திங்கள், 30 ஏப்ரல், 2018

மே தினம்

                                                           மே தினம்

1. கல்லிலும் முள்ளிலும் கதிர்புகா கானிலும்
          கடுகிஏறும் மலையிலும் கடினப் பாறையிலும்
      அல்லும் பகலும் அலை ஒயா கடலடியினிலும்
            அசையும் காற்றைக் கடந்து அண்ட வெளியிலும்
    வெல்லும் கைகள் வழிப்போடு பணிசெய்யும்
             வாட்டும் குளிரிலும் வரைமுகட்டில் காத்திருக்கும்
 வில்லாக வளைந்தும் வேர்வை சிந்தியும்
      விவாதம் பேதம் மதம் வேலிகள் கடந்தும்.

2. கைகளில் எடுத்து கனமிகு ஆயுதங்களில்
       கருவாகிப் பிறந்திடும் கனரக பொருட்கள்
கைகளில் அடங்கும் குண்டூசி முதல்
          கடல் கடந்து தாக்கும் கைவண்ண ஊர்திகள்
       கைகளில் மாலை கட்டி கடவுளை ஏற்றிடும்
             காலைமுதல் மாலைவரை கணநேர ஒய்வின்றி
       கைகளை உயர்த்திடும் கனவின் நாயகர்களே
               கைகூப்பும் வாழ்த்துக்கள் கவின்மிகு மேதினத்தில்

                                                                                                                               ராதாகவி
                                                                                                                                கோவை

திங்கள், 15 ஜனவரி, 2018

ஏற்றிட உன்னையன்றி!

21. முடிப்பு
ஏற்றிட உன்னையன்றி!

  ஏற்றிட உன்னையன்றி எனக்கோர் துணையில்லை
 எந்தன் கோரிக்கை எளிதாக முடித்திடுவாய்
                 பற்றுநீக்கி பூதநாதா பாசமுடன் ஏற்றிடுவாய்
         பவனியில் வாழ்வினை பழுதின்றி முடித்துவிட்டேன்
                 குற்ற உணர்வில்லை குறையேதும் இல்லை
    குறுகுறுக்கும் உள்மன உடல்வலி குறுகிட நீக்கி
சற்றும் தாமதமின்றி சன்னிதானம் அழைத்தேக
                    சடுதியில் வந்திடுக சபரிமலை ஐயப்பா!


பெங்களுர்                                                  "ராதாகவி"
30.11.17                                                      கோவை

அருளாகி...

20. அருளாகி...

அருளாகி ஹரிஹரன் அருமை மகனாகி
           அண்டங்கள் யாவையும் அன்பால் ஆள்பவனே
       உருவான சாஸ்தாவே உயர்சபரி அமர்ந்தவனே
        உயர்ந்து எழுந்த மகிஷியை அழித்தவனே
        மருவிலா மாளிகைபுர மஞ்சுமாதா ஆக்கியவனே
     மனதில் புகுந்து மயக்கம் தீர்த்தவனே
 கருவாகி எந்தன் கவிதையில் வந்தவனே
       கலக்கம் நீக்கி கருணையுடன் ஏற்பாயே!

ஆட்கொள்ள...

19. ஆட்கொள்ள...

ஆட்கொள்ள வருவாயே ஆனந்த சித்தனே
          ஆழ்மனதில் புகுந்தே அமைதியைத் தருவாயோ
             ஒட்டுவாயோ என்நோயை ஒப்பிலா வலிமை தருவாயோ
        ஒரத்தில் வந்துவிட்டேன் ஒளிதர வாராயோ
சிட்டுக் குருவியாய் சிறகடித்து பறந்துவிட
     சேர்ந்த என்முன் செல்வனே வருவாயே
   பட்டென ஆன்மாவை பாதத்தில் சேர்த்துவிடு
              பிறவியின் பயன்முடிய பற்றுநீக்கி அருள்வாயே!

தவிர்க்க முடியாத...

18. தவிர்க்க முடியாத...

தவிர்க்க முடியாத தினமும்வலி தொடரும்
     தாங்கும் சக்தியின்றி தானேவிழும் கண்ணீர்
                   தவிக்க வைத்து துயர்பட வைக்கின்றாய்
தங்கி உதவிட தளமில்லா கட்டிடமாய்
                   புவியில் எழுப்பி பரிதவிக்க விடுகின்றாய்
        பிறந்தபணி முடிந்திட பக்கம்வந்து காப்பாயோ?
   கவிதையில் புலம்பி கண்ணீர்விட வைப்பாயோ
      கலியுக வரதனே கணத்தில் ஆட்கொள்வாய்

வாராத மழையாக

17. வாராத மழையாக

வாராத மழையாக வந்துவந்து குளிர்வித்தாய்
      வாழ்வின் இறுதியில் நல்லமைதி தாராயோ?
                  காராம் பசுபோல் கருணை காட்டுவாயோ?
       கணமும் மனமதை கலங்காது வைப்பாயோ?
                  நீராகக் கண்ணீர் நீண்டுவழியே துடிப்புகள்
           நினைக்காத போதும் நிணைவில் வரும் தனிமை
                  வேராக நீயிருந்து வேதனை தனைநீக்கி
         வாழ்வின் இறுதியில் வெறுமை தவிர்ப்பாயோ!

அறியேன்!

16. அறியேன்!

அறியேன் அன்பான அகிலம் முன்வருமா?
        அன்பைக் காணாது அன்பை உணர்வேனா
                    அறிந்த கதைகளை அங்கங்கு மறந்து
       ஆதரிக்க மாட்டாயோ அடிக்கடி புலம்பல்
எரிமேலி சாஸ்தாவே ஏனிந்த பாராமுகம்
       என்னை ஏற்றபின் ஏனிந்த மனக்குழப்பம்
                    புரியாத தவிப்பு பூமியில் இவ்வாழ்வு
        பொறுத்தது போதும் பூதநாதா வாராயோ?