புதன், 25 பிப்ரவரி, 2015

ஸ்ரீ ஆஞ்சநேயா



தஞ்சமென வந்தவனை தம்பியெனத் தழுவி
   தன்னெஞ்சில் வைத்து அருளிய காகுத்தனை
நெஞ்சில் நிறுத்தி நானிலத்தில் என்றும்
   நிலைபெற்று சிரஞ்சீவியாய் நிறைந்திருக்கும் அனுமனே
சஞ்சீவி பருவதத்தை சட்டெனத் தூக்கிவந்து
   சகோதரன் உயிர்மீட்ட சொல்லின் செல்வனே
அஞ்சா நெஞ்சமும் அறிவோடு ஆற்றலும்
   அன்போடு தூய்மையும் அருவியென நாவண்மையும்
எஞ்ஞான்றும் எமக்களிப்பாய் ஈடில்லா ஆஞ்சநேயா

   என்றென்றும் உனதடியே போற்றிப் பணிவேனே!

ஸ்ரீ ஹயக்கிரீவர்


குதிரை முகம் குளிர் நிலவாகி ஒளிவீச
   கதிராக அலைமகள் அருகமர்ந்திருக்க
மதியாகி மாகலை யாவும் தாமாகி
   மகிழ்வோடு அளித்திடும் பரிமுகனே
துதித்திடும் பக்தருக்கு பலகலையோடு
   தூய ஞானம் தந்தருளும் திருமாலே
பதித்தேன என்சிரம் பாதங்களில் என்றும்

   பரிவோடு என்னை பரிபூரணன் ஆக்குவாயே!

நாவுக்கரசி


அணைந்த வீணையை அழகிய விரல் மீட்ட
    அறிவின் ஏடும் ஜபமாலையும் மறுகைஏந்த
துணையாக அன்னம் துள்ளி விளையாட
    துலங்கும் வெண்தாமரையில் வீற்றிருக்கும் சுடரே
இனையிலா கலைகளில் இயங்கிடும் தேவி
    இன்முகம் கனிந்து நல்லறிவு அருள்வாயே
முணைந்து வெற்றிகளை முன்வந்து பெற்றிட

    முத்தான நாவுக்கரசி கலைவாணி போற்றியே!

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

அம்மாவின் பிறந்தநாள் அறுபத்தேழின் திருநாள்


1. மாடியிலே தோட்டம் உம் மனதில் எழுந்ததிட்டம்
    மூன்றாவது அறுவடை மாதுஎன் வீட்டுமாடியில்
  கோடியிலே ஒருவர்நீவீர் கோடிப்பேரை வாழவைப்பீர்
    குவித்திடும் வாய்ப்புகள் குவிந்திடும் பலன்கள்
  நாடி ஏழை துயர்தனை நசித்திடுவீர் நொடியினில்
    நாளும் தவமிருப்பீர் நானிலம் நன்குவாழ
  வாடிடும் உம்முகம் வறுமையைக் கண்டாலே
    வாழ்வளிக்க திட்டங்கள் வகைவகையாய் தானளித்தீர்

2. பாடிநான் புகழவில்லை பலன் எதும் கேட்கவில்லை
    பாரினில் இன்னும்நீவீர் பல்லாண்டு வாழ்கவென
  தேடிநின்று இறைவனை தினமும் வேண்டிடுவேன்
    தென்றலென ஒளியென தேயாத நிலவென வாழ்க
  கூடிநின்று வாழ்த்துவோம் குதூகலித்து வணங்குவோம்
    குளிர்விக்கும் அறுபத்துஏழு குறைவிலா அன்னையே
  செடிவளர மண்வேண்டும் செல்விநீவிர் வாழ்ந்திட
    சோர்விலா எம்மனமுண்டு சோதியென வாழ்க! வாழ்க!
                                          கவிதை. ராதாகவி
                                       தட்டச்சு, புகைப்படம் சித்தார்த்

வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

குருவாயூரப்பன்


குழந்தை வடிவாகி கோலமிகு மலர்மாலை
      கமலமும் கதையும்  இருகைகளில் ஏந்தி
முழங்கும் சங்கமும் மின்னும் சுதர்சனமும் கைகூட
      மேகமான குழல் கொண்டையில் மயில் இறகாட
அழகான தீபச்சரம் ஆடிநின்று ஒளிவீச
      அலங்கரிக்கும் பட்டும் அணிந்துள்ள அணிகலனும் மின்னும்
மழலை மொழியானை மாதவத் திருமகனை

      மங்கல குருவாயூரில் மனங்குளிரக் கண்டேனே!

பால கிருஷ்ணன்


கொண்டையின் மயிலிறகோ குழல் அழகோ
   குமிழ் சிரிப்போ குவிந்திடும் செம்பவளவாயோ
குண்டலம் குதித்தாடும் இருசெவியோ
   குறும்போடு பளபளக்கும் வண்டுவிழியோ
கொண்டல் வண்ணமோ குவளை மூக்கோ
   கைகளில் தவழ்கின்ற புல்லாங் குழலோ
அண்டமெலாம் மயங்க வைக்கும் மாயம்

   அழகா உன்னிடம் எதிலோ நானறியேனே?

பன்னிருநாமம்


1. அஞ்சுதலை நாகம் அழகாக குடைபிடிக்க
       அலங்கார மூர்த்தியாய் அருள்கின்ற விஷ்ணுவே
  பஞ்சவர்ண மயிலிறகு பாங்காககுழல் கற்றையிலாட
       பொற்கிரீடம் தலையணிந்து பொலிகின்ற நாராயணா
  பிஞ்சுக்கால் நடையோடு மூவடி மண்வேண்டி
       பேருவம் காட்டிமண் விண்ணளந்த வாமனா
  தஞ்சமெனப் பணிந்தவன் தலைமேல் பாதமிட்டு
       தரணிகாத்து மாபலியை ஆட்கொண்ட திரிவிக்ரமா

2. சிவந்திடும் கைகளில் செந்தாமரை ஏந்தியே
       செல்வத் திருவோடு சேர்ந்திடும் பத்மநாபா
  தவமிகு ஞானியர் தரிசிக்கும் தாமோதரா
       தாயாகிய தேவியை மார்பில் தாங்கிடும் கோவிந்தா
  புவனம் காத்திட புறப்படும் சுதர்சனம்
       பூரிக்கும் கைவிரலில் சுழல்கின்ற ஸ்ரீதரா
  தவழும் அலைகடலில் தானெழுந்த சங்கமதை
       தாங்கியே வழிகாட்டும் தலைவனே மாதவா

3. பாற்கடல் தன்னைவிட்டு பனிக்கடல் மேல்நின்று
       பக்தரை காத்திடும் பரமனே ரிஷிகேசா
  பொற்கதை ஏந்தி புல்லரை மாய்த்து
       உற்றவனாய் அடியவர்க்கு உடன்அருளும் மதுசூதனா
  உன்னடி சரண்புகுந்திட உணர்ந்தேன் பேரொளியே
       கொற்றவனே குளிர்மாலை கொண்டவனே கேசவா
  குறைவிலா பன்னிருநாமம் கூறினேன் காத்தருள்க!