சனி, 11 ஏப்ரல், 2015

பாலகுருவே பாலகுமாரா



பால்வடியும் முகமும் பளிச்சிடும் வெண்ணீரும்
  பாங்கான சந்தணமும் பகட்டான குங்குமமும்
சேல்போன்ற விழிகளும் செவ்வாயில் புன்னகையும்
  செவிகளில் சிறுவளையமும் சேவிக்கும் கரங்களும்
வேல்சுமந்த தோளும் விரிகுழலும் அசைந்தாட
  விளங்கும் உத்திராட்சம் வியக்கும் அணியாக
மாலவன் மருகனே மலைமகள் புதல்வனே
  முதல்வனுக்கு பொருளுரைத்த புண்ணியனே வந்தருள்க!

வலம்புரி விநாயகனே



வலம்புரி விநாயகனே வரம்ளிக்கும் பெருமானே
  விரும்பிய இடமெலாம் வீற்றிருக்கும் வேழமே
மூலபலம் கொண்டு மூர்க்கரை அழித்தவனே
  மோகத்தை வென்றவனே மூஷிக வாகனனே
கோலமிகு அங்குசமும் கொழுக்கட்டையும் ஏந்திடுவாய்
  கோவிலாக எங்குமே குடியிருக்கும் முதல்வனே
சீலமிகு குணத்தோனே சிறப்பான வடிவோனே
  சிந்தை தெளிவுபெற சிறியவளை ஆட்கொள்வாயே!

வியாழன், 9 ஏப்ரல், 2015

மலரடி சேர்ப்பாயே!



சிங்கத்தின் மேலமர்ந்த சிவசக்தி துர்கையே
  சீறிவந்து தீமையை சிதறடிக்கும் தேவியே
அங்கமதில் ஒருபாதியாய் அமைந்திருக்கும் உமையே
  அவனியில் ஆணவத்தை அழித்திடும் அம்மையே
எங்கும் ஒளிவீசும் எழிலான சூலமோடு
  எட்டுக் கைகளில் எழும்பும் ஆயுதங்கள்
மங்கலமும் வாழ்வும் மெய்யான பக்தியும்
  மனதில் உருவாக்கி மலரடியில் சேரவைப்பாயே!

பொற்கொடியே!



பொற்குடம் தன்னோடு பூரணகலசம் தனைஅணைத்து
  பொன்மாரி பொழிகின்ற பொற்கொடியே திருமகளே
நற்கடல் கடைந்திட நல்அமுதோடு வந்தவளே
  நாரணன் திருமார்பில் நாளெல்லாம் இருப்பவளே
பாற்கடல் பரந்தாமன் பாதம்பற்றும் பொன்மகளே
  பொற்கரங்கள் இரண்டினில் புதுக்கமலம் ஏந்தியே
பொற்றாமரை தனிலமர்ந்து புதுச்செல்வம் தருபவளே
  புத்தாண்டில் எம்இல்லம் பொலிந்திட வரமருள்க!

பாவையின் தூயமொழி



அதிகாலை பாவையாட ஆன்மா சுத்தமாகும்
  ஆணவம் கன்மம் அதனோடு மாயைஎன
மிதிக்கின்ற மும்மலம் மயங்கும் இருளாகி
  மனதை உழலும் இருட்டாகி வைத்திட
துதித்து நீராடிட தூயஉடல் ஒளிவீசும்
  தூயமையான மனதினை துயர்எதும் தொடராது
பதித்து பரமனை பாடிக் கொண்டாடிட

  பாவையின் தூயமொழி புதுமார்கழி தரும்மொழி

வணக்கம் வானரோத்மனே!



வணக்கம் நற்குணம் வரையின்றி கொண்டவரே
  வணக்கம் வலிமை வஜ்ரமெனக் கண்டவரே
வணக்கம் வானில் வலம்வரும் சூரியனே
  வணக்கம் வீசும் வாயுவின் புத்திரனே
வணக்கம் தீமைகளை வாழ்வில் களைபவரே
  வணக்கம் கருணையை வாரிவழங்கும் மூர்த்தியே
வணக்கம் வானுலகில் வாழும் சிரஞ்சீவியே
  வணக்கம் மலரடி வணங்குகிறேன் போற்றி போற்றி!

செவ்வாய், 7 ஏப்ரல், 2015

பாலகணபதி



ஆலிங்கனம் செய்து அகமகிழும் பாலகனே
  அகக்கையில் விளக்கேற்றி ஆராதிக்கும் குணசீலனே
பூலிங்கம் வடிவாகிய பூதலத்தின் நாயகனே
  பூமடந்தை உமையை புவிகாக்கும் தேவியை
சீலமுடன் பணிந்து சிறுநடையால் சுற்றிவந்து
  சிந்தையில் பெற்றோரே சிறப்பான உலகமேன
காலத்தால் விளக்கி கனிபெற்ற விநாயகனே
  குழ்ந்தை வடிவினில் குன்றெனநிறை அருள்வாயே!