சங்கு சக்கரம்இன்றி செரிவான கூர்நகங்கள்
சிலிர்க்கும் ஆயுதமாய் சீறிவந்த சிங்கமே
தங்கும் மனிதனும் தளராத மிருகமும் இணைந்த
தசாவதாரத்தின் தலைமையென தரணியில் வந்தவனே
பொங்கி எழுந்து பெருந்தூணில் மறைந்திருந்து
பாலகனின் நம்பிக்கைக்கு புத்துயிர்தர பிளந்துவந்து
ஒங்கிய தீமையை ஒருகணத்தில் ஒழித்து
ஒளியான கருணையை உலகுக்கு காட்டிநின்ற
மங்கல தெய்வமே மகாலட்சுமி மணாளனே
மறுபடியும் நீவந்து மாபூமியில் முளைத்திடும்
எங்கும் பரவிநிற்கும் எண்ணற்ற தீமையழிக்க
எல்லோரும் பிரகலாதனாய் ஏங்கியே அழைக்கிறோம்
ஒங்காரத் திருவுருவே ஒப்பிலா பேரழகே
ஒடிநீவர கூடிநின்று ஒன்றாக வேண்டுவமே
தங்கத்தேவி தன்னோடு தாழ்த்தாது வருவாயே
துயர்சூழ் உலகினை தாயாகி காப்பாயே!
ஆன்மிக மலர் அட்டைபட கவிதை
ஏப்ரல் 28 நரசிம்மர் படம்