வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

ஆதி சிவமே!


  வெள்ளிப் பனிமலையே விளங்கும் நின்திருமுகம்
        விளையாடும் மலையடுக்கு விரிந்திடும் நின்குழல்
            வெள்ளிநிலவு மூன்றாம்பிறையாகி வீற்றிருக்கும் திருச்சடை
      வெண்ணீறு ஒளிவிட விழிக்கின்ற நெற்றிக்கண்
துள்ளிடும் திரிசூலம் துவண்டுநெளியும் நாகம்
    தூயகங்கையை தாங்கிடும் திருமுடி
அள்ளித்தரும் பிரதோஷ ஆனந்த நாயகன்
           அவனியை காத்திட ஆதிசிவமே வந்தருள்க!


                                                 ராதாகவி

ஸ்ரீ வாமனன்


மேலெழுந்த இடப்பாதம் விண்ணளக்க
         மிதித்த நின்ற வலப்பாதம் மண்ணளக்க
   மாலவன் கைவிரல் மூன்றாம் அடிகேட்க
      முடிகாட்டி மாபலியும் சரணடைய
நீலக்கடல் மேலணையும் திருமாலே
           நீள உயர்ந்து நின்ற குறளாகிய வாமனா
             உலகளக்க வந்தனையோ உளங்கான வந்தனையோ
                   ஊழ்வினை நீக்கியெனை உன்னோடு சேர்ப்பாயே!


                                               ராதாகவி

தென்திசை குருவே தட்சிணாமூர்த்தி


ஆதி குருவாய் குருந்தமரம் அடி அமர்ந்த குருவே
     ஆறுமுகன் குருவாக அடிபணிந்த குருவே
வேதியர்கள் ஒதுகின்ற வேதத்தின் உருவே
       விளைகின்ற அறிவெலாம் விளக்கிடும் குருவே
சோதியும் உடுக்கையும் சுவடியும் அபயமும்
      சேர்ந்திடும் நான்கையும் செங்கைகள் ஏந்திட
மோதிவரும் கங்கையுடன் மூன்றாம்பிறை சூடியே
       மோனத்தவ தக்ஷிணா மூர்த்தியே வந்தருள்க!
       

                                                                         ராதாகவி

செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

அறிதுயில் அரங்கனே!

காவிரியும் கொள்ளிடமும் கைகோர்த்து மாலையாகி
  கருமுகில் வண்ணன் கழுத்தினில் ஆடிவர
பூவிரியும் பொன்னியும் புனலாகி பெருகிவர
  பாம்பணையில் கைவைத்து பாதம்நீட்டி பள்ளிகொண்டு
தேவிரியும் இருதேவியர் தொழுது அருகிருக்க
  தேனரங்கம் பாவரங்கம் தெவிட்டாத கவியரங்கம்
பாவிரியும் ஆழ்வார்கள் பன்னிருவர் பிரபந்தமோடு

  புரிதுயில் பயிலுகின்ற பெருமானே அருள்வாயே!

                                                 ராதாகவி

உலகமகா சோதி


விரிகுழல் விரிந்திருக்க விழியிரண்டு பார்த்திருக்க
   வெறுமையான என்நெஞ்சில் வேரூன்றும் உன்கருணை
பரிதவித்து மனம்நிற்க பாசத்துடன் உட்புகுந்தாய்
     பாரினில் என்குறைகள் பனியாக உருகவைத்தாய்
தரித்திடும் காவியுடை தளர்ந்துவரும் மென்னடை
     தாயாகி நீவந்தாய தவழ்சேயாக நானிருந்தேன்
உரிமையுடன் எந்தனையே உன்னுள்ளே வைத்திட்டேன்
     உலகமகா சோதியே உந்தனையே சரணடைந்தேன்!

புதன், 4 பிப்ரவரி, 2015

பன்னிருவரைப் பணிவேனோ? பக்திவழி அறிவேனோ?

1. ஆழியான் அடியினுக்கு அகிலத்தை அகலாக்கி
     ஆதவனை சுடராக்கி அடிபணிந்த பொய்கையார்
  ஊழியானை உத்தமனை உருதுன்பம் நீங்கவேண்டி
     ஒளியூட்டிய ஒர்விளக்கில் ஒருதுளி எண்ணை ஆவேனோ?

2. பொழிகின்ற கருணை பொன்மலர் கண்ணனின்
    பொருந்திய திருவுருவை புறக்கண்ணாலும் கண்டே
  ஆழியேந்திய அமலனை அழகனைக் காட்டிய
    அமுதான பேயாழ்வார் அசையும் இமைமுடி ஆவேனோ?

3. அன்பும் ஆர்வமும் அழகு விளக்காக
     அறிவான சிந்தனயும் அங்கெரியும் திரியாக
  இன்பமே இவ்வுலகில் இங்கென்றும் நிலைபெற
     இதயத்தில் அரங்கனை இசையோடு கூட்டுவித்த

4. தன்லைமிலா பூதத்தாழ்வார் தனிவழி காட்டிட
    தஞ்சமென அமர்ந்த திருப்பாதமண் ஆவேனோ?
  முன்வந்த மூவாழ்வார் முடங்கிய அறையினில்
    மூச்சாக சுவாசித்த மென்காற்று ஆவேனோ?

5. நான்முகன் அந்தாதியில் நாராயணனே தெய்வமென
    நானிலத்தில் உள்ளதெல்லாம் நாரணன் வடிவமென
  தான்உணர்ந்த பொருளை தமிழால் எடுத்தோதிய
    திருமழிசை ஆழ்வார்வாழ் தெருமண் ஆவேனோ?

6. உயர்நலம் உடையவனை உளனெனில் உள்ளவனை
    உயர்குன்றம் நின்றவனை உறிவெண்ணை உண்டவனை
  புயல்மழை வண்ணனை புளியமரத் தடியிருந்தே
    பக்தியில் பாடியே புகுகின்ற வைகுந்தம்

7. தயவான நம்மாழ்வார் துணையாலே புகுவோரின
    தாளினை முனிவர்கள் தடவிக்கழுவிய நீர்த்துளி ஆவேனோ?
  கயல்விழி மங்கையர் கரங்களில் ஆரத்தி
    காட்டி எடுத்திடும் கரும்சிவப்புதுளி ஆவேனோ?

8. திருமலை மீதினில் திகமும் ஏதாகினுமாய்
    தோன்றிட வேண்டியே திருவேங்கடனைப் பாடிய
  அரசும் வேண்டாத அருள்மிகு குலசேகராழ்வார்
    அளித்திட்ட ராமகாதை அன்போடு கேட்கும் செவி ஆவேனோ?

9. கோடிமலர் பறித்து கோர்த்த(வாச) மாலையுடன்
    கோவலனைத் தாலாட்டி கொண்டாடிய பெரியாழ்வார்
  செடியருகே கிடைத்த செல்வியின் துணையோடு
    ஸ்ரீரங்கம் நடந்திட்ட சிறுபாதைகல் ஆவேனோ?

10. அரங்கனை ஆழிநீலனை அறிதுயிலானை திருப்பள்ளிஎழப்பாடி
     அருளோடு அவனையே அருட்பெரும் தெய்வமென
   சரங்களால் மலர்மாலை சூட்டிடும் தொண்டரடிப்பொடி
     சுகந்தமெனக் கொய்த துளபத்தில் ஒர்இலை ஆவேனோ?

11. பாதாதி கேசம் பரவசத்துடன் கண்டே
     பண்ணோடு யாழிசைத்து பரமனைப் பாடிய
   மூதாதையரும் பின்வரும் முன்னூறு தலைமுறையும்
     முக்திபெற வழிவகுத்த திருப்பாணாழ்வார் யாழில்
                               ஒர்இழை ஆவேனோ?

12. தேடிப் பொருளினை திருடியும் கொணர்ந்த
     திருமங்கை மன்னன் தினமும்தன் துணையோடு
   நாடி அளித்த நல்லமுதும் நற்பணியும்கூட
     நாராயணனைப் பாடியனற்பாயிரத்தில் ஒர்எழுத்து ஆவேனோ?

13. வேதம் தமிழ்செய்த வண்குருஉர் நம்பியே
     வணங்கும் தெய்வமென வாயால் பாடிஎங்கும்
   ஒதிய மதுரகவியாழ்வார் ஒர்பத்துப் பாடலில்
     ஒளிறும் சிறுத்தாம்பில் ஒருதுரும்பு ஆவேனோ?

14. கூடிவந்த தோழியரோடு குளிர்நீரில் நீராடி
     கனவில் கைபிடித்த கண்ணனையே நினைந்து
   பாடிய பாடலால் பரமனடி சேர்ந்த
     பாவை ஆண்டாள் பாதத்துளி ஆவேனோ?

15. நாலாயிரம் பாடியே நற்றமிழ் வளர்த்து
     நாடும் ஆன்மீகம் நாடெங்கும் பெருகிட
   மாலாயிரம் வடிவானவனை மனத்தில் இருத்தியவரை
     மூநான்கு ஆழ்வாரை முக்காலமும் பணிவேனோ?

16. பாலாயிரம் அலைவீசும் பாற்கடலில் இருப்போனை
     பக்தியால் அவர்தந்த பாடல்வழி காண்பேனோ?
   நூலாயிரம் படித்து நொந்துநான் வாடாமல்
     நாராயணன் பாதத்தில் நற்கதி அடைவேனோ?


                                      ராதாகவி  

தைப்பூச நாயகனே!

ஊசலாடும் என்மனதை உள்ளே திருப்பி
   உந்தன் திருப்பாத உயர்வினைக் காட்டி
  வாசமுடன் வளமும் வகையான இன்பமும்
            வெறுப்பும் பகைமையும் விளைவித்த செயல்களும்
   நேசமுடன் நாடிநாளும் நலிந்துபோன எனக்கே
  நீங்காத இன்பத்தை நீயாக வந்தளித்து
பூசத்தின் நாயகனே புவியில் எந்தனையும்
                 புனிதமாக்கி வைப்பாயே (அறு) படைவீட்டு பெருமானே!

    ராதாகவி