ஞாயிறு, 6 நவம்பர், 2016

முத்தாக வந்த முதல்மூவர்

முத்தாக வந்த முதல்மூவர்
சித்தார்த்தி ஆண்டு சிறப்பான  ஐப்பசிதிங்கள்
      சீர்மிகு காஞ்சியில் சிங்கார திருவெஃகா
 புத்தம்புதிய பொற்றாமரை பொய்கையில் அம்சமாகி
      புத்தோணமதில் பிறந்து அவதரித்த பொய்கையே
நித்தம் அலை புரளும் நீள்மல்லை திருக்கடலில்
      நீலோற்பவ மலரினில் நீள்கதாயுத அம்சமாகி
முத்தான அவிட்டமதில் மகிழ்ந்தெழுந்த பூதமே
      மறுநாள் சதயமதில் மயிலைநகர் கேணியில்
சித்தம் குளிர்விக்கும் செவ்வல்லி மலர்தனில்
      சீர்வாள் நந்தகத்தின் சீரான அம்சமாகி
குத்துவிளக்கென மலர்ந்த குளிர்வான பேயே
      கருவரை புகுந்து  ஜனிக்காத அயோநிஜர்களே
 
திருக்கோவலுர் தன்னில் திவ்யநாமம் பாடியே
     திருவருளால் ஒருங்கினைந்த திவ்யபிரபந்த முதல்வர்களே
ஒருவர்பின் ஒருவரை ஓர் அறையில் கூட்டியே
      ஒடிவந்து தன்னையிணைத்த ஒங்காரப் பெருமானை
கருவினில் அறிவுடையார் களிப்போடு பாடியே
     ககனத்தை   அன்பை கனிவோடு விளக்காக்கி
வார்கடலை  ஆர்வமதை வார்த்திடும் நெய்யாக்கி
      வருகின்ற கதிரவனை வளர்சிந்தையை   திரியாக்கி
சீர்மிகு பரந்தாமனுக்கு   சிந்தையுருக  சுடரேற்றி
       சீரான சுடரொளியில் சீராளனைக் கண்டுகொண்ட
பார்புகழ்  முதலாழ்வார்கள்    பிறந்திட்ட திங்களில்
      பிரபந்தமதில்  கலந்து  பிறவிக்கடல் நீந்துவோமே





     
\

கந்தசஷ்டி முருகா



கந்தசஷ்டி  முருகா
கார்த்திகை பெண்கள் கைவளர்ந்த குமரா
பார்வதி கைசேர்த்த பாலகனே சரவணா
ஆறுமுகம் ஒன்றான ஆதிமூல கார்திகேயா
கூர்வேலால் சூரனை கொடியாக்கிய கந்தா
கார்கண்டு ஆடிடும் கானமயில் வேலா
சீர்வளர் தேவசேனா சேர்ந்தினைந்த சிவகுமரா
குறமகள் வள்ளியோடு கூடிமகிழும் குகனே
திருசெந்தூர் கடலாடும் செந்தில் ஆண்டவனே

ஆனந்தக் கூத்தாடி அழகான காவடியும்
தேனோடு தினைமாவு தித்திக்கும் கனிவகையுடன்
மான்விழி மாதரோடு மயிலமரும் ஷண்முகனே
உன்னையே நினைந்து உனைநாடும் பக்தர்தமை
கண்ணாலே கனிவாக காத்திடும்  முருகா
எண்ணத்தில் என்றும் எழுதிய காவியமே
வண்ணத்தில் என்னுள்ளே வாழ்கின்ற ஒவியமே
பண்ணுடன் பாடினேன் கந்தசஷ்டி நாளினிலே

வெள்ளி, 14 அக்டோபர், 2016

சரணகோஷம் செய்வேனே!

சரணகோஷம் செய்வேனே!

வலியோடு மாலையணிந்து விரதமேற்க வைத்தனையே
வலிநீக்கி பதினைட்டு படிஏற வழிகாட்டி வருவாயே
புலிமீதமர்ந்து நோய்தீர்க்க புலிப்பால் கொண்ர்ந்தவனே
 புவி மீதுஎன் வினைதீர பாதமதைத் தருவாயே
 கலியுக தெய்வமே குன்றமர்ந்த குமரனே
காலடியில் சரணடைந்தேன் காத்தருள வருவாயே
 சலியாத மனம்தந்து சன்மார்க்கம் அருள்வாயே
சபரிகிரி சாஸ்தாவே சரணகோஷம் செய்வேனே!

மலிவான சிந்தனைகள் மனதைவிட்டு நீக்குவயே
  மகிழ்ச்சி தரும்சொல் மலர்ந்தருளச் செய்வாயே
நலிந்தோர் வாழ்ந்திட நற்சிந்தனை வளர்ப்பாயே
 நாளெல்லாம் அவர்வாழ நானுழைக்க துணையாவாயே
பலியாகிப் போகட்டும்என் பாவங்கள் நீங்கட்டும்
  பொலிவோடு பிறர்வாழ புத்துணர்வு பெருகட்டும்
 ஒலிக்கும் பம்பையென ஒளிர்கின்ற மகரசோதியென
 ஒங்காரமாய் உள்புகுந்து உன்னுள்எனை சேர்ப்பாயே!

வெள்ளி, 30 செப்டம்பர், 2016

புலர்ந்திடும் கதிரே

புலர்ந்திடும் கதிரே

எண்ணத்தில் விளையாடும் எழில்மிகு கண்ணா
   வண்ணத்தில் மயிலிறகு வளைந்தாடும் குழலா
  கண்களில் காந்தமென கவர்ந்திடும் கண்மணியே
   மண்மீதுஎன் மனதுள்ளே மலர்ந்திட வருவாயே
   புன்னகையில் பொலிவாக புலர்ந்திடும் கதிரே
  புண்பட்ட உள்ளத்தை புனிதமாக்க வருவாயா
 கணந்தோரும் மாறிவரும் காரிருள் நீக்குவாயே
  தண்ணிலவு முகத்தானே தாளடியில் வீழ்ந்தேனே

வீசும் கதிரொளி விநாயகர்

வீசும் கதிரொளி விநாயகர்

வீசும் கதிரொளி விளங்கும் கரங்களும்
   பூசிய வயிறும் பழமோடு மோதகமும்
    மாசினை நீக்கிட முன்வரும் துதிக்கையும்
   நேசமிகு பார்வையும் நீங்காத கனிவும்
    வாசமிகு அருகும் வளமான எருக்கும்
        பூசிய திருநீரும் புவிமணக்கும் சந்தணமும்
    கேசமதில் விளங்கும் இளம்பிறை நிலவும்
    தூசாக என்துயர் தீர்த்திட வருமே!

வானளந்த வாமனன்

வானளந்த வாமனன்

  வானளந்தவனை நினைந்திட வாமனன் அருள் பெருகும்
    ஊன்கலந்த உடலில் உள்ளொளி வீசுமே
  ஓணத்தில் பிறந்தவனை ஓர்மூவடி கேட்டவனை
    கண்முன் விரிந்து ககனமெலாம் நிறைந்தவனை
அன்பால் அரக்கனுக்கு ஆழ்கருணை தந்தவனை
   மனதால் துதித்திட மாயமாய் வருவானே
 தானளந்த புனிததீர்த்த திருவடி தருவானே
  மோனத்தின் தவமாகி மோகம் தீர்ப்பானே!

இனிய நவராத்திரியே வருக!

இனிய நவராத்திரியே வருக!

கலையாக மலையாக அலையாக வருவாள்
     கமலத்தின் உதித்தவன் கனிநாவில் இருப்பாள்
    மலைவேந்தன் மேனியில் மறுபாதி ஆகிடுவாள்
         மாதொரு பாகனாகி அவன் மேதினியில் சிறப்பான்
         அலைகடைய அமிர்தமாகி அழகியதிருவாகி எழுவாள்
    அனந்தன் மார்பினில் அமர்ந்திருந்து கனிவாள்
        சிலையாகி கோவில்களில் சிங்காரமாய் பொலிவாள்
     சிந்தனைக்கு எட்டாத செல்வியர் மூவரன்றோ!

அஷ்ட லக்ஷ்மியாய் அனைத்திலும் அவளாவாள்
     ஆயகலை அறுபத்துநான்கும் அவளாகி ஒளிர்வாள்
 துஷ்டரை வேரருக்க தூயசக்தி உருவாகிடுவாள்
     துயர்நீக்க நவசக்தி துர்க்கையாகி தோன்றிடுவாள்
  நிஷ்டையும் நியமமும் நெஞ்சினில் ஏற்றியே
     நற்தூய மனதால் நாளும் துதித்திட
  இஷ்டமாய் முத்தேவியர் இனிதே வந்திருந்து
     இன்பமெலாம் பொழிகின்ற இனிய நவராத்திரியே வருகவே!