செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

தாயாவாள்



தாயாவாள்

மரகதப் பச்சை மேனியாள் மாநகர்
    மதுரை ஆண்ட மீனாட்சி தேவியாள்
         குரல் கொடுக்கும் கொஞ்சும் கிளியுடையாள்
          கயிலை நாதனின் கைபிடித்த பாவையவள்
              பரல் முத்து தவழ்கின்ற புன்னகை முகமுடையாள்
            பதியவன் உடலில் பாதியாகி உருவுடையாள்
       தரமான புலவர்சூழ தமிழ்சங்க நகருடையாள்
            தண்வைகை தந்தே தரணிகாக்கும் தாயாவாள்!

பண்பான பண்ணாரி



பண்பான பண்ணாரி!

அக்னிச் சுவாலை அழகாக பின்ஒளிர
           அழகிய பொற்கீரீடம் அலைகூந்தல் மேலிருக்க
           பக்கக் கைகளில் பல்உடுக்கை அங்குசம் விளங்க
                 பொற்கரமதில் புதுவாளும் பொங்கிண்ண குங்குமமும்          
            தக்காடி வரமளிக்கம் தளிர்கரத்தில் அமைந்திருக்க
                தகத்தக பட்டுடுத்தி தொங்கும் மடங்கும் கால்களும்
       எக்கணமும் காத்திருக்கும் ஏகாந்த நாயகியே
          எழுகின்ற பண்ணாரி எங்களுக்கு அருள்வாயே

காமாட்சி கண்மலர்வாள்!



காமாட்சி கண்மலர்வாள்!

ஆடிவரும் காவிரி ஆடிப்பெருக்காகி ஒடிவர
       அடியெடுத்து அம்மையவள் அலங்கார பவனிவர
   தேடிடும் தெய்வமெலாம் தேவியவள் வடிவாகி
    தெவிட்டாத தேனாக திவ்யநாம பெயர்தாங்கி
    நாடிவரும் நங்கையரின் நற்குங்குமம் திலகத்தில்
           நளினமாய் வந்திடுவாள் நாயகியாய் அருள்தருவாள்
      கூடிவரும் செல்வமெலாம் கூழ்ஊற்றி வழிபடவே
        கொண்டாடும் ஆடியில் காமாட்சி கண்மலர்வாள்!

அங்காளம்மன்



அங்காளம்மன்

             ஆர்பரிக்கும் நாக உடுக்கையும் அழகிய பொற்தாமரையும்
அமிர்த கலசமும் அச்சுறுத்தும் ஆயுதமாய்
                கூர்வாளும் ஈரிறு கரங்களில் தாங்கி
காலொன்று மடக்கி காற்சலங்கை பளீரிட
                நேராக மறுகால நற்சிவன் தலைதாங்க
 நேர்த்தியான ரத்தின நாககீரிடம் சிரமணிய
   பொற்பாவை அங்காளம்மை புனிதமிகு ஆடியில்
 பூவாக மலர்ந்து புவியினைக் காத்திடுவாய்

ஸ்ரீ பஞ்சாயுத பாணி



ஸ்ரீ பஞ்சாயுத பாணி

சுதர்சனம் எனும் சக்கரம் சுழன்றிட
       சங்கம் எனும்பாஞ்ச சன்யம் ஒலிஎழுப்ப
        கதை என்னும் கெளமோதகி கையினில்எழ
                      கட்கம் எனும் நந்தகம் ஒளிவீச
             மோதிடும் மேகமதின் மழையென சரம்பொழியும்
                     மேன்மைமிகு சார்ங்கம் எனும் மேலான வில்நாண்ஏற
                  ஆதிசேடன் குடையாகிவர அழகிய பஞ்சாயுதம் தாங்கி
              அடியவரை காக்கவரும் அருள்மிகு பெருமானே!

திங்கள், 1 ஆகஸ்ட், 2016

அன்பு இல்லம்

அன்பு இல்லம்

1. அன்பும் ஆதரவும் அமைந்திணைந்த சூழ்நிலை
  ஆடிஒடி உழைத்து அசதிகண்டவர் தம்நிலை
   இன்முகம் முன்வர இளமுறுவலுடன் அலுவலர்
          இதையும் செய்வோம்என நம்பிக்கைமிகு செவிலியர்
   அன்னையென அமுதூட்டும் அடுக்களை ஊழியர்
            அளவனாவி அரவனைத்து ஆறுதல்கூறும் உதவியாளர்
  மனதின் துயரறிந்து மயிலிறகு வருடியதுபோல்
   மனங்குளிர ஆறுதல் மணியான சொற்களால்

     2. கனிவான கருத்துக்கள் கனக்கும் இதயம் அமைதிகாண
கண்டிப்பு குறையிலா கவனிப்பு இல்லமதில்
               தேனின் இனிமை உளம் தொடும் சேவை
   தேடிவரும் தாய்போல் தலைமையின் நிர்வாகம்
               இனித்தது இல்லமதில் இருந்தசில மணிகள்
 இறைவன் அனுப்பிய இவ்வுலகத் தூதுவர்கள்
               தனித்து தவித்த தளர்ந்த நெஞ்சமதில்
                 தயக்கம் போக்கி தாங்கிய அன்புஇல்லம்

3. இன்னல்பல இடைவிடாது இறுக்கும் உடல்நோய்
           இணைந்தவரை கவனிக்கஉடன் இருக்க இயலாதநிலை
                கன்னங்கரிய இருளில் கலங்கி நின்றபோது
  கைகளை வாஎனநீட்டி கலக்கம்ஏன் எனக்கூறி
     சின்னச்சின்ன செயல்களையும் சிறப்பாக கவனித்து
    சேர்த்தவரை மகிழவைத்து சங்கடங்கள் போக்கி
     என்னேரமும் மனதில் உள் எங்கோஎழும் துயர்நீக்கி
                 என்னுள்ளே அமைதியை எளிதாகத் தந்திட்ட அன்பு இல்லம்!

           நீ வாழ்க! உன்னால் எங்களைப் போன்றோர் பலரும் வாழ்க!


30.7.16                                                     ராதாகவி