வியாழன், 19 மார்ச், 2015

சோட்டாணிக்கரை பகவதி



பால் வடியும் முகமோடு பாலகியாய்
  பாவங்கள் போக்கிடும் தேவியாய்
சேல் விழிகள் சிங்காரப் புன்னகைபுரிய
  சங்கோடு சக்கரமும் சிறுகை ஏந்த
வெல்லும் வழியே இங்கே சரணடையென
  வலக்கை வழிகாட்ட இடக்கை அருள்புரிய
செல்வியாய் வீற்றிருக்கும் சோட்டாணிக்கரை பகவதியே
  சொல்வேன் என்றும் அம்மே நாராயணி
                       தேவி நாராயணி என்றே!

திங்கள், 16 மார்ச், 2015

முகிலோ? மரகத மேனியோ?



முகிலோ மரகத மேனியோ நிலவான
  முகமதில் பூத்திருக்கும் புன்முறுவலோ
வாகாய் முடித்திருக்கும் வடிவான கொண்டையோ
  வேய் குழலோ மீட்டும் மெல்லிய விரலோ
மோகனப் புன்னகையோ மயக்கும் பூவிழியோ
  மேனியில் தவழும் பூச்சரமோ
தகவாய் மேனியைத் தழுவும் துகிலோ
  தாளமிடும் மென்பாதச் சலங்கை ஒலியோ
ககனமதில் எந்தன் கல்நெஞ்சத்தையும்
  கனிந்து உருகச்செய்து கணத்தில் உள்ளே
உகந்து புகுந்து உருக்குவதும் எதுவோ
  உணர வல்லேன் உன்னடியே பணிகின்றேன்!

ஸ்ரீ சனீஸ்வர பகவான்



காகம் தேர்இழுக்க கையிலம்பு வில்லிருக்க
  கருநீல கண்டன்பின் ககனமதில் ஈஸ்வரனாகி
நாகமோடு நவக்கிரக நாயகரில் ஒருவராகி
  நற்சோதி ஆதித்யன் நல்சாயா மகனாகி
வேகம் தவிர்த்து விண்வெளியில் சுற்றிவந்து
  வேற்றுமை இன்றியே வேந்தன்முதல் ஆண்டிவரை
இகத்தினில் பற்றியே இன்பமும் துன்பமும்
  இம்மியும் பிசகாது இயக்கிடும் மந்தகனே

அகத்தில் தூய்மையும் அகலோடு எள்ளும்
  அன்போடு ஏற்றினோம் ஆழ்நீலப் பூச்சுட்டி
தகர்த்திடு துன்பமதை தயையோடு காத்திடு
  தாங்கிட இயலாது தயாளனே உன்பார்வை
நிகரிலா தெய்வமே நானிலமதில் உன்போல்
  நல்லவை கொடுப்பாரும் கெடுப்பாரும் இல்லை
பகலவன் மைந்தனே பற்றி நீ வரும்வேளை
  பாசமுடன் காத்திட பக்தியுடன் வேண்டுகிறோம்

வருகிறாள் வரலட்சுமியே!



மலையில்  பிறந்து  வெளியில் தவழ்ந்து
  மாகடலில்   கலக்கும் மாநதிகள்  போல்
அலையில் தோன்றி அழகுமலரில் நின்று
   அனைவருக்கும் அருளிட அமுதாக வந்ததேவி
கலையாகி  கண்களில் கடைக்கண் அருள்காட்டி
    கரங்களில் கமலமும் கொட்டும் கனகமும்
நிலையாக தந்தெமை நித்தியம்   காத்திட
    நல்வெள்ளியில் நயமாக நாடிவருவாய் வரலட்சுமியே!

ஞாயிறு, 15 மார்ச், 2015

குன்றமர்ந்த ஞானகுரு



கார்த்திகை நோன்புக்கு கருவான உருவே
  கறுப்புநீல ஆடைக்கு கனிவுதந்த திருவே
மார்கழிநீங்க தையில் மகரசோதியான வரமே
  மலைமேல் அமர்ந்த மாசபரி குருவே
பாரினில் சரணம் பாடிவரும் பக்தர்
  பார்வைக்கு சோதியான பரவசத் தருவே
கோரிக்கை நிறைவாக்கும் குறையற்ற நிறைவே
  குழந்தையாய் தெய்வமாய் குன்றமர்ந்த ஞானகுருவே!

வேலாயுத முருகா!



அபயம் தரும் பொற்கரத்தில் ஆற்றல்மிகு அருள்வேல்
  ஆறுமுகம் பெயர்கொண்டு அரவணைக்கும் அழகுவேல்
தபம் ஏதும் செய்தறியா தடுமாற்றம் நீக்கும்வேல்
  தரணியிலே தவக்கோலம் தாங்கிநிற்கும் பழனிவேல்
கோபம்கொண்டு சூரனை கொன்றுவென்ற வீரவேல்
  கோலமிகு மயிலாக்கி சேவற் கொடியாக்கிய கருணைவேல்
பாபம்நீக்கி அறுபடை வீட்டில் பாசம்தரும் பக்திவேல்

  பாலனாய் குமரனாய் பரமயோகியாய் காக்கும் ஞானவேல்

ஒர் ஐந்து முகம் ஈர் ஐந்து கரம்


கொஞ்சும் மொழி குமரனுக்கு மூத்தவனே
  கொண்டாடும் சாஸ்தாவுக்கு முன்நிறை கணபதியே
நஞ்சுண்ட நீலகண்டனின் திருமகனே
  நயனவிழி உமையவள் உளம்மகிழ் பிள்ளையே
பஞ்சணையாய் பாம்பனையில் துயில் பரந்தாமனின்
  பாசமிகு மருகனே பஞ்சமுகத்தோனே
தஞ்சமென வருவோர்க்கு ஈரைந்து கரங்களில்
  தாங்கிடும் சூலம்வேல் தகதகக்கும் கத்திகலசம்
விஞ்சும் கதை கட்கம் விளங்கும் செந்தாமரை
  விரும்பும் மோதகம் விரல் உடைத்த தந்தமும் கொண்டு
அஞ்சேல் எனக்கூறி அபயம்தந்து காத்திடுவாய்
  அறிவும் ஆயுளும் ஆரோக்யமும் அளவிலா செல்வமும்
நெஞ்சினில் அன்பும் நீங்காத பக்தியும் தந்தே
  நாடும் இடமெலாம் நிறைந்து எமக்கு அருள்வாயே!