வியாழன், 29 ஜனவரி, 2015

மாருதியே


      மாருதியே

அறிவின் ஒளியாகி அன்பின் வழியாகி
    அருளின் உருவாகி ஆஞ்சநேயன் வடிவாகி
நெறியின் இடமாகி நெஞ்சே கோவிலாகி
    நாவின் வாக்காகி நாயகன் தோழனாகி
பொறியினை அடக்கி பொலியும் தூதனாகி
    பாரினில் துணையாகி பஜனையில் பூவாகி
தறிகெடும் மானுடத்தை தன்னுள்ளே வைத்து
    தரணியில் காத்திடும் தயாளனே மாருதியே!


                                         ராதாகவி

கந்தா காத்திடுவாய்!

       கந்தா காத்திடுவாய்!

நெருப்பில் பிறந்து நீரினில் கலந்து
   நங்கையர் கைகளில் நளினமாய் வளர்ந்து
மருவி மகிழ்ந்து மாதவள் அணைக்க
   மூவிரு முகமோடு முருகனாகி வந்தவனே
குருவே குகனே குன்றில் குடியேறி
   குறமகள் தன்னோடு குஞ்சரியை மணந்தவனே!
கருவினில் தோன்றி கலங்கிடும் எந்தனை
   கனகவேல் கொண்டு காத்திட வருகவே!

                                         ராதாகவி

ஞாயிறு, 11 ஜனவரி, 2015

அமர்ந்தவர் யாரோ?



அமர்ந்தவர் யாரோ?
கால் மடித்து குருந்த மரத்தடியினில்
     கண்மூடி அமர்ந்திருந்த குருவான தட்ஷிணாமுர்த்தியா?
கால் தூக்கியாடிய கனகசபை தவிர்த்து
     கால்மேல் காலிட்டு களைப்பாறும் நடராஜனா?
காலாக்கினி தாங்கி காட்டினில் திரிந்ததால்
     கால் வலிக்க கைதாங்கும் காலபைரவனா?
நீலனாய் கங்கையை நீள்சடையில் நிலவினை
     நாகமதை கழுத்தினில் நல்லாரமாய் அணிந்தே
சூலமதைத் தாங்கியே சக்தியை தன்னுடலில்
     சேர்த்திட்ட சோதியா அர்த்தநாரீசுவரனா?
கோலவிழி முக்கண்ணனா? குந்திய நமச்சிவாயமா?
     கோயிலின் லிங்கமா? காத்தருள அமர்ந்தாயோ?

                                            ராதாகவி

வியாழன், 8 ஜனவரி, 2015

பொங்கலோ பொங்கல்



பொங்கலோ பொங்கல்

கங்கையும் காவிரியும் கண்ணெதிரே இணையுமா
       களங்களில் தீவிரவாத களபலிகள் ஒயுமா
எங்கும் ஈசலாய் எழுகின்ற இலவசங்கள்
       எம்முள் உழைக்கும் எண்ணத்தையே நீக்கிடுமா
ஒங்கும் அறிவியல் ஒளியுலகை காட்டுமா
       ஒப்பிலாகல்வியும் ஒதுக்காமல் கிடைக்குமா
மங்கலப் பெண்சிசு மானிலத்தில் வளருமா
       மண்ணின் மைந்தனென்ற மயக்கம் தீருமா

செங்கரும்பு புத்தரிசி சோத்துப் பொங்கலிட்டு
     செவ்வாயில் பொங்கலோ பொங்கலென பூரிக்கும்
உங்களுக்கு வாழ்த்து உவந்து நான் கூற
     உள்ளெழும் கனவுகள் உருவாகும் என்றே
தங்கிடும் நம்பிக்கை தருகின்ற எதிர்பார்ப்பு
     தண்ணீர் சூழ்ந்திட்ட தரணியில் நடக்குமா
எங்கும் உணர்வுகள் எழிலாக செயலாகின்
     எல்லோருக்கும் அன்றே எந்தன்
                            பொங்கல் வாழ்த்து
                              ராதா கவி

செவ்வாய், 9 டிசம்பர், 2014

என்னைபற்றி



என்னைபற்றி
* கோவை சிங்கையில் பிறந்தவர். வயது 78.
* ஓவியம், பின்னல், தையல் கலைகள், கவிதையென நுண்கலைகளில் இளமை முதல் நாட்டம்.
* ஆசிரியையாகத்தான் வரவேண்டும் என விரும்பி கல்விப்பணியில் நுழைந்து முதன்மை கல்வி அலுவலராக படிப்படியாக உயர்ந்து, ஒவ்வொறு நிலையிலும் மனமாறப்பணியாற்றிய மனநிறைவு.
* பணி ஒய்வு என் கவிதைபயிருக்கு உரமிட்டு மழை பொழிகின்றது.
* அந்தாதிக்கவிதை எழுதுவதில் ஈடுபாடு
* திருவெள்ளறை அமமான் ஸ்ரீ செளம்யநாராயணன் ஆச்சாரியார் முன்னுரை தந்து ஆசிகளுடன் "108 திவ்ய தேசங்கள்", "ஸ்ரீ உலகளந்தபெருமாள் கோவில் வரலாறு", என்ற அந்தாதிக் கவிதைகள் அச்சில் வந்து அரங்கேறியவை.
* பாரதி நுற்றாண்டு விழா காலத்தில் "பாரதி நோக்கில் பெண்மை" என்ற என் உரைநடைநூல் வெளியிடப்பட்டது.
* மறைதிரு குண்றக்குடி அடிகளார் 1993ல் புதுகோட்டையில் முதன்முறையாக மாவட்ட அளவில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் எனது வரவேற்பு கவிதையை பாராட்டி "கவிக்குயில்" என பட்டமளித்து கவிபாடும் முதன்மைகல்வி அலுவலர் நம் மாவட்டத்துக்கு அமைந்தமைக்காக நாம் பெருமைபடவேண்டும்". என கூறிய சொற்களும், அந்தநாளும் என் வாழ்நாளில் மறக்க முடியாத இனிய தருணம்.
* எனது வெளிநாடு, உள்நாடு பயணங்களில் கண்ட காட்சிகள், பழகிய மனிதர்கள் நிகழ்வுகள் என யாவற்றையும் கவிதையாக்கி ரசிப்பது என் பொழுதுபோக்கு.
* சமஸ்கிருதத்தில் உள்ளபல கடவுள் ஸ்லோகங்களை தமிழ் கவிதையாக்கியுள்ளேன்.
* விஷ்ணு சகஸ்ரநாமம், கூறும் அனைத்து நாமாக்களையும், அதன் பொருளோடு சுமார் 1008 அந்தாதி கவிதையாக பாடி வைத்துள்ளேன்.
* தினமலர் "ஆன்மீக மலர்" தெய்வீக படங்களுக்கு வாரம்மொரு கவிதை எழுதி 3 தொகுப்புகள் தயாரித்து வைத்துள்ளேன்.
* காவடி சிந்து வகையில் "பக்தி பாடல்கள்" என்ற தலைப்பில் ஒரு கவிதை தொகுப்பினை நடன விற்பன்னர் திரு. நரசிம்மாச்சாரி அவர்கள் தனது நடன நிகழ்ச்சியில் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என பாராட்டியது நினைவில் நிற்கும் நிகழ்வு.
* ஏட்டினில் வைத்து நானும் நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் மட்டுமே அறிந்த கவிதைகளை ஆர்வம்மிக்கவரோடு பகிர்ந்து கொள்ளவே இந்த ஆரம்ப முயற்சி.
* உங்களோடு பின்னர் மேலும் பகிர்ந்து கொள்வேன்.

காப்பு



காப்பு
ஓம்எனும் பிரணவத்தின் ஓங்கார வடிவாகி
    ஒடித்த தந்தமதில் ஓர் பாரதம் வடித்திட்ட
    தும்பிக்கை நாயகனே துவக்கத்தின் முதல்வனே
    துளிராகி என் கவிதை தழைத்திடவந்திடுக
     கம்பனுக்கு கால்சலங்கை கலகலவென அசைத்து
            கவிஞனுக்கு துணையாகும் கலைவாணி அறிவரசி
               நம்பிக்கை எனக்கருள நற்கவியில் வந்திடுக
    நயமான தளமதில் நயம்பட விளங்கிடவே!

விளங்கும் மகரசோதி வீற்றிருக்கும் சபரிகிரி
       விண்ணதிரும் சரணமாகி விசுகின்ற மணமாகி
களங்கம் நீக்கியெம் கைபிடித்து ஏற்றிவிடும்
       காந்தமலை பாலகனே கவிதையில் வந்தருள்க
   தளங்களில் தேன்கவி தொடுத்திட புகும்வேளை
                 தமிழாகி மலராகி தாயாகி அன்பாகி
உளம்கனிய கவிமலர் உரைத்திட வழிதருக
    ஊரோர் பார்த்தாலே உளமாற ஓர் நன்றியே!