழைக்க ஆயிரநாமமோடு அசைந்தாடி வருவாயே
   அம்மனென்று அலங்கரித்து அகங்குளிர மகிழ்ந்திடவே
தேடிவரும் செல்வமெலாம் தேவியுனை நினைத்தாலே
     தெய்வத்திரு உருவே திகட்டாத பேரழகே
 ஒடிவரும் நதியும் ஒங்கிஉயர்ந்த மலையும்
      ஒய்யார சோலைகளும் ஒளிவீசும் தீபங்களும்
நாடிவரும் பக்தருக்கு நின்வடிவம் காட்டிடுமே
       நாவினிக்க பாடுகிறோம் நல்வாழ்வு தந்தருள்க!

ஆன்மிக மலர் அட்டை பட கவிதை
16.7.16                                              ராதாகவி

சனி, 9 ஜூலை, 2016

ஆடலரசே! அழகே!

ஆடலரசே! அழகே!

அலைகடலாக இருபுறமும் அகன்ற சடையாட
    அரக்கன்மேல் அழகியவல அருட்பாதம் நின்றாட
 கலையாக இடபொற் கால்தூக்கி கொண்டாட
     கழுத்தினில் நாகம் கனிந்து நெளிந்தாட
  நிலையான நெருப்பும் நின்இடக்கரமதில் ஒளிவீசியாட
     நயமோடு வலக்கையில் நல்உடுக்கை ஒலியாட
  மலையாதேஎன வலக்கரமதில் வண்ணஅபயம் வரமாட
     மடங்கி நீண்டஇட மரகதக்கரம் வளைந்தாட

 முக்கண்ணன் முகமலரில் முன்முறுவல் பூத்தாட
    முடியினில் கங்கையோடு மூன்றாம்பிறை ஆடிவர
  தக்கதமியென தாளிமிட்டு துள்ளிபாத சரமாட
    தயைகாட்டும் இருவிழிகள் தண்ணிலவாய் குளிந்தாட
  திக்கும்எட்டு திசையும் திரண்டு பரந்தபூமி
    தன்னியக்கம் எந்நாளும் தடையின்றி ஆடிடவே
 எக்கணமும் ஆடுகின்ற எழிலரசே நடராசா
   எங்கும் நிறைந்தவனே எமக்கருளும் உன்னடியே!

ஆன்மிக மலர் அட்டை பட கவிதை
ஜூலை 9 2016
                                          ராதாகவி

சனி, 2 ஜூலை, 2016

அனுமன் நூறு



சமர்ப்பணம்

தமக்கென எதையும் வேண்டாது பிறருக்காகவே வாழ்ந்த, வாழ்கின்ற பிரம்ம்ச்சரியம் போற்றி துறவிவாழ்வு வாழூம் மகான்கள், சமூக ஆர்வலர்கள் பல்வேறு தொழில்கள், துறைகளில் சிறந்து விளங்கும் மேதைகள், கலைஞர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், சட்டநிபுணர்கள் போன்ற பல்லாயிரக்கணக்கான பிரம்மச்சாரிகள் அனைவருக்கும்
இந்நூல் சமர்ப்பணம்

அனுமன் நூறு

காப்பு:-

விநாயகர் - ஐயப்பன் - சரஸ்வதி

ஒம்எனும் வடிவாகி ஒங்காரப் சொரூபமாகி
  ஒர்அரசு மரத்தடியில் ஒளிவீசும் ஐங்கரனே
              தம்சடையில் பிறைநிலவை தண்கங்கையை சூடியவனின்
     தன்னியல் அம்சமாகி தரணியில் வந்தவனை
          இம்மையிலும் மறுமையிலும் இராமனின் தூதுவனை
        இன்றும் வாழ்கின்ற இளையதிருவடி அனுமனை
   எம்மைக் காத்திட எழுதிடும் நூறுகவிதையில்
          எழிலோடு வந்தமர்க எழுத்தும் பொருளுமாகிவருக
  பம்பையின் நாதனே பரமயோகி சாஸ்தாவே
       பல்கலையரசி வாணியே பாசமுடன் வந்தருள்க!


1. சுந்தரனே!

    அஞ்சனை தனயனாய் ஆஞ்சனேயன் பெயருடையாய்
நெஞ்சிலே சீதாராமனை நிறைவாக ஏற்றிடுவாய்
               சஞ்சீவி மலைதாங்கும் சிரஞ்சீவீ நீயாவாய்
எஞ்ஞான்றும் எமக்கருளும் எழிலான சுந்தரனே!

2. போற்றுவோமே!

சுந்தரனை சொல்லின் செல்வனை ஒருகால்
   மந்தரமலை மீதூன்றி மாகடல் தாண்டியவனை
                 எந்த நேரமும் ஏகபத்தினி விரதராமனை
         வந்தனை செய்கின்ற வாயுகுமாரனை போற்றுவோமே!

3. பணிவோமே!

கொற்றவன் சுக்ரீவன் கோலுயர நின்றவன்
உற்றவன் ராமனை உத்தமனாய் கண்டவன்
                 கற்பின் கனலான காரிகை சீதையை
          பொற்கலச இலங்கையில் பார்த்தவனை பணிவோமே!

4. உணர்ந்தவனே!

சடைமுடி தம்மோடு சரமோடு வில்லோடு
     தடையிலா நடையோடு தரையில் நடந்தவனை
          படைத்தவனை அழிப்பவனை பக்கத்தில் தன்னுள்ளே
           உடையவன் உலகை உய்விப்பவன்என உணர்ந்தவனே!

5. மாருதியே

காடும் மேடும் கானகமும் அரனும்
  வீடும் வேண்டா வீரியம் உடையவன்
 நாடும் பொருள் நாயகன் ராமன்என
          தேடும் கண்களால் தேனாய்கண்ட மாருதியே!

6. காற்றின் மகன்

                  காற்றின் மகனாய் கானில் பிறந்தவனை
                  சுற்றும் சூரியனை சுழன்று கவ்வியவனை
                  பற்றுதல் ஏதுமிலா பரமஞான பக்தனை
          விற்சுமந்த ராமனை வணங்குபவனை வணங்குவமே!

7. புயலாக

உந்தன் உள்ளே உறைந்திருந்த சுயபலத்தை
                 சிந்தித்து சாம்பவான் சிறப்புடன் கூறிடவே
                 வந்தனை செய்திடும் வளர்ராம நாமத்தை
புந்தியில் வைத்தே புயலாகப் புறப்பட்டாயே!

8. எண்திசை சென்றன

               எண்திசை சென்றன ஏழுகோடி சேனைகள்
  பெண்ணவளைத் தேடி புறப்பட்டன வானரசேனை
    கண்டவன் நீஒருவனே கணையாழியும் தந்தனையே
          பெண்தெய்வம் சீதையிடம் புனைசூடாமணி பெற்றனையே!

9. நட்பின் இலக்கணம்

                  நட்பின் இலக்கணம் நற்பண்பின் இருப்பிடமாகி (சூதினை)
விட்டு வந்திட்ட வீடணனை தயங்காது
                   ஒட்டி உறவாட ஒர்வழி வகுத்தவன்
     தட்டாது சரணாகதி தத்துவத்தை தந்தவனே!

10. செல்வமாய்...

செல்வமாய் வந்தவன் செல்வத்தை துறந்தவன்
  செல்லும் மார்க்கமதை சரண்புகுந்து காட்டியவன்
      செல்வியாம் திருமகளிடம் சிரஞ்சீவி வரம்பெற்றவன்
             செல்லும்வழி நல்வழியாகும் செல்வனவனை தொழுதிடவே!

11. வழிதருவான்!

          வெண்ணையும் வெற்றிலையும் விரும்பியே ஏற்றிடுவான்
விண்ணளவு வரங்களை வாரியே தந்திடுவான்
    கண்ணில் கருணையோடு கைகூப்பி நின்றிடுவான்
   எண்ணங்கள் தூய்மையாக எளிதில் வழிதருவான்!

12. காலையில்...

 காலையில் கமலம் கதிரவன்முகம் நோக்கும்
மாலையில் அல்லியோ மதிமுகம் நோக்கும்
  சோலையில் ஆடுகின்ற சொல்லின் செல்வனே
       காலைமாலை உன்முகம் காகுத்தனையே நோக்கும்!

13. அந்திவான் சிவப்பு...

அந்திவான் சிவப்பின் அழகிய மேனியனே
 செந்தூர வண்ணத்தில் சிந்தை மகிழ்பவனே
   எந்நேரமும் ராமநாமம் ஏற்றுகின்ற தியானமே
வந்தனை செய்வோம் வந்துநீ காத்தருளே!

14. எழிலடிகள்:

காற்றாகி வந்தாய் கனலாகி நின்றாய்
                    சுற்றும் உலகினை சூழ்ந்து காப்பாய்
     போற்றும் அடியவர் பூமனத்தில் இருப்பாய்
        ஏற்றமிகு அனுமனே எழிலடிகள் பணிவோமே!

15. வானரமாகி

 வானரமாகி வானகமும் வனங்களும் சுற்றுவாய்
சேனையின் தலைவனாய் சீற்றப்போர் புரிவாய்
         ஞானவடிவாகி எங்கும் ஞாலமெலாம் வியாபித்திருப்பாய்
    மோனமான குருவாய் மோகம்தீர்க்கும் பெருமானே!

16. சஞ்சீவி தாங்கி

இளையவன் தடுமாற இந்திரஜித் வீழ்த்திட
    காளையவன் முகங்கண்டு காகுத்தன் கதறிஅழ
     வேளையில் யுக்தியை விபீடணன் எடுத்துரைக்க
       தளைகளைந்து சஞ்சீவி தாங்கிக் கொணர்ந்தவனே!

17. பொன்னகர் இலங்கை

              பொன்னகர் இலங்கையின் பூபாலன் இராவணன்
              தன்னிகரிலா தங்கஆசனம் தன்னில் அமர்ந்திருக்க
              விண்ணுயர வளர்ந்த வாலில் கோட்டைகட்டி
              மண்ணில் உயர்ந்தவனாய் மாயம்தந்த மாருதியே!

18. சொல்லாளனே

                ஆகாய வீதிதனில் அழகாகப் பறந்தவனே
மாகாவிய நாயகனே மயக்கும் சொல்லாளனே
 பாகாய் உருகி ராம பஜனையில் திளைப்பவனே
                நோகாமல் எம்மையே நாளும் காப்பாயே!

19. செல்வன் சொன்னவழி

 செல்வமும் பொருளும் சீரான உறவுகளும்
எல்லாம் சேர்ந்தும் ஏதுபயன் வாழ்வினில்
          வல்லவனிடம் பக்தியை வழிபாட்டை சேர்த்திடுவாய்
      சொல்லின் செல்வன் சொன்னவழி செல்வோமே!

20. சிதறிடும் துன்பங்கள்

முந்தைய விணைகள் முற்பிறவி பாவங்கள்
பிந்திவந்து பலன்கள் பிறழாமல் தந்துவிடும்
  மந்திகளின் தலைவன் மாருதி என்றெருவனை
                சிந்திக்க எந்நாளும் சிதறிடும் துன்பங்களே!

21. நீ வந்து...

   பஞ்சமுக ஆஞ்சநேயா பஞ்சபூதம் தன்னுள் உடையவனே
            பஞ்சின் வண்ண பசுவெண்ணை சார்த்தி
            தஞ்சமென வருவோர்க்கு தயைகாட்டும் புண்ணியனே
            நெஞ்சினில் நீவந்திருந்து நீங்காது காத்திடுக!

22. தந்தையும் தாயுமாகி

தந்தையும் தாயுமாகி தரணியில் மாந்தர்க்கு
                 எந்த நாளும் எதிர்வந்து காத்திட
                 புந்தியில் வைத்து பூசிப்போர் வாழ்வில்
 எந்த விணையும் எதிர்நில்லாமல் காப்பாயே!

23. நாவன்மை நாயகனே

குன்றாக வாலினில் கோபுரம் அமைத்து
  மன்றத்தின் நடுவில் மாவீரனாய் அமர்ந்து
            வென்று உலகெலாம் வெற்றிகொண்ட ராவணனுக்கு
      நன்றாக எடுத்துரைத்த நாவன்மை நாயகனே!

24. மாகடல் தாண்டி

                மாகடல் தாண்டி மண்டோதரி கண்டு
                சோகக் கடலில் சரிந்து தேர்ந்து
 மாகடலில் பிறந்தவளை மனதால் சந்தேகித்து
  தாகத்தால் தவித்து தன்னையே நொந்தனையே

25. அசோக வனமதில்

அசோக வனமதில் ஆழ்கடல் தேவியை
     தூசாகப் படிந்த துயர்ஒவியமாய் கண்டபோது
மாசுடை இலங்கை மாநகரை அழித்திட
  வீசும் புயலாகி வீறுகொண்ட நெஞ்சினனே!

26. ராமநாமம்

 தேவியவள் கவனத்தை தேவனவன் ராமனன்றி
 மேவி ஏதும் திரும்பாதுஎன மனதில் தெளிவாக
                கூவியழைத்து ராமநாமம் கூத்தாடி நின்றாயே
                பாவி சிறைபிடித்த பத்தினியை கண்டாயே!

27. வாலில் வைத்த தீ

                  வாலில் வைத்த தீ வானர குணத்தோடு
இலங்கை எல்லாம் இடம்விடாது ஒடிஒடி
கலங்கித் துடிக்க கனல்மூட்டி திரிந்தாயே
         கோலமிகு இலங்கேசன் கதறிப்புலம்ப வைத்தாயே!

28. எழுமரம் துளைத்திட

                 உடன் பிறந்தார் உறவுமுறை கலக்கத்தை
    திடமாகி தீர்ப்பவன் திகழும் ராமனேஎனக்கண்டு
                 தடம் பார்த்து தயைவேண்டி நின்றாயே
             சடசடவென ஒரம்பால் எழுமரம் துளைத்திட வைத்தாயே!

29. அந்தமும் ஆதியும்

                   அந்தமும் இல்லாத ஆதியும் அறியாத
    எந்த உருவத்திலும் எளிதில் உணரமுடியாத
வந்தனைக்கு உரிய வானுலகு தேவனை
          சந்ததமும் ராமனாக சிந்தையில்காணும் சுந்தரனே!

30. காயும் கதிரவன்

                  காயும் கதிரவனும் களிப்பூட்டும் மதியும்
 பாயும் விண்சுடரும் பரந்த விண்வெளியும்
      மேயும் அண்டமதில் மேலிருக்கும் ஒர்சக்தியை
        தாயாக கண்டவனை தீரமாருதியை பணிவோமே!

31. ஏன்

              கண்களே கடவுளைக் காணத் துடிப்பதேன்?
   நன்னெஞ்சே இறைவனை நினைக்க எண்ணுவதேன்?
      தன்னிருகை படைத்தவனின் தாள்நோக்கி கூம்புவதேன்?
 முன்தலையே காப்பவன் முடிவணங்க குனிவதேன்?

a) விழிகளால்...

விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபம் எடுத்தவன்
            கண்முன் இருந்திடும் கருத்தால் தொழுவீர்
            எண்ணமும் செயலும் எல்லாம் இணைந்து
            வெண்ணை விரும்புவனை விழிகளால் கண்டிடுவீர்!

32. சேது மேல்

   சேதுமேல் அணையை சிறப்பாக அமைத்திட
ஏதுவாக உந்தன் ஏற்றமிகு தலைமையில்
 மோதும் பாறைகள் மேகம்தொடும் மரங்கள்
 தீதிலா வானரசேனை தேடிஒடி தூக்கிவந்து
சேதமின்றி கடல்மீது சேர்த்தது உன்திறனே
  மாதினை மீட்டிட மாபெரும் அணைதன்னை
      தோதாக அமைத்திட துணைநின்ற நண்பனன்றோ
       வேதத்தின் நாயகனே வணங்குவோம் உந்தனையே!

33. அனுமனன்றோ

நம்பிக்கையும் முயற்சியும் நல்கும் பலன்கள்
    இம்மியும் மாறாதென இன்றளவும் உணர்ந்துநின்று
                நம்மிடம் காட்டும் நல்சேது அணையன்றோ
        தம்செயலை செய்வித்த தயைகாட்டும் அனுமனன்றோ

34. வடதிசையில்

வடதிசையில் பிறந்துவானுயர வாழ்ந்தராமனின்
      கடல்சூழ் தென்திசை காவலன் பெண்னை சிறைஎடுக்க
  அடல் ஏறு எனப்பொங்கி ஆழ்கடலில் அணைகட்டி
          கூடல் நாயகியை கூட்டிவர வழியான மாருதியே அருள்க!

35. எந்தநேரமும்

எந்தநேரமும் ராமநாமம் ஏந்தும் உன்நெஞ்சம்
 சிந்தனையே தேடும் சிறந்தோரின் உபன்யாசம்
                சிந்தும் கண்ணீர் சிலிர்க்கும் ரோமாஞ்சனம்
 உந்தனை வணங்கிட உயர்வோம் புவியினிலே!

36. சரண்புகுவோமே

வேளை எப்போது வருமென்று தெரியாது
நாளை கடத்தும் நானிலத்தோரே கேட்பீர்
     தாளைப் பணிந்தாலே தயவோடு வந்திடுவான்
         நாளைஎன காத்திராது நாயகனை சரண்புகுவோமே!

37. நீங்குமே

               தர்மமும் வீரமும் தைரியமும் சந்தர்ப்பமும்
               சேர்ந்து வந்தாலே செயலாகும் எண்ணங்கள்
கர்மப் பலன்என்றும் காத்திராது தொடருமெனில்
 கூர்மதியான் மாருதியை கும்பிடவினை நீங்குமே!

38. நெஞ்சம் தவித்திட

  நெஞ்சம் தவித்திட நினைவலைகள் ஆடிடும்
தஞ்சம் எனவீழ்ந்து தயைவேண்டி பாடிடும்
   வஞ்சகர் செயல்கண்டு வேதனையில் வாடிடும்
 அஞ்சனை புதல்வா ஆறுதலளிக்க வாராயோ!

39. இடர்தீர

 கடலினைத் தாண்டுவாய் கனலினை மூட்டுவாய்
மடமயிலை கண்டாய் மாதவள்துயர் முடித்தாய்
               அடலேறு ராமனின் அபயகரம் பெற்றாய்
               இடறிவிழும் எந்தன் இடர்தீர அருள்வாயே!

40. ஏன் இந்த சோதனை?

              சுடும் சொல்லால் சூதின் செயலால்
கடுமை குணத்தால் கருணையற்ற காரியங்களால்
              நடுநிலை இல்லாத நான்எனும் கர்வத்தால்
              படுபாதகம் செய்தேனில்லை பரம்பொருளே ஏன்இந்த சோதனை?

41. தூய்மையாக்க...

வீட்டினை சுத்தமாக்க வீசுதுடைப்பம் போதும்-உடற்
     கூட்டினை சுத்தமாக்க கூட்டியமணம் வீசும்பொடிபோதும்
             பூட்டிய நெஞ்சோடு பூக்குவியல் எண்ணங்களோடு
     எட்டுதிக்கும் அலையும்மனதை எதனால் தூய்மையாக்க?

a) முயன்றால்

விட்டுவிடு ஆசையை வேண்டித் தவமிருஎன்பார்
முட்டிமோதி முயன்றால் முன்னெற்றம் என்பார்
               காட்டும் வழியை காட்டும் ஆஞ்சநேயா
    வாட்டம் நீங்கிடஉனை வணங்கினால் போதுமையா!

42. சிந்தையில் வைத்தவன்

வாயுவின் புத்திரனாய் வான்மார்க்கம் செல்வாய்
               தாயினைக் கண்டிட தாண்டிக்கடல் கடப்பாய்
  நோய்நொடி இல்லாத நீண்டவாழ்வு கொண்டவனே
               சேயாக ராமனை சிந்தையில் வைத்தவனே!

43. அண்டியவர்க்கு

 அண்டியவர்க்கு ஆதரவு அருள்கின்ற அரவணையான்
தண்டகாருண்ய வனத்தில் தம்பியோடு வரக்கண்டு
 அண்டங்களை ஆள்கின்ற ஆண்டவனே என்றுணர்ந்து
தண்டமிட்டு ராமனை தலைவனாக கொண்டவனே!

44. ஆடும் மயிலாக

                   ஆடும் மயிலாக அழகாய் இன்னிசை
 பாடும் குயிலாக பரமனைக் கொண்டாட
கூடும் பக்தர்கள் கூப்பிடும் ஆஞ்சநேயா
   தேடும் மாந்தர்க்கு தேடிவந்து அருள்வாயே!

45. உன்னத இலக்கு

உன்னத இலக்குஎன உள்ளத்தில் ஏதுமின்றி
                 மன்னும் உலகினில மாந்தர் வாழ்ந்திடில்
எண்ணற்ற தவறுகள் எய்திடும் வாழ்வினில்
      தன்னலமற்ற அனுமன தாள்பணிந்து உயர்வோமே!

46. மங்கல ஆரத்தி

மங்கல ஆரத்தியில் மகிழ்கின்ற மாருதியே
மங்கல ராமநாமத்தில் மயங்கும் மாருதியே
 திங்களும் கதிரவனும் சேர்ந்திட்ட மாருதியே
                 பங்கய மலர்தூவி பாதத்தில் பணிவோமே!

47. எத்தனையோ!

         எத்தனையோ பிறவிக்குப்பின் எடுத்ததிந்த மானிடப்பிறவு
    அத்தனை பிறவியிலும் அறிந்தறியாது செய்த தர்மம்
உத்தமனைப் பணிந்து உயர்ந்திட கிடைத்தவரம்
  சித்தமதில் தூயவனே சரணடைந்தேன் மாருதியே!

48. கண்ணால்....

கண்ணால் முன்னே காணாத பெருமகனை
   முன்னால் கண்டதும் முதல்வன் எனஉணர்ந்து
   தன்னிரு கரங்கூப்பி தாள்கள் தனைப்பணிந்து
          மண்ணில் இறைவன்என மனதில்வைத்த மாருதியே!

49. வல்லவன் நீ!

  வல்லவன் நீ வானரன்நீ வாழ்விக்கும் வல்லனமநீ
               சொல்லின் செல்வன்நீ சோர்விலா தொண்டன்நீ
 தொல்லுலகில் தோழன்நீ துயர்நீக்கும் கருணைநீ
 எல்லாம் அறிந்தவன்நீ எம்மைக் காத்திடுவாயே!

50. கணையாழி

             கணையாழி மோதிரத்தை கரம்பெற்ற பெருந்தகைநீ
             கணைஏந்திய மரகதமேனி காகுத்தன் நம்பிக்கைநீ
வினைமுடிக்கும் விவேகன்நீ வேள்வியின் வெற்றிநீ
தனியிருந்த மைதிலியின் துயர்தீர்த்த தூதனும்நீயே!

51. மனங்குளிர

தாயின் மனங்குளிர தலைவன் புகழ்கூறி
     மாயும் நிலைசென்ற மங்கையின் மனம்மாற்றி
      தூயகணை யாழிதந்து தூயவள் சூடாமணிபெற்று
 வாய்த்த சிரஞ்சீவி வரம்பெற்ற அனுமானே!

52. துதிக்கின்ற மாருதியே

அயோத்தி அரசன் அன்பான ராமனை
   மயன்புரி மதிலையின் மாதரசி சீதையை
    தூயரகு வம்சத்தில் தோன்றிய திலகத்தை
         தூயவரான ராமசீதாவை துதிக்கின்ற மாருதியே!

53. முப்பெரும் தெய்வமாகி

  முப்பெரும் தெய்வங்கள் மூலபிரம்மா சிவனோடு
ஒப்பிலா நாராயணன் ஒவ்வொன்றும் தானாகி
                செப்பிட தருமத்தை சீராக்கவந்த ரகுவம்ச
                ஒப்பிலா ராமனை ஒதுகின்ற மாருதியே!

54. உலகமும்நீ!

உலகமும்நீ உயர்ந்தநல் வேதமும்நீ சோதனை
                பலவரினும் உவந்து பெருவெற்றி பெற்றிட
                பலமான மனோதிடம் பக்குவமாய் தருபவன்நீ
      குலக்கொழுந்து ராகவனை கொண்டாடும் மாருதியே!

55. நமக்கருள்வான்!

               நல்லநீர் மழைநீர் நாடுகின்ற வண்ணமோ
               கலங்கித் தேங்கும் கரியமண்ணில் கருநிறம்
துலங்கும் சிவந்தநிறம் தேங்கும் செம்மண்ணில்
               நல்லதும் தீயதும் நமக்குவரும் சூழ்நிலையால்
நல்லதோர் சூழலை நமக்கருள்வான் அனுமனே!

56. சேருமிடம்....

அரக்கனான வீடணன் அன்பால் ராமனைச்சேர
 அறிவாளி கர்ணனோ அகங்கார துரியனைச்சேர
   பெருமையோ வீடணனுக்கு பேரழிவு கர்ணனுக்கு
                சேருமிடம் சார்ந்தே சேர்ந்திடும் பலங்களே!
         அருமையான சொற்களால் ஆஞ்சநேயன் வழிதருவான்
  அறிஞரோடு சேர்ந்து அழியாப்புகழ் பெறுவோமே!

57. கைகூப்பிட....

      கவலையும் துன்பமும் கலக்குகின்ற சோதனையும்
                 தவமும் பூஜையும் தரணியில் நீக்கிடாது
                 புவனம் சூழ்வளி புதல்வன் அனுமனை
 கவனத்தில் கொண்டே கைகூப்பிட நீங்குமே!

58. நடப்பை அறிந்தால்....

நடப்பை முன்னறிந்தால் நாலயிரம் திட்டங்கள்
    நடக்காததை எண்ணியோ நளினமான கற்பனைகள்
               நடக்குமென நம்பியோ நொடிக்கு ஒருசெயல்
  நடத்துபவன் மேலிருக்க நம்பிடுக அனுமனையே!

59. நல்லவை செய்தேன்!

நல்லவை செய்தேன் நம்பிக்கையில் நானிருக்க
        தொல்லையும் கவலைகளும் தொடர்ந்து வாட்டுகையில்
               எல்லை கடந்து எழுகின்ற துயரங்கள்
        வல்லவனே வாயுமகனே வானரோத்தமா காத்திடுவாயே!

60. தவமும் பூசையும்!

தவமும் பூசையும் தனிப்பட்ட விரதங்களும்
     உவந்திட செய்தாலும் உள்ளத்தில் தெளிவில்லை
                 பாவம் தீர்த்திட பரமதயாள ஆஞ்சநேயா
      நவமணியெனப் பொலியும் நல்லவனே அருள்புரிக!

61. முதுமையும் தளர்வும்...

முதுமையும் தளர்வும் முன்வரும் நேரமதில்
                 எதையும் நினையாது ஏங்கும் உள்ளங்கள்
                 சிதையில் வீழ்ந்து செந்தணல் தாக்குமுன்
    கதைஎடுத்த மாருதியை கைகூப்பி உயர்வோமே

62. பண்ணோடு பாடி....

பண்ணோடு பாடிடும் பஜனையில் மகிழ்பவன்
    கண்மூடி தவமிருக்கும் கருணைமிகு ஆஞ்சநேயா
                வெண்ணை பூசிட விரும்பும் தன்மையனே
 மண்ணில் எந்தனுக்கு மனஅமைதி தருவாயே!

63. கதிரவனை....

கதிரவனை கனியென்று கடித்திட்ட மாருதியே
      சதிபதியான சீதாராமனை சிந்தையில் கொண்டவனே
கதிநீயே அனுமனே காலன்வரும் வேளையிலே
துதிக்கின்றேன் இப்போதே துயரேதும் நாடாதே

64. ராம தூதன்!

        ராமதூதனாக இலங்கை ராவணனை மிரட்டியவனை
ராமநாமத்தை உயிராக ரசித்து மகிழ்பவனே
   ராமசீதா இணைந்திட ராமசேது அமைத்தவனே
                 பூமியில் மானிடரை பாலிக்க வந்தவனே!

65. ஒரு நாள்!

              ஒருநாள் பகை ஒருநாள் கோபம்
              ஒருநாள் கழிவிரக்கம் ஒருநாள் நட்பு
 ஒருநாளும் இதில்என்றும் ஒருவித மாற்றமில்லை
              கருவான மக்களும் களிக்கின்ற பெற்றோரும்
              வருகின்ற சுற்றமும் வாஞ்சையான நட்பும்
              யாரும் இதனின்று என்றும் விலக்கில்லை
  உருவான நாள்முதல் உருகிமறையும் மாற்றமின்றி
குருவாக உள்ளிருந்து காக்கின்றாய் மாற்றமின்றி
       மாருதியே வடிவாகினாய் மண்டியிட்டேன் உன்முன்னே!

66. ஏந்துக கைகள்!

               ஏந்த வேண்டும் என்கைகள் உன்பிரசாதத்திற்கு
               எந்தன் கைகள் குவியட்டும் உன்முன்னாலே
  எந்தன் கால்கள் மண்டியிடட்டும் உன்பாதங்களில்
 வந்தனை செய்கிறேன் வானரோத்மா வரமருள்க!

67. வழியாகி காத்திடு!

  வந்தருள்வாய் ஆஞ்சநேயா வானரகுல திலகமே
                வந்தருள்வாய் மாருதியே வீரராம தூதனே
வந்தருள்வாய் அனுமனே ராமநாதப் பிரியனே
  வந்தருள்வாய் வாயுபுத்ரா வழியாகி காத்திடவே!

68. உன்பாத செந்துரம்...

உன்பாத செந்துரம் உயர்நெற்றியில் அணிவேனே
    உன்தன் கருணைக்காக உருகும்வெண்ணை ஆவேனே
உன்தன் நெஞ்சமதில் உயர்ராமசீதா காட்டியவனே
              என்தன் உளம்தனில் எழுந்தருளி காப்பாயே!

69. தயை காட்டி.....

     கயிலையான் அம்சமோடு கருணையாய் வந்தவனே
புயலாகசீறி பூங்காற்றாய் பூமிதனில் வீசுகின்ற
 வாயுவின் மைந்தனே வளர்அஞ்சனை தனயனே
 தாயுள்ளம் தன்னோடு தயைகாட்டி காத்திடுவாய்

70. உணர்ந்தவன்!

 வானளவு வளர்கின்ற வல்லமையை உள்ளடக்கி
கானகத்தில் வந்தடைந்த கனிமுக துறவிகளை
               மோனத் தவத்தாலும் முகங்காண முடியாத
             வானுலகின் தலைவனே வல்வில்ராமன் என உணர்ந்தவனே!

71. நிலம்போல...

பாலில் ஊறவைத்த பொரிபோல நொதத்தேன்
      நூலில் விழுந்தசிக்கலாக சலனப்பட்ட மனமானேன்
 சலசலக்கும் மனதாலே சக்தியற்றுப் போனேன்
                நிலம்போல மனஉறுதி நீதந்து வரமருளே!

72. நேருக்கு நேர்....

 நேருக்கு நேர்வரும் நிகழ்வுபல எதிர்கொண்டேன்
   ஊருக்கு நல்லதென உள்ளத்தால் மகிழ்ந்திருந்தேன்
               யாருக்கும் தெரியாது என்மனப் போராட்டத்தை
       பேருக்கும் நானறியேன் பேரறிவுமாருதி என்செய்வேன்?

73. இனிய உலகு காட்டு!

       தான்தனக்கு எனவாழ்ந்த தன்உறவோடு கூடிகளித்து
 தனதல்ல அவைஎன தனியேபிரிந்து விடுபட்டு
            தனக்கும் யாரும் உறவல்ல தான்உலகோடு பிணைந்தவன்
                தானே ஒன்றாக தானேபல எனும்அழகிய
     தனியான அனுபவத்தில் திளைத்து தன்ஆன்மாவை
                தனிமைப் படுத்தி விடுவிக்க வழிகாட்டும்
   தனிப்பெரும் கடவுளே தன்னலமற்ற ஆஞ்சநேயா
   இனியும் தாமதியாது இனிய உலகு காட்டிடுவாய்!

74. எளிமையே!

எளிமையே பாக்கியம் எதிர்வரும் துன்பமுமே
                களிக்கும் சாந்தமே பாக்யம் பூமிக்கு
                அளிக்கும் சமாதானம் அன்பின் பிறப்பிடம்
வளியின் புத்திரனே வரும்நீதிக்கு தலைவனே!

75. பக்தியின் எல்லைநீ

பட்டினியில் சேர்த்திடு பக்தியை விரதமாகும்
         கூட்டிசெல்லும் பயணத்தில் பக்திசேர யாத்திரையாகும்
வீட்டின் மகிழ்ச்சியில் பக்திசேர கோயிலாகும்
 நாட்டின் செயல்களில் பக்திசேர சேவையாகும்
         நட்புபாச பந்தநற்பணியில் பக்திசேர கர்மவினையாகும்
பூட்டிய தனிமனிதன் பக்தியை இணைத்திடில்
                நாட்டும் பக்தியின் நல்விதை அங்குதானே
    முட்டும் வான்மறை முதல்வனாக்கும் பக்திதானே
                எட்டும் பக்தியின் எல்லைநீ மாருதியே!

76. உரைத்தாலே உயர்வு!

இரக்கம் நீதியுடன் இடைவிடா சமாதானம்
  உருக்கும் சாந்தம் உள்ளத்தில் எளிமையென
   சிறப்பான சொற்களை சொல்லின் செல்வனே
         உரக்கஉனை நினைத்து உரைத்தாலே உயர்வோமே!

77. பவித்திர நாயகனே!

 கோவில் திருப்பணிக்கே குவிந்திடும் மாருதியே
போர்வில் ராமனின் பேரன்பில் திளைப்பவனே
                தாவிடும் என்மனதை தடுத்து நிறுத்திஎன
  பாவங்களை போக்கிடுவாய் பவித்திர நாயகனே!

78. காத்தருள் எந்தனையே!

          நான்வேறு நீவேறுஎன நினைந்து அறியேன்இல்லை
 தண்ணீரில் கலந்த வெண்பாலாக என்றும்
உன்னோடு கலந்து உருகினேன் இல்லை
   உன்னை வேண்டுவோர்க்கு உதவிட தாயாகி
                  நன்மை தீமையை நிர்ணயம் செய்கின்ற
     ஆணவத்தை அழித்து அருள்மழை பொழிகின்ற
   ஆஞ்சநேயா வீழ்ந்தேன் அழகிய திருவடியில்
   கணமும் தாழ்த்தாது காத்தருள் எந்தனுக்கே!

79. புதுவாழ்வு!

பிறவிதோறும் தொடரும் பெரும் வினைநினையாது
பெற்ற இப் பிறவிதனை பேணிவாழத் துணிந்துவிடு
             கற்றவனை வல்லவனை காகுத்தன் தூதுவனின்
பொற்பாதம் பணிந்துவிடு புதுவாழ்வு வாழ்ந்துவிடு!

80. வழிதருவாயே!

கோபத்தை கரைத்திட கோதண்டன் தொண்டனே
பாபத்தை தொலைத்திட பரந்தாமன் தொண்டனே
              தாபத்தை போக்கிட தசரதராமன் தொண்டனே
பூபாளம் பாடிஉனைப் பணிந்தேன் வழிதருவாயே!

81. சிரஞ்சீவியே அருள்!

கார்மேக வண்ணனுடன் களத்தில் நின்றவனே
                சீர்வளர் மைதிலி ஸ்ரீதேவியை கண்டவனே
                கூர்மதியும் குன்றாத வீரமும் வாக்கும்
      பாரினில் சிரஞ்சீவியே பரந்துநிறைந்து அருள்வாயே!

82. ஆட்கொள்வாய்!

         வாஞ்சைக்கு இடமில்லை வளர்த்தவர்க்கு மதிப்பில்லை
கொஞ்சிய பெற்றோரை கவனிக்க ஆளில்லை
 தஞ்சமென வந்தவரை தயங்காமல் ஏற்றராமன்
    பஞ்சவடியான் பக்தனே பாரில்நீ ஆட்கொள்வாயே!

83. துதிப்போமே!

              கல்லைப் பெண்ணாக்கிய கார்மேக வண்ணன்
சொல்லுக்கு ஈரேழுஆண்டு வனவாசம் சென்றவன்
 வில்லேந்தி இலங்கை வீர ராவணனை வென்றவன்
              எல்லாமாகி நிற்கும் எதிரிலா பிரம்மம்
நல்கைகூப்பி பணிந்தவனை நாளும் துதிப்போமே!

84. மதியுடையாய்.....

மதியுடையாய் நல்லதோர் விதியுடையாய் நாளும்
  கதியென வருவோர்க்கு கரம்நீட்டும் குணமுடையாய்
      பதியென்று அயோத்தியை பரமண்டலம் எனக்கருதினாய்
    நதிபோலும் வந்தோம் நற்கடல்உமை சரணடைந்தோம்

85. மராமரமென

மராமரமென வந்தவனே சுந்தரகாண்டத் தலைவனே
             ராமாயணம் அவன்சிந்தனையில் ரஞ்சகமாக எழுந்திட
             ராமானையே நாயகனாக ராமநாமம் நீஜெபிக்க
ராமனின் கருணைபெற நின்சரணாகதி வழியன்றோ!

86. எம்வாழ்வு சிறக்க

சுந்தரனாய் வந்தவனே சுந்தரகாண்டத் தலைவனே
              சுந்தர நிகழ்வுகள் சுதந்திரமாய் நிகழ்ந்திட
              சுந்தர இலங்கையில் சீரான தூதுவனே
 சுந்தரம் எம்வாழ்வில் சிறக்க சிரஞ்சீவி அருள்கவே!

87. மும்முறை வலம்

ஆஊஇம்எனும் அலகிலா நாதமானவனின்
       அசலான அம்சமாகி அகிலமதில் வந்தமாருதியை
அம்மையப்பன் சொல் அருளென காத்திட்ட
  அம்புவில் ஏந்தும் அழகியராமன் துணைவனை
           இம்மைக்கும் மறுமைக்கும் இயல்பான பாலமானவனை
       இணையிலா பிரம்மசரியம் இணைந்திட்ட சக்தியை
    மும்முறை வலம்வந்து முழுமனதோடு பணிந்திட
மும்மலம் நீக்கியே முக்தியளித்து காப்பானே!

88. உள்ளும் புறமும்...

உள்ளும் புறமும் உண்மையான தூய்மை
       தள்ளாது எவரிடமும் தயைகாட்டும் அருளுடமை
கொள்ளும் உணவை குறைத்தே வாழ்தல்
       உள்ளபடி நம்மை உயர்மாருதியிடம் சேர்க்குமே!

89. தலைவன் தாள்!

எந்த சூழ்நிலையிலும் ஏற்றிருக்கும் பொறுமை
சிந்தைக்கு உகந்த சிறந்த நற்குணம் பெறுதல்
வந்தனை தன்னோடு வாய்மை கடைபிடித்தல்
     உந்தனை உயர்வானரன் தலைவன்தாள் சேர்க்குமே!

90. ஒடும் மனதை....

நடுநிலை வகித்தல் நீசகாமம்களவு தவிர்த்தல்
  படுகொலை விலக்கல்என பலபெரும் குறைநீத்து
               ஒடும் மனதை ஒருமுகப் படுத்தியே
நாடும் யோகங்கள் நல்மாருதியை காட்டிடுமே!

91. சொர்க்கமாகுமே!

தந்தை தாய்வழி தருகின்ற முதற்பிறப்பு
       சிந்தையும் மனமும் சற்றேவிலகிடில் மறுபிறப்பு
               விந்தை ஏதுமில்லை வந்தனைசெய் அஞ்சனைமைந்தனை
இந்த உலகமே இயங்கும் சொர்க்கமாகுமே!

92. தேவையை முடித்தருள்க!

 தகுதி இருந்தும் தக்கவை தடம்மாறும்
பகுதி பகுதியாக மனம்படும் பாடுகள்
      மிகுதியென எதையும் மனதால் எண்ணாதே
              தொகுத்து மாருதியே தேவையை முடித்தருள்வான்!

93. பரந்தாமன் முடிவு!

 எண்ணங்கள் தடுறாறும் எழுதியவை தவறாகும்
     வண்ணங்கள் இல்லையெனில் வந்தவரை பழிகூறும்
எண்ணும் எண்ணங்கள் எடுத்திடும் செயல்கள்
        பண்ணுவதும் பயனளிப்பதும் பரந்தாமன் முடிவன்றோ!

94. நல்தூதனே!

        கலியில் சிரஞ்சீவியாய் கண்மறைந்து விளங்குகின்ற
         சலியாத உழைப்புக்கும் சரியானபலன் இல்லையென
 நலிந்தே வாடுகிறேன் நல்தூதனே அனுமனே
பொலியும் புதுவாழ்வு பூத்திட அருள்வாயே!

95. விட்டுவிடு!

விட்டுவிடு என்னைஎன விரைந்தெங்கு ஒடினாலும்
  விட்டுவிடாத பின்தொடரும் விணைகளின் கர்மபலன்
விட்டகுறை தொட்டகுறை வேதனைகள் தொடரும்
              தட்டாமல் நீவந்து தயைதந்து காத்தருளே!

96.  காருண்யனே!

உடல் தளர்ந்து ஊண் உறக்கம் குறைந்து
           கடல் அலை போல்வரும் கணக்கிலா நோய்களோடு
வாடல் வேண்டுமோ வானரத் தெய்வமே
கடல் தாண்டிய காருண்யனே காத்தருள்!

97. பரிந்து அருள்!

மொட்டாகி மலர்ந்து மணம்வீசும் பூப்போலே
   பட்டென என்முடிவு பரந்தாமனே வரவேண்டும்
      சட்டென உன்பாதமதில் சரணடையும் என்ஆன்மா
பட்டாபி ராமன் பக்தனே பரிந்துஅருள்கவே!

98. நிகழ்வதேன்?

நிகழும் செயல்பல நிகழ்வதேன் புரியவில்லை
  நிகழ வேண்டுமென நினைப்பவை நிகழவில்லை
               அகழியென மனதை ஆசைகள் மூடுவதேன்
               தகழி நாயகன்தன் தூதனே காத்தருள்க!

99. அடிபணிவேனே!

வல்வில் வேந்தன் வானவர்தம் தலைவன்
    சொல்காக்க சுகம்நீக்கி சொன்பைடி செய்தவன்
எல்லையிலா அன்பினை ஏகமாய் பெற்று
       ஆலிங்கனம் பெற்ற ஆஞ்சநேயா அடிபணிவேனே!

100. வடமாலையும்....

     வடமாலையும் வெற்றிலையும் வெண்ணையும் பூட்டி
               திடமான மனதோடு தீவிரமாய் சிந்திக்க
               உடலினை வருத்தி உயர்வான விரதங்கள்
  கடல்மேவிய அனுமன் கனியும் சொல்லுடையான்
மடல்விரியும் மலராக மாபெரும் ராமநாமத்தை
தடையின்றி சொல்லிட தானே வந்தருள்வான்!

101. முடிப்பு

   அஞ்சனை புதல்வனை அலைகின்ற வாயுமகனை
                ஆயிரம் கவியாலும் அளவிட முடியாது
                கொஞ்சும் மொழியான் கூடவரும் தோழன்
                கோடிட்டு காட்டவும் கவிதைநூறு போதாது
மிஞ்சிடம் ஆர்வத்தால் மாமேதை அனுமனை
                மாது ராதைபாடி மனதில் மகிழ்கிறேன்
 பிஞ்சுமொழி எனக்கருதி பக்தியுடன் படித்தாலே
 பிரம்மாண்டநாயகன் பக்கமிருந்து அருள்வானே!

                                           ராதாகவி