புதன், 29 ஏப்ரல், 2015

சீறி வந்த சிங்கமே!



சங்கு சக்கரம்இன்றி செரிவான கூர்நகங்கள்
  சிலிர்க்கும் ஆயுதமாய் சீறிவந்த சிங்கமே
தங்கும் மனிதனும் தளராத மிருகமும் இணைந்த
  தசாவதாரத்தின் தலைமையென தரணியில் வந்தவனே
பொங்கி எழுந்து பெருந்தூணில் மறைந்திருந்து
  பாலகனின் நம்பிக்கைக்கு புத்துயிர்தர பிளந்துவந்து
ஒங்கிய தீமையை ஒருகணத்தில் ஒழித்து
  ஒளியான கருணையை உலகுக்கு காட்டிநின்ற

மங்கல தெய்வமே மகாலட்சுமி மணாளனே
  மறுபடியும் நீவந்து மாபூமியில் முளைத்திடும்
எங்கும் பரவிநிற்கும் எண்ணற்ற தீமையழிக்க
  எல்லோரும் பிரகலாதனாய் ஏங்கியே அழைக்கிறோம்
ஒங்காரத் திருவுருவே ஒப்பிலா பேரழகே
  ஒடிநீவர கூடிநின்று ஒன்றாக வேண்டுவமே
தங்கத்தேவி தன்னோடு தாழ்த்தாது வருவாயே
  துயர்சூழ் உலகினை தாயாகி காப்பாயே!


ஆன்மிக மலர் அட்டைபட கவிதை
ஏப்ரல் 28 நரசிம்மர் படம்

வியாழன், 23 ஏப்ரல், 2015

ஜெய ஜெய சங்கர



காலடியில் அவதரித்து கால்களால் எண்திக்கும்
  கணமும் அயர்வின்றி காலமெலாம் சுற்றிவந்து
கோலமிகு நான்மறைகள் குறைவின்றி கற்றுணர்ந்து
  கேள்வியும் விளக்கமுமாய் அறிவின் வேள்வியாகி
பாலசந்யாசி உமக்கு பாசமுடன்தந்த நெல்லிக்கனி
  பொன்மழையாய் பொழிந்திட கனகதாரா ஸ்துதிபாடி
சீலமிகு அன்னைக்கு சிதைமூட்டி சொல்காத்து
  சீர்தூக்கி உலகில்பக்தி சித்தாந்தம் தழைத்திட
பலநூறு நூல்கள் பாமரருக்கும் தந்து
  புலமைக்கு வித்தாக புவிவந்த வித்தகனே!

எங்கும் தெய்வநெறி எழிலாக மணம்வீச
  எழுப்பிய சங்கரபீடம் என்றென்றும் ஒளிவீச
தங்கும் பிறப்பில் தாழ்வுஏற்றம் இல்லையென
  தாய்போல் அனைவரையும் தன்கையால் அணைத்து
ஒங்கும் வாழ்வினுக்கு ஒப்பிலா உயர் நெறிகாட்டி
  ஒங்கார சிவம் ஒளிந்திருப்பான் அன்பில்என
பொங்கும் உலகுக்கு புதுவழி வகுத்தவரே
  புனிதமான கங்கையில் புனிதமாகி சென்றவரே
நீங்காது நிற்காதுஒடும் நதியாகி எமக்கு
  நல்வழி காட்டும் உம் நற்பாதம் பணிவோமே!

ஸ்ரீ சாயி பிரசாதம்



புட்டப்பர்த்தி தன்னில் பிறந்த புதுமலரே
  பூவுலகு வாழவந்த பொன் மழையே
தட்டிஎழுப்பி தவம் காட்டிய இறைத்தவமே
  தாய்பசுவென அன்பை தானாகப் பொழியும்தாயே
மட்டிலா மகிழ்ச்சி மனதின் உள்ளே என்றே
  மாந்தருக்கு புகட்டிய மாபெரும் ஞானியே
கூட்டி வைத்து கோடான கோடிபேரை ஒரு
  குடும்பமென கொள்கைதந்த குணக்குன்றே

வட்டமிட்டு பூமியெங்கும் வாழ்வளித்த சத்யசாயி
  வானுலகு நீசென்றாலும் வந்தெமைக் காக்கின்றாய்
சுட்டும் இடமெல்லாம் சுந்தரப் புன்னகை
  சுடர்விடும் கருணை சொட்டுகின்ற கண்கள்
விட்டுவிட்டு நான்நினைக்க விடாதுஎனைத் தொடர்வாய்
  வாழ்கின்ற தெய்வமே வாழ்வியல் தத்துவமே
கூட்டுக் குஞ்சுகள்யாம் கூவியுனை அழைப்போம்
  கால்களால் நடந்துவந்து கைகளால் எமைக்காப்பாய்
தொட்டு உன்விரல்என் தலைமீது படரும்
  தூயவனே உன்அன்பின் தாக்கத்தை நான் அறிவேனே!

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

Thanks



This is my 101st post since i opened my Blog "radhatamilkavi" in dec 2014. all the poems are on pictures of deities printed on the cover of "anmigamalar/Dinamalar (weekly) for the past 3 years.

My special thanks to Mrs. vasupradha and amirdha for opening this Blog for me and my grand son G.S.Siddarth for doing the tamil typing of all my kavithai. it is my future endevour to bring out my 'kavithai' in print form.

My thanks to all who took time to read them your appreciation comments and suggestions will be of great help for me to continue my literary persuit with the blessing of hard iyappa

                                                                         Radhakavi

அட்சய திரிதியை



வளரும் குறையாது வளமிகு அட்சயாஎனில்
  வளர்பிறை திரிதியை வாரிவழங்கும் நன்னாள்
வளரும் அட்சயதிரிதியை வாங்கி வழங்கி மகிழும்நாள்
  வலம்புரி கணபதி மாபாரதம் எழுதியநாள்
களம்புகும் பலராமன் கண்ணனோடு அவதரித்தநாள்
  கணத்தில் குபேரன் செல்வஅதிபதி ஆனதிருநாள்
துளபமாலை கண்ணன் துளிஅவல்உண்டு அட்சயஎன
  துன்பம்நீங்கி குசேலன் தொடர்செல்வம் பெற்றநாள்

களபம்விரி திரெளபதிக்கு கானகத்தில் அட்சயபாத்திரம்
  கண்னனால் பெருகிமுனி கடும்பசி நீக்கியநாள்
விளங்கும் நற்செயல் வீரியமுடன் செயல்படும்
  விதைக்கின்ற நல்விதைகள் விருட்சமாகி பலன்தரும்
களங்கமிலா வாழ்வு கண்ணெதிரே கைகொடுக்கும்
  கனிவான இன்சொல் கருத்துக்களை மாற்றும்
உளமாற தானம்செய் உன்னால் முடிந்ததை
  உன்னத அட்சயதிரிதியை உயர்த்திடும் உம்செயலையே!

திங்கள், 20 ஏப்ரல், 2015

நூறாவது கவிதை - நன்றி



நன்றிஒன்று நான்செல்வேன் நானறிந்த கவிதையினை
  நயந்து படித்து நன்பொழியால் பாராட்டிய
என்னருமை நண்பர்கள் ஏற்றமிகு உறவினர்கள்
  எனக்காக ஒர்பகுதி எழிலாக துவக்கிய
சின்னவள் வசுமதி அமிர்தாவுக்கு சிறப்பான நன்றி
  சலிக்காமல் தட்டச்சில் சரசரவெனத் தட்டி
கண்மூடி திறக்குமுன் முகநூல் கவிமுகத்தில்
  கருத்தோடு பதிவேற்றிய கண்மணி சித்தார்த்துக்கு ஒர்நன்றி

ஆன்மீகமலர் முகப்பில் அணிசெய்த கடவுளர்க்கு
  அலங்கார கவிதையால் அணிவித்துப் பார்க்க
அன்பின் மிகுதியால் ஆண்டுகள் மூன்றில்
  அழகாய் சேர்த்தவை அளித்துப் பகிர்ந்தேன்
இன்றுபதிவு செய்தேன் இனியநூறாவது கவிதை
  இனிதே தொடர்ந்திட இணைகிறேன் உம்மோடு
என்றும் உம்சொற்கள் எந்தனுக்கு ஊக்கம்
  என்றென்றும் நன்றி! எல்லோருக்கும் நன்றி!!

                                         ராதாகவி

திருவில்லிநகர் திருப்பாவை



திருவல்லி நகர் வளர்ந்த தெய்வமகளே
  திருமாலை வேண்டி நோன்பிருந்த தவமே
மருவிலா மாலையைத் தான்சூடி மகிழ்ந்த கொடியே
  மார்கழிப் பாவைதந்த முழுமதிச் சுடரே
திருமணத்தை கனவில்கண்டு முடித்த கண்மணியே
  திருமகளே ஆழ்வார் தேடிஎடுத்த மகளே
பெருமையை பெண்மைக்கு பாடிவைத்த மலரே
  பாவைபாடி பதம்பணிவோம் என்றும் யாமே!