செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

திருமகளே! லட்சுமியே!



திருமகளே! லட்சுமியே!
              
அலைகடல் மீதுதித்த அழகின் சுடரே
     கலைமதி சந்திரனின் கண்நின்ற சோதரியே
           விலையிலா அமுதமுடன் விளைந்திட்ட சுவையே
          நிலையான செல்வமதை நாளுந்தரும் செல்வியே

                    செந்தாமரையில் வீற்றிருக்கும் செல்வத்தின் அதிபதியே
                    சிந்தாமணியே பொற்காசு சொரிகின்ற செங்கரமே
                    தந்தக் கரங்களில் தாமரை மலர்ஏந்தி
                    மந்தகாசம் புரிகின்ற மந்தாகினி வந்தருளே!

         மன்னர்தம் மகுடத்தில் மகுடலக்ஷமி ஆகிடுவாய்
         முன்னவன் திருமார்பில் மகிழ்ந்தே வீற்றிருப்பாய்
              என்னேரமும் உந்தனையே என்னுள்ளே வைத்திடுவேன்
      புன்னகையுடன் கடைக்கண பார்வை தந்தருளே!

விஷ்ணு ரதம்



விஷ்ணு ரதம்
               விணைதீர்க்கும் விஷ்ணுரதமாகி வைகுண்டமதில்
                   விஷ்ணுவுக்கு தொண்டு விரும்பிச்செய்ய முதன்மையிடம்
               தனைமறந்து கிடந்தும் தானே இருந்தும் நின்றும்
                   தன்னிகரிலா பெருமானைக்காண தனிகருடன் அனுமதி
               வினதை கஸ்யபர் பெற்ற வேகமிகு செல்வன்
                   வளமான ஆவணிபஞ்சமி வளர்பிறையில் பிறந்தவன்
               வானில் பறக்கும் வெண்கழுத்து  கருடனாக உயர்ந்து
                   வானவர்  வணங்கும் பக்ஷிராஜன் வரமருள்கவே!
             
               ஆன்மிகமலர் 18-8-15                     ராதாகவி
                          
                                



நாகலிங்கம்



நாகலிங்கம்
  

             கண்ணுதல் கடவுள் கங்கைதனை சூடியவன்
                கழுத்து சிரசு கைகளில் ஆபரணமாய்
            எண்ணற்ற நாகங்கள் எளிதாக அணிபவன்
                எடுத்தியம்ப இயலாத எதிர்வரும் துன்பங்கள்
            கண்காது மூக்குவாய் மெய்யெனும்  ஐம்புலங்கள்
               கணக்கிலா தீச்செயலில் கலக்கமின்றி   ஈடுபடின்
             மண்மேல் விஷத்தை கக்கிடும் நாகமாகும்
                 மனதால் ஐம்புலனை மகிமையுடன் அடக்க
             கண்கவரும் ஆபரணமாய் கருநாகம் மாறிடும்
                 காணும் நாகாபரணம் அணிந்திட்ட சிவதரிசனம்
             எண்ணிலா மனத்துயர் ஏற்றமிலா தீய ஆசை
                 எல்லாம் நீங்கியே இன்பவாழ்வு தந்திடுமே

ஆடிப் பூரத்து அழகிய பூவே



ஆடிப் பூரத்து அழகிய பூவே!

பூவனம் தன்னில் புனிததுளசி செடியருகில்
    பூவாகி நீவந்தாய் பெரியாழ்வார் மகளானாய்
பூமாலை சூட்டியே பூவையே நீமகிழ்ந்தாய்
     பாமாலை கேட்டே பரந்தாமன் கைபிடித்தான்
       பூவையரோடு நோன்பிருந்து பூரத்தில் பிறந்தவளே
    பூலோக நாயகனை புவியில் தானடைந்தாய்
    பூவிழிகள் கண்டநின் புதுக்கனவை வண்ணமாய்
            பூமகளே வாரணமாயிரமாய் பண்போடு அருளினாயே!

ஆன்மிக மலர்                அட்டை பட கவிதை
30.7.16                                              ராதாகவி

சக்குளத்துகாவு பகவதியே



சக்குளத்துகாவு பகவதியே!

எட்டுக் கைகளில் எடுத்திட்ட ஆயுதங்கள்
                    எழில் சக்கரம் எடுத்தூதும் சங்கம்
                  வெட்டும் அரிவாள் வீரியமுடன் சூலம்
வில்லும் அம்பும் வெலும் திரிசூலமும்
பட்டென விளங்கும் பளிங்கான அபயகரம்
      பழமான எலுமிச்சை பாவையின் திருமாலை
      பொட்டுடன் நெற்றிக்கண் பொலிகின்ற தோற்றம்
     பூமியில் பக்தர்கள் போற்றுகின்ற புதுவடிவம்
      கோட்டயம் சக்குளத்து காவுதனில் எழுந்தருளும்
       கோமகளே பகவதியே காலடியில் பணிவேனே!