ஞாயிறு, 29 மார்ச், 2015

மதுரை மீனாட்சி



வயலெல்லாம் நெல்விளையும் வளமான தென்மதுரை
  வண்ணமிகு கோபுரங்கள் வானளாவி வரவேற்கும்
கயல்எனத் துள்ளும் கண்விழியாள் மீனாட்சி
  கையில் கிளியேந்தி காட்சிதரும் கூடல்நகர்
மையல்கொண்ட சுந்தரேசன் மணமகன் திருக்கோலம்
  மாடவீதிப் பாதைகளில் மனமகிழ் தேரோட்டம்
தையல்அவள் பச்சைவண்ணத் தாயாகி நிற்கின்றாள்
  தஞ்சமென வந்தவரை தன்சேயாக்கி காக்கின்றாள்!

ஸ்ரீ காயத்திரி தேவி



ஒர் ஐந்து முகமும் ஈரைந்து கரங்களும்
  ஒளிரும் சக்கரமும் ஒலியெழுப்பும் சங்கமும்
கூர்அறிவும் மனஉறுதியும் கோல எழுத்தாணியும்
  குளிர்ந்த முகப்பொலிவு மனத்தூய்மை வழங்கிட
சீர்மிகு தாமரையும் சிலம்பும் செஞ்சாந்தும்
  சிங்கார கதையும் சிலிர்க்கும் சாட்டையும்
பார்மீது தாங்கியே பவனிவரும் காயத்திரி
  பாவங்களை அறியாமையை போக்கிடும் ஒளியே
நேராக வணங்கிட நேயமிகு கதிரே
  நல்லுலகை படைத்திட்ட நலமிகு தெய்வமே
சீராக தியானிப்பேன் சீர்மிகு உன்புகழை
  சிந்தையை தெளிவித்து சிற்றறிவை நெறிப்படுத்துவாயே!

நரசிம்மர்



பக்தனைக் காத்திட பிடரிசூழ் சிம்மமாய்
  பெருந்தூண் பிளந்து பீரிட்டெழுந்த நரசிம்மா
முக்தியை முரடனுக்கும் மனமுவந்து அளித்தவா
  மோகனப் புன்னகையாள் மூவுலகின் தேவியை
பக்கத்தில் வைத்து பாம்பணையில் அமர்ந்தவா
  பாங்குடன் சங்கமும் பளிச்சிடும் சக்கரமும்
போக்கும் கதையும் பூவிழி பாலனும் கூடிநிற்க
  பார்க்கும் கண்களில் பரவசம் பெருகுமே!

பரமேஸ்வரா



ஊழிமுதல்வனை உலக நாயகனை
  உயர்ந்த சடையில் உயர்கங்கை தாங்கியவனை
முழுமதியை முறித்து முன்முடியில் தரித்தவனை
  மன்மதனை கண் மூன்றால் எரித்தவனை
நெளியும் நல்அரவை நீலக்கழுத்தில் அணிந்தவனை
  நெற்றியில் சுடலை நீரினைப் பூசியவனை
பழவினை போக்கி பரம்பதம் அளிப்பவனை
  பவித்திர உத்திராட பரமசிவனைப் பணிவேனே!

வெள்ளி, 27 மார்ச், 2015

விநாயகர்



தம்பியவன் மயிலேறி தரணியெலாம் சுற்றிவர
  தாய்தந்தையை சுற்றிவந்து தாளடியில் பணிந்துநின்று
மாம்பழம் தனைப்பெற்ற மோதகப் பிரியோனே
  மரத்தடியே கோயிலாக்கி மலையானை முகமெடுத்து
நம்பிக்கை எமக்களிக்கும் நல்தும்பிக்கை நாயகனே
  நால்வேதப் பொருளோனே நல்மஞ்சளிலும் உருவெடுப்பவனே
அம்பிகை பாலகனே அவல்பொரி படைத்திட்டோம்
  அறிவொளி பெருக்கியே ஆட்கொள்ள வருவாயே!

நீலமயிலோனே!



நீலமயில் வாகனமாய் நீஎறி வலம்வருவாய்
  நால்வேதம் போற்றும் நாயகனே மெய்ப்பொருளே
நீலகண்டன் குமாரனே நல்தேவாதி தேவனே
  நீங்காது பக்தர் நெஞ்சினில் வாழ்பவனே
கோலஎழில் வடிவான கோவே அழகனே
  காலமெலாம் உலகினை காத்திடும் கருணையே
மூலமே கண்கண்ட முதல் தெய்வமே
  முன்வந்து அடியார் முழுத்துன்பம் முடிப்பவனே
சீலனேயான் வேண்டும் சீர்வரம்தரும் வேலனே

  சிவகுரு நாதனே சிரம்தாழ்த்தி போற்றுகிறேன்

ஹரிஹர புத்திரன்



சரணமென உன்திருவடி தேடி வந்தவர்க்கு
  சுனையாகி விரும்பிய வரம் தருபவனே
கரையிலா கருணைக் கடலாகி வந்தவனே
  காசினியில் ஒளிவீசும் குளிர் நிலவே
மறை போற்றும் ஹரிஹர புத்திரனே
  மூவுலகு ஏற்கும் தலைவனான சாஸ்தாவே
நிறைவாக நெஞ்சமதில் தினமும் போற்றுகிறேன்

  நீக்கிடும் எல்லாத் துயர்களையும் நின்னருளே!

சூடிக்கொடுத்தவள்



தொடுத்திட்ட பூமாலை தானணிந்து பின்
  துளபமாலை தவழும் தூயவன் தோளுக்கென
எடுத்தளித்த பைங்கிளியே எழில் கோதாய்
  எடுத்த பிறவியும் வாய்மடுத்த வேய்குழலோனுக்கென
கடுத்த குளிரில் நோன்புகொண்டு கவி படைத்தாய்
  கண்ணன் தனை நினைந்தே கனவுகண்டாய்
படுத்திருந்த அரங்கன் பாவையுன் கரம்பற்ற
  பக்தியின் வெற்றியை பாரினில் கண்டோமே!

புதன், 25 மார்ச், 2015

பவித்திரதம்பதி



சீதாராமா எனில் சினமெலாம் ஒடிவிடும்
  சிந்தையில் பொறுமையே சீராக குடியேறும்
மாதாபிதா வாக்கினை மனதால் ஏற்றிடும்
  மாளாத துயரிலும் மனம்தளராது காத்திடும்
ஆதரவாய் அனைவரிடம் அன்பூற்று பெருகிடும்
  அரசனோ ஆண்டியோ அகிலமோ ஆரண்யமோ
பேதமின்றி எண்ணிடும் பாசமழை பொழிந்திடும்

  பவித்திர தம்பதிதிருநாமம் பாவமெலாம் நீக்கிடுமே!

ஆற்றுக்கால் பகவதி



அஞ்சாத கண்ணகியே ஆற்றுக்கால் பகவதியானாய்
  அழகான அனந்தபுரம் ஆற்றுக்கிள்ளிக் கரையினிலே
கொஞ்சம் தங்கிட கோலமிகு தேவியானாய்
  கருவறைச் சிலையினிலே கனகரத்தினம் பூண்டிருப்பாய்
அஞ்சும் பூத வடிவபெண்மேலே அழகாக அமர்ந்திருப்பாய்
  ஆதிசங்கரர் யந்திரத்தில் அமைதியாகி சாந்தமானாய்
வஞ்சியுன் கைகளிலே விரிசூலம் கத்திகேடயம்
  வாரித்தரும் அட்சயபாத்திரம் வளம்தர தாங்கியிருப்பாய்
நெஞ்சுருகி பொங்கலிட்டு நங்கையர் கூடிடுவார்

  நலம்தந்து அவர்வாழ நாளும் காத்திருப்பாய்!

கோதண்ட ராமா!




1. கோதண்டம் தாங்கிய கோசலை மைந்தனே
    கோமகள் சீதையை கைபிடித்த காகுத்தனே
  பாதச்சுவடென பின்தொடர்ந்த இலக்குவன் சோதரனே
    பணிகின்ற அனுமனின் பாசமிகு தலைவனே
  வேதநாயகனே வையமதில் வாழவந்த மனிதநேயமே
    வடபனிநிறை இமயமுதல் வற்றாததென் குமரிகடல்வவரை
  பாதம்பட நடந்து போர்முடித்த வீரனே
    பாதம்பட அகலிகை பாவம்நீக்கிய கருணையே

2. சேதுக் கடல்மேல் சீரணைகட்டிய சிற்பியே
    செந்தாமரை முகத்தோனே சொல்காத்த புத்திரனே
  ஒதும் அரசநீதியின் ஒப்பிலா மன்னவனே
    ஒங்கும் பாரதமதில் ஒர்ராம ராஜ்யம்
  நீதி செழிக்க நிலைபெறச் செய்தவனே
    நித்தம் உனைப்பணிய நன்மையே சேருமே
  கதிரவன் குலத்தோனே காலடியே சரணாகதியென

    கனிந்தே வீழ்ந்தேன் காலமெலாம் காப்பாயே!

ஞாயிறு, 22 மார்ச், 2015

சமயபுரத்து நாயகியே!



எட்டுக் கரங்களில் ஏந்திய ஆயுதங்கள்
  எழிலான நாகம் எதிர்கொள்ளும் மகுடம்
சுட்டுவிடும் நெருப்பு சூழ்கின்ற பின்ணணி
  சுற்றிய பட்டாடை சோதியென ஜொலிக்க
திட்டமுடன் மடித்தபாதம் தொங்கும் மறுபாதம்
  தெய்வீக எலுமிச்சை துவளும் மாலையாக
பொட்டான குங்குமமும் புனிதத் திருநீரும்
  பொலிகின்ற திருமுகமும் புன்னகையும் தவழ்ந்திட
முட்டும் கோபுரம் முன்வரும் சமயபுரம்

  மங்கல நாயகியே மனமிரங்கி அருள்வாயே!

ஒரு சொல் ஒரு வில் ஒரு தாரம் ஸ்ரீராமர்



ஒருசொல் ஒருவில் ஒருதாரமென உயர்ந்தவனே
  ஒளிரும் முகந்தனில் ஒங்கிநிற்கும் சாந்தரூபனே
திருமகளாம் சீதையோடு தீர்க்க தரிசனம் தருபவனே
  தயங்காது யாவரையும் தன் சோதரராய் ஏற்றவனே
மருவிலா மன்னராட்சி முன் ராமராஜ்யம் தந்தவனே
  மக்களைத் தன்கண்ணாக மனதில் கொண்டவனே
பொறுமையின் திலகமாய் புவியினில் வாழ்ந்தவனே

  புனிதனே எமைகாக்கும் ராமனே அருள்தருக!

சனி, 21 மார்ச், 2015

ஆறுமுகம்



ஒங்கார வடிவமாகி வருகின்ற ஒருமுகம்
  ஒதும் ஞான மொழி பேசுகின்ற ஒருமுகம்
பொங்கும் சரவணபவ எனும் ஆறெழுத்தில்
  பக்தர் வினைதீர்க்கும் ஒருமுகம்
தங்கும் ஞான சக்தியினை ஏவி கிரெளஞ்சமலை
  தகர்த்து இன்னருள் தரும் ஒருமுகம்
நீங்கிய பக்திவழி நீசர் சூரரை
  நல்வேலில் அழித்து வீரம்காட்டும் ஒருமுகம்
தங்கிய மான்வயிற்றில் தான் பிறந்த வள்ளியை
  தங்கமனம் கவர்ந்து மணந்தது ஒருமுகம்
எங்கும் நிறைந்து என்மனதில் என்றும்
  ஏறி அமர்ந்த எழில் ஆறுமுகமதைப் பணிவேனே!

சத்யசாயி


சத்திய சோதியென சகமெங்கும் ஒளிவீச
  சத்ய சாயியென சஞ்சலங்கள் போக்கிடவே
நித்திய தெய்வமாய் நடமாடும் புண்ணியமாய்
  நெஞ்சில் அன்பையே நிலையான ஆயுதமாய்
வித்தைகள் புரிந்தாயே விழிப்புணர்வு தந்தாயே
  விரித்த குழலோடு விளங்கிய காவியோடு
சித்து விளையாடி சிந்தையில் புகுந்தாயே
  சிறுமைதனை விரட்டி சிறகடிக்க வைத்தாயே

புத்தியில பக்தியை புனிதசேவையில் இணைத்தாயே
  பூமியில் யாவரும் உடன்பிறந்தார்என உணர்வித்தாய்
முத்திட்டு ஈன்றுவளர்த்த பெற்றோரை கண்முன்
  முன்னிற்கும் தெய்வமெனப் பணிய வைத்தாயே
வித்தாக ஒழுக்கமதை விதைத்திட செய்தாயே
  வியத்தகு உழைப்பை வேதமாக்கி நின்றாயே
சத்தான கருணையை சக்தியாக்கி வளர்த்தாயே
  சூழ்ந்து நின்று என்னை என்றும் வழி நடத்துவாயே!

வியாழன், 19 மார்ச், 2015

நாடிவரும் சூரியனே!



வானில் வலம் வருகின்ற விரிசுடரே
  வளர்கின்ற இரவுபகல் விளைவிக்கும் கதிரோனே
தேனாக நாள்கடக்க தேரில்வரும் தூயவனே
  தேன்மழை பொழிய திரள்மேகம் தருவோனே
வானில் மலைமுகட்டில் வளர்அலை கடலில்
  விடியலில் செவ்வானில் விழித்தெழும் உதயமே
தானிலா சக்தியாக தனித்தியங்கும் ஆதித்யனே
  தவழும் அண்டத்தில் தன்னிகரிலா நாயகனே
நானிலத்தில் நீயின்றி நிலைபெற்ற சக்திஏது?
  நல்லுயிர்கள் தாம்வாழ நாடிவருக சூரியனே!

விண்ணில் கண்ட ஒளி



மேரியாகி வந்து மகவினை சுமந்த
  மென்மைமிகு அன்னையே மாதவ மங்கையே
புரியாத துயரில் பாதைதனை அறியாது
  பரிதவித்த மானிடரை பாசமுடன் கைபிடித்து
பரிவோடு வழிநடத்தும் பாலகனைத் தந்திட்டாய்
  பாவங்களை தான்சுமந்த புனிதனை பெற்றவளே
விரிகின்ற வான்சுடர் வியக்கும் ஏசுஒளி
  விண்ணில் கண்டோம் வேதனைகள் இனிஇல்லையே!

அன்பே சிவம்



திருமாலும் பிரமனும் தேடியும் காணாத
  திருமுடியும் அடியும் கொண்ட சிவமே
உருவமும் அருவமும் உள்ளடக்கிய லிங்கமே
  உடுக்கை ஒலியிலாடும் ஊர்த்தவ தாண்டவமே
அருவமும் கங்கையும் செயும் அபிஷேகப் பிரியனே
  ஆவுடை மீதிருந்து அகிலம்காக்கும் ஈஸ்வரனே
திருநீரும் சந்தணமும் திகழ்கின்ற பரமனே
  திருநீல கண்டனே திருவருள் புரிவாயே!
ஒருஐந்து எழுத்தினை ஒம்நமச்சிவாயவென
  ஒருபோதும் மறவாது ஒதிநிற்க அருள்வாயே!

சோட்டாணிக்கரை பகவதி



பால் வடியும் முகமோடு பாலகியாய்
  பாவங்கள் போக்கிடும் தேவியாய்
சேல் விழிகள் சிங்காரப் புன்னகைபுரிய
  சங்கோடு சக்கரமும் சிறுகை ஏந்த
வெல்லும் வழியே இங்கே சரணடையென
  வலக்கை வழிகாட்ட இடக்கை அருள்புரிய
செல்வியாய் வீற்றிருக்கும் சோட்டாணிக்கரை பகவதியே
  சொல்வேன் என்றும் அம்மே நாராயணி
                       தேவி நாராயணி என்றே!

திங்கள், 16 மார்ச், 2015

முகிலோ? மரகத மேனியோ?



முகிலோ மரகத மேனியோ நிலவான
  முகமதில் பூத்திருக்கும் புன்முறுவலோ
வாகாய் முடித்திருக்கும் வடிவான கொண்டையோ
  வேய் குழலோ மீட்டும் மெல்லிய விரலோ
மோகனப் புன்னகையோ மயக்கும் பூவிழியோ
  மேனியில் தவழும் பூச்சரமோ
தகவாய் மேனியைத் தழுவும் துகிலோ
  தாளமிடும் மென்பாதச் சலங்கை ஒலியோ
ககனமதில் எந்தன் கல்நெஞ்சத்தையும்
  கனிந்து உருகச்செய்து கணத்தில் உள்ளே
உகந்து புகுந்து உருக்குவதும் எதுவோ
  உணர வல்லேன் உன்னடியே பணிகின்றேன்!

ஸ்ரீ சனீஸ்வர பகவான்



காகம் தேர்இழுக்க கையிலம்பு வில்லிருக்க
  கருநீல கண்டன்பின் ககனமதில் ஈஸ்வரனாகி
நாகமோடு நவக்கிரக நாயகரில் ஒருவராகி
  நற்சோதி ஆதித்யன் நல்சாயா மகனாகி
வேகம் தவிர்த்து விண்வெளியில் சுற்றிவந்து
  வேற்றுமை இன்றியே வேந்தன்முதல் ஆண்டிவரை
இகத்தினில் பற்றியே இன்பமும் துன்பமும்
  இம்மியும் பிசகாது இயக்கிடும் மந்தகனே

அகத்தில் தூய்மையும் அகலோடு எள்ளும்
  அன்போடு ஏற்றினோம் ஆழ்நீலப் பூச்சுட்டி
தகர்த்திடு துன்பமதை தயையோடு காத்திடு
  தாங்கிட இயலாது தயாளனே உன்பார்வை
நிகரிலா தெய்வமே நானிலமதில் உன்போல்
  நல்லவை கொடுப்பாரும் கெடுப்பாரும் இல்லை
பகலவன் மைந்தனே பற்றி நீ வரும்வேளை
  பாசமுடன் காத்திட பக்தியுடன் வேண்டுகிறோம்

வருகிறாள் வரலட்சுமியே!



மலையில்  பிறந்து  வெளியில் தவழ்ந்து
  மாகடலில்   கலக்கும் மாநதிகள்  போல்
அலையில் தோன்றி அழகுமலரில் நின்று
   அனைவருக்கும் அருளிட அமுதாக வந்ததேவி
கலையாகி  கண்களில் கடைக்கண் அருள்காட்டி
    கரங்களில் கமலமும் கொட்டும் கனகமும்
நிலையாக தந்தெமை நித்தியம்   காத்திட
    நல்வெள்ளியில் நயமாக நாடிவருவாய் வரலட்சுமியே!

ஞாயிறு, 15 மார்ச், 2015

குன்றமர்ந்த ஞானகுரு



கார்த்திகை நோன்புக்கு கருவான உருவே
  கறுப்புநீல ஆடைக்கு கனிவுதந்த திருவே
மார்கழிநீங்க தையில் மகரசோதியான வரமே
  மலைமேல் அமர்ந்த மாசபரி குருவே
பாரினில் சரணம் பாடிவரும் பக்தர்
  பார்வைக்கு சோதியான பரவசத் தருவே
கோரிக்கை நிறைவாக்கும் குறையற்ற நிறைவே
  குழந்தையாய் தெய்வமாய் குன்றமர்ந்த ஞானகுருவே!

வேலாயுத முருகா!



அபயம் தரும் பொற்கரத்தில் ஆற்றல்மிகு அருள்வேல்
  ஆறுமுகம் பெயர்கொண்டு அரவணைக்கும் அழகுவேல்
தபம் ஏதும் செய்தறியா தடுமாற்றம் நீக்கும்வேல்
  தரணியிலே தவக்கோலம் தாங்கிநிற்கும் பழனிவேல்
கோபம்கொண்டு சூரனை கொன்றுவென்ற வீரவேல்
  கோலமிகு மயிலாக்கி சேவற் கொடியாக்கிய கருணைவேல்
பாபம்நீக்கி அறுபடை வீட்டில் பாசம்தரும் பக்திவேல்

  பாலனாய் குமரனாய் பரமயோகியாய் காக்கும் ஞானவேல்

ஒர் ஐந்து முகம் ஈர் ஐந்து கரம்


கொஞ்சும் மொழி குமரனுக்கு மூத்தவனே
  கொண்டாடும் சாஸ்தாவுக்கு முன்நிறை கணபதியே
நஞ்சுண்ட நீலகண்டனின் திருமகனே
  நயனவிழி உமையவள் உளம்மகிழ் பிள்ளையே
பஞ்சணையாய் பாம்பனையில் துயில் பரந்தாமனின்
  பாசமிகு மருகனே பஞ்சமுகத்தோனே
தஞ்சமென வருவோர்க்கு ஈரைந்து கரங்களில்
  தாங்கிடும் சூலம்வேல் தகதகக்கும் கத்திகலசம்
விஞ்சும் கதை கட்கம் விளங்கும் செந்தாமரை
  விரும்பும் மோதகம் விரல் உடைத்த தந்தமும் கொண்டு
அஞ்சேல் எனக்கூறி அபயம்தந்து காத்திடுவாய்
  அறிவும் ஆயுளும் ஆரோக்யமும் அளவிலா செல்வமும்
நெஞ்சினில் அன்பும் நீங்காத பக்தியும் தந்தே
  நாடும் இடமெலாம் நிறைந்து எமக்கு அருள்வாயே!