புதன், 1 ஏப்ரல், 2015

வெண்ணை உண்டவனே!



வெண்ணைத்தாழி உருட்டி விளையாடும் கோபாலா
  விண்ணகர வேந்தனே வேய்ங்குழல் கீதமே
கண்ணை உருட்டி கருத்தில் நுழைகின்றாய்
  கானத்தின் மோனத்தில் கனிந்துருக வைக்கின்றாய்
விண்மேக வண்ணனே வாயினில் வெண்ணையோடு
  வளைந்தாடும் குழலில் வண்ணமயில் இறகோடு
கன்னங்கள் சிவந்திட கனிவாயருகே கைசெல்ல
  கருநீல மேனியனே கால்கள் மண்டியிட்டு

மண்மேல் மழலையாய் மயக்கும் மாதவா
  மாதவம் செய்திட்ட மாதவள் யசோதை
கண்முன் களிநடனம் காணவைத்த மாமணியே
  கோகுலம் வாழவந்த கோமகனே குளிர்நிலவே
எண்ணங்கள் எதேதோ என்னுள்ளே எழவைத்து
  எத்தனைநாள் பார்த்திருப்பாய் எப்போது நீவருவாய்
மண்ணை உண்டு மாயங்கள் காட்டிநின்றாய்
  மனதின் அமைதிக்கு மாற்றங்கள் தாராயோ? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக