ஞாயிறு, 29 மார்ச், 2015

மதுரை மீனாட்சி



வயலெல்லாம் நெல்விளையும் வளமான தென்மதுரை
  வண்ணமிகு கோபுரங்கள் வானளாவி வரவேற்கும்
கயல்எனத் துள்ளும் கண்விழியாள் மீனாட்சி
  கையில் கிளியேந்தி காட்சிதரும் கூடல்நகர்
மையல்கொண்ட சுந்தரேசன் மணமகன் திருக்கோலம்
  மாடவீதிப் பாதைகளில் மனமகிழ் தேரோட்டம்
தையல்அவள் பச்சைவண்ணத் தாயாகி நிற்கின்றாள்
  தஞ்சமென வந்தவரை தன்சேயாக்கி காக்கின்றாள்!

ஸ்ரீ காயத்திரி தேவி



ஒர் ஐந்து முகமும் ஈரைந்து கரங்களும்
  ஒளிரும் சக்கரமும் ஒலியெழுப்பும் சங்கமும்
கூர்அறிவும் மனஉறுதியும் கோல எழுத்தாணியும்
  குளிர்ந்த முகப்பொலிவு மனத்தூய்மை வழங்கிட
சீர்மிகு தாமரையும் சிலம்பும் செஞ்சாந்தும்
  சிங்கார கதையும் சிலிர்க்கும் சாட்டையும்
பார்மீது தாங்கியே பவனிவரும் காயத்திரி
  பாவங்களை அறியாமையை போக்கிடும் ஒளியே
நேராக வணங்கிட நேயமிகு கதிரே
  நல்லுலகை படைத்திட்ட நலமிகு தெய்வமே
சீராக தியானிப்பேன் சீர்மிகு உன்புகழை
  சிந்தையை தெளிவித்து சிற்றறிவை நெறிப்படுத்துவாயே!

நரசிம்மர்



பக்தனைக் காத்திட பிடரிசூழ் சிம்மமாய்
  பெருந்தூண் பிளந்து பீரிட்டெழுந்த நரசிம்மா
முக்தியை முரடனுக்கும் மனமுவந்து அளித்தவா
  மோகனப் புன்னகையாள் மூவுலகின் தேவியை
பக்கத்தில் வைத்து பாம்பணையில் அமர்ந்தவா
  பாங்குடன் சங்கமும் பளிச்சிடும் சக்கரமும்
போக்கும் கதையும் பூவிழி பாலனும் கூடிநிற்க
  பார்க்கும் கண்களில் பரவசம் பெருகுமே!

பரமேஸ்வரா



ஊழிமுதல்வனை உலக நாயகனை
  உயர்ந்த சடையில் உயர்கங்கை தாங்கியவனை
முழுமதியை முறித்து முன்முடியில் தரித்தவனை
  மன்மதனை கண் மூன்றால் எரித்தவனை
நெளியும் நல்அரவை நீலக்கழுத்தில் அணிந்தவனை
  நெற்றியில் சுடலை நீரினைப் பூசியவனை
பழவினை போக்கி பரம்பதம் அளிப்பவனை
  பவித்திர உத்திராட பரமசிவனைப் பணிவேனே!

வெள்ளி, 27 மார்ச், 2015

விநாயகர்



தம்பியவன் மயிலேறி தரணியெலாம் சுற்றிவர
  தாய்தந்தையை சுற்றிவந்து தாளடியில் பணிந்துநின்று
மாம்பழம் தனைப்பெற்ற மோதகப் பிரியோனே
  மரத்தடியே கோயிலாக்கி மலையானை முகமெடுத்து
நம்பிக்கை எமக்களிக்கும் நல்தும்பிக்கை நாயகனே
  நால்வேதப் பொருளோனே நல்மஞ்சளிலும் உருவெடுப்பவனே
அம்பிகை பாலகனே அவல்பொரி படைத்திட்டோம்
  அறிவொளி பெருக்கியே ஆட்கொள்ள வருவாயே!

நீலமயிலோனே!



நீலமயில் வாகனமாய் நீஎறி வலம்வருவாய்
  நால்வேதம் போற்றும் நாயகனே மெய்ப்பொருளே
நீலகண்டன் குமாரனே நல்தேவாதி தேவனே
  நீங்காது பக்தர் நெஞ்சினில் வாழ்பவனே
கோலஎழில் வடிவான கோவே அழகனே
  காலமெலாம் உலகினை காத்திடும் கருணையே
மூலமே கண்கண்ட முதல் தெய்வமே
  முன்வந்து அடியார் முழுத்துன்பம் முடிப்பவனே
சீலனேயான் வேண்டும் சீர்வரம்தரும் வேலனே

  சிவகுரு நாதனே சிரம்தாழ்த்தி போற்றுகிறேன்

ஹரிஹர புத்திரன்



சரணமென உன்திருவடி தேடி வந்தவர்க்கு
  சுனையாகி விரும்பிய வரம் தருபவனே
கரையிலா கருணைக் கடலாகி வந்தவனே
  காசினியில் ஒளிவீசும் குளிர் நிலவே
மறை போற்றும் ஹரிஹர புத்திரனே
  மூவுலகு ஏற்கும் தலைவனான சாஸ்தாவே
நிறைவாக நெஞ்சமதில் தினமும் போற்றுகிறேன்

  நீக்கிடும் எல்லாத் துயர்களையும் நின்னருளே!