புதன், 4 பிப்ரவரி, 2015

பன்னிருவரைப் பணிவேனோ? பக்திவழி அறிவேனோ?

1. ஆழியான் அடியினுக்கு அகிலத்தை அகலாக்கி
     ஆதவனை சுடராக்கி அடிபணிந்த பொய்கையார்
  ஊழியானை உத்தமனை உருதுன்பம் நீங்கவேண்டி
     ஒளியூட்டிய ஒர்விளக்கில் ஒருதுளி எண்ணை ஆவேனோ?

2. பொழிகின்ற கருணை பொன்மலர் கண்ணனின்
    பொருந்திய திருவுருவை புறக்கண்ணாலும் கண்டே
  ஆழியேந்திய அமலனை அழகனைக் காட்டிய
    அமுதான பேயாழ்வார் அசையும் இமைமுடி ஆவேனோ?

3. அன்பும் ஆர்வமும் அழகு விளக்காக
     அறிவான சிந்தனயும் அங்கெரியும் திரியாக
  இன்பமே இவ்வுலகில் இங்கென்றும் நிலைபெற
     இதயத்தில் அரங்கனை இசையோடு கூட்டுவித்த

4. தன்லைமிலா பூதத்தாழ்வார் தனிவழி காட்டிட
    தஞ்சமென அமர்ந்த திருப்பாதமண் ஆவேனோ?
  முன்வந்த மூவாழ்வார் முடங்கிய அறையினில்
    மூச்சாக சுவாசித்த மென்காற்று ஆவேனோ?

5. நான்முகன் அந்தாதியில் நாராயணனே தெய்வமென
    நானிலத்தில் உள்ளதெல்லாம் நாரணன் வடிவமென
  தான்உணர்ந்த பொருளை தமிழால் எடுத்தோதிய
    திருமழிசை ஆழ்வார்வாழ் தெருமண் ஆவேனோ?

6. உயர்நலம் உடையவனை உளனெனில் உள்ளவனை
    உயர்குன்றம் நின்றவனை உறிவெண்ணை உண்டவனை
  புயல்மழை வண்ணனை புளியமரத் தடியிருந்தே
    பக்தியில் பாடியே புகுகின்ற வைகுந்தம்

7. தயவான நம்மாழ்வார் துணையாலே புகுவோரின
    தாளினை முனிவர்கள் தடவிக்கழுவிய நீர்த்துளி ஆவேனோ?
  கயல்விழி மங்கையர் கரங்களில் ஆரத்தி
    காட்டி எடுத்திடும் கரும்சிவப்புதுளி ஆவேனோ?

8. திருமலை மீதினில் திகமும் ஏதாகினுமாய்
    தோன்றிட வேண்டியே திருவேங்கடனைப் பாடிய
  அரசும் வேண்டாத அருள்மிகு குலசேகராழ்வார்
    அளித்திட்ட ராமகாதை அன்போடு கேட்கும் செவி ஆவேனோ?

9. கோடிமலர் பறித்து கோர்த்த(வாச) மாலையுடன்
    கோவலனைத் தாலாட்டி கொண்டாடிய பெரியாழ்வார்
  செடியருகே கிடைத்த செல்வியின் துணையோடு
    ஸ்ரீரங்கம் நடந்திட்ட சிறுபாதைகல் ஆவேனோ?

10. அரங்கனை ஆழிநீலனை அறிதுயிலானை திருப்பள்ளிஎழப்பாடி
     அருளோடு அவனையே அருட்பெரும் தெய்வமென
   சரங்களால் மலர்மாலை சூட்டிடும் தொண்டரடிப்பொடி
     சுகந்தமெனக் கொய்த துளபத்தில் ஒர்இலை ஆவேனோ?

11. பாதாதி கேசம் பரவசத்துடன் கண்டே
     பண்ணோடு யாழிசைத்து பரமனைப் பாடிய
   மூதாதையரும் பின்வரும் முன்னூறு தலைமுறையும்
     முக்திபெற வழிவகுத்த திருப்பாணாழ்வார் யாழில்
                               ஒர்இழை ஆவேனோ?

12. தேடிப் பொருளினை திருடியும் கொணர்ந்த
     திருமங்கை மன்னன் தினமும்தன் துணையோடு
   நாடி அளித்த நல்லமுதும் நற்பணியும்கூட
     நாராயணனைப் பாடியனற்பாயிரத்தில் ஒர்எழுத்து ஆவேனோ?

13. வேதம் தமிழ்செய்த வண்குருஉர் நம்பியே
     வணங்கும் தெய்வமென வாயால் பாடிஎங்கும்
   ஒதிய மதுரகவியாழ்வார் ஒர்பத்துப் பாடலில்
     ஒளிறும் சிறுத்தாம்பில் ஒருதுரும்பு ஆவேனோ?

14. கூடிவந்த தோழியரோடு குளிர்நீரில் நீராடி
     கனவில் கைபிடித்த கண்ணனையே நினைந்து
   பாடிய பாடலால் பரமனடி சேர்ந்த
     பாவை ஆண்டாள் பாதத்துளி ஆவேனோ?

15. நாலாயிரம் பாடியே நற்றமிழ் வளர்த்து
     நாடும் ஆன்மீகம் நாடெங்கும் பெருகிட
   மாலாயிரம் வடிவானவனை மனத்தில் இருத்தியவரை
     மூநான்கு ஆழ்வாரை முக்காலமும் பணிவேனோ?

16. பாலாயிரம் அலைவீசும் பாற்கடலில் இருப்போனை
     பக்தியால் அவர்தந்த பாடல்வழி காண்பேனோ?
   நூலாயிரம் படித்து நொந்துநான் வாடாமல்
     நாராயணன் பாதத்தில் நற்கதி அடைவேனோ?


                                      ராதாகவி  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக