திங்கள், 15 ஜனவரி, 2018

ஏற்றிட உன்னையன்றி!

21. முடிப்பு
ஏற்றிட உன்னையன்றி!

  ஏற்றிட உன்னையன்றி எனக்கோர் துணையில்லை
 எந்தன் கோரிக்கை எளிதாக முடித்திடுவாய்
                 பற்றுநீக்கி பூதநாதா பாசமுடன் ஏற்றிடுவாய்
         பவனியில் வாழ்வினை பழுதின்றி முடித்துவிட்டேன்
                 குற்ற உணர்வில்லை குறையேதும் இல்லை
    குறுகுறுக்கும் உள்மன உடல்வலி குறுகிட நீக்கி
சற்றும் தாமதமின்றி சன்னிதானம் அழைத்தேக
                    சடுதியில் வந்திடுக சபரிமலை ஐயப்பா!


பெங்களுர்                                                  "ராதாகவி"
30.11.17                                                      கோவை

அருளாகி...

20. அருளாகி...

அருளாகி ஹரிஹரன் அருமை மகனாகி
           அண்டங்கள் யாவையும் அன்பால் ஆள்பவனே
       உருவான சாஸ்தாவே உயர்சபரி அமர்ந்தவனே
        உயர்ந்து எழுந்த மகிஷியை அழித்தவனே
        மருவிலா மாளிகைபுர மஞ்சுமாதா ஆக்கியவனே
     மனதில் புகுந்து மயக்கம் தீர்த்தவனே
 கருவாகி எந்தன் கவிதையில் வந்தவனே
       கலக்கம் நீக்கி கருணையுடன் ஏற்பாயே!

ஆட்கொள்ள...

19. ஆட்கொள்ள...

ஆட்கொள்ள வருவாயே ஆனந்த சித்தனே
          ஆழ்மனதில் புகுந்தே அமைதியைத் தருவாயோ
             ஒட்டுவாயோ என்நோயை ஒப்பிலா வலிமை தருவாயோ
        ஒரத்தில் வந்துவிட்டேன் ஒளிதர வாராயோ
சிட்டுக் குருவியாய் சிறகடித்து பறந்துவிட
     சேர்ந்த என்முன் செல்வனே வருவாயே
   பட்டென ஆன்மாவை பாதத்தில் சேர்த்துவிடு
              பிறவியின் பயன்முடிய பற்றுநீக்கி அருள்வாயே!

தவிர்க்க முடியாத...

18. தவிர்க்க முடியாத...

தவிர்க்க முடியாத தினமும்வலி தொடரும்
     தாங்கும் சக்தியின்றி தானேவிழும் கண்ணீர்
                   தவிக்க வைத்து துயர்பட வைக்கின்றாய்
தங்கி உதவிட தளமில்லா கட்டிடமாய்
                   புவியில் எழுப்பி பரிதவிக்க விடுகின்றாய்
        பிறந்தபணி முடிந்திட பக்கம்வந்து காப்பாயோ?
   கவிதையில் புலம்பி கண்ணீர்விட வைப்பாயோ
      கலியுக வரதனே கணத்தில் ஆட்கொள்வாய்

வாராத மழையாக

17. வாராத மழையாக

வாராத மழையாக வந்துவந்து குளிர்வித்தாய்
      வாழ்வின் இறுதியில் நல்லமைதி தாராயோ?
                  காராம் பசுபோல் கருணை காட்டுவாயோ?
       கணமும் மனமதை கலங்காது வைப்பாயோ?
                  நீராகக் கண்ணீர் நீண்டுவழியே துடிப்புகள்
           நினைக்காத போதும் நிணைவில் வரும் தனிமை
                  வேராக நீயிருந்து வேதனை தனைநீக்கி
         வாழ்வின் இறுதியில் வெறுமை தவிர்ப்பாயோ!

அறியேன்!

16. அறியேன்!

அறியேன் அன்பான அகிலம் முன்வருமா?
        அன்பைக் காணாது அன்பை உணர்வேனா
                    அறிந்த கதைகளை அங்கங்கு மறந்து
       ஆதரிக்க மாட்டாயோ அடிக்கடி புலம்பல்
எரிமேலி சாஸ்தாவே ஏனிந்த பாராமுகம்
       என்னை ஏற்றபின் ஏனிந்த மனக்குழப்பம்
                    புரியாத தவிப்பு பூமியில் இவ்வாழ்வு
        பொறுத்தது போதும் பூதநாதா வாராயோ?

காப்பதும் கண்முன்

15. காப்பதும் கண்முன்

காப்பதும் கண்முன் காட்சி தருவதும்
                   கணத்தில் கனவுகளை கண்ணிலிருந்து விலக்குவதும்
                   எப்போதும் என்முன் எழில்விளையாட்டை நிகழ்த்துவதும்
                  எங்கும் என் மனவேதனைகள் எளிதாக அறிந்தாலும்
         தப்பாது விலகிநின்று தவிக்கவிட்டு பார்ப்பதும்
                துயரில் உடல்வேதனையில் துடித்திட வைப்பதும்
     ஒப்பிலா முதல்வனே ஒடிவந்து காப்பாயே
                ஒளிரும் மகரசோதி உன்னையன்றி யார் அறிவார்!

செய்தாய்!

14. செய்தாய்!

செய்தாய் உடனிருந்து சபரிபீடம் தானேறிவர
          செய்வித்தாய் மகரசோதி சேவையும் தந்து விட்டாய்
பெய்யும் மழையிலும் பல்வேறு பருவத்திலும்
       பிழையாமல் உனைநாட பெரும்பேறு அளித்தாய்
  செய்யும் கடமைகள் சீராக முடிக்க உடனிருந்து
                    செவிசாய்த்து என்வேண்டுதலை சிறப்புடன் முடித்து வைப்பாய்
தெய்வமே நீஎந்தன் தோழனே என்வலிநீக்கி
    துவளும் மனஉடல்வலி துடைத்து காப்பாயே!

எந்நாளும் திருநாளாய்!

13. எந்நாளும் திருநாளாய்!

எந்நாளும் திருநாளாய் எழில்பெருகும் சபரிமலையில்
     எழுந்தருளும் சாஸ்தாவே என்றோ சரண்டைந்தேன்
இந்நாள்வரை சோதனையே இன்னும் பொறுப்பேனா?
 இயலாமை தள்ளாமை இனிதொடரும் முதுமை
 முந்நாளின் வினைப்பயன் முன்வரும் என அறிந்தேன்
                  முப்பிறவி பாவங்கள் முற்றிலும் தீர்ப்பாயா?
               முந்தும் நோய்நீக்கி முழுமையான உடல்நலம்
     முன்னளித்து மகிழ்வோடு முக்திபெறச்செய்வாயே!

உணரும் வலிகள்!

12. உணரும் வலிகள்!

உணரும் வலிகள் உடலை வருத்தும்
                      உழன்றிடும் நோயினில் உண்மையை உணர வைத்தாய்
      பணமும் பதவியும் பகிர்ந்திட பக்கமில்லை
    பாசமும் பற்றும் பாகமிட முடியாது
           கணந்தோறும் தொடரும் கடுக்கும் நோய் தீராது
           குன்றமர்ந்த தெய்வமே குணவானே ஐயப்பா
                அனைவருக்கும் பாரமாக அனுபவிப்பது எத்தனைநாள்
                    அதிபதியே அறியேன் அன்றைய விணை இந்நாளோ?

வைத்தாய்!

11. வைத்தாய்!

வைத்தாய் பலபணிகள் வையத்தில் நான்செய்ய
        வாழ்நாளின் இன்பங்கள் வளமாரத் தந்து விட்டாய்
துவைத்த துணிபோல தூய்மையில் மனம்கரைய
துன்பமும் இன்பமும் தொடர்ந்து தந்தாய்
சுவைத்த அனுபவங்கள் சிறிதும் சொந்தமில்லை
 சுகமான ஏதும் சுகமாகத் தொடர்வதில்லை
 அவையில் அவனின்றி அணுவும் அசைவதில்லை
         அழகான தத்துவத்தை அமைதியாக உணர்வித்தாய்!

ஆனந்தம் எங்கென்று...

10. ஆனந்தம் எங்கென்று...

ஆனந்தம் எங்கென்று அமர்ந்த சபரிதனில்
         அற்புதமாய் காட்டி அரியதரிசனமும் தந்தாய்
        ஈனப்பிறவி எந்தனையும் ஈன்றெடுத்த தாய்போல்
                 ஈடில்லா சந்நிதானம் இமைதிறந்து காண வைத்தாய்
        கோனாகி வந்தவனே கோவில் குடிகொண்டவனே
             கோஷத்தின் கீதத்தில் குதூகலித்து மகிழ்பவனே
      தானாக வாரேன்என தனிமையைத் தந்துவிட்டு
             தயைவாக உன்னிரு தாள்பற்றி நிற்க வைத்தாய்!

இணைந்திட

9. இணைந்திட

இணைந்தட என்னையே இயக்கும் கருவானான்
             இவவுலகு பற்றுநீக்கி இறைவனை நினைக்க வைத்தான்
  பிணைந்த பட்டயத்தில் பிரம்மமாய் குந்தியமர்ந்து
    பாசமெனும் மாயை நீக்கி பாயும்புலி ஏறிவந்து
                 தனையனாய் தாயாய் தந்தையாய் முன்வந்து
       தகுதியிலா எந்தனையும் தளிர்கரத்தால் பற்றிமுன்
                 அணைந்து அன்போடு அழைத்து சென்றான்
           அகிலத்தின் முதற்பொருள் ஹரிஹரசுதனே ஆனந்தமே!

ஏற்றிய தீபங்கள்

8. ஏற்றிய தீபங்கள்

ஏற்றிய தீபங்கள் எங்கிலும் ஒளிவீச
                   ஏகாந்த மூர்த்தியாக என்னுள்ளே வந்து அமர்ந்தான்
         முற்றிய தேங்காயில் முழுநெய் நிரப்பிவிட்டு
        மாலை அணிந்து மனதில் விரதமேற்று
        சிற்றஞ் சிறுகாலை செம்மாலைப் பொழுதும்
            சில்லேன்று நீராடி சிறுகருப்பு ஆடைபூண்டு
            நெற்றியில் சந்தணம் வெண்ணீரும் குங்குமம் பூசி
              நட்போடு கூடிசரண கோஷமிட இணைத்தான்

கறந்தபால்

7. கறந்தபால்!

கறந்தபால் மடியேறாது கனவுகளும் தொடராது
கடமை முடித்தற்கு காலமெலாம் நன்றியோ
மறந்தேன் மனதில் மறைத்தேன் எண்ணங்களை செயலை
மாயைஎன உணர்ந்தேன் மாநிலத்தின் காலவரைகள்
துறந்தேன் வந்தது துணையாக தனிமையின் இனிமை
தூயவன் திருவடி துலங்கியது கண்முன்னே
பிறவாத வரமருள பிறந்தவந்த சோதியென
பாசமுடன் கைபற்றி பதினெட்டுபடி ஏற்றிவிட்டாய்!

பிறந்தேன் வளர்ந்தேன்!

6. பிறந்தேன் வளர்ந்தேன்!

பிறந்தேன் வளர்ந்தேன் பல்கலையும் கற்றேன்
      பல்வேறு பதவிகளில் பொறுப்புடன் செய்தேன்
உறவும் சுற்றமென உணர்வுடன் இணைந்தேன்
  உளமான உதவிகள் உடன்ஒடிச்செய்தேன்
                  பெறாதவை பெற்றவை போற்றி வளர்த்தேன்
                     பாசமுடன் அவர்கடமைகளை பொறுப்புடன் ஆற்றிவைத்தேன்
       சிறப்பாக பாராட்டி சிகரமென எனை தூக்கிவைத்தார்
          சிதறாது அவைஎன்றும் சீருடந்தொடர எதிர்பார்ப்பு

ஊட்டும் தாயாகி

5. ஊட்டும் தாயாகி

ஊட்டும் தாயாகி உயர்அறிவு தந்தையாகி
      உறவாகி சுற்றமுடன் உதவும் துணையாகி
     பாட்டும் கூத்துமென பலகலைகள் காட்டிஎனை
     பாரினில் உயர்வாக பரவசம் தருகின்றாய்
     ஆட்டமும் பாட்டமும் அடங்கிடும் வேளையில்
          அழகான சோதியாய் ஆதவனாய் உதிக்கின்றாய்
          கூட்டமெலாம் விலகிவிட குளிர்நிலவென உட்புகுந்து
              குருவாகி சரணஒலியில் குன்றினில் உறைந்திட்டாய்!

ஆழ்வான்

4. ஆழ்வான்

ஆழ்வான் என்னுள்ளே ஆன்மீகம் வளர்ப்பான்
      அகில உலகும் அவனுள்ளே அடக்கம் என்பான்
சூழ்கடல் உலகினில் சுழலும் ஐம் பூதங்களில்
        சின்னஞ்சிறு அணுவாகி சுடரொளி எழுப்பிடுவான்
        தாழ்வென்றும் உயர்வென்றும் தகுதியென ஏதுமில்லை
               தரணியில் எழுகின்ற தனிஉயிரும் யாவும் சமமென்பான்
    பாழ்பட்ட மனதுள்ளே விருப்புவெறுப்பு தனைநீக்கி
           பாசமிகு அன்பையே புது அமுதமென ஊட்டிடுவான்

மாற்று வழியில்லை

3. மாற்று வழியில்லை

மாற்று வழியில்லை மார்க்கம் ஏதுமில்லை
     மன்னவனே உன்திருவடி மனதில் ஏற்றினாய்
    ஏற்றமிகு பாதையினை என்னுள்ளே காட்டினாய்
            எங்கெங்கோ அலைபாய்ந்த எண்ணத்தை நிறுத்தினாய்
        பற்றுபாசம் என்பதெலாம் பொற்றாமரை இலை நீராக
         பரிவாக எடுத்துரைத்து பாசமுடன் எனை ஏற்றாய்
   கொற்றவனே ஐயப்பா குணவானே சாஸ்தாவே
         கோஷம் எழுப்பினால் குளிர்ந்தென்னை ஆள்வாயே!

அருளிடவருவாயென!

எடுப்பும் தொடுப்பும்
2. அருளிடவருவாயென!

அருளிட வருவாயென அவனியெலாம் தேடுகிறேன்
 அருமைமிகு மானிடப்பிரிவு அன்போடு தந்தாய்
               பொருளும் பொன்னும் பெருகும் சுற்றமும்
                  பொருந்திய உடலும் பேரறிவும் தந்தாய்
               உருண்டு சுழலும் உலகின் இனிமையாவும்
                  உள்ளமும் களித்திட உன்னதமாய் தந்தாய்
               பருகிய இன்பங்கள் பாசமிகு பந்தங்கள்
       பகலவன் முன் பனியென பகற்கனவாய் மாற்றினாய்

கணபதிதுணை

1. காப்பு
கணபதிதுணை

தம்பிக்கு துணையாக தும்பிக்கை கணபதியே
           தகைவான கன்னிமூலமதில் தவமாகி அமர்ந்தவனே
    தம்பியான சபரிநாதனை தரிசிக்க கார்த்திகையில்
       துளசிமணி மாலைகள் தாமணிந்து விரதமேற்று
  நம்பிக்கை துணையாக நல் இருமுடி தாங்கியே
   நாடுகாடு கடந்து நாளெல்லாம் சரணம்கூவி
                 இம்மைக்கும் மறுமைக்கும் இன்துணையாகும் ஹரிஹரசுதனை
                 இதயத்தில் வைத்து இனியகவிமாலையாக்க அருள்வாயே!