1. அஞ்சுதலை நாகம் அழகாக
குடைபிடிக்க
அலங்கார மூர்த்தியாய் அருள்கின்ற விஷ்ணுவே
பஞ்சவர்ண மயிலிறகு பாங்காககுழல் கற்றையிலாட
பொற்கிரீடம் தலையணிந்து பொலிகின்ற நாராயணா
பிஞ்சுக்கால் நடையோடு மூவடி மண்வேண்டி
பேருவம் காட்டிமண் விண்ணளந்த வாமனா
தஞ்சமெனப் பணிந்தவன் தலைமேல் பாதமிட்டு
தரணிகாத்து மாபலியை ஆட்கொண்ட திரிவிக்ரமா
2. சிவந்திடும் கைகளில்
செந்தாமரை ஏந்தியே
செல்வத் திருவோடு சேர்ந்திடும் பத்மநாபா
தவமிகு ஞானியர் தரிசிக்கும் தாமோதரா
தாயாகிய தேவியை மார்பில் தாங்கிடும் கோவிந்தா
புவனம் காத்திட புறப்படும் சுதர்சனம்
பூரிக்கும் கைவிரலில் சுழல்கின்ற ஸ்ரீதரா
தவழும் அலைகடலில் தானெழுந்த சங்கமதை
தாங்கியே வழிகாட்டும் தலைவனே மாதவா
3. பாற்கடல் தன்னைவிட்டு
பனிக்கடல் மேல்நின்று
பக்தரை காத்திடும் பரமனே ரிஷிகேசா
பொற்கதை ஏந்தி புல்லரை மாய்த்து
உற்றவனாய் அடியவர்க்கு உடன்அருளும் மதுசூதனா
உன்னடி சரண்புகுந்திட உணர்ந்தேன் பேரொளியே
கொற்றவனே குளிர்மாலை கொண்டவனே கேசவா
குறைவிலா பன்னிருநாமம் கூறினேன் காத்தருள்க!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக