புதன், 25 பிப்ரவரி, 2015

ஸ்ரீ ஆஞ்சநேயா



தஞ்சமென வந்தவனை தம்பியெனத் தழுவி
   தன்னெஞ்சில் வைத்து அருளிய காகுத்தனை
நெஞ்சில் நிறுத்தி நானிலத்தில் என்றும்
   நிலைபெற்று சிரஞ்சீவியாய் நிறைந்திருக்கும் அனுமனே
சஞ்சீவி பருவதத்தை சட்டெனத் தூக்கிவந்து
   சகோதரன் உயிர்மீட்ட சொல்லின் செல்வனே
அஞ்சா நெஞ்சமும் அறிவோடு ஆற்றலும்
   அன்போடு தூய்மையும் அருவியென நாவண்மையும்
எஞ்ஞான்றும் எமக்களிப்பாய் ஈடில்லா ஆஞ்சநேயா

   என்றென்றும் உனதடியே போற்றிப் பணிவேனே!

ஸ்ரீ ஹயக்கிரீவர்


குதிரை முகம் குளிர் நிலவாகி ஒளிவீச
   கதிராக அலைமகள் அருகமர்ந்திருக்க
மதியாகி மாகலை யாவும் தாமாகி
   மகிழ்வோடு அளித்திடும் பரிமுகனே
துதித்திடும் பக்தருக்கு பலகலையோடு
   தூய ஞானம் தந்தருளும் திருமாலே
பதித்தேன என்சிரம் பாதங்களில் என்றும்

   பரிவோடு என்னை பரிபூரணன் ஆக்குவாயே!

நாவுக்கரசி


அணைந்த வீணையை அழகிய விரல் மீட்ட
    அறிவின் ஏடும் ஜபமாலையும் மறுகைஏந்த
துணையாக அன்னம் துள்ளி விளையாட
    துலங்கும் வெண்தாமரையில் வீற்றிருக்கும் சுடரே
இனையிலா கலைகளில் இயங்கிடும் தேவி
    இன்முகம் கனிந்து நல்லறிவு அருள்வாயே
முணைந்து வெற்றிகளை முன்வந்து பெற்றிட

    முத்தான நாவுக்கரசி கலைவாணி போற்றியே!

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

அம்மாவின் பிறந்தநாள் அறுபத்தேழின் திருநாள்


1. மாடியிலே தோட்டம் உம் மனதில் எழுந்ததிட்டம்
    மூன்றாவது அறுவடை மாதுஎன் வீட்டுமாடியில்
  கோடியிலே ஒருவர்நீவீர் கோடிப்பேரை வாழவைப்பீர்
    குவித்திடும் வாய்ப்புகள் குவிந்திடும் பலன்கள்
  நாடி ஏழை துயர்தனை நசித்திடுவீர் நொடியினில்
    நாளும் தவமிருப்பீர் நானிலம் நன்குவாழ
  வாடிடும் உம்முகம் வறுமையைக் கண்டாலே
    வாழ்வளிக்க திட்டங்கள் வகைவகையாய் தானளித்தீர்

2. பாடிநான் புகழவில்லை பலன் எதும் கேட்கவில்லை
    பாரினில் இன்னும்நீவீர் பல்லாண்டு வாழ்கவென
  தேடிநின்று இறைவனை தினமும் வேண்டிடுவேன்
    தென்றலென ஒளியென தேயாத நிலவென வாழ்க
  கூடிநின்று வாழ்த்துவோம் குதூகலித்து வணங்குவோம்
    குளிர்விக்கும் அறுபத்துஏழு குறைவிலா அன்னையே
  செடிவளர மண்வேண்டும் செல்விநீவிர் வாழ்ந்திட
    சோர்விலா எம்மனமுண்டு சோதியென வாழ்க! வாழ்க!
                                          கவிதை. ராதாகவி
                                       தட்டச்சு, புகைப்படம் சித்தார்த்

வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

குருவாயூரப்பன்


குழந்தை வடிவாகி கோலமிகு மலர்மாலை
      கமலமும் கதையும்  இருகைகளில் ஏந்தி
முழங்கும் சங்கமும் மின்னும் சுதர்சனமும் கைகூட
      மேகமான குழல் கொண்டையில் மயில் இறகாட
அழகான தீபச்சரம் ஆடிநின்று ஒளிவீச
      அலங்கரிக்கும் பட்டும் அணிந்துள்ள அணிகலனும் மின்னும்
மழலை மொழியானை மாதவத் திருமகனை

      மங்கல குருவாயூரில் மனங்குளிரக் கண்டேனே!

பால கிருஷ்ணன்


கொண்டையின் மயிலிறகோ குழல் அழகோ
   குமிழ் சிரிப்போ குவிந்திடும் செம்பவளவாயோ
குண்டலம் குதித்தாடும் இருசெவியோ
   குறும்போடு பளபளக்கும் வண்டுவிழியோ
கொண்டல் வண்ணமோ குவளை மூக்கோ
   கைகளில் தவழ்கின்ற புல்லாங் குழலோ
அண்டமெலாம் மயங்க வைக்கும் மாயம்

   அழகா உன்னிடம் எதிலோ நானறியேனே?

பன்னிருநாமம்


1. அஞ்சுதலை நாகம் அழகாக குடைபிடிக்க
       அலங்கார மூர்த்தியாய் அருள்கின்ற விஷ்ணுவே
  பஞ்சவர்ண மயிலிறகு பாங்காககுழல் கற்றையிலாட
       பொற்கிரீடம் தலையணிந்து பொலிகின்ற நாராயணா
  பிஞ்சுக்கால் நடையோடு மூவடி மண்வேண்டி
       பேருவம் காட்டிமண் விண்ணளந்த வாமனா
  தஞ்சமெனப் பணிந்தவன் தலைமேல் பாதமிட்டு
       தரணிகாத்து மாபலியை ஆட்கொண்ட திரிவிக்ரமா

2. சிவந்திடும் கைகளில் செந்தாமரை ஏந்தியே
       செல்வத் திருவோடு சேர்ந்திடும் பத்மநாபா
  தவமிகு ஞானியர் தரிசிக்கும் தாமோதரா
       தாயாகிய தேவியை மார்பில் தாங்கிடும் கோவிந்தா
  புவனம் காத்திட புறப்படும் சுதர்சனம்
       பூரிக்கும் கைவிரலில் சுழல்கின்ற ஸ்ரீதரா
  தவழும் அலைகடலில் தானெழுந்த சங்கமதை
       தாங்கியே வழிகாட்டும் தலைவனே மாதவா

3. பாற்கடல் தன்னைவிட்டு பனிக்கடல் மேல்நின்று
       பக்தரை காத்திடும் பரமனே ரிஷிகேசா
  பொற்கதை ஏந்தி புல்லரை மாய்த்து
       உற்றவனாய் அடியவர்க்கு உடன்அருளும் மதுசூதனா
  உன்னடி சரண்புகுந்திட உணர்ந்தேன் பேரொளியே
       கொற்றவனே குளிர்மாலை கொண்டவனே கேசவா
  குறைவிலா பன்னிருநாமம் கூறினேன் காத்தருள்க!


செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

தியானம் அன்பு சிவம்


வளரும் தேயும் வானில்வரும் நிலவாக
   வளரும் ஆசைகள் வகைபல என்னுள்ளே
தளரும் ஒருநாள் தவிர்த்துஎழும் மறுநாள்
   தள்ளாடும் ஆசைகளில் தவிக்கும் மனம்தினம்
குளமாகி குழம்பும் குறுகிய மனதை
   கூறுபோட்டு பார்க்கவே கூடிவரும் தியானம்
அளவிலா லிங்கமாகி அடியும் முடியுமிலான்
   அன்பே சிவமெனில் ஆட்கொள்ள வருவானே!

பிறப்பே முதலாக பின்மரனம் முடிவாக
   பாவ புண்ணியத்தின் பலனாக புவியினில்
பிறவியென எழும் பின்மீண்டும் எழும்
   பிறவியினின்று விடுபட பற்றும் ஒரேவழி
பிறஉயிரினை தனதாகப் பேணும் அன்புவழி
   பரமன் காட்டுகின்ற அன்பே சிவமென்றால்
பிறவி சுழறச்சி பறந்திடும் தூசாக
   பொருளுணர்ந்து விரதம் பேணும் சிவராத்திரி
பிறவி பெற்ற பயனை இம்மையிலும்

   பின்மறுமையிலும் தருகின்ற பரமசிவன் திருநாளே!

ஒம் நமச் சிவாயா


நமச் சிவாயமென நாவினில் இனிக்கும்
    நந்திமீது நாயகன் நற்குடும்பம் தோன்றும்
உமா சிவசிங்கரி உடனுறை தாயாவாள்
    உலகமகா மூலவன் உள்ளமர்ந்த கணபதி
சமர் புரியும் சண்முகன் சோதர்கள்
    சந்தியிலும் குன்றிலும் சன்னதி காண்பவர்
அமரத்துவம் அடையவே ஆதிசிவ குடும்பமதை

    அழகிய சிவரத்திரியில் அகமகிழ்ந்து பணிவோமே!

கருணை தெய்வம்


ஒயாது அழித்தலை ஒய்விலாது செய்தனையோ
    ஒய்வெடுக்க தோல்மீது ஒம்காரத்தில் அமர்ந்தனையோ
மாயாத துயரங்கள் மாந்தருக்கு மாய்ந்திட
    மலராசனமிட்டு மாதவம் செய்தனையோ
காயாத எனக்கருள கல்லுக்குள் ஈரமாகி
    கால்தூக்கி நடனமாடிய கனகசபை நீத்தனையோ
சாயாத என் உடலினை சகத்தின் மண்ணுக்கும்

    சாகாத என் ஆன்மாவைநின் செவ்வடியிலும் சேர்ப்பாயோ!

திங்கள், 16 பிப்ரவரி, 2015

நாணா நினைவு


பல்லவி
உன்னை நினையாத நாளில்லையே நீசெய்த
    பணிகளுக்கு ஒர் எல்லை இல்லையே (உன்னை)

அனுபல்லவி
நாணாவாகி தானாகி தன்னலமறியா மனமாகி
           தாயாகி வாழ்ந்திருந்த தவமே - எங்கள் வரமே (உன்னை)

சரணம்
    நினைவறிந்த நாள்முதல் நிழலாகி தொடர்ந்திருந்தாய்
   கணமேனும் எமைப்பிரியாது காவலாகி காத்திருந்தாய்
   வான் அமுதாகி யாம்வளர அன்பை பொழிந்திருந்தாய்
              பொன் மலராகி வானுலகு பொலிந்திட சென்றுவிட்டாய் (உன்னை)


                            ராதாகவி

வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

காதலர் தினம்



1. காதல் பிறப்பது கண்காணாத கருவறையில்
      காலமெலாம் வளர்வது கருணைமிகு அன்னை மடியில்
  காதல் தொடர்வது கனிகின்ற உடன்பிறப்பில்
      காலமெலாம் போற்றும் கனவுமிகு தந்தைதோளில்
  காதல் தோன்றுவது கன்னியர் கடைக்கண்ணில்
      காலமெலாம் தொடரும் கல்யாணம் ஆனாலே
  காதல் வாழ்கவென குரல் எழுப்பும் இளமையே
      காதலை அறிமுகம் காட்டிய பெற்றோரை

2. காதலை பாசத்துடன் கொண்டாடும் உறவுகளை
      காதலில் கட்டுண்ட கவின்மிகு நண்பர்களை
  காதலர் தினத்தில் கருத்தினில் கொள்வீர்
      காதல் என்பது கனரமீறும் அன்புவெள்ளம்
  காதலின் மறுவடிவம் அன்பே அறிந்திடுவீர்
      கரைகின்ற அன்பால் ககனத்தை வெல்லுவீர்
  காதலின் வெற்றி கைகளில் தவழும்
      கரும்சிவப்பு ரோஜாவாக காலமெலாம் மணக்கும்!


                                                ராதாகவி

ஆதி சிவமே!


  வெள்ளிப் பனிமலையே விளங்கும் நின்திருமுகம்
        விளையாடும் மலையடுக்கு விரிந்திடும் நின்குழல்
            வெள்ளிநிலவு மூன்றாம்பிறையாகி வீற்றிருக்கும் திருச்சடை
      வெண்ணீறு ஒளிவிட விழிக்கின்ற நெற்றிக்கண்
துள்ளிடும் திரிசூலம் துவண்டுநெளியும் நாகம்
    தூயகங்கையை தாங்கிடும் திருமுடி
அள்ளித்தரும் பிரதோஷ ஆனந்த நாயகன்
           அவனியை காத்திட ஆதிசிவமே வந்தருள்க!


                                                 ராதாகவி

ஸ்ரீ வாமனன்


மேலெழுந்த இடப்பாதம் விண்ணளக்க
         மிதித்த நின்ற வலப்பாதம் மண்ணளக்க
   மாலவன் கைவிரல் மூன்றாம் அடிகேட்க
      முடிகாட்டி மாபலியும் சரணடைய
நீலக்கடல் மேலணையும் திருமாலே
           நீள உயர்ந்து நின்ற குறளாகிய வாமனா
             உலகளக்க வந்தனையோ உளங்கான வந்தனையோ
                   ஊழ்வினை நீக்கியெனை உன்னோடு சேர்ப்பாயே!


                                               ராதாகவி

தென்திசை குருவே தட்சிணாமூர்த்தி


ஆதி குருவாய் குருந்தமரம் அடி அமர்ந்த குருவே
     ஆறுமுகன் குருவாக அடிபணிந்த குருவே
வேதியர்கள் ஒதுகின்ற வேதத்தின் உருவே
       விளைகின்ற அறிவெலாம் விளக்கிடும் குருவே
சோதியும் உடுக்கையும் சுவடியும் அபயமும்
      சேர்ந்திடும் நான்கையும் செங்கைகள் ஏந்திட
மோதிவரும் கங்கையுடன் மூன்றாம்பிறை சூடியே
       மோனத்தவ தக்ஷிணா மூர்த்தியே வந்தருள்க!
       

                                                                         ராதாகவி

செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

அறிதுயில் அரங்கனே!

காவிரியும் கொள்ளிடமும் கைகோர்த்து மாலையாகி
  கருமுகில் வண்ணன் கழுத்தினில் ஆடிவர
பூவிரியும் பொன்னியும் புனலாகி பெருகிவர
  பாம்பணையில் கைவைத்து பாதம்நீட்டி பள்ளிகொண்டு
தேவிரியும் இருதேவியர் தொழுது அருகிருக்க
  தேனரங்கம் பாவரங்கம் தெவிட்டாத கவியரங்கம்
பாவிரியும் ஆழ்வார்கள் பன்னிருவர் பிரபந்தமோடு

  புரிதுயில் பயிலுகின்ற பெருமானே அருள்வாயே!

                                                 ராதாகவி

உலகமகா சோதி


விரிகுழல் விரிந்திருக்க விழியிரண்டு பார்த்திருக்க
   வெறுமையான என்நெஞ்சில் வேரூன்றும் உன்கருணை
பரிதவித்து மனம்நிற்க பாசத்துடன் உட்புகுந்தாய்
     பாரினில் என்குறைகள் பனியாக உருகவைத்தாய்
தரித்திடும் காவியுடை தளர்ந்துவரும் மென்னடை
     தாயாகி நீவந்தாய தவழ்சேயாக நானிருந்தேன்
உரிமையுடன் எந்தனையே உன்னுள்ளே வைத்திட்டேன்
     உலகமகா சோதியே உந்தனையே சரணடைந்தேன்!

புதன், 4 பிப்ரவரி, 2015

பன்னிருவரைப் பணிவேனோ? பக்திவழி அறிவேனோ?

1. ஆழியான் அடியினுக்கு அகிலத்தை அகலாக்கி
     ஆதவனை சுடராக்கி அடிபணிந்த பொய்கையார்
  ஊழியானை உத்தமனை உருதுன்பம் நீங்கவேண்டி
     ஒளியூட்டிய ஒர்விளக்கில் ஒருதுளி எண்ணை ஆவேனோ?

2. பொழிகின்ற கருணை பொன்மலர் கண்ணனின்
    பொருந்திய திருவுருவை புறக்கண்ணாலும் கண்டே
  ஆழியேந்திய அமலனை அழகனைக் காட்டிய
    அமுதான பேயாழ்வார் அசையும் இமைமுடி ஆவேனோ?

3. அன்பும் ஆர்வமும் அழகு விளக்காக
     அறிவான சிந்தனயும் அங்கெரியும் திரியாக
  இன்பமே இவ்வுலகில் இங்கென்றும் நிலைபெற
     இதயத்தில் அரங்கனை இசையோடு கூட்டுவித்த

4. தன்லைமிலா பூதத்தாழ்வார் தனிவழி காட்டிட
    தஞ்சமென அமர்ந்த திருப்பாதமண் ஆவேனோ?
  முன்வந்த மூவாழ்வார் முடங்கிய அறையினில்
    மூச்சாக சுவாசித்த மென்காற்று ஆவேனோ?

5. நான்முகன் அந்தாதியில் நாராயணனே தெய்வமென
    நானிலத்தில் உள்ளதெல்லாம் நாரணன் வடிவமென
  தான்உணர்ந்த பொருளை தமிழால் எடுத்தோதிய
    திருமழிசை ஆழ்வார்வாழ் தெருமண் ஆவேனோ?

6. உயர்நலம் உடையவனை உளனெனில் உள்ளவனை
    உயர்குன்றம் நின்றவனை உறிவெண்ணை உண்டவனை
  புயல்மழை வண்ணனை புளியமரத் தடியிருந்தே
    பக்தியில் பாடியே புகுகின்ற வைகுந்தம்

7. தயவான நம்மாழ்வார் துணையாலே புகுவோரின
    தாளினை முனிவர்கள் தடவிக்கழுவிய நீர்த்துளி ஆவேனோ?
  கயல்விழி மங்கையர் கரங்களில் ஆரத்தி
    காட்டி எடுத்திடும் கரும்சிவப்புதுளி ஆவேனோ?

8. திருமலை மீதினில் திகமும் ஏதாகினுமாய்
    தோன்றிட வேண்டியே திருவேங்கடனைப் பாடிய
  அரசும் வேண்டாத அருள்மிகு குலசேகராழ்வார்
    அளித்திட்ட ராமகாதை அன்போடு கேட்கும் செவி ஆவேனோ?

9. கோடிமலர் பறித்து கோர்த்த(வாச) மாலையுடன்
    கோவலனைத் தாலாட்டி கொண்டாடிய பெரியாழ்வார்
  செடியருகே கிடைத்த செல்வியின் துணையோடு
    ஸ்ரீரங்கம் நடந்திட்ட சிறுபாதைகல் ஆவேனோ?

10. அரங்கனை ஆழிநீலனை அறிதுயிலானை திருப்பள்ளிஎழப்பாடி
     அருளோடு அவனையே அருட்பெரும் தெய்வமென
   சரங்களால் மலர்மாலை சூட்டிடும் தொண்டரடிப்பொடி
     சுகந்தமெனக் கொய்த துளபத்தில் ஒர்இலை ஆவேனோ?

11. பாதாதி கேசம் பரவசத்துடன் கண்டே
     பண்ணோடு யாழிசைத்து பரமனைப் பாடிய
   மூதாதையரும் பின்வரும் முன்னூறு தலைமுறையும்
     முக்திபெற வழிவகுத்த திருப்பாணாழ்வார் யாழில்
                               ஒர்இழை ஆவேனோ?

12. தேடிப் பொருளினை திருடியும் கொணர்ந்த
     திருமங்கை மன்னன் தினமும்தன் துணையோடு
   நாடி அளித்த நல்லமுதும் நற்பணியும்கூட
     நாராயணனைப் பாடியனற்பாயிரத்தில் ஒர்எழுத்து ஆவேனோ?

13. வேதம் தமிழ்செய்த வண்குருஉர் நம்பியே
     வணங்கும் தெய்வமென வாயால் பாடிஎங்கும்
   ஒதிய மதுரகவியாழ்வார் ஒர்பத்துப் பாடலில்
     ஒளிறும் சிறுத்தாம்பில் ஒருதுரும்பு ஆவேனோ?

14. கூடிவந்த தோழியரோடு குளிர்நீரில் நீராடி
     கனவில் கைபிடித்த கண்ணனையே நினைந்து
   பாடிய பாடலால் பரமனடி சேர்ந்த
     பாவை ஆண்டாள் பாதத்துளி ஆவேனோ?

15. நாலாயிரம் பாடியே நற்றமிழ் வளர்த்து
     நாடும் ஆன்மீகம் நாடெங்கும் பெருகிட
   மாலாயிரம் வடிவானவனை மனத்தில் இருத்தியவரை
     மூநான்கு ஆழ்வாரை முக்காலமும் பணிவேனோ?

16. பாலாயிரம் அலைவீசும் பாற்கடலில் இருப்போனை
     பக்தியால் அவர்தந்த பாடல்வழி காண்பேனோ?
   நூலாயிரம் படித்து நொந்துநான் வாடாமல்
     நாராயணன் பாதத்தில் நற்கதி அடைவேனோ?


                                      ராதாகவி  

தைப்பூச நாயகனே!

ஊசலாடும் என்மனதை உள்ளே திருப்பி
   உந்தன் திருப்பாத உயர்வினைக் காட்டி
  வாசமுடன் வளமும் வகையான இன்பமும்
            வெறுப்பும் பகைமையும் விளைவித்த செயல்களும்
   நேசமுடன் நாடிநாளும் நலிந்துபோன எனக்கே
  நீங்காத இன்பத்தை நீயாக வந்தளித்து
பூசத்தின் நாயகனே புவியில் எந்தனையும்
                 புனிதமாக்கி வைப்பாயே (அறு) படைவீட்டு பெருமானே!

    ராதாகவி