செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

வண்ணமயில் இறகு



வண்ணமயில் இறகு

வண்ணமயில் இறகின் வானவில் கொண்டாட்டம்
      வட்டம்கழிந்த எட்டில்கிட்டன் வரும் கொண்டாட்டம்
           வெண்ணையை கையிலெடுத்து வாய்வைக்கும் கேலியாட்டம்
    வண்ணக்குழல் அமுதம் வாய்தரும் இசையாட்டம்
              கண்ணழகு தருகின்ற கணக்கிலா களியாட்டம்
  காண்பதற்கு ஆயிரம் கண்ணிலாத திண்டாட்டம்
              மண்ணில் ஒடும் மாதவன் தேரோட்டம்
    மண்ணில் பிறவிபெற்ற மானிடர்தம் தவநாட்டமே!

தென்மதுரைத் தேவனே



தென்மதுரைத் தேவனே!

 மதுரையம்பதி மாநகர் மீனாட்சியை மணமுடித்த
    மகேஸ்வரா சுந்தரேசா மகுடத்தில் கங்கைதாங்கி
      மதுமதியை பிறையாக்கி மணிச்சடையில் சூடியவனே
    மங்கை அங்கயற்கண்ணி மலர்கரம் பிடித்தவனே
               மதுரத்தமிழ் மங்கல தென்மதுரை மருமகனே
         மாமதுரை தமிழ்சங்கத்தின் முதல்வனான தலைவனே
   மதுரமொழி உமையவள் மனமகிழும் மாதேஸ்வரா
       மங்கையவள் துணையோடு மங்கலங்கள் தந்தருள்க!

உலகை உண்டவனே



உலகை உண்டவனே!

பத்து அவதாரத்தில் பித்தாக செய்பவன்
          பரமார்த்தனாய் வந்து பாலகனாய் வாழ்ந்தவன்
     முத்தாக ஒளிவீசும் மோகனப் புன்னகையால்
              மூலத்தின் அரும்பொருளை முன்னே காட்டுபவனே
          வித்தாக ஒரிடத்தில் விழுந்தது சிறைச்சாலையில்
          வளர்ந்தது ஒரிடத்தில் வளமான கோகுலத்தில்
  கொத்தான மலர்களும் குழலும் கைகளில்
         கீதை தானுரைக்க கோவிந்தனாய் வந்தவனே!

மத்தால் அடிபடுவாய் மாதுக்கு அபயமாவாய்!
   மண்மேல் தருமம் மங்காதுதங்கச் செய்வாய்!
                சித்து விளையாடி சிந்தையை கவர்ந்தவனே
  சிறுபிள்ளையே என்னைச் சற்றே கண்பாராய்!
                சித்தம் தெளிவடைய சீக்கிரம் வந்தருள்க!
  சித்திரமாய் என்னுள்ளே சீரோடு அமர்ந்திடுக!
                உத்தமனே சரணம் உந்தனுக்கே என்உள்ளம்
  உலகை உண்டவனே உன்பாதம் பணிவேனே!

திருமகளே! லட்சுமியே!



திருமகளே! லட்சுமியே!
              
அலைகடல் மீதுதித்த அழகின் சுடரே
     கலைமதி சந்திரனின் கண்நின்ற சோதரியே
           விலையிலா அமுதமுடன் விளைந்திட்ட சுவையே
          நிலையான செல்வமதை நாளுந்தரும் செல்வியே

                    செந்தாமரையில் வீற்றிருக்கும் செல்வத்தின் அதிபதியே
                    சிந்தாமணியே பொற்காசு சொரிகின்ற செங்கரமே
                    தந்தக் கரங்களில் தாமரை மலர்ஏந்தி
                    மந்தகாசம் புரிகின்ற மந்தாகினி வந்தருளே!

         மன்னர்தம் மகுடத்தில் மகுடலக்ஷமி ஆகிடுவாய்
         முன்னவன் திருமார்பில் மகிழ்ந்தே வீற்றிருப்பாய்
              என்னேரமும் உந்தனையே என்னுள்ளே வைத்திடுவேன்
      புன்னகையுடன் கடைக்கண பார்வை தந்தருளே!

விஷ்ணு ரதம்



விஷ்ணு ரதம்
               விணைதீர்க்கும் விஷ்ணுரதமாகி வைகுண்டமதில்
                   விஷ்ணுவுக்கு தொண்டு விரும்பிச்செய்ய முதன்மையிடம்
               தனைமறந்து கிடந்தும் தானே இருந்தும் நின்றும்
                   தன்னிகரிலா பெருமானைக்காண தனிகருடன் அனுமதி
               வினதை கஸ்யபர் பெற்ற வேகமிகு செல்வன்
                   வளமான ஆவணிபஞ்சமி வளர்பிறையில் பிறந்தவன்
               வானில் பறக்கும் வெண்கழுத்து  கருடனாக உயர்ந்து
                   வானவர்  வணங்கும் பக்ஷிராஜன் வரமருள்கவே!
             
               ஆன்மிகமலர் 18-8-15                     ராதாகவி