வியாழன், 4 ஜூலை, 2019

சரணடைந்தேன்

                         
1. நெருப்பானாய் நீரானாய்
உருவிலா வளியானாய்
பரந்த வெளியானாய்
பாம்பணையில் படுத்திருப்பாய்

2. படுத்தும் நின்றும் அமர்ந்தாய்
மடுவில் ஆடினாய் மத்தடி பட்டாய்
அடுத்தவரை ஆதரித்தாய்
கெடுத்தவரை அழித்தாய்

3. அழியாது உலகு காத்தாய்
அழகிய பத்து அவதாரமானாய்
அழியாத மூர்த்தங்கள் ஆனாய்
மொழிந்தாய் கீதையை முக்தியளித்தாய்

4. முக்தி தரும் பெருமானாய் மூழ்கி இருந்து
அத்தி வரதராய் அருளிட வெளிவந்தாய்
பக்தியா பரவசமா பாமரன் நான் அறியேன்
சித்தத்தில் ஏற்பாயா சிலையானவனே சிறியேனையே

5. சிறு மீனாய் சிற்றசைவு ஆமையாய்
சிறு கொம்பு வராகமாய் சீறிடும் சிங்கமாய்
சிற்றடி வாமனனாய் சீனமிகு பரசு வாய்
போற்றும் பல ராமனாய் பூண்டவில் ராமனாய்

6. வித்தகன் கண்ணனாய் வெற்றிமிகு கல்கியாய்
பத்தவதாரமாய் பாரில் எழுந்தவனாய்
எத்திசையும் புகழ் மிகு காஞ்சியில்
நித்தம் அருளிட நீ எழுந்து வந்தாயோ

7. வந்தாய் என் சிந்தையுள் புகுந்தாய்
தந்தேன் எனதெல்லாம் தாயாகி ஏற்பாயே
சிந்தையில் உன் நாமம் சங்கீதமாய்
எந்தநேரமும் என் உள்ளே எதிரொலிப்பாய்

8. எதிர்பார்க்கும் அந்நாளில்
எதிர் வந்து என் கண்ணில் நிற்பாயோ
ஏதும் நான் வேண்டேன் அத்திவரதா
எதிர்கொண்டு ஆட்கொள் பெருமாளே!

                                                  ராதாகவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக