செவ்வாய், 7 ஏப்ரல், 2015

தினமும் விளக்கேற்று



திரி எனும் பாசம் பிணைத்திடும்
  தேடிய செல்வம், உறவு எனும் கயிறு கட்டிடும்
எரிந்திட ஊற்றும் எண்ணெய் இயங்கும்நட்பு
  என்றும் மனிதவாழ்வில் பற்றும் பிசுக்கு
விரிகின்ற சோதியாய் விளங்கிடும் நெருப்பு
  விரைந்து திரியும் எண்ணையும் கரையும் பாங்கு
கரியாகிவிடும் பந்தமும் பாசமும் நீங்கிட
  கடவுள் எனும் ஞானசோதியில் கலந்து மகிழ்வோமே!

ஸ்ரீ பகளாமுகி தேவி



பொன்னிற மேனியும் பொலியும் நெற்றியில்
  பூரிக்கும் திருநீறும் செந்திலகமும்
மின்னிடும் மகுடமும் மிளிரும் பிறைநிலவும்
  மாந்தளிர் அங்கமதில் மல்லிகை மாலையும்
சென்னிய பாசமும் சிலிர்க்கும் கட்கமும்
  செந்நிறக் கரங்களில் செந்தாமரை மலர்களும்
தன்னிகரிலா தங்கவண்ண ஆடைஅணியும்
  தகைவான தாமரைப் பாதங்களும் என்
சென்னிதனில் வைத்தேன் சீர்மிகு பகளாமுகிதேவி
  சூரியமங்கலம் வாழ்அரசி சீரிய வரமருளே!

ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

என்ன வேண்டும் எனக்கு?



1. என்ன வேண்டும் எனக்கு ஏனறியேன்?
    எடுத்தியம்ப மொழி என்னுள்ளே இல்லையா?
  முன்னே விளக்கேற்றி முதல்வன் முன்நின்று
    முன்னூறு விருப்பங்கள் முடித்துவையென வேண்டுகிறேன்!
  கனன்று நெஞ்சம் கனலாகித் தகிக்க
    கண்ணீர் விடுகின்றேன் கதறி அழுகின்றேன்
  மென்மையான சந்தணம் மணக்கும் குங்குமம்
    முகத்தில் திருநீறென மூன்றுபொட்டு வைக்கின்றேன்

2. புன்னகைக்கும் புதுப்பூவை படம்தோறும் சூட்டிவைத்து
    பழக்கத்தின் பயிற்சி பலதெய்வப் பாடல்கள்
  பின்னேவாய் ஒலிக்கும் பிறழாமல்தினம் தொடரும்
    பெற்றஉற்ற செல்வங்களுக்கு பார்த்துநினைத்து வேண்டுவேன்
  சின்னதும் பெரிதுமாய் சீரான வரங்கள்
    சிறுசண்டை போடுவேன் சினந்து ஏசுவேன்
  முன்னேகொடுத்து வைத்தவள்என முன்னின்று கேள்விகேட்பேன்!
    மெளனியாய் மண்டியிட்டு முடித்துவைஎன மிரட்டுவேன்

3. நான்வேண்டுவன நடந்திட நாளும் குறித்திடுவேன்
    நிறைவேற வழிமுறைகள் நல்திட்டமும் தந்திடுவேன்
  என்னுள் எழுந்தவை என்முன் நிறைவேறுதலை
    எழுச்சியுடன் கண்டிடஎன் ஆயுளையும் முடிவுசெய்வேன்
  தன்னந் தனிமையில் தயைஎனபிறரை நாடாமல்
    தன்கையே உதவியாக தரணியில் வாழவேண்டும்
  என்னால் யாருக்கும் எண்ணத்தால் உடல்பொருளால்
    எத்தகைய தொல்லையின்றி என்னை ஏற்றிடுஎன்பேன்

4. மனமும் பேதலித்து மயங்கிடும் பிதற்றலென
    மோகனப் புன்னகையில் மோகினிபாலன் அமர்ந்திருப்பான்
  தினமும் புலம்பவிட்டு தியானத்தில் ஆழ்ந்திருப்பான்
    தாமரைஇலை நீராக தத்தளிக்கும் பேதைமனம்
  சொன்னதும் சொல்லாததும் சபரிசோதி தானறிவான்
    சென்றுவந்த பாதையில் சேர்ந்துவந்த தோழனவன்
  என்ன எனக்கு வேண்டும் எப்போதுதரவேண்டும் என்றறிவான்
    எளிமையாக சரணடை எங்கும் நிறைந்து காத்தருள்வான்!

வெள்ளி, 3 ஏப்ரல், 2015

மீண்டும் வசந்தம்?



1. காயந்த கிளைகள் கருப்பு வளைவுகள்
    கண்ணில் ஒர்இலையும் காட்சி தரவில்லை
  சாயும் மாலை செவ்வண்ண மேகம்
    சீரான ஒவியமாய் சருகான மரம்
  ஒய்வான பறவைகள் ஒரிருகரும் காகங்கள்
    ஒய்யாராமாய் உச்சியில் ஒலிஎழுப்பும் சத்தம்
  காயும் கனியும் கரும்பச்சை நிறமுமாய்
    கலகலவென அசைந்து காற்றிலாடிய மரமே!

2. இலை யாவும் இன்றுநீங்கி அந்திவான்
    இருட்டில் ஒவியமாய் இருக்கின்ற மரமே
  தலையான வாழ்வில் துள்ளிய மனம்
    தான்பெற்ற செல்வம் தனைநாடும் சுற்றம்
  அலைஒயா கடலென ஆர்ப்பரித்த வாழ்வு
    அகன்று சென்றன அனைத்தும் இன்று
  சிலையாகிய தனிமை சிந்தையில் தேக்கம்
    சிறுகிளை துளிர்க்குமா? சிறப்புகள் தொடருமா? 

மகிழ்ச்சி



மகிழ்ச்சி ஊற்றினை மாந்தர் தேடியே
  மாநிலம் எங்குமே மயங்கி அலையும்
மகிழ்ச்சி அடைய மனமது துணிந்து
  மாறான செயலையும் மனமுவந்து செய்திடும்
மகிழ்ச்சிதனை அடைந்தாலும் மனமது அடங்காது
  மயங்கும் போராடிப்பெற்ற மகிழ்ச்சியில் அதிருப்தி
மகிழ்ச்சியை மேலும் மனமது வேண்டும்
  மாகடலின் ஒயாத மாஅலைகள் போலவே
மகிழ்ச்சியின் நிறைவை மாற்றுஇடம் தனில்தேடும்
  மகிழ்ச்சி வேறிடம் மறைந்து இல்லையே
மகிழ்ச்சி பிறரை மகிழ்விக்க வளரும்
  மகிழ்ந்தவர் முகத்தின் மலர்ச்சியில் தோன்றும்
மகிழ்ச்சியை உன்உள் மனதினில் தேடு!
  மகிழ்ச்சி ஊற்று மளமளவெனப் பெருகும்
மகிழ்ச்சி எங்கும் மலர்ந்திடும் மலர்
  மகிழ்வோடு அதனை மாலையாக்கி சூடு!

புதன், 1 ஏப்ரல், 2015

உத்தரத்தின் நாயகனே!



உத்தமனாய் உலகினில் உத்தரத்தில் உதித்தவனே
  உண்மையின் உருவான உயர்வானின் சோதியே
வித்தகனே வேதப்பொருளே விழிகளில் வாழ்பவனே
  வேகமான பம்பையில் விளைந்திட்ட அமுதமே
புத்திரனாய் பாலகனாய் பந்தளம் நிறைந்தவனே
  பக்தருக்கு பலவடிவில் பரிவுதரும் பெரியோனே
புத்தம்புது அலையென புரண்டுஒன்றன் பின்ஒன்றாக
  புரட்டிடும் சலனங்கள் பாவத்தின் அறுவடையோ

மத்தால் கடைகின்ற மண்சட்டித் தயிரானேன்
  மாதவம் புரிபவனே மனஅமைதி தருவாயே!
நித்தம்உனை நிணைந்து நெஞ்சுருகி நிற்கின்றேன்
  நீயேகதியென நின்பாதமதில் நான்சரண் புகுந்தேன்
அத்தனையும் உன்னருள் அறிவேன் ஐயப்பா
  அன்பின் உணர்வுகளால் அசதிஉடற் சோர்வால்
இத்திரணியில் பொருளால் இனியவர் யாருக்கும்
  இனியதொல்லை ஆகாதுஎனை இறுதிவரை வாழவிடு!
பூத்திட்ட மலர்போல உன் பாதமதில் சேர்த்துவிடு!
  புவியில் வேண்டும்வரம் புண்ணியனே தந்துவிடு!

வெண்ணை உண்டவனே!



வெண்ணைத்தாழி உருட்டி விளையாடும் கோபாலா
  விண்ணகர வேந்தனே வேய்ங்குழல் கீதமே
கண்ணை உருட்டி கருத்தில் நுழைகின்றாய்
  கானத்தின் மோனத்தில் கனிந்துருக வைக்கின்றாய்
விண்மேக வண்ணனே வாயினில் வெண்ணையோடு
  வளைந்தாடும் குழலில் வண்ணமயில் இறகோடு
கன்னங்கள் சிவந்திட கனிவாயருகே கைசெல்ல
  கருநீல மேனியனே கால்கள் மண்டியிட்டு

மண்மேல் மழலையாய் மயக்கும் மாதவா
  மாதவம் செய்திட்ட மாதவள் யசோதை
கண்முன் களிநடனம் காணவைத்த மாமணியே
  கோகுலம் வாழவந்த கோமகனே குளிர்நிலவே
எண்ணங்கள் எதேதோ என்னுள்ளே எழவைத்து
  எத்தனைநாள் பார்த்திருப்பாய் எப்போது நீவருவாய்
மண்ணை உண்டு மாயங்கள் காட்டிநின்றாய்
  மனதின் அமைதிக்கு மாற்றங்கள் தாராயோ?