புதன், 13 மே, 2015

ஸ்ரீ ஐயப்பன் நூறு காப்பு



வேழமுக கணபதி

1. சந்தக்கவி நூறுபாடி சாஸ்தாவை பணிந்திட
    சபரி மலையானை சாந்தமதின் மறுஉருவை
  சிந்தையில் கொண்டு சீரோடு பாடிட
    சரணம் கூறியே சங்கரஹரி மைந்தனை
  வந்தனை செய்வேன் வழிபட்டுத் தொழுவேன்
    வேழமுக கணபதியே விரும்பிஎன் பாட்டில்
  தந்திடுவாய் நற்பொருள் தாயாகத் துணையிருப்பாய்
    தலைவணங்கும் சரணம் சரணம் சரணமே!

வீணை ஏந்தும் வாணி

2. விந்தையாக வீணைமீட்டி வெண்ணிற துகில்பூண்டு
    வேதமோடு ஆயகலைஅறிய வரமளிக்கும் அன்னையே
  பந்தளத்தின் நாயகனை பரமகுரு ஐயப்பனை
    பாடல்நூறு பாடித் தொழுதிட முனைந்தேன்
  ஏந்தும் ஏட்டினில் என்னோடு துணைவந்து
    எழுத்தும் பொருளும் எழிலும் தந்திடுக!
  செந்தூர நாயகியே சிந்தனையில் வந்திடுக
    சேவடி பணிந்தேன் செல்வியே அருள்கவே!

சமர்ப்பணம்



இக் குடும்பத்தின் மூன்று தலைமுறைக்கும்
  தன்னலமின்றி பிரதிபலன் எதிர்பாராது
தன் உடலாலும் உள்ளத்தாலும்
  சேவைசெய்து கடைசிமூச்சுவரை
அன்னபப்பொழிந்து தியாகியாகவாழ்ந்து
  மறைந்தபின்னும் எங்கள் குலதெய்வமாகி விட்ட
திரு. எஸ். எஸ். வாமனன் அவர்களும்
 இக்கவிதைநூல் ஸ்ரீ ஐயப்பன் நூறு சமர்ப்பணம்

'ஸ்ரீ ஐயப்பன் நூறு'



ஒருசில சொற்கள்...
கடந்த 6.4.2015 முதல் 5.5.2015 வரைஎழுதி
நிறைவு செய்யப்பட்ட 'ஸ்ரீ ஐயப்பன் நூறு' என்ற
கவிதை தொகுப்பினை உங்களோடு பகிர்ந்து
கொள்ள விழைகிறேன்
இந்த காலக்கட்டத்தின் நிகழ்வுகள், செயல்கள்,
நினைவுகள், சந்திப்புகள் என பல்வேறு முனை தாக்கங்கள்
இக்கவிதைகளில் உணரமுடியும்

ஸ்ரீ ஐயப்பன் எனது இஷ்டதெய்வம். அவரிடம் நான் கொண்டுள்ள அசைக்கமுடியாத நம்பிக்கை இந்த கவிதை காலக்கட்டம் மேலும் உறுதி படுத்தியுள்ளது
எனது கோரிக்கைகளையெல்லாம் கூடஇருந்து நிறைவேற்றும் ஐயப்பன் மீது நூறு கவிதைஎழுத எண்ணினேன். ஐயப்பன் அதையும் நிறைவு செய்துவிட்டார்
எல்லாம் 'அவன் நடத்துவது' என்ற நம்பிக்கை பரிபூரண மன அமைதியை தந்துள்ளது

இனி 'ஸ்ரீ ஐயப்பன் நூறு' கவிதைகள் உங்கள் பார்வைக்கு - படிக்க - ரசிக்க - உணர - ஐயப்பன் அருளுக்கு பாத்திரமாக!

கோவை                                         ராதாகவி
5.5.2015 

தவமே தவம் செய்தால்

   
பாதம் இரண்டு மடக்கி பத்மாசனம் இட்டு
     பாசுபதாஸ்தரம் தரவல்ல பரமேஸ்வரன் இருகைமடக்கி
மோதும் உடுக்கை மாய்க்கும் சூலம் மறுகைகள் ஏந்த
     மாபெரும் கழுத்தினை சுற்றி முத்துநாகம் விளையாட
சேதம் தவிர்த்த சிறுபிறையை சடையினில் தாங்கி
     சிவந்த முக்கண்மூட சிலிர்க்கும் வெண்ணிறு ஒளிர
வேதநாயகனே வெண்பனீ மலைமுகட்டில்
      தவமேதவம் செய்யும் தவக்கோலம் யாருக்காக?

திங்கள், 11 மே, 2015

கணத்தில் வந்த தசாவதாரம்



கணத்தில் உலகுகாக்க கருமீனாகிவந்த மச்சமா?
  கீறியே பூமியை கவின்வேதம் மீட்ட கூர்மமா?
கணத்தில் கொம்பால் குடைந்து தேவியை
  கடல்மேல் தந்திட்ட கருணை வராகமா?
கணத்தில் தோன்றி கணத்தில் மறைந்த
  கர்ஜிக்கும் சிங்கமுக நரஹரி நரசிம்மனா?
கணத்தில் உயர்ந்து காலடியால் ககனமதை
  கண்முன் அளந்த திரிவிக்ரம வாமனனா?
கணத்தில் மன்னர் கருந்தலை கொய்து
  ககனத்தில் வென்ற கர்மவீர பரசுராமரா?
கணத்தில் ஏழுமரம் கணையால் துளைத்திட்ட
  காருண்ய மூர்த்தி காகுத்த ராமனா?
கணத்தில் மல்லரை கைகளால் வெல்லும்
  கண்ணன் சோதரன் கோபமிகு பலராமனா?
கணத்தில் களத்தில் கீதை உபதேசித்த
  கார்மேகக் கண்ணனா? கார்கடல் துயில்நீத்து
கணத்தில் துயர்நீக்க கலியுகம் வரவிருக்கும்
  கல்கியா? தசாவதார கற்பக நாராயணா?
கணத்திலும் உனைமறவாத வரம் தந்தருள்
  காலமெலாம் உன்னை கருத்தினில் இருத்திடவே!

ஞாயிறு, 10 மே, 2015

அன்னையர் தினம்


அடிப்பாள் திட்டுவாள் ஆரவாரத்துடன் கோபிப்பாள்
     ஆத்திரத்தில் சபிப்பாள் அடுத்தகணம் அழுவாள்
துடிப்பாள் நீவிழுந்தால் தூக்கிமண் துடைப்பாள்
      துளிநீர் உன்கண்ணில்வர தன்ரத்தமென பதறுவாள்
அடிப்பாய் அவமதிப்பாய் அவதூறு பேசுவாய்
      அனைத்தையும் பறித்து அனாதையாய் விடுவாய்
அடிமனதில் பாபத்தை அடுத்த தலைமுறைக்கு
       அழைத்து செல்கிறாயேயென அகத்தில் ஆதங்கமடைவாள்
படிப்படியாய்  ஏறியெங்கும் பகவானை வேண்டுவாள்
        பாசத்தால் நாம்செய்த பாபத்தையும் தான் ஏற்க
விடியவிடிய வேண்டுவாள் வேதனையை மறைத்தே
        விடியலாக நம்வாழ்வே வாழ்வாக கொண்டிடுவாள்
நொடியில் உணருவீர் நேரில் காணும் தெய்வம்
        நம்மை பெற்றதாய் நலம்விரும்பும் அன்னையே
நாடியே நினைப்பிர் நம் அன்னையர் தினமதில்
       நாட்டில் பெண்கள் எல்லாம் நம்மைகாக்கும் அன்னையரே!

புதன், 6 மே, 2015

கொஞ்சும் சிவபாலா!



கொஞ்சும் செவ்வாயில் குவளை விரல்வைத்து
  குட்டிவேல் மறுகையில் கெட்டியாகப் பிடித்து
விஞ்சும் வண்டுவிழி வட்ட முகமதில் சுழல
  விளங்கும் செவிதனில் வெண்முத்து விளையாட
தஞ்சமென தோள்களில் தளிர்மாலை தழைந்தாட
  தகைவான கருங்கூந்தல் தலையின் மேல்ஒளி
மிஞ்சும் நவரத்தினம் மின்னும் கிரீடம்தங்க
  மிளிரும் திருநீறும் சந்தணகுங்குமம் பளீரிட

பிஞ்சுமுகம் காட்டிஎமை பித்தனாக்கும் சிவபாலா
  பழனியும் செந்தூரும் பழமுதிர் சோலையும்
மஞ்சுசூழ் திருத்தணியும் மரகதப் பரங்குன்றமும்
  மகிமைமிகு ஸ்வாமி மலையும் இருந்து
அஞ்சேல்என அபயகரம் அன்போடு அருள்பவனே
  அறியாப் பிள்ளைபோல் புன்னகை பூத்தாயே
தஞ்சமென வந்தோம் தாங்கியே காத்திடுவாய்
  தயக்கமும் உண்டோ தவமான பாலகுமாரா!

ஆன்மிக மலர் அட்டைபடம் கவிதை 5.5.2015
பாலமுருகன்