1. என்ன வேண்டும் எனக்கு ஏனறியேன்?
எடுத்தியம்ப மொழி என்னுள்ளே இல்லையா?
முன்னே விளக்கேற்றி முதல்வன் முன்நின்று
முன்னூறு விருப்பங்கள் முடித்துவையென வேண்டுகிறேன்!
கனன்று நெஞ்சம் கனலாகித் தகிக்க
கண்ணீர் விடுகின்றேன் கதறி அழுகின்றேன்
மென்மையான சந்தணம் மணக்கும் குங்குமம்
முகத்தில் திருநீறென மூன்றுபொட்டு வைக்கின்றேன்
2. புன்னகைக்கும் புதுப்பூவை படம்தோறும் சூட்டிவைத்து
பழக்கத்தின் பயிற்சி பலதெய்வப் பாடல்கள்
பின்னேவாய் ஒலிக்கும் பிறழாமல்தினம் தொடரும்
பெற்றஉற்ற செல்வங்களுக்கு பார்த்துநினைத்து வேண்டுவேன்
சின்னதும் பெரிதுமாய் சீரான வரங்கள்
சிறுசண்டை போடுவேன் சினந்து ஏசுவேன்
முன்னேகொடுத்து வைத்தவள்என முன்னின்று கேள்விகேட்பேன்!
மெளனியாய் மண்டியிட்டு முடித்துவைஎன மிரட்டுவேன்
3. நான்வேண்டுவன நடந்திட நாளும் குறித்திடுவேன்
நிறைவேற வழிமுறைகள் நல்திட்டமும் தந்திடுவேன்
என்னுள் எழுந்தவை என்முன் நிறைவேறுதலை
எழுச்சியுடன் கண்டிடஎன் ஆயுளையும் முடிவுசெய்வேன்
தன்னந் தனிமையில் தயைஎனபிறரை நாடாமல்
தன்கையே உதவியாக தரணியில் வாழவேண்டும்
என்னால் யாருக்கும் எண்ணத்தால் உடல்பொருளால்
எத்தகைய தொல்லையின்றி என்னை ஏற்றிடுஎன்பேன்
4. மனமும் பேதலித்து மயங்கிடும் பிதற்றலென
மோகனப் புன்னகையில் மோகினிபாலன் அமர்ந்திருப்பான்
தினமும் புலம்பவிட்டு தியானத்தில் ஆழ்ந்திருப்பான்
தாமரைஇலை நீராக தத்தளிக்கும் பேதைமனம்
சொன்னதும் சொல்லாததும் சபரிசோதி தானறிவான்
சென்றுவந்த பாதையில் சேர்ந்துவந்த தோழனவன்
என்ன எனக்கு வேண்டும் எப்போதுதரவேண்டும் என்றறிவான்
எளிமையாக சரணடை எங்கும் நிறைந்து காத்தருள்வான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக