வியாழன், 23 ஏப்ரல், 2015

ஜெய ஜெய சங்கர



காலடியில் அவதரித்து கால்களால் எண்திக்கும்
  கணமும் அயர்வின்றி காலமெலாம் சுற்றிவந்து
கோலமிகு நான்மறைகள் குறைவின்றி கற்றுணர்ந்து
  கேள்வியும் விளக்கமுமாய் அறிவின் வேள்வியாகி
பாலசந்யாசி உமக்கு பாசமுடன்தந்த நெல்லிக்கனி
  பொன்மழையாய் பொழிந்திட கனகதாரா ஸ்துதிபாடி
சீலமிகு அன்னைக்கு சிதைமூட்டி சொல்காத்து
  சீர்தூக்கி உலகில்பக்தி சித்தாந்தம் தழைத்திட
பலநூறு நூல்கள் பாமரருக்கும் தந்து
  புலமைக்கு வித்தாக புவிவந்த வித்தகனே!

எங்கும் தெய்வநெறி எழிலாக மணம்வீச
  எழுப்பிய சங்கரபீடம் என்றென்றும் ஒளிவீச
தங்கும் பிறப்பில் தாழ்வுஏற்றம் இல்லையென
  தாய்போல் அனைவரையும் தன்கையால் அணைத்து
ஒங்கும் வாழ்வினுக்கு ஒப்பிலா உயர் நெறிகாட்டி
  ஒங்கார சிவம் ஒளிந்திருப்பான் அன்பில்என
பொங்கும் உலகுக்கு புதுவழி வகுத்தவரே
  புனிதமான கங்கையில் புனிதமாகி சென்றவரே
நீங்காது நிற்காதுஒடும் நதியாகி எமக்கு
  நல்வழி காட்டும் உம் நற்பாதம் பணிவோமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக