செவ்வாய், 30 ஜூன், 2015

எளிய தெய்வமே!



கன்னிமூல கணபதியே கரைபுரளும் பம்பையின்
  கரைமீது கனிந்து காட்சிதரும் மூலவனே
உன்னையே சேவித்து உள்ளமெலாம் கசிந்துருகி
  உந்தன் சோதரன் உயர்சபரி நாதனையே
நின்னருளால் காணுகின்ற நித்தம் கோடிபக்தர்கள்
  நீங்காது அரசமர நிழலில் குடியிருப்பாய்
என்னவரம் வேண்டுமென எமைகண்டே தந்தருள்வாய்
  எங்கும் காணுகின்ற எளிய தெய்வம் நீயன்றோ!
              ஆன்மிக மலர் அட்டைபட கவிதை கணபதி 30.6.15

செவ்வாய், 23 ஜூன், 2015

காமாட்சி


கரும்பும் இடக்கையில் கிளியும் வலக்கையில்
      கமலத் தாமரையும் கனகமலரும் மறுகைகளில்
இருபாதம் மடித்து இருந்திடும் பத்மாசனம்
      இரத்தின கீரிடம் திருமுடியில் ஒளிவீசும்
கருவிழி இரண்டும் கருணை மழை பொழியும்
      கழுத்தினில் அணிகலன் கதிர்வீசி அசைந்தாடும்
மருவிலா தேவியவள் மாதங்கி புவனேஸ்வரி
      மங்களம் தந்திடுவாள் மலைமகள் காமாட்சியே!

      ஆன்மீகமலர் அட்டைப்படக் கவிதை 23-6-2015

செவ்வாய், 16 ஜூன், 2015

சப்த குரு



உத்தமர் கோயிலில் உள்ளமர்ந்த சப்தகுருவே
  உயர்வான தேவகுரு உணர்ந்தஞானி பிரகஸ்பதி
பித்தனுக்கு உபதேசித்த பாலசுப்ரமண்ய ஞானகுரு
  பாதகர் அசுரர்தம் பரமகுரு சுக்கிராச்சாரி
பத்தவதார விஷ்ணுகுரு வரதராஜர் படைத்தல்
  பிரம்மா பரப்பிரம்மகுரு பார்புகழ் சக்திகுரு
முத்துநகை சவுந்தர்யநாயகி மூலசிவகுரு தஷிணாமூர்த்தி
  முன்வரும் ஏழுகுருவை முன்வணங்கி முக்திபெருவோமே!

அன்மிக மலர் 16.6.2015 அட்டை படக்கவிதை 

ஆதி குருவே தஷிணாமூர்த்தியே!



அறிவுருவே பகவானே அற்புதனே ஆதிகுருவே
  ஆலடியில் அமர்ந்தவனே ஆச்சாரிய சிவனே
பிறப்பறுப்பவனே சனகசனந்த சனாதனசனத்குமார சீடர்களுக்கு
  போதித்த பசுபதியே பிரம்மச்சரிய தூயவனே
நீறணிந்தவனே நிமலனே நான்மறைப் பொருளே
  நன்னெறிகளின் காவலனே நல்தஷிணா மூர்த்தியே
சிறந்த அறிவும்கல்வியும் சீர்பெரும் ஞானமும் அருள்வாய்
  சொற்கடந்த மூர்த்தியே சாந்தரூபனே போற்றி! போற்றி!!


அன்மிக மலர் 16.6.2015 அட்டை படக்கவிதை

செவ்வாய், 9 ஜூன், 2015

பெரிய திருவடி



பெரிய திருவடியென பக்தர் போற்றித்தொழ
  பரந்தாமனும் தேவியும் பாங்குடன் அமர்ந்திருக்க
கரிய கஜேந்திரன் காலினை முதலை பற்ற
  கதறி ஆதிமூலமேஎன கூவிய கணத்தில்
சரிந்த ஆடையும் தவிர்த்து சட்டென வந்துகாக்க
  சீறிப்பறந்த உன்வேகம் சிந்தையில் நின்றிருக்க
கருட சேவையென கரியபெருமாள் உலாக்காண
  கண்கள் பெற்றபேறு கவிதையும் கூறுமோ?

அன்மிக மலர் அட்டை பட கவிதை 9.6.2015

செவ்வாய், 2 ஜூன், 2015

சஞ்சீவி தாங்கிய சிரஞ்சீவி



சஞ்சீவி மலைதாங்கி சகோதரன் உயிர்காத்தாய்
  சீதையவள் தடுமாற சீவனைக் காத்திட்டாய்
வஞ்சனை அசுரரை வெந்தணலில் வேகவிட்டாய்
  'வருகிறார்' எனக்கூறி விரதபரதனை தடுத்துகாத்தாய்
தஞ்சமென வந்தநல் வீபீஷணனை ஏற்கவைத்தாய்
  தவமாக மங்கையரை தாயாக நினைத்திருந்தாய்
கொஞ்சமும் தயங்காது காகுத்தன் காலடியே
  கோவிலென்ற சிரஞ்சீவியே கைதொழுதோம் மாருதியே!