திங்கள், 15 ஜனவரி, 2018

கறந்தபால்

7. கறந்தபால்!

கறந்தபால் மடியேறாது கனவுகளும் தொடராது
கடமை முடித்தற்கு காலமெலாம் நன்றியோ
மறந்தேன் மனதில் மறைத்தேன் எண்ணங்களை செயலை
மாயைஎன உணர்ந்தேன் மாநிலத்தின் காலவரைகள்
துறந்தேன் வந்தது துணையாக தனிமையின் இனிமை
தூயவன் திருவடி துலங்கியது கண்முன்னே
பிறவாத வரமருள பிறந்தவந்த சோதியென
பாசமுடன் கைபற்றி பதினெட்டுபடி ஏற்றிவிட்டாய்!

பிறந்தேன் வளர்ந்தேன்!

6. பிறந்தேன் வளர்ந்தேன்!

பிறந்தேன் வளர்ந்தேன் பல்கலையும் கற்றேன்
      பல்வேறு பதவிகளில் பொறுப்புடன் செய்தேன்
உறவும் சுற்றமென உணர்வுடன் இணைந்தேன்
  உளமான உதவிகள் உடன்ஒடிச்செய்தேன்
                  பெறாதவை பெற்றவை போற்றி வளர்த்தேன்
                     பாசமுடன் அவர்கடமைகளை பொறுப்புடன் ஆற்றிவைத்தேன்
       சிறப்பாக பாராட்டி சிகரமென எனை தூக்கிவைத்தார்
          சிதறாது அவைஎன்றும் சீருடந்தொடர எதிர்பார்ப்பு

ஊட்டும் தாயாகி

5. ஊட்டும் தாயாகி

ஊட்டும் தாயாகி உயர்அறிவு தந்தையாகி
      உறவாகி சுற்றமுடன் உதவும் துணையாகி
     பாட்டும் கூத்துமென பலகலைகள் காட்டிஎனை
     பாரினில் உயர்வாக பரவசம் தருகின்றாய்
     ஆட்டமும் பாட்டமும் அடங்கிடும் வேளையில்
          அழகான சோதியாய் ஆதவனாய் உதிக்கின்றாய்
          கூட்டமெலாம் விலகிவிட குளிர்நிலவென உட்புகுந்து
              குருவாகி சரணஒலியில் குன்றினில் உறைந்திட்டாய்!

ஆழ்வான்

4. ஆழ்வான்

ஆழ்வான் என்னுள்ளே ஆன்மீகம் வளர்ப்பான்
      அகில உலகும் அவனுள்ளே அடக்கம் என்பான்
சூழ்கடல் உலகினில் சுழலும் ஐம் பூதங்களில்
        சின்னஞ்சிறு அணுவாகி சுடரொளி எழுப்பிடுவான்
        தாழ்வென்றும் உயர்வென்றும் தகுதியென ஏதுமில்லை
               தரணியில் எழுகின்ற தனிஉயிரும் யாவும் சமமென்பான்
    பாழ்பட்ட மனதுள்ளே விருப்புவெறுப்பு தனைநீக்கி
           பாசமிகு அன்பையே புது அமுதமென ஊட்டிடுவான்

மாற்று வழியில்லை

3. மாற்று வழியில்லை

மாற்று வழியில்லை மார்க்கம் ஏதுமில்லை
     மன்னவனே உன்திருவடி மனதில் ஏற்றினாய்
    ஏற்றமிகு பாதையினை என்னுள்ளே காட்டினாய்
            எங்கெங்கோ அலைபாய்ந்த எண்ணத்தை நிறுத்தினாய்
        பற்றுபாசம் என்பதெலாம் பொற்றாமரை இலை நீராக
         பரிவாக எடுத்துரைத்து பாசமுடன் எனை ஏற்றாய்
   கொற்றவனே ஐயப்பா குணவானே சாஸ்தாவே
         கோஷம் எழுப்பினால் குளிர்ந்தென்னை ஆள்வாயே!

அருளிடவருவாயென!

எடுப்பும் தொடுப்பும்
2. அருளிடவருவாயென!

அருளிட வருவாயென அவனியெலாம் தேடுகிறேன்
 அருமைமிகு மானிடப்பிரிவு அன்போடு தந்தாய்
               பொருளும் பொன்னும் பெருகும் சுற்றமும்
                  பொருந்திய உடலும் பேரறிவும் தந்தாய்
               உருண்டு சுழலும் உலகின் இனிமையாவும்
                  உள்ளமும் களித்திட உன்னதமாய் தந்தாய்
               பருகிய இன்பங்கள் பாசமிகு பந்தங்கள்
       பகலவன் முன் பனியென பகற்கனவாய் மாற்றினாய்

கணபதிதுணை

1. காப்பு
கணபதிதுணை

தம்பிக்கு துணையாக தும்பிக்கை கணபதியே
           தகைவான கன்னிமூலமதில் தவமாகி அமர்ந்தவனே
    தம்பியான சபரிநாதனை தரிசிக்க கார்த்திகையில்
       துளசிமணி மாலைகள் தாமணிந்து விரதமேற்று
  நம்பிக்கை துணையாக நல் இருமுடி தாங்கியே
   நாடுகாடு கடந்து நாளெல்லாம் சரணம்கூவி
                 இம்மைக்கும் மறுமைக்கும் இன்துணையாகும் ஹரிஹரசுதனை
                 இதயத்தில் வைத்து இனியகவிமாலையாக்க அருள்வாயே!