வேழமுக கணபதி
1. சந்தக்கவி நூறுபாடி சாஸ்தாவை பணிந்திட
சபரி மலையானை சாந்தமதின் மறுஉருவை
சிந்தையில் கொண்டு சீரோடு பாடிட
சரணம் கூறியே சங்கரஹரி மைந்தனை
வந்தனை செய்வேன் வழிபட்டுத் தொழுவேன்
வேழமுக கணபதியே விரும்பிஎன் பாட்டில்
தந்திடுவாய் நற்பொருள் தாயாகத் துணையிருப்பாய்
தலைவணங்கும் சரணம் சரணம் சரணமே!
வீணை ஏந்தும் வாணி
2. விந்தையாக வீணைமீட்டி வெண்ணிற துகில்பூண்டு
வேதமோடு ஆயகலைஅறிய வரமளிக்கும் அன்னையே
பந்தளத்தின் நாயகனை பரமகுரு ஐயப்பனை
பாடல்நூறு பாடித் தொழுதிட முனைந்தேன்
ஏந்தும் ஏட்டினில் என்னோடு துணைவந்து
எழுத்தும் பொருளும் எழிலும் தந்திடுக!
செந்தூர நாயகியே சிந்தனையில் வந்திடுக
சேவடி பணிந்தேன் செல்வியே அருள்கவே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக