ஞாயிறு, 21 ஜூலை, 2019

கலாம் நினைவுகள்

                    கலாம் நினைவுகள்

கனவு காணுங்கள்

கற்றலின் எல்லையை தொடுவேன் என
ககனத்தில்  வெற்றியை பெறுவேன் என

பெரியதையே சிந்திப்பேன் என
பெரும் ஆற்றலைப் பெறுவேன் என

அண்ட சராசரங்களை வெல்வேன் என
அனைத்திலும் என் முத்திரையை பதிப்பேன் என

உயர்ந்த இலக்கினுக்கு போராடுவேன் என
உயிரினத்தின் பெருமையை உணர்வேன் என

உலகத்தோர் அனைவரும் என் உடன் பிறப்பு என
உண்மையை என்றும் என் உணர்வு என

பெற்ற தாயை, மொழியை போற்றுவேன் என
பிறந்த பொன்னாட்டின் பெருமை காப்பேன் என

      கனவு காணுங்கள்
                                            ராதாகவி

வெள்ளி, 12 ஜூலை, 2019

அந்த நாள்

அந்த நாள்

1. மண்பானையென உடல் உள்ளே
மனமென்னும் ஆன்மா
திண்ணமான ஆயுள் என்னும் நீர்
திட்டமிட்டு உள்நிரப்பி
கண்ணுக்குத் தெரியாத சிறு துளை
கடவுளே போட்டும் வைத்தான்
எண்ணம் எதும் அறியாமலே
என்றும் வெளியேறும் நீர்

2. நிலையாக காலமெல்லாம்
நிரம்பியிருக்கும் என நம்பிக்கை
மலை மலையாய் திட்டங்கள்
மானிட வாழ்வு தீட்டும்
வலை விரித்த மாயையில்
வலு.வில் விழுந்து மகிழும்
கலையென்றும் சிலையென்றும்
காலமெல்லாம் களிப்புறும்

3. வளிவந்திட வேப்பம் பூ
வீதியெல்லாம் விழுவது போல்
துளி துயர் வந்தாலும்
துள்ளி துடித்து கதறும்
துளித்துளியாய் நீர் அடியில்
தெளித்தால் போல் நீங்குவதை
களிப்பின் மிகுதியில்
காணாது மகிழ்ந்திருக்கும்

4. பானையில் நீர் குறைய
பந்தபாசம் விலகிவிடும்
துணையாக வந்ததெல்லாம்
தூர நின்று பார்த்திடும்
அணையாக இருந்த உறுப்புகள்
ஆங்காங்கே தளர்ந்துவிடும்
கணையாக துயர் அம்புகள்
கண்முன்னே துளைத்திடும்

5. துளையிட்ட பானை நீர் தீரும் அந்த
தினமும் வந்ததென அறியும்
மணை வீடு வாசல் உறவு
மனதை விட்டு அகலும்
அணைத்துக் காத்திட ஒருவனே என
அறியும் அன்று ஆன்மாவே
இணைத்து கைகூப்பி இறைவா
இறுதி நாளில் உடன் இரு என அழும்

6. தினம் அதை மனம் அறியும்
தீவிர சிந்தனை ஏதுமின்றி
மனம் ஒன்றி விடும் பரமனிடம்
மயக்கம் ஏதும் இனி இல்லை
சினம் என்பது அவனிடமில்லை
சிக்கெனப் பிடித்திடுவான்
இனம் காணா இன்பமதில்
இறுதி நாளில் நிலைத்திருப்பாய்!

                            ராதாகவி

கடவுள் இருப்பார் இங்கே!

கடவுள் இருப்பார் இங்கே!

கலங்கிய கண்களில் இருப்பார்
காதில்  புகும்  ஓசையில்
இருப்பார்
புலம்பும் நாவில்  இருப்பார்
புசிக்கும் வாயில்  இருப்பார்

சிலிர்க்கும் உடலில். இருப்பார்
சிந்தையின் உள்ளும்  இருப்பார்
பொலியும் மூளையில்இருப்பார்
பொங்கும் இதயத்தில்இருப்பார்
‍‍‍‌
வீசும் கைகளில் இருப்பார்
வேகமாக ஓடும் கால்களில்
இருப்பார்
‌‌.
தி‌‍சுக்கள்யாவிலும் இருப்பார்
திசையெங்கும் நிறைந்திருப்பார்
மாசு இல்லாமனதில் இருப்பார்
மனதின் இன்ப துன்பத்தில்
இருப்பார்
கூசாமல் கடவுளைத் தேடுவார்
கூடவே அவர் உள் இருப்பதை
அறியாமலே!

புதன், 10 ஜூலை, 2019

அத்திவரதரே! ஆனந்தரூபனே!

அத்திவரதரே! ஆனந்தரூபனே!

ஈர்இருபது ஆண்டுகள் ஆன்மீக
‌ஒளிவீசும் உருவம் உள்மறைய நீரினில் ‌ அனந்தசரசில் சயன
நித்திரை செய்த நீலமேகப் ‌பெருமானே!
வீரியமுடன்எழுந்துவெளிவந்து .‌‌‌எமக்கு
வரம்அருள வந்தாயோ? வடிவுடைய அத்தி வரதா
பிரம்மன் பூஜித்தபிரம்மாண்ட பரம்பொருளே!
பாமரன் எனக்காகவும் பாரினில் எழுந்தாயோ?
2.
பச்சையம் மணக்கும் மரகத மேனியனே!
பல்லாண்டு கிடந்தும் பரிமளிக்கும் சந்தணமே!
இச்சைகளை நீக்கிஇனிய தரிசனம் தர
இம்மை மறுமை பிணிதனை நீக்கிட
கச்சியில் கிடந்தும் நின்றும்
காட்சிதரும் காலத்தின் தலைவனே அத்திவரதரே!
மெச்சும் பணி ஏதும் மாநலத்தில் செய்தேனில்லை
மேகவர்ணனே நின் பாதமதில்
மனநிறைவோடு சரணடைந்தேன்!

சபரிகிரி வாசனே

சபரிகிரி வாசனே

‌‍நீல மேனியனும் நீலகண்டனும்
நளினமாய்  கலந்தளித்தவனே
நீலமேகம் சூழ்நீள்மலைமுகட்டில்
நீல வண்ண ஆடையுடுத்தி
‌‍‌‌‍நிலம் காக்க நீள் தவமிருக்கும்
நலமிக்க தெய்வமே ஐயப்பா
கோலவிழி குமரனே உந்தனை
காணவும் வரமருள்வாயே

வாயால் சரண கோஷமிட்டேன்
வகையான துளசி மாலை அணிந்தேன்
காயாம்பூ வர்ண ஆடை உடுத்தேன்
காலை மாலை பூஜித்தேன்
ஓயாது உடலாலும் உள்ளத்தாலும் ஒருமனதோடு
விரதம் காத்தேன்
தாயாக உனைக்காண இருமுடி
தலையில் சுமந்து வந்தேன்

குருவும் நீயே குழந்தையும் நீயே
குலம் காக்கும் தெய்வமும்நீயே
நெறிப்படுத்தும் தலைவனும் நீயே
நீங்காததுணை தோழனும் நீயே
சிறியேன் பிழைபல செய்தாலும்
சினந்திடாதுஎன்னைகூட்டி
செல்வாயே
தறிகெடா மனதோடு நானும்
தவமிகு சபரிமலை காண
அருள்வாயே!

                                   ராதாகவி

இறுதி கட்டம்

இறுதி கட்டம்

குறை ஒன்றும் இல்லை என கூறமறுக்கும் மனம் நிறைவானவாழ்வு என நினை க்க மறுக்கும் நினைவு
மறைக்க இயலா நிகழ்வுகள்
மனதில் குவிந்த நிலை
சிறையாகிப்போன என்
சிந்தையின் சுழற்சி
2
சுழற்சி யின் காலச்
சக்கரம் நிற்கும் வேளை
சுழலும் உலகில் என் சாதனை என சொல்ல இயலாஅச்சம்
கழன்று விழும் மறை ஆணிகள்
காலத்தின் வண்டி நிற்கும்
பழங்கதையாகி விடும்
பாரில் என் நினைவு யாவுமே
3
பழகிய பெயர் போய்விடும்
பாசமிகு உறவுகள்விலகிவிடும்
உழைத்தபொருள் உரு மாறும்
உலகில் என் சுவடுகள் நீங்கும்
மழை வெள்ளமென பெருகிய
செயல்மளமளவென ஓடி மறையும்
அழைத்திட நின் நாமம் தேடும்
அசைவுகள் யாவும்நின்றுவிடும்
4
விட்டுவிடு வேண்டுவன வேண்டாதன
தொட்டுவிடு தூயவன்பாதங்கள்
வாட்டிய துன்பங்கள் வானில்
பறந்துவிடும்
காட்டும் கண்முன் கனிவான உலகினையே
கெட்டு அலைந்தவாழ்வாயினும்
சிட்டாக  உன் ஆன்மா சேரந்துவிடும் பரமனடி
எட்டாத இடத்தை எட்டிவிடும்
நொடியில்
கிட்டாது இனிபிறவி கிடைத்தடும் வீடு பேறு

                   ‌.             ராதாகவி

வியாழன், 4 ஜூலை, 2019

சரணடைந்தேன்

                         
1. நெருப்பானாய் நீரானாய்
உருவிலா வளியானாய்
பரந்த வெளியானாய்
பாம்பணையில் படுத்திருப்பாய்

2. படுத்தும் நின்றும் அமர்ந்தாய்
மடுவில் ஆடினாய் மத்தடி பட்டாய்
அடுத்தவரை ஆதரித்தாய்
கெடுத்தவரை அழித்தாய்

3. அழியாது உலகு காத்தாய்
அழகிய பத்து அவதாரமானாய்
அழியாத மூர்த்தங்கள் ஆனாய்
மொழிந்தாய் கீதையை முக்தியளித்தாய்

4. முக்தி தரும் பெருமானாய் மூழ்கி இருந்து
அத்தி வரதராய் அருளிட வெளிவந்தாய்
பக்தியா பரவசமா பாமரன் நான் அறியேன்
சித்தத்தில் ஏற்பாயா சிலையானவனே சிறியேனையே

5. சிறு மீனாய் சிற்றசைவு ஆமையாய்
சிறு கொம்பு வராகமாய் சீறிடும் சிங்கமாய்
சிற்றடி வாமனனாய் சீனமிகு பரசு வாய்
போற்றும் பல ராமனாய் பூண்டவில் ராமனாய்

6. வித்தகன் கண்ணனாய் வெற்றிமிகு கல்கியாய்
பத்தவதாரமாய் பாரில் எழுந்தவனாய்
எத்திசையும் புகழ் மிகு காஞ்சியில்
நித்தம் அருளிட நீ எழுந்து வந்தாயோ

7. வந்தாய் என் சிந்தையுள் புகுந்தாய்
தந்தேன் எனதெல்லாம் தாயாகி ஏற்பாயே
சிந்தையில் உன் நாமம் சங்கீதமாய்
எந்தநேரமும் என் உள்ளே எதிரொலிப்பாய்

8. எதிர்பார்க்கும் அந்நாளில்
எதிர் வந்து என் கண்ணில் நிற்பாயோ
ஏதும் நான் வேண்டேன் அத்திவரதா
எதிர்கொண்டு ஆட்கொள் பெருமாளே!

                                                  ராதாகவி