வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

அத்தப்பூ கோலம்



ஆயிரவண்ண மலர்கொண்டு அத்தப்பூ கோலம்
  அரசாண்ட் மாவலியை அழைக்கின்ற கோலம்
பயிலாத பாலகனாய் பரந்தாமன் திருக்கோலம்
  பாரளந்து விண்ணளந்த பாதுகாக்கும் உயர்கோலம்
மயிலாக குயிலாக மாதர்கள் அணிக்கோலம்
  மாநிலத்தில் ஆடிகின்ற மாதிருவோண விழாக்கோலம்
உயிராக உறவுகளை உணர்கின்ற உட்கோலம்
  உள்ளிருந்து தேவனவன் உயர்வளிக்கும் வரக்கோலமே!

                                          ராதாகவி

எல்லோருக்கும் இனிய ஒனம் நல்வாழ்த்துக்கள்

செவ்வாய், 30 ஜூன், 2015

எளிய தெய்வமே!



கன்னிமூல கணபதியே கரைபுரளும் பம்பையின்
  கரைமீது கனிந்து காட்சிதரும் மூலவனே
உன்னையே சேவித்து உள்ளமெலாம் கசிந்துருகி
  உந்தன் சோதரன் உயர்சபரி நாதனையே
நின்னருளால் காணுகின்ற நித்தம் கோடிபக்தர்கள்
  நீங்காது அரசமர நிழலில் குடியிருப்பாய்
என்னவரம் வேண்டுமென எமைகண்டே தந்தருள்வாய்
  எங்கும் காணுகின்ற எளிய தெய்வம் நீயன்றோ!
              ஆன்மிக மலர் அட்டைபட கவிதை கணபதி 30.6.15

செவ்வாய், 23 ஜூன், 2015

காமாட்சி


கரும்பும் இடக்கையில் கிளியும் வலக்கையில்
      கமலத் தாமரையும் கனகமலரும் மறுகைகளில்
இருபாதம் மடித்து இருந்திடும் பத்மாசனம்
      இரத்தின கீரிடம் திருமுடியில் ஒளிவீசும்
கருவிழி இரண்டும் கருணை மழை பொழியும்
      கழுத்தினில் அணிகலன் கதிர்வீசி அசைந்தாடும்
மருவிலா தேவியவள் மாதங்கி புவனேஸ்வரி
      மங்களம் தந்திடுவாள் மலைமகள் காமாட்சியே!

      ஆன்மீகமலர் அட்டைப்படக் கவிதை 23-6-2015

செவ்வாய், 16 ஜூன், 2015

சப்த குரு



உத்தமர் கோயிலில் உள்ளமர்ந்த சப்தகுருவே
  உயர்வான தேவகுரு உணர்ந்தஞானி பிரகஸ்பதி
பித்தனுக்கு உபதேசித்த பாலசுப்ரமண்ய ஞானகுரு
  பாதகர் அசுரர்தம் பரமகுரு சுக்கிராச்சாரி
பத்தவதார விஷ்ணுகுரு வரதராஜர் படைத்தல்
  பிரம்மா பரப்பிரம்மகுரு பார்புகழ் சக்திகுரு
முத்துநகை சவுந்தர்யநாயகி மூலசிவகுரு தஷிணாமூர்த்தி
  முன்வரும் ஏழுகுருவை முன்வணங்கி முக்திபெருவோமே!

அன்மிக மலர் 16.6.2015 அட்டை படக்கவிதை 

ஆதி குருவே தஷிணாமூர்த்தியே!



அறிவுருவே பகவானே அற்புதனே ஆதிகுருவே
  ஆலடியில் அமர்ந்தவனே ஆச்சாரிய சிவனே
பிறப்பறுப்பவனே சனகசனந்த சனாதனசனத்குமார சீடர்களுக்கு
  போதித்த பசுபதியே பிரம்மச்சரிய தூயவனே
நீறணிந்தவனே நிமலனே நான்மறைப் பொருளே
  நன்னெறிகளின் காவலனே நல்தஷிணா மூர்த்தியே
சிறந்த அறிவும்கல்வியும் சீர்பெரும் ஞானமும் அருள்வாய்
  சொற்கடந்த மூர்த்தியே சாந்தரூபனே போற்றி! போற்றி!!


அன்மிக மலர் 16.6.2015 அட்டை படக்கவிதை

செவ்வாய், 9 ஜூன், 2015

பெரிய திருவடி



பெரிய திருவடியென பக்தர் போற்றித்தொழ
  பரந்தாமனும் தேவியும் பாங்குடன் அமர்ந்திருக்க
கரிய கஜேந்திரன் காலினை முதலை பற்ற
  கதறி ஆதிமூலமேஎன கூவிய கணத்தில்
சரிந்த ஆடையும் தவிர்த்து சட்டென வந்துகாக்க
  சீறிப்பறந்த உன்வேகம் சிந்தையில் நின்றிருக்க
கருட சேவையென கரியபெருமாள் உலாக்காண
  கண்கள் பெற்றபேறு கவிதையும் கூறுமோ?

அன்மிக மலர் அட்டை பட கவிதை 9.6.2015

செவ்வாய், 2 ஜூன், 2015

சஞ்சீவி தாங்கிய சிரஞ்சீவி



சஞ்சீவி மலைதாங்கி சகோதரன் உயிர்காத்தாய்
  சீதையவள் தடுமாற சீவனைக் காத்திட்டாய்
வஞ்சனை அசுரரை வெந்தணலில் வேகவிட்டாய்
  'வருகிறார்' எனக்கூறி விரதபரதனை தடுத்துகாத்தாய்
தஞ்சமென வந்தநல் வீபீஷணனை ஏற்கவைத்தாய்
  தவமாக மங்கையரை தாயாக நினைத்திருந்தாய்
கொஞ்சமும் தயங்காது காகுத்தன் காலடியே
  கோவிலென்ற சிரஞ்சீவியே கைதொழுதோம் மாருதியே!

வியாழன், 28 மே, 2015

ஸ்ரீ ஐயப்பன் நூறு



1. வெல்லும் புலிமேல்...

வெல்லும் வரிப்புலிமேல் வில்லம்பு கையிலேந்தி
  வீணரை மாய்த்திட வனத்தில் வலம்வரும்
சொல்லில் அடங்காத சோதியின் சொருபமே
  சபரிமலை அமர்ந்த சாஸ்தாவின் உருவமே
புல்லாங் குழலோனும் பிறைசூடிய பெருமானும்
  பந்தள மண்ணுக்கு பாசமுடன் தந்திட்ட
வில்லாதி வீரனே வீரமணி கண்டனே
  விழுந்தேன் சரணமென விரைந்துநீ ஏற்பாயே!

2. பந்தள குமாரனே!

மார்கழிதனை அடுத்த மங்கலத் தைமாதமதில்
  மகரசோதியாகி பொன்னம்பல மேட்டினில் காட்சிதரும்
பார்புகழ் பாலகனே பந்தள குமாரனே
  பலகோடி பக்தர்கள் பாடிவரும் சரணகோஷம்
சீர்பெரும் செவிமடுத்து சிரித்துநீ மகிழ்ந்தாயோ?
  சீறிவரும் புலிமேல் சிங்காரமாய் வந்தாயோ?
கார்த்திகை நோன்பிருந்து கழுத்தினில் மாலையிட்டு
  கறுப்புஆடை அணிந்து காதவழி நடந்து
பார்த்ததும் என்னையுன் பாதத்தில் தந்துவிட்டேன்
  பரமனே ஐயப்பா பாசமுடன் ஏற்பாயே!

3. நீங்கிடும் துயர்கள்!

மோகினியாள் தந்திட்ட மோகமிலா தவமே!
  மனதினை அடக்கிட மார்க்கம்தந்த மணியே!
ஆகுதிக்கு அதிபதியான ஆதிசிவன் மகனே!
  ஆசைக்கு அடிபணியா அழகிற்கு அழகே!
பாகின் சுவைஒத்த பந்தள மன்னனே!
  பம்பையின் புண்ணியமாய் பாய்ந்துவரும் பிரளயமே!
நோகும்என் நெஞ்சில் நீவந்து நிற்பாயே
  நீங்கிடும் என்துயர்கள் நீன்னருள் தருவாயே!

4. எப்படி ஈர்த்தாயோ?

எண்ணிலா உள்ளங்களை எப்படித்தான் ஈர்த்தாயோ?
  எப்போதும் சரணகீதம் எழுப்பிட வைத்தாயோ?
மண்தரையில் நடப்பதையும் மல்லாந்து படுப்பதையும்
  மாலையும் காலையும் மனமாரத் துதிப்பதையும்
புண்படா சொல்லையே பிறரிடம் சொல்வதையும்
  புனிதமான அன்னதானம போற்றியே செய்வதையும்
கண்ணில் படுவோருக்கு கனிவுடன் உதவுவதையும்
  கருப்புஆடையில் காட்டிய காருண்யா சரணம் ஐயப்பா!

5. முக்தியும் அளிப்பாயோ?

மலைமேல்ஏறி அமர்ந்து மோனதவம் செய்கின்றாய்
  மனம்ஏறி வந்துஎன் மயக்கத்தை தீராயோ?
அலை அலையாய் வருகின்ற அன்பரை காக்கின்றாய்
  அவர்களில் ஒருவளாக அடைக்கலம் தாராயோ?
வலையாக அஞ்ஞானம் வீழ்த்திட உழல்கின்றேன்
  வானத்தின் சோதிநீ வந்தென்னை விடுவிப்பாயா?
மாலையும் அணிந்து மலைஏறி வருகின்றேன்
  முன்வந்து எனக்குநீ முக்தியும் அளிப்பாயோ?

6. கருத்தினில் வருவாயே!

பாலனாய் குமரனாய் பரிபாலிக்கும் மன்னனாய்
  பக்தியுள்ள சீடனாய் பாசமிக்க புத்திரனாய்
சீலமுடைய தோழனாய் சிந்தையின் விளக்கமாய்
  சீறும்புலி அடக்கும் சினமில்லா வீரனாய்
வேலனுக்கு சோதரனாய் வேழமுகன் தம்பியாய்
  வெற்றியின் சின்னமாய் வேதமறை பொருளாய்
காலனாய் மகிஷியை கானகத்தில் அழித்தவனாய்
   கனிந்துவரும் பக்தரின் கருத்தினில் வருவாயே!

                                                               
               7. பொன்னம்பலத்தான்!
               
பொன்னம்பல ஆட்டத்தான் பொன்பாற்கடல் துயின்றான்
  பொன்னம்பல மேட்டினில் பொன்தவம் செய்திட
சின்னஞ்சிறு பாலகனாய் சிலிர்க்கும் பம்பையில்
  சிங்காரருபன் உன்னை சிறப்பாகத் தந்தனரோ
என்னென்ன சிறுமைகள்  ஏழ்பிறப்பின் பாவங்கள்
  எந்தன்உயிர் சுமந்து எழுகடல்ஒடி உலகினில்
கன்னங்கரிய காரிருளில் காடுமலை சுற்றிவர
  கதிர்ஒளியாய் உட்புகுந்து கணத்தில் ஆட்கொண்டாயே!

8. பதினெட்டுப்படிகள்!

பதினெட்டு படிகளை பாசமுடன் ஏறிவந்து
  பகவானின் சன்னதியில் பரவசமாய் நின்றேன்
கதிஏதும் இல்லாது கருத்தினில் சிதறிநின்று
  கவலைஇது தீராதுஎன காலமெலாம் வீணாக்கினேன்
மதியெனக்கு தந்துவிட்டாய் மோகினி பாலகனே
  மயக்கம் தீர்த்துவிட்டாய் மகரசோதி ஒளியினிலே
விதியையும் வெல்லுகின்ற விளக்கமாய் காட்சிதந்தாய்
  வினைதீர்த்தாய் சரணமென வென்றேன் பிறவிதனை!
               
9. புடம் போடுகிறாயா?

ஒன்றன்பின் ஒன்றாக ஒடிவந்து சூழ்கின்ற
  ஒயாத தொல்லைகள் ஒடுக்கிவிடும் துன்பங்கள்
என்றுதான் தீருமென ஏங்கவைக்கும் நேரங்கள்
  எடுத்தியம்ப முடியாத எதிர்பாரா திருப்பங்கள்
கொன்று கூர்கூராக்கி கொதிக்கவைக்கும் சூழ்நிலைகள்
  கொடுத்தே என்னைஎன் கொடுமை செய்கின்றாய்
நன்றாக புடம்போட்டு நாளும் காய்ச்சுகின்றாய்
  நினைவுகளை புதுப்பித்து நல்லறிவு புகட்டிடவோ?
வென்று இப்பிறிவியின் வேதனைகள் தீர்த்திடவோ?
  வன்புலி வாகனனே வழிகாட்டி ஏற்றிடுவாய்!

10. அவன் கைகள் எழுந்திடும்!

பம்பையில் நீராடிப் பரவசம் கொண்டே
  பாசமுடன் சுமக்கும் பள்ளிகட்டின் இருமுடியோடு
கொம்பை ஒடித்துபாரத குறிப்பெடுத்த கோமகனை
  கன்னிமுல கணபதியை கைதொழுது கும்பிட்டு
இம்மை மறுமையின் இனிய சித்திகளை
  இழைத்து துலங்கும் பதினெட்டு படிஏறி
தம்மிரு முழங்கால் தனைமடித்து யோகப்பட்டயம்
  தாங்கும் சின்முத்திரை தவத்தின் தவக்கோலம்
அம்மா கண்டேன்என ஐயப்பனை சரணடைந்தேன்
  அரவணைத்து காத்திடவே அவன்கைகள் எழுந்தனவே!

11. மாலை சூட்டி....

துளசிமணி மார்பனே தூயஉள்ளம் அருள்பவனே
  தூயவெண் பவள சிவப்புமலர் மாலைகளை
தளரும் கைகளால் தான்தினம் தொடுத்தளித்த
  தாயாகி வாழ்ந்தவள் தனியேவிட்டு சென்றுவிட
குளிர்மிகு வடநாட்டில் குடியமர்ந்த வேளையிலும்
  காலால்நடந்து வகையான கோடிமலர் சேகரித்து
விளங்கிடும் மாலைகள் விதவிதமாய் கோர்த்தளித்து
  வாழ்வெலாம் நிழலாக வழிகாட்டி வாழ்ந்திருந்து
பளிங்கு மனமுடையான் பாசம்தந்து நீங்கிவிட
  பூஜைக்கு மலர்தேடி பாவைஇன்று அலைகின்றேன்
அளித்த அவர்கைகளின் அளவிலா புண்ணியம்
  அன்போடு தொடர்ந்திட அன்னதானப் பிரபுவே
களிப்போடு வருவாயே கருணைமழை பொழிவாயே
  கவிபாடி மாலைசூட்ட கருத்தில் நிற்பாயே!

12. மனக்கோவிலில் குடிவைத்தாய்

கருநீல ஆடையிலே கடும்நோன்பு தனைவைத்தாய்
  கடும் பனியின் குளிர்நீரில் நீராடவைத்தாய்
உருவேற்றிய சரணகீதம் உள்ளே பாடவைத்தாய்
  ஊர்கோவில் தேடியே உதயத்தில் வணங்கவைத்தாய்
அருமறை போற்றும் அன்னதானம் செய்யவைத்தாய்
  அழகான குங்குமம் சந்தணம்நீறு அள்ளிநெற்றியில் பூசவைத்தாய்
கருத்தெல்லாம் சரணமென குருவையே நினைக்கவைத்தாய்
  கேரளத்தின் நாயகனே மனக்கோவிலில் குடிவைத்தாயே!

13. ஆனந்த சபரிநாதா!

பச்சை பசேலென்ற பழமரங்கள் தான்நிறைந்து
  பார்க்கும் இடமெலாம் பசுமையின் புதுப்பொலிவு
பச்சிளம் பாலகனாய் பம்பையின் கரையில்
  புன்னகை பூத்திட்ட பூலோக நாயகனே
இச்சை களைந்து இன்பங்களை தவிர்த்து
  இருமுடியோடு விரதம் இகத்தினில் கடைபிடித்து
அச்சமின்றி மலைஏறி அழகியபதி னெட்டுப்படிஏறிட
  ஆனந்த சபரிநாதா அமர்ந்தே காட்சி தருவாயே!

14. சரணடைவேனே!

வாஎன்றால் முன்னே வழிகாட்டி சென்றிடுவான்
  வானில் ஒளிவீசி வளர்சோதியாய் நின்றிடுவான்
தாஎன்றால் இருமுடி தாங்கிட கைதருவான்
  தங்கத்தின் அங்கியிலே தாயாகி காட்சியளிப்பான்
போஎன்றால் பம்பையில் பொங்கியே ஆடிடுவான்
  பக்தரை தன்னோடு பாசத்தால் பிணைத்திடுவான்
யார்என்றால் என்னை ஆட்கொள்ள வந்தேனென்பான்
  யாருக்கும் நானஞ்சேன் ஐயப்பனை சரணடைவேனே!

15. மனோபலம்!

குஞ்சரனை முன்னிருத்தி கோலசபரி மலையிலே
  குந்தியிருக்கும் குமரனே காட்டும் சின்முத்திரையே
தஞ்சமென வந்தவரை தன்னுள்ளே வைத்திடுவான்
  தானும் அவருள்ளே தங்கி மகிழ்ந்திடுவான்
விஞ்சும் பதினெட்டுப்படி விநயமுடன் ஏறிவர
  வேறேதும் இல்லைநானே தத்வமசி என்பான்
கொஞ்சும் பாலகன் குடியிருக்கும் பொன்னபலம்
  கோலமென முக்தியை கூட்டுகின்ற மனோபலம்!

16. கும்பிட்டுவீழ்ந்தேனே!

வில்லாதி வீரனே வீரமணி கண்டனே
  எந்நாளும் என்னையே காத்துநிற்கும் தீரனே!
சொல்லாமலே வானில் சோதிகாட்டும் பாலனே
  சபரிமலை அமர்ந்த சாந்த சொருபனே(வில்லாதி)
பல்லாயிரம் கோடி பக்தர்உன்னை நாடியே
  பம்பையிலே நீராடி பார்க்கவரும் காட்சியே(வில்லாதி)
கொல்லாமலே எந்தன் குறைகளை கொல்வாயே
  குருவானஉன் பாதமதில் கும்பிட்டு வீழ்ந்தேனே(வில்லாதி)

17. மனக் கலக்கம் ஏனோ?

மனதிலே கொந்தளிப்பு மயங்கும் குழப்பம்
  மாற்றுப் பணிகளில் மனதில்இல்லை ஈடுபாடு
தினமும் வேண்டும் தேவைகளும் நாடவில்லை
  திகைப்பூட்டும் நிகழ்வுக்கும் தேடும் முன்னோட்டமா
கனவும் நினைவுமாய் கலங்கிப் போனதென்ன
  களத்தில் இறங்கி காத்திட வாராயோ?
வினவுகிறேன் மலையமர்ந்த வேழமுகன் தம்பியே
  விரும்பும் எதிர்பார்ப்பு வெற்றீவாகை சூடுமா?

18. அருகிருந்து காக்கின்றாயே!

கலியுக தெய்வமதின் கண்கண்ட கருணையை
  கண்ணால் கண்டேன் கருத்தில் உணர்ந்தேன்
வலியென ஒன்று வயிறுமுதல்கால் வரைபரவிட
  வேதனை தாளாது விரல்களால் தைலம்பூசி
சலிப்போடு ஏன்இதுஎன சபரிநாதனை அழைத்து
  சங்கடத்துடன் இருகண்மூடி சாய்ந்து கிடந்தேன்
மெலிதான கைவிரல்கள் மென்மையாக இடுப்பைதடவி
  மெல்ல அழுத்தியதை மெய்யாக உணர்ந்தேன்

வலிபறந்ததை உணர்ந்தேன் வயிற்றருகில் இடுப்பில்
  வைத்த கையை விரைந்துபற்ற முயன்றேன்
நலிவடைந்த அன்னையா? நாரணன் மைந்தனா
  நானொரு தூசுஎன் நலங்காக்க வந்தனையா
புலிமீது அமர்ந்தவனே புல்லிலும் கடையன்யான்
  பற்றிய வலிதீர்க்க பாசமுடன் வந்தாயா?
சிலிர்த்துப் போனேன் சிந்தைநிறை ஐயப்பா
  சுற்றியிருந்து ஒவ்வொரு கணமும் காக்கின்றாயே!

19. பலபடிகள் ஏற்றி வைப்பாய்!

படிகள் பதினெட்டு பாசமுடன் ஏறிவந்து
  பவித்திர இருமுடியை பத்திரமாய் தலைதாங்கி
நொடிக்கு நூறுமறை நாயகனே சரணம்என்பேன்
  நொந்து கால்சோர நினைந்தேஉனை அழைப்பேன்
பிடியில் சிக்காது பின்முன் இருந்து
  பிணைத்தே அன்பால் பலபடிகள் ஏற்றிடுவாய்
அடியவர் உள்ளத்தில் அன்பனாய் வீற்றிருப்பாய்
  அரன்ஹரி மைந்தனே ஐயப்பா காத்தருள்வாய்!

20 இருமுடி சுமந்து...

முற்றிய தேங்காயின் முகக்கண் திறந்து
  முன்னால் பசுநெய் முழமையும்  நிரப்பி
பற்றிய திருநீறும் மஞ்சள் குங்குமமும்
  பொட்டாக வைத்து பூமலர் சூட்டி
ஏற்றிய கற்பூரஒளியில் இருமுடியில் வைத்தே
  எங்கும் சரணம்ஒலிக்க ஏற்றிய இருமுடியோடு
பொற் படிகள் பதினெட்டும் ஏற்றிவிட
  பெற்றேன் நீயேஅது நீதான்கடவுள் எனஅறிந்தேன்!

21. பற்றினை நீக்கி...

பற்றினை நீக்கி பாசம்தனைக் களைந்து
  பற்றியதிரு பாதமே பார்வையில் காட்டுகின்றாய்
சுற்றிசுற்றி வந்தாலும் சுழன்றுபணி செய்தாலும்
  சுற்றிவரும் உன்பெயரே சிந்தனையில் சுழலவைத்தாய்
கற்றதும் பெற்றதும் களிப்போடு வாழ்ந்ததும்
  காட்டும் நாடகம் கள்ளமிகு நடிப்பென்றாய்
உற்றதும் உய்யவந்த உறுதியும் நீயென்று
  உணர வைத்த உத்தமனே சரணம் ஐயப்பா!

22. என்னருகில் இருப்பவனே!

பட்டும் பட்டாடையும் பகட்டான வாழ்வும்
  பாராட்டும் புகழும் பெருமையென எண்ணினேன்
எட்டி எல்லாம் எங்கோ சென்றுவிடும்
  எப்போதும் என்னருகில் இருப்பவன் நீ எனஅறிந்தேன்
சட்டென்று ஐயப்பா சரணம்என ஒருகணம்
  சொல்லி கண்ணிமைக்குமுன சொல்லாமலே என்துயரை
வெட்டி களைந்திடுவாய் விண்முகட்டில் அமர்ந்தாலும்
  விரும்பிவந்து துணையாவாய் வளர்சபரி நாதனே!

23. துணையாக நீவந்தாய்!

செக்கில் பூட்டிய செம்மாடாக சுற்றி
  சுற்றி வந்தேன் சுழன்றே உழன்றேன்
திக்கறியா கப்பல்போல் திசையறியாது நின்றேன்
  தீயென்றும் நெருப்பென்றும் தீமையறியாது சூடுபட்டேன்
பக்தியென்றும் பூஜையென்றும் பரமன்உணர்வு இன்றித் திரிந்தேன்
  பட்டது அனைத்தையும் பாரபட்சமின்றி செய்தேன்
பக்கத்தில் துனையின்றி பகிர்ந்திட யாருமின்றி
  பரிதவிக்கும் நிலைவர பாதங்களில் சரணடைந்தேன்
துக்கமும் துயரமும் தூரவிலகி ஒடக்கண்டேன்
  துயவனே தத்வமசி துணையாக நீவந்ததாலே!

24. 'கடவுளின் நாடு'

கடவுள்களின் நாடுஎன கேரளத்தை கூறிடுவார்
  கடவுளாக நீயிருக்கும் காந்தமலை கருதியே
கடந்துவந்த பாதைகள் கரடுமுரடு ஆனாலும்
  கருணைவடிவே கணத்தில் காலத்தை மாற்றிவிட்டாய்
மடமையால் மதிஇன்றி மாநிலத்தில் வாழ்ந்திருந்தேன்
  மகரசோதி தனைக்காட்டி மனதினில் ஏறிவிட்டாய்
தடமறியாது தவித்தவளை தாங்கிப் பிடிக்கின்றாய்
  தவமே சரணடைந்தேன் தாயாகி காப்பாயே!

25. புதுப்பிறவி ஆனேன்!

என்னேரமும் எதையோ எண்ணியே மனம்சோர
  ஏதேதோ கற்பனையில் எழிற்கோட்டை கட்டியே
தன்னம்பிக்கை இழந்து தவித்தது பிள்ளைமனம்
  தவக்கோலம் கொண்டு தாமைர்ந்த குருவே
பொன்னிற கொன்றைகள் பூச்சரமாய் குலுங்கிட
  பொங்கும் மஞ்சள்நிறம் புதுக்காலை வேளைதனில்
பொன்னம்பல மேட்டினில்நின் பொன்முகம் கண்டேன்
  பறந்தன துயரங்கள் புதுப்பிறவி ஆனேனே!

26. சிந்தை குளிர்விப்பான்!

யார்என்ன சொன்னாலும் யார்என்ன செய்தாலும்
  யார்வந்து எப்பழியும் யோசித்த போட்டாலும்
நேர்பாதையில் சென்று நான்கடந்து வந்தேன்என
  நேயமுடன் உதவிகளை நாளும் செய்தேன்என
கூர்வாளாய் உன்மனது கூறுவது மெய்யெனில்
  கலங்கித் தவிப்பதேன் காலத்தின் கட்டாயம்
சீர்மிகு செல்வன் சிவன்ஹரி மைந்தன்
  சீர்தூக்கிப் பார்த்தே சிந்தையை குளிர்விப்பான்!

27. அன்னதானம் துவங்கு!

அதிகாலை நடந்து அகமதில் கணபதியை
  அமைதியாகத் தொழுதிட ஆரம்பி அன்னதானம்
உதித்தது ஒர்எண்ணம் ஒலித்தது காதருகே
  உள்ளம் எண்ணியடி உத்தமர் பலர்சூடி
நீதிதேவன் தலைவாசலில் நேர்த்தியுடன் வீற்றிருக்கும்
  நேயமிகு பிரசன்னமகா கணபதியின் அபிஷேகம
அதிசய அலங்காரம் அகங்குளிரக் கண்டேன்
  அன்னதானம் நற்செயல் அவனருளால் துவங்கிட

துதித்து என்தேவைகளை தூயவன முன்வைத்தேன்
  துவங்கிய அன்னதானம் தொடர வேண்டுமென
பதித்தேன் பரம்பொருள் அன்னப்பிரபு ஐயப்பன்
  பற்றிஎன்னை இழுத்து பாசமுடன் கரையேற்ற
விதியை மாற்றி விருப்புடன் அருள்தர
  விநாயகன் முன்னிலையில் வேகமாக பணித்துவிட்டான்
மதியால் வெல்லும் மாதிறம் எனக்கில்லை
  முதல்வனே கணபதியே சபரிநாதனோடு காத்தருள்வாயே

28. மூத்தவர் பசிதீர...

மன்மத ஆண்டின் மகிழ்வான துவக்கம்
  மனதில் எழும்பிய மனங்கனியும் திட்டம்
அன்னதானப் பிரபு ஐயப்பன் அருளால்
  அலங்கார பூஜையுடன் அன்னதானம் துவக்கினாய்
என்தன் இறுதிமூச்சு எடுபடும் நாள்வரை
  எடுத்த செயலில் எத்தடையும் இன்றி
முன்னவன் துணையோடு மகரசோதி பெருமானே
  முத்தோர் பசிதீர மாதுஎன்னை பயன்படுத்துவாயே!

29. ஒரு நொடியில்

எங்கும் அமைதிசூழ் ஏகாந்த மலைமேலே
  என்றும் தவக்கோலம் எமக்காகத் தாங்கியே
பொங்கும் கடலாக பாவமனம் பொங்கிட
  பற்றும் பாசமும் பற்றிடும் வலையினில்
தங்கிய சிலந்தியாய் தவித்தே நானிருந்தேன்
  தாளினை சரணடைய தயக்கம் கொண்டிருந்தேன்
ஒங்கும் வானமதில் ஒளிர்கின்ற சோதியாய்
  ஒங்காரப் பொருளாய் ஒருநொடியில் நீபுகுத்தாய்
எங்கோ பறந்தன எந்தன் துயர்கள்
  எழுந்தேன் ஸ்வாமியே சரணம் ஐயப்பாஎன்றேன்!

30. எல்லாம் அறிந்தவன்!

வல்லவனா நல்லவனா வாழ்விக்க வந்தபாலகனா?
  வில்லெடுத்த வீரனா வெம்புலி வாகனனா?
பொல்லா மகிஷியை போக்கிய குமாரனா?
  பொன்னம்பல மேட்டில் புன்னகைக்கும் தேவனா?
எல்லாம் அறிந்தவனா எந்தனையும் ஆட்கொள்ள
  எழுந்திடும் சோதியா ஏகாந்த மூர்த்தியா?
செல்லாகிப் போனஎன்னை சேர்த்தணைக்கும் மூர்த்தியா?
  சபரிமலை சாஸ்தாவே சொல்வாயோ எந்தனுக்கே?

31. பரமானந்தம் தந்தாயே!

அனந்த சயனன் அழகிய மோகினியாக
  ஆனந்த தாண்டவன் அம்பலத்தான் கண்டிட
வனந்தனில் திரிந்த வீரமகிஷியை வீழ்த்திட
  வளர்பிறையாய் தோன்றிய வானத்தின் சோதியே
இனம்அறியா இன்னல்கள் இவ்வுலகில் தொடர
  இன்றும் அன்றும் இதயத்தில் நான்வாட
புனலாக வந்தாய் பாசமுடன் உட்புகுந்தாய்
  பாதத்தில் சரணடைய பரமானந்தம் தந்தாயே!

32. உடன் பிறந்து...

உடன்பிறந்தே கொல்லும் உலகின் நோய்போல
  உள்ளேஉடன் இருந்து உள்ளத்தை நோகடிக்கும்
கடன் வசூலிக்க வந்த கடங்காரன் சொல்லென
  காயத்தில் சத்தமின்றி கத்தியினை ஏற்றி
திடமான மனதையும் தீயிலிட்டு பொசுக்கி
  தினம்தினம் ஒருவிளையாட்டு தீரவில்லை என்பாடு
தடங்காட்டி என்னைத் தாங்கியே வழிநடத்து
  தரணியில்நின் சரணமே தஞ்சமெனப் புகுந்தேனே

33. சரணாகதி ஆனதாலே!

ஏதோ உணர்வுகள் எதையோ விலக்குவதுபோல்
  என்னுள்ளே ஏகாந்தம் ஏதிலுமே எண்ணமில்லை
தீதோஎன நினைத்தவை தூசென உணர்கின்றேன்
  துரத்திடும் கூற்றெல்லாம துச்சமெனத் தெரிந்தேன்
காதோரம் வந்துஒர் கானமிசைக்க கேட்டேன்
  கண்முன்னே தோன்றிய குருபாலனைக் கண்டேன்
சாதாரணசொல் மறந்தேன் சரணம்ஒன்றே சொன்னேன்
  சபரிதனில் ஐம்புலனும் சரணாகதி ஆனதாலே

34. உட்புகுந்து தீர்ப்பாயா?

வெற்றிஎன நான்நினைப்பதை வெற்றியல்ல எனநினைப்பாய்
  விரும்பி நான்வேண்டுவதை வேண்டாதது எனநீநினைப்பாய்
கற்றறிந்த மேதையென்பேன் கல்லாதது உலகளவு என்பாய்
  கவிதை படைத்தேன்எனில் கருப்பொருள் நீதேடுவாய்
பற்றினை துறந்தேன்எனில் பொய்யுரைஎன நீசிரிப்பாய்
  பற்றினேன் பாதம்என்பேன் பற்றிஇழுக்கவா என்பாய்நீ
உற்றவனே உதயஞாயிறே உண்மைஎது உணரவைப்பாயா?
  உழலும் மனத்தவிப்பை உட்புகுந்து தீர்ப்பாயா?

                      35.ஒப்பிலா தாயுமாய்........
தாயுமாய் மாமனுமாய் தயையான இருஉறவோடு
     தரணியில் மோகினியாய் தானுருவாகி வந்தவனும்
காயும்  சுடலையில் களிநடனம் புரிகின்ற
     கங்கையை பிறையை கருஞ்சடையில் சூடியவனும்
பாயும்புலி வாகனனை பம்பையில்  தானளித்தார்
     பழவினைகள்   தீர்த்திடவே பாலகனை தந்திட்டார்
ஒயும்  என்மனதின்  ஒயாத கலக்கங்கள்
      ஒங்கார சபரிவாழ் ஒப்பிலானை சரணடைந்தேன்

36. தானாக வந்திடுவாய்!

அரணாக நீவருவாய் ஹரிஹரன் மைந்தனே
  அங்கும் இங்கும் அனைத்திலும் தொடர்ந்திடுவாய்
சரணம் என்றே சொல்லி மகிழ்வேன்
  சங்கடங்கள் தீர்த்திட சபரியிலே நீயிருப்பாய்
மரணம் பயமில்லை மாவேலியாய் நீயிருக்க
  மூச்சு நிற்கையிலும் முதல்வனேஉனை நினைந்திருப்பேன்
தரணியில் நீயேஎன் தாயாகி காத்திருப்பாய்
  தருணம் ஏதும் தேடாமல் தானாக வந்திடுவாய்

37. ஏற்று அருள்வாயே!

சக்தியெலாம் ஒன்றான சபரிமலை சாஸ்தாவே
  சாந்திதேடி வருவோர்க்கு சாந்தமதை தருபவனே
முக்திவேண்டி முனைவோர்க்கு முன்வந்து அருள்வாயே
  முதலும் முடிவுமான மகரசோதி ஒளியானே
பக்திசெயும் பாமரருக்கு பழவினைகள் நீக்குவயே
  பாதம்தேடி வந்தவருக்கு பலன்யாவும் தருவாயே
யுக்தியேதும் அறியேனே யுகநாயகன் ஐயப்பா
  உன்னையே நானடைந்தேன் உன்னுள் ஏற்றுஅருள்வாயே

38. தத்துவமசி சபரிநாதனே!

வருகின்ற விளைவுகளை விரும்பியபடி வருமென
  வழிபார்த்து காத்திருந்து வழிமாறி போகுமெனில்
வருந்தும் நிலைதவிர்! வருவதும் போவதும்
  வாய்ப்பதும் நம்கையில் வாழ்வில் இல்லையென
குருவாய் அமர்ந்தவன் குன்றிருந்து காட்டுகிறான்
  கற்பனையில் கோட்டை கட்டியே வாழ்கின்ற
தருணம்தவிர்! எதிர்பார்ப்பை தள்ளியே ஒதுக்கிவிடு
  தன்னாலே தருவான் தத்வமசி சபரிநாதனே!

39. சந்தமோடு சரணம் பாடி...

பந்தள மண்ணிலே பாதம்பதிக்க வந்தாயே
  பம்பையின் நீரிலே புழலாடி மகிழ்ந்தாயே
சிந்தும் புன்னகையில் சினம்அடக்கி நின்றாயே
  சீறும் புலிமேல் சிங்காரவலம் வந்தாயே
தந்தாயே சபரிக்கு தன்னுளம்மகிழ் முக்தியை
  தாயின் நோய்நீக்க தயங்காமல் வனம்சென்றாயே
சந்தமோடு சரணம்பாடி சபரிமலை வந்தேனே
  சொந்தமாக எந்தனையும் சேர்த்து அருள்வாயே!

40. கைதூக்கி விடுவாயா?

விளையாடிய ஆட்டங்கள் விடைபெறும் நாளென்று
  வேகமாய் காய்களை விரைந்தே நகர்த்துகிறாயா?
களைத்து விட்டமனம் களம்நீங்கிய கணம்
  கைதூக்கி விடவே கைநீட்டி வருகிறாயா?
தளைத்திடும் எண்ணங்கள் தடையாகிப் போகாமல்
  தயைதனை கைகாட்டி தடுத்தாட் கொள்வாயா?
மளையாள மண்ணில் மலர்ந்திட்ட மணிகண்டா
  மனமுவந்து வந்தெனக்கு மனஅமைதி தருவாயா?

41. ஒளி தருவாய்!

வாய்விட்டு உனைஅழைக்க வரும்புயலாய் வந்திடுவாய்
  வாடியபயிர் எனக்கு வளர்மழை நீயாவாய்!
சேயாகத் தாயாக செங்காயாக கனியாக
  செய்திட்ட பணிகள் செம்மைதான் இல்லையோ?
ஒயாமல் இறுதிவரை உழலவைத்து பார்ப்பாயா?
  ஒயும் மூச்சுள்ளவரை ஒடியாட மனதேகபலம்கொடு
மாய்கின்ற வேளையிலும் மனநிறைவோடு உனைநினைக்க
  மகரசோதியே மனதுக்குள் ஒளியினைத் தருவாயே!

                        42. வழித்துணை நீயன்றோ?

குளத்துபுழை பாலகனே குழந்தை வடிவானவனே
    குறைகளைத் தீர்க்கவந்த குருவாகி நிற்பவனே
களத்தில் இறங்கியாடி களைத்திட்ட பேதை நான்
    கண்களால் உனைகாண காலம்தாழ்ந்து வந்தவள்
ஏளனமாக எள்ளிநகையாடி ஏசுகின்ற பலரை
     எந்தன் உறவாக ஏற்று மகிழ்ந்திருந்தேன்
குளத்துப் பறவைகள் கூடிவந்திருந்து தணணீர்
     குறைய  பறந்தன குற்றம் ஏதுஅங்கே
வளமான பாலகனே வந்துவிட்டேன் உன்னிடமே
     வாழ்நாள் எல்லாம் இனி வழித்துதுணை நீயன்றோ?

                         43தத்துவம்  உணர்த்திவிட்டாய்!
அச்சங்    கோவில் அரசே என்பார்
    அரசனாகி பந்தள அரண்மனை வந்தாய்
மிச்சமின்றி சகலகலை மேதையாகப் பயின்றாய்
     மானிடர் தம் உள் மனமளக்க கற்றாய்
அச்சமின்றி காடுவழி   அனைவரும்   தேடிவர
    அஞ்சாதே எனக்கூறி அறவழி  நடத்துகின்றாய்
தச்சன் கை உளியென தட்டிஎனை உருவாக்கினாய்
     தரணியில் துயர்வாழ்வின் தத்துவம் உணர்த்திவிட்டாய்

44. ஒருமுறை இருமுடி...

ஒருமுறை இருமுடி ஒருதலையில் தாங்கி
  ஒங்கார நாதமென ஒதிடும் சரணகோஷமுடன்
கருநிற ஆடையிலே கருத்தோடு நோன்பிருந்து
  கரிமலை நீலிமலை கரடுமுரடு மலையேறி
விருப்போடு உனைநாடி விழிப்போடு உனைநினைந்து
  விதிமாற்றும் பதினெட்டுப்படி விரதமுடன் ஏறிவந்து
கருவறையில் உனைக் கண்டவுடன் கண்களில் நீர்சோர
  காலத்தை மறந்தேன் கண்ணுள்நீ வந்துவிட்டாய்!

45. சோதியினைக் காணவைத்தாய்!

மணக்கின்ற சந்தணம் மாமலையெலாம் மணம்வீச
  மலைமேல் குடியமர்ந்து மகரசோதியாய் வெளிப்படுவான்
வணக்கமென கருடன் வட்டமடித்து தொழ
  வருகின்ற திருவாபரணம் வல்லவன் சூடிடுவான்
கணக்கிலா துயரங்கள் கனவிலும் துன்பங்கள்
  கண்டதே கோலமென கொண்ட சிறுமைவாழ்வில்
இணக்கமாய் உள்வந்து இருமுடி ஏந்தவைத்து
  இரவும் பகலுமாய் இனியநோன்பு காத்திருந்து
பிணக்கம் கொண்டு பதுங்கிய உள்ளங்கள்
  பாசமுடன் சரணம் பாடிகூடி மகிழ்ந்து
சுணக்கம் இன்றியே சபரிமலை வந்து
  சுந்தரனை சாஸ்தா சோதியினை காணவைத்தாயே!

46. விடியலில்...

விடியலில் எழுந்தேன் விளித்தேன் சரணம்
  விண்முட்டும் குரலில் ஐயப்பா சரணம் என்றேன்
அடித்து திருத்தநான் ஐந்துவயது பாவையில்லை
  அன்பாலே உளம்புகுந்து ஆட்கொள்வாய் ஐயப்பா
படிக்கும் நூலெல்லாம்நின் பக்தியை கூட்டுதையா
  பாலகனாய் வந்த பம்பையின் செல்வமே
படியேறி வருகின்றேன் பாசகரம் நீட்டு
  பழவினை நீக்கிஎன்னை புனிதனாக்கி வைப்பாயே!

47. வாய்விட்டு சொல்வேன்!

திருவாய் மலர்ந்தருள திருவடி மடக்கி
  திருயோக பட்டயத்தோடு சின்முத்திரை தன்னோடு
உருவான பதினெட்டு உயர்படிகள் ஏறிவரும்
  உண்மை பக்தருக்கு உன்வடிவை காட்டிடவே
குருவாக அமர்ந்தவனே குழந்தை வடிவானவனே
  கருப்புஆடை அணிந்து கருத்தோடு இருமுடிதாங்கி
வருகின்ற மாந்தர் வளர்கின்ற காலமிதில்
  வாழ்விக்கும் தெய்வமே வாய்விட்டு சொல்வேன்
ஸ்வாமியே சரனம் ஐயப்பா!

48. கண்டேன் சபரிமலை...

ஒடுகின்ற சிந்தனையை ஒருமுகப் படுத்திடவே
  ஒதுப்புறமாய் அமர்ந்து ஒர்தியானம் புரிந்தேன்
தேடும் அமைதியை திசைதிருப்பிய எண்ணங்கள்
  தேவைக்கு உதவாத தேடல்கள் உள்புகுந்து
மேடும் பள்ளமும் மேவிஒடும் நதியென
  மனதை புரட்டிட மயக்கமே கண்டேன்
வாடும் பயிரினுக்கு வான்மழை வந்ததுபோல்
  வந்தது 'ஸ்வாமியே சரணம் ஐயப்பா' என

பாடும் குரல்கள் பாலாகத் தேனாக
  பாய்ந்து செவிவழியே பரவசம் தந்தது
கூடும் கருப்புஆடை கூட்டம் கண்டேன்
  கூப்பிடும் ஐயப்பன் குரலினைக் கேட்டேன்
வீடும் பொருளும் வீணான வாழ்வும்மறைய
  விரும்பி நோன்பினை விரதத்தை ஏற்றேன்
காடும் மலையும்ஏறி கண்டேன் சபரிமலையில்
  காட்சிதரும் சாஸ்தாவை காணும் சோதியிலே!

49. மனதினில் ஏற்பாயே!

அன்னதானப் பிரபுவாக அன்புமிகு தாயாக
  அள்ளியள்ளிப் படைக்கும் ஆனந்த வடிவே
சின்னக்குமரனாய் சீறும்புலி ஏறிச்சென்று
  சிற்றன்னை நோய்தீர சிந்தை குளிர்வித்தவனே
தென்புலத்தார் தீமைவிலக திருப்பம்பையை தந்தவனே
  தோன்றும் மகரசோதியாய் துயரம் தீர்ப்பவனே
மன்னனாய் மழலையாய் மாவீரனாய் மகிஷிவதம் செய்தவனே
  மாநிலத்தில் என்னையும் மனதினில் ஏற்பாயே!

50. காலமெலாம் துணைவருவான்!

விளக்காக பொன்மேட்டில் விளங்கும் மகரசோதியே
  விளக்கம் வாழ்வில் விளக்குகின்ற பகவானே
விளங்காத பொருள்தேடி வீணாக்கிய வாழ்வில்புது
  விளக்கமாக நீவந்தாய் விளக்கம்நான் பெற்றேன்
இளகிய மனதோடு இனிமையான சொல்லோடு
  இயன்றதை பிறருக்கு ஈந்திடுவாய் செய்திடுவாய்
களம்கண்ட மணிகண்டன் காத்திட முன்னும்பின்னும்
  கையில் வில்அம்போடு காலமெலாம் துணைவருவான்!

51. ஏற்றமிகு மணிகண்டன்!

கங்கைக்கு நிகரான கானகப்புனல் பம்பையின்
  கரையில் கண்டெடுத்த கண்மணியே ஐயப்பா
தங்கமாய் போற்றி தரையில்கண்ட பொன்மணியை
  தான்வளர்த்து மகிழ தவம்என்ன செய்தானோ
ஒங்கும் பந்தளத்தின் ஒப்பிலா மன்னனுமே
  ஒர்தாயின் நோய்நீங்க ஒராயிரம் புலிகளோடு
எங்கும் பவனிவந்த ஏற்றமிகு மணிகண்டா
  ஏங்கும் ஏந்தனையும் எதிர்வந்து ஏற்பாயே!

52. முடியாதது ஏதுமில்லை!

முடியாது என்னும் முன்சொல் ஏதுமிலா
  முன்னவனே மலைமேல் மகரசோதியாய் மலர்பவனே
அடியார்கள் அன்போடு அழைத்தே அழுதால்
  அனைத்தையும் முடிக்கும் அருளாளன் நீயன்றோ!
கடியும் மனமில்லா கருணை உள்ளத்தானே
  கருநீல ஆடைக்கும் இருமுடிக்கும் கனிந்திடும் ஸ்வாமியே
படியேறி வந்ததும் மாதத்வமசி என்பாயேஎன்
  பாவங்களைக் கரைத்துநின் பாதத்தில் சேர்ப்பாயே!

53. தரிசிக்க வந்தோமே!

மானுடத்தின் தீமையெல்லாம் மகிஷியாய் உருவெடுக்க
  மாயையை அழித்து மாற்றத்தை தருவிக்க
மானிட உருவினில் மோகினி பாலன்வர
  மாமலையில் மண்டலமிட்டு மாதவம் செய்திட
கானிடை கோவில் கொண்டு காட்சிதர
  கார்த்திகை நோன்பிருந்து கருநீல ஆடைதனில்
தேனூறும் பலாவென தேவனை நாடியே
  தாங்கிய இருமுடியோடு தரிசிக்க வந்தோமே!

54. சக்தியாக என்னை மாற்று!

சபரியெனும் முதுமைக்கு சத்யலோக முக்திதந்தாய்
  சபரிபீடமதில் செல்வனாய் சப்பணமிட்டு அமர்ந்தாய்
சபரிநாதா எனக்கூவி சஞ்சலங்கள் சுமந்து
  சரணகோஷமுடன் சாஸ்தாஉனை சேவிக்க வந்தேன்
சபரியின் தலைவனே சங்கடங்கள் நீக்கிவிடு
  சாந்தியை தந்துவிடு சேவையில் மனம்நாட
சபரிகிரி சத்தியனே சட்டென துணையாகு
  சக்கையாகப் போகாமல் சக்தியாக எனைமாற்று!

55. வாழ்விக்கும் வகையறிந்தேன்!

வாழ்வென்றும் தாழ்வென்றும் வளமான செல்வமென்றும்
  வாழ்வளிக்கும் உறவென்றும் வாழ்வுக்கே துணையென்றும்
வாழ்வுக்கு தேவையற்றதை வரிசையிட்டு தேடிநின்றேன்
  வாழ்வுக்கு ஆதாரம் வளம்தரும் அவையல்ல
வாழ்வுஎனில் வேறுஎன விளக்கிவிட்ட விளக்கமே
  வாழ்வின் தேடலை விருப்புடன் துவக்கிட
வாழ்வுபிறரை வாழ்விக்கும் வகையென அறிந்தேன்
  வழிகாட்டியாக விண்ணில் வந்த சோதியாலே!

56. எங்கும் தேடாதே!

சொல்லும் சொல்லில் செய்யும் செயலில்
  சேர்ந்து வரும் சிறுநினைப்பில் எதிலும்
பொல்லாதன இல்லாமல் பாதுகாப்பாய் என்றே
  பதினெட்டு படியரசன் பாங்காக என்னுள்வந்து
மெல்லச் சொன்னது மெய்யா பொய்யாஎன
  மனமும் திகைப்புற மெல்லத் திறந்தது
எல்லாம் புரிந்தது எத்தனயோ வினைகளை
  எளிதில் தீர்த்திட எங்கும் தேடாதே
சொல்லும் நினைவும் செயலும் சீர்பட
  சோதியாக வந்து சபரிநாதன் காத்திடுவான்!

57. குழப்பம் நீக்கிவிட்டாய்!

விழுவதும் எழுவதும் வாழ்வாகிப் போனதென்ன?
  வேதனைகள் தினம்தினம் வேறுவேறு வடிவில்வந்து
பழுக்கக் காய்ச்சிய  இரும்பென சாடுவதேன்?
  பால்போன்ற மனதுடன் பலருக்கும் உதவிநின்றேன்
அழுதுவந்த அனைவருக்கும் அள்ளிக்கொடுத்து ஆர்ப்பரித்தேன்
  அருமை நட்புகள் ஆசைமிகு உறவுகள்என
முழுமையாக ஈடுபட்டு முன்சென்று பராமரித்தேன்
  முற்றும் நடிப்பு முழுதேவைக்கான வெளிப்பாடு
நழுவும் உலகுஎன நானறிந்த வேளையிலே
  நல்லவர்கள் ஏமாளியென நாவால் கேலிபேச
தழுவும்பனி சூழ்மலையில் தவக்கோலம் கொண்டவனே
  துளசிமணி மார்பனேநின் தூயஅன்பை நானறிந்தேன்
குழத்துப்புழை பாலகனே குழப்பம் நீக்கிவிட்டாய்
  கும்பிட்டு சரணடைந்தேன் குணவானே ஏற்றிடுவாய்!

58. ஆட்டுவிக்கும் அந்தர்யாமி!

ஆட்டுவிக்கும் அந்தர்யாமிநீஎன அறிந்தும் நானே
  அனைத்தையும் செய்தென்என ஆணவமுடன் ஆர்ப்பரித்தேன்
கொட்டும் மழையும் குளிர்விக்கும் அருவியும்
  கொக்கரிக்கும் கடலும் கூடிவரும் கதிரவனும்
மொட்டாகி மலரும் மணம்தரும் மலர்களும்
  மெல்ல வானில் மிதக்கும் வெண்ணிலவும்
எட்டாத சிகரமும் எழில்மிகு வனங்களும்
  எல்லாம் உன்கண்ணசைவில் எனத் தெரிந்தும்
வட்டமிட்டு என்கையில் வாழ்வெனத் திரிந்தேன்
  விரும்பியபடி நானே வேண்டுவது பெறுவென்என
சட்டென நூலினைநீ சற்றேபின் இழுத்தாய்
  சடசடவென விழுந்தேன் சரிந்ததேன் எழமுயன்றேன்
முட்டி மோதினேன் முடியாதென உணர்ந்தேன்
  மூடனாய் நானேஎன்று மகிழ்ந்தது மறைந்தது
தட்டி எழுப்பி தயவோடு கைநீட்டினாய்
  தலைவன் நீயிருக்க தரணியில் நான்ஏதுமில்லை
கட்டிக் காத்துஎன்னை காக்க நீவந்தாய்
  குன்றமர்ந்த சாஸ்தாநின் கால்களைப் பற்றிவிட்டேன்
ஆட்டுவாயோ அணைப்பாயோ அன்பைத் தருவாயோ
  அரிஹர மைந்தனே அனைத்தும் உன்செயலே!

59. ஆன்மாவுக்கு அருள்வாயே!

ஆனந்தம் வாழ்வில் அற்புத விடியலென
  ஆனந்தம் என்பதை அனைத்திலும் தேடினேன்
ஆனந்த தாண்டவனும் அழகுமிகு திருமாலும்
  ஆனந்தம் தவழ அரிஹரனைத் தந்திட
ஆனந்த ரூபனாய் அன்புத் திருஉருவாய்
  ஆனந்த தவக்கோலம் அணியான சபரிதனில்
ஆனந்தம் இங்கேஎன அமர்ந்த குருவே
  ஆனந்தம் பரமானந்தம் ஆன்மாவுக்கு அருள்வாயே!

60. வெல்லுமே பாவமெலாம்...

மையல் கொண்ட மகிஷி மாபூமியில்
  மங்கையாக வந்து மனமயக்கம் கொண்டலைய
தையல் நிலைநீத்து தரணியெலாம் தாக்கியலைய
  தத்துவப் பொருளான தாண்டவப் பெருமானும்
கயல்கடலில் பள்ளி கொண்ட பெருமானும்
  ககனத்தின் துயர்நீக்க கதிராக ஒளிவீசும்
செயல்வீரன் சாஸ்தாவை சோதியாக தானளிக்க
  சென்றே தரிசிக்க செல்லுமே பாவமெலாம்!

61. வாழ்வுநீஎன அறிந்தேன்

வாழ்க்கை படகினை வண்ணநீரில் ஒட்டினேன்
  வந்ததெல்லாம் தந்தவை வளமான மனமகிழ்ச்சி
வாழ்க்கையின் உயரத்தில் வானத்தில் பறந்தேன்
  வருவோர் போவாருக்கு வாரிவழங்கி பெருமையுற்றேன்
வாழ்க்கையில் புகழாரம் வண்ணவண்ண மாலைகளாய்
  விருந்து நட்புஉறவு வேலையென எங்கும் குவிய
வாழ்க்கை சக்கரம் வேகமாக சுழன்றது
  வளமான உயர்நிலை வந்திறங்கிட கீழே
வாழ்க்கை மாறியது வெற்றியும் புகழும்
  வளர்ந்த செல்வமும் வட்டமிட்ட சுற்றம்உறவு
வாழ்க்கையின் மறுபக்கம் வந்தவழி சென்றது
  விண்ணில் தோன்றிய வில்லாளன் சோதி
வாழ்க்கை இதுதான்என வழிகாட்டி ஒளிவீச
  வாழ்வுநீஎன அறிந்தேன் விழுந்தேன் சரனமென்றே!

62. எப்போதும்...

எப்போதும் இருகண்கள் எனைனோக்கி இருக்கும்
  எப்போதும் இருகைகள் எனைத்தூக்க காத்திருக்கும்
எப்போதும் இருகால்கள் என்னைனோக்கி நடந்துவரும்
  எப்போதும் இருசெவிகள் என்குரல்கேட்க திறந்திருக்கும்
எப்போதும் ஒருமனம் எனக்காக நினைந்திருக்கும்
  எப்போதும் ஒர்உருவம் எனைச்சுற்றி தொடரும்
எப்போதும் எனக்காக என்ஐயப்பன் தவமிருக்க
  எப்போதும் துயரத்தில் ஏன்வாடி அலைகின்றேன்
எப்போதும் கற்பனையில் ஏங்கித் தவிக்கின்றேன்
  எப்போதும் அவனேஎன எண்ணியே வாழ்ந்துவிடு!

63. ஏதாகிப் போவேனோ?

சரங்குத்தி ஆலில்ஒர் சரமாக ஆவேனா?
  சிறுபேட்டைத் துள்ளலில் சிலவண்ணத்தூள் ஆவேனா?
சிரமீது தாங்கும் இருமுடிப்பை ஆவேனா?
  சிறுதேங்காய் நிரப்பும் செந்நெய்துளி ஆவேனா?
கரங்குவித்து பம்பையில் கடும்குளிரில் நீராடி
  கைகளில் ஏந்தியநீர் கசியும்துளி ஆவேனா?
வரப் கொடுக்கும் வீரமணி கண்டன்
  வளமான கோவில் வாயிற்படி ஆவேனா?
தரங்கிணி பாடும் தமிழ்குரல் ஆவேனா?
  தவமிருக்கும் சாஸ்தாவின் துளிசந்தணம் ஆவேனா?
ஒரங்களில் பாதையிலாடும் ஒர்நாணல் ஆவேனா?
  ஒர்குரலாகிய சரணகோஷ ஒசையாக ஆவேனா?
அரங்கமதில் அணியும் ஆபரணபெட்டி ஆவேனா?
  அசைந்தாடி சுமந்துவரும் அன்பர்பாதசுவடு ஆவேனா?
பரமனாய் சோதியாய் பொன்னம்பல மேட்டில்
  பாலகன்பாதம் பணிந்து பக்தியால்முக்தி பெறுவேனா?

64. புன்னகை புரிந்தான்!

போதும் என்ற பெரும்சொல் மறந்தேன்
  போகும் போக்கில் பொருள்தேடி நானலைந்தேன்
யாதும் நமக்கென யாரும் உறவென
  எங்கும் திரிந்து எதிலும் இன்பமிகுதி
சூதும் வாதும் சூழ்கின்ற உலகில்
  சூன்யநிலை என்றும் சூழாதுஎன நினைத்தேன்
காதறுந்த ஊசியென கணத்தில் வேறானேன்
  காலமெலாம் கண்டவை காணாது சென்றன
பாதமதைத் தேடி பாசமுடன் வந்தேன்
  பந்தள குமாரன் புன்னகை புரிந்தான்!

65. மஞ்சுமாதா காத்திருக்க...

மாளிகைபுரத் தம்மன் மஞ்சுமாதா காத்திருக்க
  மனமாறி கன்னிசாமி மாமலை வாராதநாள்
கேளிக்கை தம்மோடு கைபிடிப்பேன் எனஉரைக்க
  கண்டது சரங்குத்தியில் கணக்கிலா சரமழைகள்
களிக்கின்ற கடிமணம்கூட காலமெலாம் காத்திருப்பாள்
  கண்கண்ட தெய்வமவன் கலியுக வரதனவன்
அளிக்கின்ற வான்மழை அவனைநாடி கன்னிசாமி
  ஆண்டாண்டு பெருகிவர ஐயப்பன்புகழ் பாடுவமே!

66. தாளடியில் சேர்த்திடுவாய்!

பங்குனி உத்திரத்தில் பாலகனாய் பிறந்தவனே
     பந்தளத்தில் வளர்ந்தவனே பாலகுமாரன் ஆனவனே
எங்கும் சென்றாய் எல்லோரையும் துணைகொண்டாய்
     எதிர்த்து வந்தவரை எளிதில் தோழனாக்கினாய்
பொங்கும் பம்பைக்கு புனிதத்வம் நீயளித்தாய்
     பொன்னம்பல மேட்டினில் புவிகாக்க நீ அமர்ந்தாய்
தங்கும் வாழ்வினில் தஞ்சமென வந்தடைதேன்
     தடையெல்லாம் நீக்கிஉன் தாளடியில் சேர்த்திடுவாய்

67. எரிமேலி சாஸ்தாவே!

எரிமேலி சாஸ்தாவே எல்லோரோடும் உன்னைக்கண்டு
  எழிலாக பேட்டைதுள்ளி எங்கும் ஆடிப்பாடி
வரிப்புலி வேடமிட்டு வளைந்து பாய்ந்தாடி
  வகையான தாரைதப்பட்டை விதவிதமாய் கொட்டிமுழக்க
உரிமையுள்ள தோழன் உயர்வாவரைத் தொழுது
  உள்ளும் புறமுமும் உயர்வண்ண இறகுசூடி
பூரிக்கும் சபரிதனில் பரிபூரணன் உனைக்காண
  பேரார்வமுடன் வருகின்றோம் பெருமையுடன் எமை சேர்ப்பாயே!

68. குளத்துப்புழை பாலகனே!

குளத்துப்புழையில் குழந்தையாய் கண்டேன்
  குன்றில் அமர்ந்து குருவாகிப் போனதென்ன?
வளமான வாழ்வில் விளையாடி மகிழ்ந்தேன்
  வாழ்வின் தேவையை விநாடியும் அறிகிலேன்ச்
சளசளக்கும் ஒடையாய் சலியாது ஒடிப்பாய்ந்தேன்
  சற்றுஒரு கணம்நின்று சத்தியத்தை உணரவில்லை
பளபளக்கும் குழந்தை பாலகன்நீ காட்டிவிட்டாய்
  பாதைஇது எனநின் பாதத்தில் சரண்புகுந்தேன்!

69. ஆரியங்காவு ஐயாவே!

இல்லறம் காத்திட இணைந்தாய் பூரணபுஷ்கலையோடு
  இனிதான ஆரியங்காவில் இன்னொரு கோலம்காட்ட
நல்லறம் போற்ற நல்மதயானை அடக்கி
  நன்றாக அமர்ந்த மதகஜ வாகனரூபனே
பொல்லா மகிஷியை பூதலத்தில் அழித்திட
  பொலிகின்ற தேவியும் பத்ரகாளி வடிவாய்அமர
எல்லாம் மகிழ்வுற எடுத்த கோலம்தவிர்த்து
  எதிரிலா அரக்கிதனை வீழ்த்திய வீரனேசரணம்!

70. இனிய சபரிநாதன்!

இறுக்கிக் கட்டிய இருண்ட ஜடாமுடியும்
  இளங் கழுத்தில் இனியமணி ஆபரணங்களும்
நெறுக்கிய பாதங்கள் நேராக வைத்து
  நேரான முழங்கால்இணயை யோகபட்டயம் அணிய
பொறுக்கி எடுத்த பெரும்நான்கு யோகாசனம்
  புதுமையான வடிவில் புதுசின்முத்திரை காட்டி
இறுக்கும் உக்ரம் இனிக்கின்ற சாந்தம்
  இரண்டும் இணைந்த இனியசபரி திருவுருவே!

71. சுவாமியே சரணமென...

சுவாமியே சரணமென சந்நிதியை அடைந்தேன்
  சங்கரஹரி மைந்தனே சந்தணமகிழ் சபரிகிரியானே
சுவாசமே நீயென சிந்தையில் உணர்ந்தேன்
  சுகமென்றால் அதுபம்பை சுந்தரன் என அறிந்தேன்
குவலையம் வாழ்ந்திட குன்றில் அமர்ந்தவனே
  கூப்பிடும் சரண கோஷத்தில் மகிழ்பவனே
தவமேதும் நானறியேன் தாளடியே பற்றிடுவேன்
  தவமான தவசீலா தாங்கியே காத்திடுவாய்

72. தடுத்தாட்கொள்வாயே!

மன்மதனை எரித்து மோகத்தை அழித்தவனும்
  மகிழ்ந்து கோபியரை மனமார நேசித்தவனும்
இன்னல் தீர்த்திட இருவேறு துருவங்கள்
  இணைந்தே தந்திட்ட இருமுடிப் பிரியனே
முன்வந்து மகிஷியை முக்தியுடன் வதைத்தாய்
  மஞ்சுமாதா எண்ணத்தை மகிழ்வுற தள்ளிவைத்தாய்
தன்னிறைவு இல்லாத தறுதலை நானாவேன்
  தயையோடு வந்துஎன்னை தடுத்தாட்கொள்வாயே!

73. சித்தரும் நீயன்றோ?

சித்து விளையாடும் சித்தரை நானறியேன்
  சிந்தையை தெளிவாக்கும் சிறந்தோரை நானறியேன்
பித்தம் தலைக்கேறி பெற்றதில் நிறைவின்றி
  பேயாய் அலைந்து பாவத்தை சேர்த்துவிட்டேன்
சித்தர் நீயன்றோ சிறுபிள்ளை வடிவில்வந்து
  சிறியவள் என்னை சீராக்கி வைப்பாய்
தத்தித் தடுமாறி தலையில் இருமுடிதாங்கி
  தஞ்சமென உன்னையே சரணடைந்தேன் சபரிகிரிநாதனே!

74. தவமே தவம் செய்து...

தவமே தவம்செய்து தவமாகிவந்த தவமே
  துளபத்தின் மாலைசூடும் தூய்மையின் தூய்மையே
நவமான நல்வடிவெலாம் நயந்திடும் நல்வடிவே
  நயமான சொல்லெல்லாம் நாடும் நற்சொல்லே
உவமானம் ஏதுமிலா உண்மையின் தத்துவமே
  உகந்தவர் துயர்நீக்கும் உயர்வான உயர்வே
வாவரின் தோழனே வல்லமைக்கு வல்லமையே
  வியப்பே உருவான எளிமைக்கு எளிமையே!

75. மலைக் குடும்பம்

தந்தையோ கயிலை மலையில்
  தாயோ திருப்பதி மலையில்
முந்திவரும் விநாயக மூத்தவனோ
  முன்வரும் கோட்டை மலையில்
செந்தில் வடிவேல் சோதரனோ
  சுகமான அறுபடை மலையில்
வந்துநீ அமர்ந்ததும் சபரிமலையில்
  விந்தை உந்தன் மலைக்குடும்பம்
வந்தனை செய்துனை பணிகின்றேன்
  வாஞ்சையுடன் என்னையும் சேர்த்துக்கொள்!

76. தானிரங்கி வாராயோ?

ஆடியும் பாடியும் அனைத்து விரதமும்
  ஆனுவும் பிசகின்றி அனுசரித்து வந்தேனே
கூடியும் கும்பிட்டும் கோஷமிட்டு தொழுதேனே
  கூட்டியும் பெருக்கியும் கோரிக்கைகள் வைத்தேனே
நாடியே உன்னையே நாளும் நினைந்தேனே
  நல்லவை தீயவை நானுணர்ந்து பார்த்தேனா
தேடிய தெய்வமென தாள்களில் தஞ்சமடைந்தேனே
  தயாளனே சபரிநாதா தானிரங்கி வாராயோ?

77. பரமனடி சேர்ப்பாயே!

சந்ததமும் உன்னைச் சார்ந்தே பணிவேன்
  சபரிகிரி வாசா சங்கடம் தீர்ப்பாயே
வந்தனை பூசனை வழிபட்டு நானிருப்பேன்
  வாயால் உன்சரணம் விடாது கூறிடுவேன்
தந்திடு உன்கருணை தவத்திரு நாயகனே
  தளரும் மனதினை தாங்கும் தூணாவாயே
பந்தம் பாசமெலாம் பனிபோல் நீங்கிடவே
  பற்றினேன் உன்பாதம் பரமனடி சேர்ப்பாயே!

78. சித்தத்தில் நுழைந்தான்!

கூத்தாடும் சிவனும் கீதைதந்த கோவிந்தனும்
  கூட்டாக அளித்திட்ட குணசீலன் ஹரிஹரபுத்ரன்
பித்தாகி உலகினில் பொருளில்லா பொருள்தேடி
  போதையாகி போனேன் பின்கலங்கிய பேதையானேன்
வித்தகன் வேதநாயகன் விண்ணில் வரும்சோதி
  வெஞ்சமர் புரிந்து வீண்மகிஷியை அழித்தவன்
சித்தத்தில் நுழைந்தான் சட்டென மாற்றினான்
  சத்திய பாலனை சபரிதனில் கண்டேனே!

79. அவன் கொடுத்த வரம்!

1. வரங்கொடு வரங்கொடு என்றே
    வாய்விட்டு தினம் வரையின்றி கேட்டிடுவேன்
  கரம் ஒலிக்கும் புகழாரம் காதினில் கேட்கவேண்டும்
    கணக்கிலா செல்வங்கள் குவிந்து பெருகவேண்டும்
  அரங்கத்தில் என்கவிதை ஆயிரமாயிரம் ஏறவேண்டும்
    அனைவரும் வரகவியென ஆரவாரித்து புகழவேண்டும்
  பேரனும் பேத்திகளும் பெருவாழ்வு பெறவேண்டும்
    பெற்றவர் யாவரும் பெருஞ்சிறப்பு அடையவேண்டும்

2. பேர்சொல்ல அன்னதானம் பெருமளவில் தொடரவேண்டும்
    பேரார்வம் ஆன்மீகமதில் பெரும்ஊற்றாய் பெருகவேண்டும்
  முரணான எண்ணங்களில் மூழ்காது இருக்கவேண்டும்
    மூச்சுள்ளவரை உடல்நலமோடு முன்னின்று வாழவேண்டும்
  குரலால் யாரையும் குறைகூறாது இருக்கவேண்டும்
    குழைந்துஅன்பு பிறரிடம் கொள்ள முடியாதபோதிலும்
  மறந்தும் யாரையும் வெறுக்காத நிலைவேண்டும்என
    மனதில் ஒராயிரம் வரங்கள் வேண்டினேன்!

3. வரங் கொடுக்கும் வரதன் கண்முன்நின்றான்
    வரங் கொடுக்க வந்தேன் கேள்என
  திறந்த கண்முன் தெய்வீக சோதியாய்
    தரநிற்கும் சபரிநாதனை தெளிவாகக் கண்டேன்
  திறக்கவில்லை வாய் தேடியவரம் கேட்க
    தூசாகிப் போனதா தூளாகியதா என்வரம்
  மறப்பானோ என்ஐயன் மாதுஎனக்கு என்னவேண்டும்என
    மலைமேல் அமர்ந்தவனே மனதைநீ அறியாயோஎன
  உரத்தகுரல் எந்தன் உள்ளத்தில் ஒலித்தது
    உயர்ந்த வரப்பிரசாதி உருவமும் மறைந்தது
  நிறைந்தது உள்ளே நீங்காதான் திருவுருவம்
    நல்லவரம் நீயேதான் நல்கிடுவாய் பணிந்தேனே!

80. நலமெல்லாம் தந்திடுவாய்!

கொஞ்சுமொழி குமரனுக்கு தம்பியானாய்
  கோலமுக வேழன் குஞ்சரனுக்கும் தம்பியானாய்
நஞ்சுண்ட நாயகன் நீலகண்டன் மகனானாய்
  நளினமான அனந்த சயனனுக்கும் மகனானாய்
மஞ்சுசூழ் மலைமீது மணிகண்டனாய் அமர்ந்திருப்பாய்
  மகரசோதி தனைக்காட்டி மனதினை ஈர்த்திருப்பாய்
நெஞ்சார உன்னை நினைந்திருக்கும் பக்தருக்கு
  நீயே முன்வந்து நலமெல்லாம் தந்திடுவாய்!

81. நலவாழ்வு தாராயோ?

நாளெல்லாம் உடல்நலிவு நான்படும் துயரங்கள்
  நீயறிய மாட்டாயோ நெருங்கியே அருளாயோ
வாளும் வளமும் வகையான பொருளும்
  வானுலகு ஆள்கின்ற வாகைகள் கேட்கவில்லை
தாளாமல் சுற்றங்கள் தயைவை வேண்டவில்லை
  தனியே இருந்தாலும் தன்னிறைவு தந்துள்ளாய்
கோளாறு ஏதுமில்லா நலவாழ்வு தாராயோ
  கடைசி மூச்சுள்ளவரை காத்துநீ வைப்பாயோ?

                       82. கணமேதும் நீங்காதே!
நினைவெல்லம்  நீயே நினைவிலும் கனவிலும்
      நின்றாலும் நடந்தாலும் நானமர்ந்து இருந்தாலும்
மனையின் உள்ளேயும் மனையின் வெளியேயும்
      மனதில் உன்நாமம் மணியடித்து ஒலிப்பதேன்
உணவினை உண்டாலும் உறங்க நினைத்தாலும்
      உள்ளே உன்பெயரே ஊற்றென பெருகுவதேன்
கணையாக  துயரங்கள் கட்டியே வாட்டினாலும்
      கதறுவது ஐயப்பா என கணமேனும் நீங்காதே!

                        83. கனகமலை சோதியே!

அண்ணா மலையானும்   அழகுதிரு  மலையானும்
      அன்பாய் அளித்திட்ட  அருள்சபரி மலையானே
எண்ணத்தில் நீவந்து எளிதாக நிறைந்தாயே
      எண்ணாத போதும் என் எண்ணம் செயலாக்குவயே
வண்ணமலை வளர்பிறையே வாழ்வளிக்கும் சாஸ்தாவே
      வேண்டியது என்னவென வேண்டிடவும் வேண்டுமோ
கண்ணில் கருத்தில் காலமெல்லாம் நிறைந்திருக்கும்
      கனகமலை  சோதியே  காலடியில் சேர்த்திடுவாய்!

84. ஏகாந்தமாய் இருப்பாயே!

மின்னுகின்ற மின்னலும் மோதிவரும் இடியும்
  மழையாகப் பொழிகின்ற மாகடல் மேகமும்
சின்னஞ்சிறு மலரும் சிங்காரத் தாரகையும்
  செவ்வானில் செங்கதிரும் சிலிர்க்கின்ற வெண்ணிலவும்
வண்ணச் சிறகோடு வட்டமிடும் பறவைகளும்
  வனத்தில் விளையாடும் விலங்குகள் கூட்டமும்
எண்ணிலா உயிர்கள் எதிலும்நீ ஐயப்பா
  எந்தன் உள்ளேயும் ஏகாந்தமாய் இருப்பாயே!

85. ஏனிந்த மயக்கம்?

எந்தன் முயற்சிகள் எடுத்திடும் செயல்கள்
  எல்லாம் உன்னாலே எழுதப்பட்ட கவிதைகள்
எந்தன் வெற்றிகள் எதிர்பார்க்கும் நன்மைகள்
  எல்லாம் உன்அருளில் எழுகின்ற ஒளிகள்
எந்தன் வேண்டுதல் ஏங்கும் பயங்கள்
  எல்லாம் நீயறிந்த எளிமையான நிலையன்றோ
எந்தன் தேவையில் எப்போதும் துணையாக
  ஏகாந்தனே நீயிருக்க ஏனிந்த மயக்கம்ஐயா?

86. அந்த 'ஒருகணம்' அருள்வாயே!

ஒராயிரம் முறை ஒங்கிய குரலில்
  ஸ்வாமியே சரணம் ஐயப்பா என்றாலும்
ஒராயிரம் முறை உன்சன்னதி வந்தாலும்
  ஒவ்வொரு வினாடியும் உன்பெயரைச் சொன்னாலும்
வாராது நிற்பாய்என் விணைகள் தீர்த்திட
  வேதனைகள் மறந்து வேறேதும் நினையாது
ஒரேஒரு கணம் ஒசாஸ்தா எனஎண்ண
  ஒடோடி வந்து உன்னோடு சேர்த்திடுவாய்
ஹரிஹர புத்திரனே அந்தஒரு கணம்
  அளித்திட வேண்டும் அருள்வாயே ஐயப்பா!

87. மங்கலமாய் நானிருப்பேன்!

உலகத்தின் மாயைகள் உவந்து கண்மூட
  உண்பதும் உறங்குவதும் உடையணிந்து களிப்பதும்
பலர் போற்ற பொய்யாக வாழ்வதும்
  பாவத்தின் பிடிப்புஎன பதறாது நானிருந்தேன்
உலாவந்த பெரியோர் உரைத்திட்ட நல்லுரைகள்
  உணராத பேதையாய் ஊரெல்லாம் சுற்றினேன்
பலாப்பழம் சுளைபோன்ற பம்பாநதி வாசனே
  பக்தியின் சுவைதனைநின் பாதமதில் உணர்ந்தேன்
சுலபமாய் உன்னைச் சரணடைந்த வேளையிலே
  சட்டென விலகியதுஎனைச் சுற்றிய மாயைகள்
மலராக உந்தனையே மனதில் சூடிவிட்டேன்
  மகரசோதி ஒளியில் மங்கலமாய் நானிருப்பேன்

88. என்னுள்ளே புகுந்துவிட்டாய்!

வருக வருகவென்று வாய்விட்டு அழைத்தேன்
  வைகறைப் பொழுதாக விடியலாக நீவந்தாய்
தருக தருகவென்று தாள்பற்றி அழுதேன்
  தன்னல பந்தம்நீக்கி தனித்தியங்க வைத்தாய்
பெறுக பெறுகவென்று பக்தியினைக் கொடுத்தேன்
  பொறுமை பொறுமைஎன்று புன்னகை செய்தாய்
ஏற்க ஏற்கவென்று என்னையே அர்ப்பணித்தேன்
  எப்போது எனக்காத்திருந்து என்னுள்ளே புகுந்துவிட்டாய்!

89. மறு உலகு என உணர்ந்தேன்!

கண்ணிரண்டு கண்டேன் களிநடனம் புரிந்தேன்
  காதிரண்டு கேட்டேன் கருமணியின் ஒசைதனை
வண்ணமுகம் கண்டேன் வளர்சோதி ஒளியாக
  வெண்ணீரும் சந்தணமும் விளங்கிடும் குங்குமமும்
எண்ணத்தை ஈர்த்திடும் எழில்காந்தமென உணர்ந்தேன்
  எங்கெங்கோ தேடிவந்து ஏறியமர்ந்த மலைகாண
மண்ணில் பிறந்ததன் மகிமையை அறிந்தேன்
  மணிகண்டன் பாதமே மறுஉலகு என உணர்ந்தேன்!

90. கூத்தாடி மகிழ்ந்தேன்

கோடையிடி மழையென கொட்டி முழக்கி
  கண்ணைப் பறிக்கும்நெளி கோடான மின்னலுடன்
சடசடவென சத்தமிட்டு சங்கீதமாய் துளிவிழ
  சபரிநாதா உந்தன் சரணகோஷம் கேட்டேன்
வாடையின் துயர்கள் வந்தவழி சென்றன
  வாஞ்சையில் தடவும் வரம்கொடுக்கும் கரமென
கூடைமலர் குவித்து கொண்டாடி வணங்கிட
  கொட்டும் மழையில் கூத்தாடி மகிழ்ந்தேன்

91. நடமிட்டு வருவானே!

காலையும் மாலையும் குளிர்நீரில் நீராடி
  கருநீல ஆடையுடுத்தி கைநிறைய திருநீறும்
வாலைக் குங்குமமும் வாசனை சந்தணமும்
  வரிசையாக முகமதில் சாஸ்தாவை நினைந்துசூடி
சோலை மலர்களும் செவ்வாழை கனிகளும்
  சேர்ந்த தேங்காயும் செவ்வாழை கனிகளும்
சீலமுடன் முன்வைத்து சரணம் நூறுசொல்லி
  சபரிநாதனை தொழுதிட சங்கல்பம் செய்வேனே
நீலநிற ஆடையான் நித்திய அனுபூதி
  நீண்டுயரும் கற்பூரஒளியில் நடமிட்டு வருவானே!

92. ஐம்புலத்தால் அறிகின்றேன்!

கொடுத்த இருகண்களால் குமரனைக் கண்டேன்
  கிடைத்த இருசெவியால் கோஷசரணம்கேட்டேன்
எடுத்த மூக்கினால் எழும்சந்தணம் முகர்ந்தேன்
  ஏற்று மகிழ்ந்தேன் இன்சுவை பிரசாதம்
தொடுத்து பாடினேன் தூயகவி நாவினால்
  தூயமாலை கைகளால் தூக்கி சூட்டினேன்
அடுத்தடுத்த காலடியால் ஆண்டவனே தேடிவந்தேன்
  அன்பான மனதால்உன் அகத்துள் ஐக்கியமானேன்

93. 'பத்தாகி' அருள்வாயே!

ஏகதந்தன் சோதரனாய் இருமுடிப் பிரியனாய்
  ஏறுமுக் கண்ணன் எழுகின்ற தந்தையாய்
ஆகமவேதம் நான்கின் ஆன்மீகத் தலைவனாய்
  ஐந்தலை நாகமதில் அலைமோதும் பாற்கடலில்
போகம் நீத்தஞானி திருமால் தாயாய்
  ஆறுமுகன் அண்ணனாய் எழுபிறவி அழிப்பவனாய்
ககனமதில் எண்திசையும் கலந்து இருப்பவனாய்
   காணும் நவமணியாய் காக்கும் சபரிகியானே
மோகம் தீர்த்து மோனத்தவம் செய்வாய்
  மகரசோதி ஐயப்பா பத்தாகி மனதில் நிற்ப்பாயே!

94. இனியும் தாமதமோ?

பிறந்து வளர்ந்து படித்து பதவிகண்டு
  பின்னர் மணமுடித்து பிள்ளைகளைப் பெற்று
சிறப்போடு அவரை சீர்பெற நிறுத்தி
  சின்னஞ் சிறுமழலை செல்வ பேரன்பேத்திகண்டு
நிறைவான வாழ்வை நான் முடித்துவிட்டேன்
  நாளை இனி நீயேஎன நினைந்தே இருக்கிறேன்
இறைப்பணி செய்து இதயத்தில் நீவர
  இருகதவும் திறந்தேன் இனியும் தாமதமோ?

95. கசிந்து உருகுவேனா?

காட்டு விலங்காகிஉன் கானகத்தில் இருப்பேனா?
  கட்டும் இருமுடியில் கரைந்தே போவேனா?
காட்டும் கற்பூரஒளியில் கனிந்து நிற்பேனா?
  கட்டும் உலகப்பற்று கட்டறத்து மீள்வேனா?
காட்டும் சின்முத்திரை காட்சியை காண்பேனா?
  கொட்டும் நெய்யில் கூடியே அமிழ்வேனா?
காட்டும் உன்அன்பில் கசிந்து உருகுவேனா?
  காலடி சரனத்தில் கண்ணீராய் மாறுவேனா?

96. ஞானத்தின் உருவே!

ஞானகுரு தஷிணா மூர்த்தி ஸ்கந்தகுரு வடிவேலன்
  ஞானம் உரைத்த கீதைகுரு கண்ணன்
ஞானப் பழமான வேதகுரு விநாயகன்
  ஞானத்தை பிழிந்து ஊட்டும் ஆசாரியர்
ஞானம் பெற்ற ஞானியர் சித்தர்
  ஞானம் தந்திட எத்தனை பேர்முயன்றும்
ஞான சூனியமாய் ஞாலத்தில் உழல்கின்றேன்
  ஞானத்தின் உருவே ஐயப்பா ஆட்கொள்ளவருவாயே!

97. பாரிஜாத மலராக...

அந்தக்கணம் வரும்போது அருகேநீ இருக்கவேண்டும்
  அழகான நின்காலடியில் அர்ப்பணித்த மலராக
இந்தப் பிறவி இறுதிநாள் இனிமையாக அமையவேண்டும்
  இருகாலிருந்தால் நடத்தி இட்டுச் செல்லவேண்டும்
சொந்தமாக கைபிடித்து சுகமாக கூட்டிசெல்லவேண்டும்
  சொல்லும் நினைவும் சுந்தரனே உனதாகவேண்டும்
பந்தபாசம் ஏதுமின்றி பவித்திரனே உன்பாதமதில்
  பாரிஜாத மலராக சமர்ப்பணம் ஆகவேண்டும்!

98. கற்பகமாய் கனிந்து...

கற்பகமாய் கனிந்து கடைத்தேற்ற வருவாயோ?
  கைகளில் வில்லம்போடு கடும்புலிமீது வருவாயோ?
பொற்பாதம் காட்டியே பொடிநடையில் வருவாயோ?
  பூமுகத்தில் புன்னகை பொலிந்திட வருவாயோ?
அற்புதமகா சோதியாய் ஆதரிக்க வருவாயோ?
  ஆனந்த சரணகோஷம் ஆர்ப்பரிக்க வருவாயோ?
நெற்றியில் சந்தணகுங்கும நீறுமணக்க வருவாயோ?
  நினைவெல்லாம் நீயாக நான்பணிய ஏற்பாயா?

99. வண்ணப் பாதங்களில்...

போக மாட்டாராஎன பார்த்தவர் கூறாமல்
  போய் விட்டாரேஎன கண்ணீர் பொழிந்திட
சோகக் காட்சிஏதும் சிறுஅரங்கு ஏறாமல்
  சிந்திக்க நொடியின்றி சிந்துகின்ற மலராக
மோகத்தை வென்றநீ முன்வந்து நிற்கநின்
  முழுமதி முகங்கண்டு என்அகமலர் மலர்ந்திட
வாகைசூடும் வீரமுடன் வணங்கும் கரமோடுநின்
  வண்ணப் பாதங்களில்என் வளர்மூச்சு இணையவேண்டும்!

100. ஏற்றிடுவாய் ஐயப்பா!

சன்னிதானம் வந்தடைந்தேன் சந்தக்கவி நூறுபாடி
  சாந்திநிலை தந்தாயே சபரிமலை சாஸ்தாவே
தன்னிலை மறநதேன் தாளடியில் சரணம்ஐயா
  தயையோடு உன்னடியல் தலைவைக்க அருள்வாயே!
முன்னே முடித்தேன் முற்பிறவி செயல்தனை
  முன்னின்று நீயிருந்து முக்திவழி காட்டியதால்
என்னேரம்என காத்திருப்பேன் என்றுமே உன்நினைவில்
  ஏகாந்த மூர்த்தியே என்னையும் ஏற்றிடுவாய்

முடிப்பு

செந்தமிழ் கவினூறு சொல்லில் பாடியே
  செல்வமே ஐயப்பா சோதியே உன்நினைவாக
தந்தமுக கணபதி தான்துணை வந்ததும்
  தன்னை உள்நோக்கி தானுணர வைத்ததும்
எந்தன் முயற்சியில்லை ஏடெடுத்தாள் துணையின்றி
  எழுத்தில் கொட்டியதை ஏறெடுத்து பார்த்திட
சந்ததமும் சரணம்பாடி சபரிகிரி நாதனை
  சிந்தையில் வைத்தே சீரெல்லாம் பெறுக!

செவ்வாய், 26 மே, 2015

வைகாசி விசாகம்



வைகாசி விசாகம் வண்ணமயிலில் பிரவேசம்
  வீரவேல் ஒளிவீசும் வரம்தரும் அபயகரம்
வைகையென கைவைத்து வைகை தனைஅளித்தாள்
  வாரியனைத்திட சரவண ஆறுமுகம் வந்தான்
வாகைசூட வைரவேல் வெற்றிஆசி உடன்அளித்தாள்
  வீரனை சூரனை வதைத்து சேவல்மயிலாக்கினான்
தோகை மயில்மீது தேவியருடன் வருவாயே
  தொண்டருக்கு அருள்செய்து தேனாக இனிப்பாயே!

அன்மிக மலர் 26.5.2015 அட்டை படம் ஆறுமுகம்

பன்னிரு கைகளும் பால்முகம் ஆறும்...



சூரனை அழித்து சேவல் மயிலாக்கிய
  சுந்தரன் கந்தன் சரவனத்தில் வந்தநாள்
மாரனை எரித்த மகாதேவன் நெற்றியில்
  மூடிய கண்திறந்து முத்தாக வந்தஒளி
தாரகையாய் தாமரையில் தஞ்சம் புகுந்திட
  தாயாக கார்த்திகை கன்னியர் தாங்கிஎடுத்த
பேரன்பில் வளர்ந்து பார்வதி சேர்த்தணைக்க
  பன்னிரு கையோடும் பால்முகம் ஆறோடும்
பரம்பொருளாய் வந்தவனே படைவீடு கொண்டவனே
  பெருமைமிகு வைகாசி விசாகப் பேரருளே பணிந்தேனே

அன்மிக மலர் 26.5.2015 அட்டை படம் ஆறுமுகம்

செவ்வாய், 19 மே, 2015

திரிபுர சம்ஹாரம்



நால்வேதம் குதிரைகளாய் நல்மேரு வில்லாக
  நாகசேஷன் நாணாக நற்பாற்கடல் அம்பாரியாக
மலர்மன்னன் மன்மதன் மாபெரும் பாணமாக
  மலரனையான் பிரம்மா மாவீர சாரதியாக
உலாவரும் தேவர்கள் உடன்வரும் பரிவாரமாக
  ஊர்த்தவ அசுரர்குலம் உறைந்து பதுங்கிட
நல்லிரவினில் வென்று நல்சம்ஹாரம் முடித்தாய்
  நற்பெரும் மல்லிகார்ஜீனா நமச்சிவாயமே போற்றி

அன்மிக மலர் 15.5.2015 

எழிலரசி திருமகளே!



பொன்தகழி பின்சுழல பொற்கரம் பொன்தூவ
  பச்சை பட்டாடைதனில் பவித்திரமாய் இருப்பவளே
பொன்கலசம் இடக்கையில் பொற்றாமரை மறுகைகளில்
  பொன்இதழ் சிவந்த பூந்தாமரையில் அமர்ந்தவளே
புன்னகையே உன்எழிலோ பொலியும் ஆபரணமோ
  புதுத்தளிராய் மிளிர்பவளே புதுமலராய் மலர்பவளே
என்றும் கடைக்கண்ணால் எல்லாச் செல்வமும்
  எமக்கருள வந்திடுவாள் எழிலரசி திருமகளே

அன்மிக மலர் 19.5.2015 அட்டை படம் லட்சமி

புதன், 13 மே, 2015

ஸ்ரீ ஐயப்பன் நூறு காப்பு



வேழமுக கணபதி

1. சந்தக்கவி நூறுபாடி சாஸ்தாவை பணிந்திட
    சபரி மலையானை சாந்தமதின் மறுஉருவை
  சிந்தையில் கொண்டு சீரோடு பாடிட
    சரணம் கூறியே சங்கரஹரி மைந்தனை
  வந்தனை செய்வேன் வழிபட்டுத் தொழுவேன்
    வேழமுக கணபதியே விரும்பிஎன் பாட்டில்
  தந்திடுவாய் நற்பொருள் தாயாகத் துணையிருப்பாய்
    தலைவணங்கும் சரணம் சரணம் சரணமே!

வீணை ஏந்தும் வாணி

2. விந்தையாக வீணைமீட்டி வெண்ணிற துகில்பூண்டு
    வேதமோடு ஆயகலைஅறிய வரமளிக்கும் அன்னையே
  பந்தளத்தின் நாயகனை பரமகுரு ஐயப்பனை
    பாடல்நூறு பாடித் தொழுதிட முனைந்தேன்
  ஏந்தும் ஏட்டினில் என்னோடு துணைவந்து
    எழுத்தும் பொருளும் எழிலும் தந்திடுக!
  செந்தூர நாயகியே சிந்தனையில் வந்திடுக
    சேவடி பணிந்தேன் செல்வியே அருள்கவே!

சமர்ப்பணம்



இக் குடும்பத்தின் மூன்று தலைமுறைக்கும்
  தன்னலமின்றி பிரதிபலன் எதிர்பாராது
தன் உடலாலும் உள்ளத்தாலும்
  சேவைசெய்து கடைசிமூச்சுவரை
அன்னபப்பொழிந்து தியாகியாகவாழ்ந்து
  மறைந்தபின்னும் எங்கள் குலதெய்வமாகி விட்ட
திரு. எஸ். எஸ். வாமனன் அவர்களும்
 இக்கவிதைநூல் ஸ்ரீ ஐயப்பன் நூறு சமர்ப்பணம்

'ஸ்ரீ ஐயப்பன் நூறு'



ஒருசில சொற்கள்...
கடந்த 6.4.2015 முதல் 5.5.2015 வரைஎழுதி
நிறைவு செய்யப்பட்ட 'ஸ்ரீ ஐயப்பன் நூறு' என்ற
கவிதை தொகுப்பினை உங்களோடு பகிர்ந்து
கொள்ள விழைகிறேன்
இந்த காலக்கட்டத்தின் நிகழ்வுகள், செயல்கள்,
நினைவுகள், சந்திப்புகள் என பல்வேறு முனை தாக்கங்கள்
இக்கவிதைகளில் உணரமுடியும்

ஸ்ரீ ஐயப்பன் எனது இஷ்டதெய்வம். அவரிடம் நான் கொண்டுள்ள அசைக்கமுடியாத நம்பிக்கை இந்த கவிதை காலக்கட்டம் மேலும் உறுதி படுத்தியுள்ளது
எனது கோரிக்கைகளையெல்லாம் கூடஇருந்து நிறைவேற்றும் ஐயப்பன் மீது நூறு கவிதைஎழுத எண்ணினேன். ஐயப்பன் அதையும் நிறைவு செய்துவிட்டார்
எல்லாம் 'அவன் நடத்துவது' என்ற நம்பிக்கை பரிபூரண மன அமைதியை தந்துள்ளது

இனி 'ஸ்ரீ ஐயப்பன் நூறு' கவிதைகள் உங்கள் பார்வைக்கு - படிக்க - ரசிக்க - உணர - ஐயப்பன் அருளுக்கு பாத்திரமாக!

கோவை                                         ராதாகவி
5.5.2015 

தவமே தவம் செய்தால்

   
பாதம் இரண்டு மடக்கி பத்மாசனம் இட்டு
     பாசுபதாஸ்தரம் தரவல்ல பரமேஸ்வரன் இருகைமடக்கி
மோதும் உடுக்கை மாய்க்கும் சூலம் மறுகைகள் ஏந்த
     மாபெரும் கழுத்தினை சுற்றி முத்துநாகம் விளையாட
சேதம் தவிர்த்த சிறுபிறையை சடையினில் தாங்கி
     சிவந்த முக்கண்மூட சிலிர்க்கும் வெண்ணிறு ஒளிர
வேதநாயகனே வெண்பனீ மலைமுகட்டில்
      தவமேதவம் செய்யும் தவக்கோலம் யாருக்காக?

திங்கள், 11 மே, 2015

கணத்தில் வந்த தசாவதாரம்



கணத்தில் உலகுகாக்க கருமீனாகிவந்த மச்சமா?
  கீறியே பூமியை கவின்வேதம் மீட்ட கூர்மமா?
கணத்தில் கொம்பால் குடைந்து தேவியை
  கடல்மேல் தந்திட்ட கருணை வராகமா?
கணத்தில் தோன்றி கணத்தில் மறைந்த
  கர்ஜிக்கும் சிங்கமுக நரஹரி நரசிம்மனா?
கணத்தில் உயர்ந்து காலடியால் ககனமதை
  கண்முன் அளந்த திரிவிக்ரம வாமனனா?
கணத்தில் மன்னர் கருந்தலை கொய்து
  ககனத்தில் வென்ற கர்மவீர பரசுராமரா?
கணத்தில் ஏழுமரம் கணையால் துளைத்திட்ட
  காருண்ய மூர்த்தி காகுத்த ராமனா?
கணத்தில் மல்லரை கைகளால் வெல்லும்
  கண்ணன் சோதரன் கோபமிகு பலராமனா?
கணத்தில் களத்தில் கீதை உபதேசித்த
  கார்மேகக் கண்ணனா? கார்கடல் துயில்நீத்து
கணத்தில் துயர்நீக்க கலியுகம் வரவிருக்கும்
  கல்கியா? தசாவதார கற்பக நாராயணா?
கணத்திலும் உனைமறவாத வரம் தந்தருள்
  காலமெலாம் உன்னை கருத்தினில் இருத்திடவே!

ஞாயிறு, 10 மே, 2015

அன்னையர் தினம்


அடிப்பாள் திட்டுவாள் ஆரவாரத்துடன் கோபிப்பாள்
     ஆத்திரத்தில் சபிப்பாள் அடுத்தகணம் அழுவாள்
துடிப்பாள் நீவிழுந்தால் தூக்கிமண் துடைப்பாள்
      துளிநீர் உன்கண்ணில்வர தன்ரத்தமென பதறுவாள்
அடிப்பாய் அவமதிப்பாய் அவதூறு பேசுவாய்
      அனைத்தையும் பறித்து அனாதையாய் விடுவாய்
அடிமனதில் பாபத்தை அடுத்த தலைமுறைக்கு
       அழைத்து செல்கிறாயேயென அகத்தில் ஆதங்கமடைவாள்
படிப்படியாய்  ஏறியெங்கும் பகவானை வேண்டுவாள்
        பாசத்தால் நாம்செய்த பாபத்தையும் தான் ஏற்க
விடியவிடிய வேண்டுவாள் வேதனையை மறைத்தே
        விடியலாக நம்வாழ்வே வாழ்வாக கொண்டிடுவாள்
நொடியில் உணருவீர் நேரில் காணும் தெய்வம்
        நம்மை பெற்றதாய் நலம்விரும்பும் அன்னையே
நாடியே நினைப்பிர் நம் அன்னையர் தினமதில்
       நாட்டில் பெண்கள் எல்லாம் நம்மைகாக்கும் அன்னையரே!

புதன், 6 மே, 2015

கொஞ்சும் சிவபாலா!



கொஞ்சும் செவ்வாயில் குவளை விரல்வைத்து
  குட்டிவேல் மறுகையில் கெட்டியாகப் பிடித்து
விஞ்சும் வண்டுவிழி வட்ட முகமதில் சுழல
  விளங்கும் செவிதனில் வெண்முத்து விளையாட
தஞ்சமென தோள்களில் தளிர்மாலை தழைந்தாட
  தகைவான கருங்கூந்தல் தலையின் மேல்ஒளி
மிஞ்சும் நவரத்தினம் மின்னும் கிரீடம்தங்க
  மிளிரும் திருநீறும் சந்தணகுங்குமம் பளீரிட

பிஞ்சுமுகம் காட்டிஎமை பித்தனாக்கும் சிவபாலா
  பழனியும் செந்தூரும் பழமுதிர் சோலையும்
மஞ்சுசூழ் திருத்தணியும் மரகதப் பரங்குன்றமும்
  மகிமைமிகு ஸ்வாமி மலையும் இருந்து
அஞ்சேல்என அபயகரம் அன்போடு அருள்பவனே
  அறியாப் பிள்ளைபோல் புன்னகை பூத்தாயே
தஞ்சமென வந்தோம் தாங்கியே காத்திடுவாய்
  தயக்கமும் உண்டோ தவமான பாலகுமாரா!

ஆன்மிக மலர் அட்டைபடம் கவிதை 5.5.2015
பாலமுருகன்

புதன், 29 ஏப்ரல், 2015

சீறி வந்த சிங்கமே!



சங்கு சக்கரம்இன்றி செரிவான கூர்நகங்கள்
  சிலிர்க்கும் ஆயுதமாய் சீறிவந்த சிங்கமே
தங்கும் மனிதனும் தளராத மிருகமும் இணைந்த
  தசாவதாரத்தின் தலைமையென தரணியில் வந்தவனே
பொங்கி எழுந்து பெருந்தூணில் மறைந்திருந்து
  பாலகனின் நம்பிக்கைக்கு புத்துயிர்தர பிளந்துவந்து
ஒங்கிய தீமையை ஒருகணத்தில் ஒழித்து
  ஒளியான கருணையை உலகுக்கு காட்டிநின்ற

மங்கல தெய்வமே மகாலட்சுமி மணாளனே
  மறுபடியும் நீவந்து மாபூமியில் முளைத்திடும்
எங்கும் பரவிநிற்கும் எண்ணற்ற தீமையழிக்க
  எல்லோரும் பிரகலாதனாய் ஏங்கியே அழைக்கிறோம்
ஒங்காரத் திருவுருவே ஒப்பிலா பேரழகே
  ஒடிநீவர கூடிநின்று ஒன்றாக வேண்டுவமே
தங்கத்தேவி தன்னோடு தாழ்த்தாது வருவாயே
  துயர்சூழ் உலகினை தாயாகி காப்பாயே!


ஆன்மிக மலர் அட்டைபட கவிதை
ஏப்ரல் 28 நரசிம்மர் படம்

வியாழன், 23 ஏப்ரல், 2015

ஜெய ஜெய சங்கர



காலடியில் அவதரித்து கால்களால் எண்திக்கும்
  கணமும் அயர்வின்றி காலமெலாம் சுற்றிவந்து
கோலமிகு நான்மறைகள் குறைவின்றி கற்றுணர்ந்து
  கேள்வியும் விளக்கமுமாய் அறிவின் வேள்வியாகி
பாலசந்யாசி உமக்கு பாசமுடன்தந்த நெல்லிக்கனி
  பொன்மழையாய் பொழிந்திட கனகதாரா ஸ்துதிபாடி
சீலமிகு அன்னைக்கு சிதைமூட்டி சொல்காத்து
  சீர்தூக்கி உலகில்பக்தி சித்தாந்தம் தழைத்திட
பலநூறு நூல்கள் பாமரருக்கும் தந்து
  புலமைக்கு வித்தாக புவிவந்த வித்தகனே!

எங்கும் தெய்வநெறி எழிலாக மணம்வீச
  எழுப்பிய சங்கரபீடம் என்றென்றும் ஒளிவீச
தங்கும் பிறப்பில் தாழ்வுஏற்றம் இல்லையென
  தாய்போல் அனைவரையும் தன்கையால் அணைத்து
ஒங்கும் வாழ்வினுக்கு ஒப்பிலா உயர் நெறிகாட்டி
  ஒங்கார சிவம் ஒளிந்திருப்பான் அன்பில்என
பொங்கும் உலகுக்கு புதுவழி வகுத்தவரே
  புனிதமான கங்கையில் புனிதமாகி சென்றவரே
நீங்காது நிற்காதுஒடும் நதியாகி எமக்கு
  நல்வழி காட்டும் உம் நற்பாதம் பணிவோமே!

ஸ்ரீ சாயி பிரசாதம்



புட்டப்பர்த்தி தன்னில் பிறந்த புதுமலரே
  பூவுலகு வாழவந்த பொன் மழையே
தட்டிஎழுப்பி தவம் காட்டிய இறைத்தவமே
  தாய்பசுவென அன்பை தானாகப் பொழியும்தாயே
மட்டிலா மகிழ்ச்சி மனதின் உள்ளே என்றே
  மாந்தருக்கு புகட்டிய மாபெரும் ஞானியே
கூட்டி வைத்து கோடான கோடிபேரை ஒரு
  குடும்பமென கொள்கைதந்த குணக்குன்றே

வட்டமிட்டு பூமியெங்கும் வாழ்வளித்த சத்யசாயி
  வானுலகு நீசென்றாலும் வந்தெமைக் காக்கின்றாய்
சுட்டும் இடமெல்லாம் சுந்தரப் புன்னகை
  சுடர்விடும் கருணை சொட்டுகின்ற கண்கள்
விட்டுவிட்டு நான்நினைக்க விடாதுஎனைத் தொடர்வாய்
  வாழ்கின்ற தெய்வமே வாழ்வியல் தத்துவமே
கூட்டுக் குஞ்சுகள்யாம் கூவியுனை அழைப்போம்
  கால்களால் நடந்துவந்து கைகளால் எமைக்காப்பாய்
தொட்டு உன்விரல்என் தலைமீது படரும்
  தூயவனே உன்அன்பின் தாக்கத்தை நான் அறிவேனே!

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

Thanks



This is my 101st post since i opened my Blog "radhatamilkavi" in dec 2014. all the poems are on pictures of deities printed on the cover of "anmigamalar/Dinamalar (weekly) for the past 3 years.

My special thanks to Mrs. vasupradha and amirdha for opening this Blog for me and my grand son G.S.Siddarth for doing the tamil typing of all my kavithai. it is my future endevour to bring out my 'kavithai' in print form.

My thanks to all who took time to read them your appreciation comments and suggestions will be of great help for me to continue my literary persuit with the blessing of hard iyappa

                                                                         Radhakavi

அட்சய திரிதியை



வளரும் குறையாது வளமிகு அட்சயாஎனில்
  வளர்பிறை திரிதியை வாரிவழங்கும் நன்னாள்
வளரும் அட்சயதிரிதியை வாங்கி வழங்கி மகிழும்நாள்
  வலம்புரி கணபதி மாபாரதம் எழுதியநாள்
களம்புகும் பலராமன் கண்ணனோடு அவதரித்தநாள்
  கணத்தில் குபேரன் செல்வஅதிபதி ஆனதிருநாள்
துளபமாலை கண்ணன் துளிஅவல்உண்டு அட்சயஎன
  துன்பம்நீங்கி குசேலன் தொடர்செல்வம் பெற்றநாள்

களபம்விரி திரெளபதிக்கு கானகத்தில் அட்சயபாத்திரம்
  கண்னனால் பெருகிமுனி கடும்பசி நீக்கியநாள்
விளங்கும் நற்செயல் வீரியமுடன் செயல்படும்
  விதைக்கின்ற நல்விதைகள் விருட்சமாகி பலன்தரும்
களங்கமிலா வாழ்வு கண்ணெதிரே கைகொடுக்கும்
  கனிவான இன்சொல் கருத்துக்களை மாற்றும்
உளமாற தானம்செய் உன்னால் முடிந்ததை
  உன்னத அட்சயதிரிதியை உயர்த்திடும் உம்செயலையே!

திங்கள், 20 ஏப்ரல், 2015

நூறாவது கவிதை - நன்றி



நன்றிஒன்று நான்செல்வேன் நானறிந்த கவிதையினை
  நயந்து படித்து நன்பொழியால் பாராட்டிய
என்னருமை நண்பர்கள் ஏற்றமிகு உறவினர்கள்
  எனக்காக ஒர்பகுதி எழிலாக துவக்கிய
சின்னவள் வசுமதி அமிர்தாவுக்கு சிறப்பான நன்றி
  சலிக்காமல் தட்டச்சில் சரசரவெனத் தட்டி
கண்மூடி திறக்குமுன் முகநூல் கவிமுகத்தில்
  கருத்தோடு பதிவேற்றிய கண்மணி சித்தார்த்துக்கு ஒர்நன்றி

ஆன்மீகமலர் முகப்பில் அணிசெய்த கடவுளர்க்கு
  அலங்கார கவிதையால் அணிவித்துப் பார்க்க
அன்பின் மிகுதியால் ஆண்டுகள் மூன்றில்
  அழகாய் சேர்த்தவை அளித்துப் பகிர்ந்தேன்
இன்றுபதிவு செய்தேன் இனியநூறாவது கவிதை
  இனிதே தொடர்ந்திட இணைகிறேன் உம்மோடு
என்றும் உம்சொற்கள் எந்தனுக்கு ஊக்கம்
  என்றென்றும் நன்றி! எல்லோருக்கும் நன்றி!!

                                         ராதாகவி

திருவில்லிநகர் திருப்பாவை



திருவல்லி நகர் வளர்ந்த தெய்வமகளே
  திருமாலை வேண்டி நோன்பிருந்த தவமே
மருவிலா மாலையைத் தான்சூடி மகிழ்ந்த கொடியே
  மார்கழிப் பாவைதந்த முழுமதிச் சுடரே
திருமணத்தை கனவில்கண்டு முடித்த கண்மணியே
  திருமகளே ஆழ்வார் தேடிஎடுத்த மகளே
பெருமையை பெண்மைக்கு பாடிவைத்த மலரே
  பாவைபாடி பதம்பணிவோம் என்றும் யாமே!

வருவான் கண்ணன்!



மயிலிறகு முன்தலையில் மகுடமென விளங்க
  முத்துசரம் முகமதனை முத்தமிட்டு மகிழ்ந்திட
ஒயிலான குண்டலங்கள் ஒளிவீசி காதிலாட
  ஒய்யார குழல்கற்றை ஒளிந்துபின் விளையாட
குயிலாகி கீதமிசைக்கும் குழலும் கையிலாட
  கொத்தான முத்தணிகள் கொஞ்சி அசைந்தாட
கயல்விழிகள் கனிந்தாட கனிமுகம் விரிந்தாட
  கண்ணனே வந்தருள்க கடைக்கண் தந்தருள்க!

உமாபதி



இமயத்தில் குடிகொண்டு இளம் பிறைசூடி
  இனிய கங்கைதனை இருட்சடையில் தாங்கி
இமவான் மகளாம் இன்முக உமையை
  இடப்பக்கம் இருத்தி இயங்கும் ஈஸ்வரனே
கமகமென முழங்கும் உடுக்கையும் பகைகண்டு
  கனன்று சீறும் நாகமும் கையில் திரிசூலமுடன்
பூமகள் பாரம்தீர 'அழித்தல்' தொழிலதிபதியே
  பூமிதனில் எம்பாவம் நீக்கும் பிரதோஷ நாயகனே பணிந்தேன்

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

பொன்மகளே!



இருகையில் ஏந்திய இனியசெந் தாமரைகள்
  இடக்கரத்தில் பொற்காசு குவளையும் மின்னிட
திருவான வலக்கரமதில் திகழ்கின்ற பொற்கலசமும்
  தகதகக்க தண்ணீராய் தங்கம் வழிந்தோட
மருவிலா கழுத்தினில் மணிப்பொன் ஆரம்அசைய
  மஞ்சுவிரி கூந்தலில் மகுடம் ஒளிவீச
உருவாகி வந்துதித்த உன்னதச் செல்வியே
  உள்ளமதில் தங்கிநின்று உயர்வனைத்தும் அருள்வாயே!

உமா சந்திரசேகரனே!



நந்தி முன்னிருக்க நாற்கரங்கள் மான்மழுவோடு
  நாதம் ஒலிக்கும் உடுக்கையும் நற்தணலும் ஏந்திட
சுந்தரமாய் கால்மடித்து சுகமாக வீற்றிருக்கும்
  சந்திர சேகரனே சந்திரப் பிறைசூடி
முந்திடும் மூவிழிமூடி முடிதனில் கங்கைதாங்கி
  மலையவள் முகம்தேடி மாநிலம் உய்விக்க
சந்தமோடு ஆடவல்ல சக்திஉமா அருகிருக்க
  சிவமாகி என்னுள்ளே சிங்காரமாய் எழுந்தருள்க!

பள்ளிகொண்ட அரங்கன்



கொள்ளிடமும் காவிரியும் கோதையவள் சூட்டிய
  குளிர்மாலையென இருதோளில் அசைந்தோட
பள்ளிகொண்ட பெருமானாய் பாம்பனை மீதினில்
  பார்வையெலாம் தென்னிலங்கை திக்குநோக்க
அள்ளித்தரும் அபயகரம் அழகியசென்னி தாங்க
  அலங்கார ரங்கனாய் ஆட்கொள்ளும் பெருமானே
வெள்ளிமலரென விழிமலர்ந்து கள்ளத்துயில் களைந்து
  விரும்பி சரண்புகும் எம்மை காக்க எழுவாயே!

கணபதி



ஏகதந்தம் எழுத்தாணியாகி முன்வர
  ஏந்திய கைகளில் கொழுக்கட்டை மணம்வீச
முகமோடு இழைகின்ற துதிக்கை
  மூலப் பிரணவமாய் வடிவுகாட்ட
வேகமாய் வீசுகின்ற விசிறியென காதசைய
  வேழமுகம் முன்வந்து விளையாட
மோகம் களைந்து முக்திதரும் கணபதியே
  முக்காலமும் உன்பாதம் நான் சரணே!

பூரத்தின் மலர்கொடி



கோடிமலர் மாலைதனை கோவிந்தனுக்கு சூட்டியே
  கோதையாகி மாதவனை கைபிடித்த நாயகியே
பாடிப்பல் பாவையோடு பண்பான நோன்பிருந்து
  பாமரர்கள் உயர்வெய்த பாதைகாட்டி நின்றவளே
ஆடிமாத பூரத்தில் அவதரித்த பூங்கிளியே
  ஆண்டாளாகி அவனியில் அரங்கனை ஆண்டவளே
சூடியநல் சுடர்கொடியே சூழ்ந்து பணிகின்றோம்
  சொல்மாலை சூட்டியவளே செகத்தினில் அருள்வாயே!

சனி, 18 ஏப்ரல், 2015

உலகம் அளந்தார்! உள்ளம் அளக்கிறார்!



சிறுகுடை தாங்கி சிற்றுருவம்தான் கொண்டு
  சிறுகால்கள் துள்ளிவர சிறுகுடுமி ஆடிவர
சிறுவனாய் வந்த செந்தூர வாமனனே
  சிறுவாய் திறந்து சிறுமழலை மொழியில்
சிறிதான பரிசாக சிற்றடியில் மூவடிதருக
  சிரித்தபடி கேட்க செங்கோல் முடியரசன்
சிறிதென நினைத்து சிந்தைமகிழ தந்தேன்என
  சிலிர்த்து எழுந்து செவ்வானம் தொடுகின்ற

திரிவிக்ரமனாய் உயர்ந்து தோன்றிய உத்தமனே
  தரணியை ஒரடியாய் திகழ்வானம் மறுவடியாய்
விரிந்தெழுந்து அளந்தவனே வேண்டிய மூவடிக்கு
  விருப்புடன் தலைமுடியை வணங்கிப் பணிந்திட
பறித்துஅகந்தை போக்கி பக்தியை தந்தருளி
  பாயும்ஒளி திருவோண பூக்கோலமதில் வருவோனே
பாரினில் எம்முடைய பாசங்களை அளந்தே
  பக்தியை எம்முள்ளே பாங்குடன் வைப்பாயே!

ஸ்ரீ சத்ய நாராயணா!



எழுதலை நாகம் எழுந்துபின் குடையாக
  எகிரும் திகிரி கையில் எழிலாக சுழன்றிட
முழங்கும் சங்கம் முத்தாக ஒளிவீச
  முந்திடும் அபயகரம் முன்வந்து காத்திட
தழலென திண்கதை தண்டம் கைபிடிக்க
  துவளும் மாலைகள் துலங்கும் மார்பினில்
அழகான அணிகலன் அடுக்காய் அசைந்திட
  அலைகடல் கூந்தல்மேல் அலங்கார மணிமகுடம்

விளங்கும் மயிலிறகு விரிநெற்றித் திலகம்
  வெண்ணிலவு முகமும் விழியில் கருணையும்
பழவிணை நீக்கி பக்தனை ஏற்றிட
  பாசமுடன் வருகின்ற சத்ய நாராயணா!
பழமோடு பூக்களும் பல்வகை படையலும்
  பாதத்தில் வைத்து பூஜித்து தொழுவார்க்கு
மழலைச் செல்வம் மனமகிழ்ந்து அருளும்
  மாதவா சத்ய நாராயணா போற்றி! போற்றி!! 

கணநாயகனே!



கண்ணேறு நீங்கிட கண்முன்னே வைத்தேன்
  காணுமிடம் எங்கும் கணபதியே நீஇருக்க
கண்ணேறு தான்படுமோ கவின்வளம் நீங்கிடுமோ
  கண்மூன்று கொண்டு கண்இமையாது விழித்திருக்க
எண்ணம் தீதாகிடுமோ? எண்ணிலா தெய்வங்கள்
  ஏந்திய ஆயுதங்கள் எண்கரங்களில் ஒளிவீச
வண்ணத் தாமரைமேல் வளர்சிம்ம வாகனமுடன்
  வருகின்ற விநாயகனே வணங்குகிறேன் மலரடியே!

கார்த்திகை தீபம்



தீபம் ஒன்றேற்றி அத்தீபம் ஐந்தாக்கி
தீபாரதனை மீண்டும் ஐந்தினை ஒன்றாக்கி
தீபம் ஒன்றினை உன்முன் வைத்துபின்
தீபம் மாலை திருமலை ஏறும்

தீபம் மகாதீபம் மாலை மலையில்எழும்
தீபம் அகண்டதீபம் கார்த்திகையில் ஒளிவீசும்
தீபம் ஏகனாகி தீபமே அநேகனாகி
தீபம் அநேகமே தீபம் ஏகனாகும்

தீபச்சோதி வடிவானாய் திருஅண்ணா மலையானே
தீபசக்தி ஒன்றாகிய அர்த்த நாரீஸ்வரனே
தீபவிழா கண்டேன் கார்த்திகை திருநாளில்
தீபமென ஒளிவீச தூயவனே அருள்வாயே!

பஞ்ச நிருத்யம்



விந்தை உயிர்களை விரும்பி படைத்தல்
  வேராக நின்று வழிவழி காத்தல்
பந்தம் நீக்கி பற்றினை அழித்தல்
  பாங்குடன் தீய பழவிணை மறைத்தல்
எந்தநேரமும் எதிர்வந்து எளிதாக காத்தல்
  எனஐந்திணை இடையறாது நடத்தும்சக்தி
சிந்தைக்கு விருந்தாக சிங்கார ஆடல்வழி
  சிலையாகி ஆடுகின்ற சிவமே போற்றி

இயக்க காளிகா இனிய தாண்டவம் (படைத்தல்)
  இனிக்கும் திருநெல்வேலி இளம்சிவப்பு தாமிரசபையில்
வியக்கும் கெளரி விநயமிகு தாண்டவம் (காத்தல்)
  விரும்பும் திருப்பத்தூர் வியக்கும் சிற்சபையில்
மயக்கம் நீக்கிடும் மாலைசந்தியா தாண்டவம் (அழித்தல்)
  மாமதுரை நகரின் வெள்ளியம்பல திருச்சபையில்
தயக்கமின்றி ஆடுகின்ற திரிபுர தாண்டவம் (மறைத்தல்)
  தண்ணருவி சூழ்குற்றாலம் திகழ்கின்ற சித்திரசபையில்

உயிர்களுக்காக ஒங்கார ஊர்த்தவ தாண்டவம் (அருளல்)
  உயர் ஆலங்காடு ஒளிரும் ரத்தினசபையில்
பயிர்வளர் பார்மீது பொழிகின்ற வானமுதாய்
  பஞ்சநடனம் இணைக்கின்ற பரமானந்த தாண்டவம்
அயர்வின்றி அகிலம்வாழ அழகுதில்லை கனகசபையில்
  அரனே அன்பே ஆனந்த சிவமே
துயர்நீக்கி தூய்மையாக்கி தூக்கிநிறுத்தும் பரம்பொருளே
  தொழுவேன் உந்தன்இரு திருவடியே சரண்புகுந்தேன்!

வெள்ளி, 17 ஏப்ரல், 2015

பஞ்சமுக விநாயகர்



பஞ்ச முகங்கள் பரிதியெனத் துலங்க
  பூசிய திருநீரும் சந்தணமும் விளங்கும்
குஞ்சரமே பத்துக் கரங்கள் அருளும்
  குழைந்து ஒம் வடிவாகும் தும்பிக்கையானே
மூஞ்சூறு வாகனனே மோதகம் விழைவோனே
  மறைபொருளே முதன்மைத் தெய்வமே
தஞ்சம்என என்றும் உன்திருத்

  தங்கப்பாதம் சரணடைந்தேன் அருள்வாயே!

பாற்கடல் நாயகன்



ஐந்தலை நாகம்தான் அலைகடலில்
  அடுக்கிய அரவணையில் வீற்றிருப்பாய்
செந்தாமரை கரங்களால் சேவடி பிடித்திடும்
  செந்தூர வடிவான ஸ்ரீதேவியுடன்
சிந்தை கனிய சேவிக்கும் கருடனுடன்
  சுதர்சனமோடு சங்கமும் இணந்த கரங்களோடு
உந்தியில் எமும் உலகாக்கும் பிரம்மனோடு

  உளமகிழ்ந்து எமைகாக்க எழுந்தருளே!

நடராஜர்



நடமாடும் ராஜனே நற்கையில் அக்னி
  நாடும் ஞானத்தின் நற்குறியீடு அன்றோ
உடனிருந்தே உள்ளே உயர்கின்ற ஞானத்தீ
  உனக்கே காட்டிடும் உயர்ந்தவன் தரிசனம்
கடவுள் தொழிலாம் ஆக்கல் காத்தல் அழித்தல்
  கனிகின்ற அவன்கை தீச்சுடர் காட்டும் அழிவை
மூட அறியாமைக் காட்டை முன்னின்று சுடும்
  முன்னே எரிகின்ற கற்பூரம் மொழிகின்ற சாட்சி
நடமாடும் பெருமானே நமக்கே உறுதிதந்து
  நம்பியவரை நான் நாளும் காப்பேன் என்று
சுடர்விடும் நெருப்பு சத்தியம் செப்பும்
  சன்னதியின் வாக்குறுதி இனி என்ன வேண்டுமோ
நடமிடும் பாதங்கள் நானிலத்தின் மகிழ்வை

  நாடகமாக்கிடும் ஆனந்தநடனம் நமக்கே காட்டிடுமே!

கோலமயில் முருகா



கோலமயிலும் கையினில் வேலும்
  குன்றமதில் நின்றும் குங்கும சந்தணமும்
பால் வெண்நீறும் பிள்ளை முகமும்
  பிரணவத்தின் 'ஒம்' உடன் பக்தனுக்கு அபயமும்
பொலியும் உத்திராட்சமும் புரியும் புன்னகையும்
  பரமகுருவாகி பழனிவாழ் பாலகனே
சீலமும் நற்சிந்தனையும் சித்திக்க வரமருள்

  சூரனை வென்றவனே சீக்கிரம் என்னை ஆட்கொள்வாயே!

அண்ணாமலை சோதியே



சோதியாகி நின்ற சுடரே பிழம்பே
பாதிமதியும் கங்கையும் பூண்டத் திருச்சடையே
ஆதிசேட விஷ்ணுவும் ஆதியான பிரம்மாவும்
வீதிவலம் காணஅக்னி வடிவமான அண்ணாமலையானே!
ஆதிசக்தியை தன்னுள்ஏற்ற அர்த்த நாரீஸ்வரனே
சதிதேவி உண்ணாமுலை சமேதனே சரணம்
மோதி எழுந்ததீ திருவண்ணா மலையாக

ஒதிடும் நமச்சிவாய ஒங்காரமே சரணம் சரணமே!

வியாழன், 16 ஏப்ரல், 2015

மார்கழி மாதவா!



மார்கழி மாதமாகி மாதவப் பெருமாளாகி
  மைநாகம் ஐந்தாகி மேலே குடையாக
ஆர்பரிக்கும் பாற்கடல் அலைமேல் வீற்றிருப்பாய்
  அழகிய சங்கம் அதிரும் சக்கரம்
போர்புகும் கதை பொற்கையில் பொலிந்திட
  பக்தரை காத்திட பல்உரு ஏற்றிருவாய்
கார்மேக மேனியனே கரைந்திட என்விணைகள்
  காலடி பற்றினேன் கனிந்தருள் எந்தனுக்கே!

கந்தன் கழலடி



கைஅணைத்த கருநீலமயில் கந்தன்முகம் நோக்க
  கைவழியே வருகின்ற கனகவேல் தோள்தாங்க
கைவிரல்கள் ஐந்திணைந்து காக்கின்ற அபயம்தர
  கழுத்தினில் உத்திராட்சம் கருத்தோடு ஒளிவீச
கைலைமலைத் திருநீறும் கமலமுகமதில் துலங்கிட
  கருணைவிழி கண்ணிரண்டு கனிவோடு பார்த்திருக்க
கைகுவித்த பக்தனுக்கு கார்முகில் குழலாட
  கார்த்திகேயன் துணைவரும் கழலடி பணிமனமே!

மலையப்பா!



புல்லாங்குழல் வழியே பொழிகின்ற அமுதகீதம்
  பொன்விரல் மீட்ட பொலிகின்ற கண்ணனே
எல்லாம் அறிந்தவனே எளிமையாகி நிற்பவனே
  எழில்மிகு மலையப்பா ஏனிந்த புதியகோலம்
முல்லை மலர்மாலை முத்தார நவமணிகள்
  மோகன உருவாகி முறுவலுடன் வடிவெடுத்தாய்
கால்மடித்து அழகாக காளையென வீற்றிருப்பாய்
  ககனத்தில் நல்வழியே காட்டிடுவாய் மனதுள்ளே

கனிந்து நீ அருள்வாயே!



பால்வண்ண ஆடைமாற்றி புதுநீலம் புனைந்தாயோ?
  பலவண்ண மயிலாட பாச அன்னமதை மறந்தாயோ
எல்லாம் அறிந்தவளே எழில்மிகு கலைவடிவே
  ஏந்திய வீணையை ஏன் அணைத்து மீட்டுகின்றாய்
பல்பொருள் ஏட்டினை பாசமுடன் எடுத்துவந்தாய்?
  பக்தன் எனக்கும் பாடம் புகட்ட வந்தனையோ
கல்விக்கு அதிபதியே காலம்கடந்து நிற்கின்றேன்
  கண்களில் அறிவினை கனிந்து நீ அருள்வாயே!

ராம சங்கீர்த்தனம்



நெஞ்சினைப் பிளந்துள்ளே நிலைபெற்ற
  நாயகன் நாயகியை காட்டிய மாருதியே
கொஞ்சும் தாளக்கட்டை கையினில் ஏந்தி
  கீர்த்தனமாய் ராமஜெயம் பாடும் அனுமனே
தஞ்சம் அடைந்தவரை தாயாகக் காத்திட
  தயங்காமல் வருகின்ற ஆஞ்சநேயனே
நெஞ்சுருகி ராமசங்கீத்தனம் ஒலிக்குமிடமெலாம்
  நெகிழ்ந்து கேட்டுஉருகும் சிரஞ்சீவியே
பஞ்சசெனப் பறக்கும் பிறவித் துயரெலாம்
  பக்தியோடு உன்னைச் சரணடைந்திடவே!

புதன், 15 ஏப்ரல், 2015

வேங்கடவா அழைப்பாயே!



திருமண்ணால் கண்மறைத்து திருமலையில் நின்றிருக்கும்
  திருப்பதி பெருமானே திருகோவிந்த ராஜனே
வரும் பக்தர்கள் விணையெலாம் தீர்த்திடுவாய்
  வரதனாய் ஏழுமலையில் வராகமாய் நிற்பவனே
கரவறையில் கணநேரக் காட்சியில் கரைத்திடுவாய்
  கருமேனித் திருமகனே கலியுக தெய்வமே
விரும்பிவந்து உனைக்காண விரும்பினாலும் நீ அழைக்காமல்
  வெறும்முயற்சி பலனில்லை வேங்கடவா எனை அழைப்பாயோ!

வெற்றிவேல்



சரவண பவனே செந்தூரின் சண்முகனே
  சூலத்தான் திருமகனே சூரனை வென்றவனே
அரவம் மிதித்து ஆடுகின்ற மயிலாக்கி
  அழகிய கொடியில் அகவும் சேவலாக்கி
பரவும் கடலருகே பரம்பொருளாகி நிற்பவனே
  படையும் திருவேலும் பாங்குடன் தண்டமும்
கரம்தொட்டு உமா தேவி கொஞ்சும் கார்த்திகேயனே
  குறமகள் வள்ளியோடு குலமகள் தேவயானையோடு
விரதசஷ்டி நாயகனே விரும்பிவரும் அடியார்க்கு

  வரம்தந்து காத்திடும் வெற்றிவேல் முருகனே!

மலைமகள் துர்கா



பிடரியுடன் சிம்மம் பின்புறம் வாகனமாக
  பட்டான எண்கரங்கள் பல்வேறு ஆயுதம்தாங்க
குடத்தோடு பொற்கலசம் குவிக்கும் அபயகரம்
  குங்கும வண்ணஆடை குலுங்கும் வளைக்கரங்கள்
வடம்தொட்ட தேர்என விளங்கும் பேரழகு
  வேல்விழிகள் கருணையோடு வீபூதிதிலகம் எழில்நெற்றி
தடம்காட்டும் தாயாகிய தரணீ ஆன்ம தவசூலி
  தாள்பணியும் எந்தனை தயைகாட்டி அருள்வாயே!

அலையரசி



இருகையில் செந்தாமரை இனிதாக வீற்றிருக்கும்
  இளம்சிவப்பு பட்டாடை எழிலுக்கு எழிலூட்டும்
ஒருகை பொன்மாரி ஒயாமல் பொழிந்திருக்கும்
  ஒளிவீசி மறுகை ஒப்பிலா அபயம்தரும்
கருமேகக் கூந்தல் களிப்போடு விரிந்தாடும்
  கனிவான கண்ணிரண்டு கருணை மழைபொழியும்
திருமால் மார்பினில் திருவாக வீற்றிருப்பவளே

  திருமகளே நின்பார்வை தாயாகி கனிந்தருளே!

கலைவாணி



கலையாகி நீ வருவாய்
  கைகளில் வீணை ஏந்திடுவாய்
விலையிலா கல்வி செல்வமதை
  விரும்பினால் நீ அருள்வாய்
மலையருவி அருகே வீற்றிருப்பாய்
  மயிலருகே ஆடிவர அமர்ந்திருப்பாய்
ஒலைச் சுவடி தாங்கி நிற்பாய்
  ஒதும் ஜபமாலை கொண்டிருப்பாய்
தலையான செல்வம் நீ அருளிட
  துலங்கும் இகபர வாழ்வுதானே!

திங்கள், 13 ஏப்ரல், 2015

வைஷ்ணவோ தேவி



வெம்புலி மீதமர்ந்து விழிகள் கருணைசிந்த
  வில்லோடு சூலமும் விளங்கு கதையோடு கட்கமும்
தும்பைவெண் சங்கமும் திகிரியெனச்சுழலும் சக்கரமும்
  தாமரை மலரும் தந்திடும் அபயமும் கொண்டு
செம்மை ஆடையிலே சிவந்தஎண் கரங்களோடு
  செந்தூரப் பொட்டும் செவ்வாயில் புன்னகையும்கூட
தம்முடியில் கீரிடமும் தவழும் பொன்னாரமும்மின்ன
  தளிர்பாதம் காட்டி தாங்கவந்த தேவியே
அம்மையே வைஷ்ணவி அழகிய ஜெயமாதா
  அலைகடல் நாயகியே அனைவரையும் காத்திட
இமயத்துப் பனியிலே இருந்து அருள்பவளே
  இன்று உன்னை சரணடைந்தோம் இனிஎன்றும்
                       எம்மை ஏற்றருள் வாயே!

முனீஸ்வரன்



தலைப் பாகையும் துள்ளிடும் சூலமும்
  தாங்கிய தண்டமும் சின் முத்திரையும்
மலையென கம்பீரமும் மருட்டும் மீசையும்
  முன்னெற்றியில் திருநீறும் குங்குமமும்
கலையாக உத்திராட்சமும் கண்களில் கருணையும்
  கால்களை மடித்து காலமெலாம் அமர்ந்து
சிலையாக இருந்து சீரோடு எமை காக்கும்
  சினமிகு முனீஸ்வரனே சிந்தையால் வணங்குவனே!

சரவணபவ



அந்த ஆறெழுத்து மந்திரம்
  அனைத்து வினைகளையும் மாற்றிடும்
கந்தன் தன்னோடு இணைந்தது
  காம குரோத முதலான ஆறுஉட்பகை
விந்தையான வேல்என அழித்திடும்
  விலையிலா மனச்சாந்தி ஆனந்தம்
தந்திடும் 'சரவணபவ' என்றாலே
  தவமேதும் தேவையிலை தரணியிலே!

ஸ்ரீ ஐயப்பன்



எந்தன் வினையெல்லாம் எங்கோ விரட்டிட
  எழுகின்ற பிறைநிலவே எந்தன் ஐயப்பா
தந்தையாக அரனும் தாயாக ஹரியும் செய்
  தவமாக தரணியில் வந்தெழுந்த சுதனே
சொந்தமாக பொன்னம்பல மேட்டினில்
  சுடராக எழுகின்ற மகர சோதியே
பந்தபாசம் நீக்கி நின் பாதங்கள் சரணடைய
  பம்பையில் ஆடும் பாலனே பரிவோடு என்னை ஏற்றருள்க!

ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

மன்மத ஆண்டு வாழ்த்துக்கள்!



சித்திரையின் அற்புதம் செவ்வாழை மாபலா
  சீரான முக்கனிகள் சொல்லும் நாட்டுவளம்
முத்தான புத்தாண்டு "மன்மத" பெயர்கொண்டு
  முன்வரும் ஒளிவீசி முன்னோர்கள் வகுத்தபடி
சத்தான உணவுகள் சமைத்தலில் பலவகைகள்
  சொல்லில் அடங்கா சுவைகூட்டும் காய்கறிகள்
அத்தனையும் எடுத்து அழகாக அலங்கரித்து
  அனைவரும் ஒன்றுகூடி ஆடிமகிழும் புத்தாண்டு

பூத்திடும் புதுமைகள் பொலிவுடன் தோன்றிடும்
  படைத்திட துடிக்கும் பறபறக்கும் இளையவர்கள்
நித்தம் வழிகாட்டும் நீண்டஅனுபவ முதியோர்கள்
  நீக்கிடும் பழமைகளை நாடும் புதியவைகளை
சித்தமதில் கொண்டிடுக சீர்பெறும் நாட்டினை
  சின்னஞ் சிறுபணியும் செலுத்தும் நல்வழியே
கொத்தாக மலர்வோம் குணத்தால் பெருகுவோம்
  கோடிகோடி நன்மைகள் கூட்டிவரும் பத்தாண்டே!
அனைவருக்கும் மன்மதவருட தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

சனி, 11 ஏப்ரல், 2015

இளங்கன்றே



கன்றோடு விளையாடும் கருநீல மணியே
  கலையான தலைமுடியில் கண்கவரும் மயிலிறகே
ஒன்றாக இணைந்து ஒளிவிடும் பொற்கிரீடமே
  ஒய்யார நெற்றியில் ஒளிர்கின்ற திலகமே
புன்னகை பூத்திருக்கும் புதுமலர் இதழ்களே
  பொலிகின்ற முகமதில் பூரிக்கும் விழிகளே
சின்னக் குழந்தையாகி சிரித்திடும் கண்ணனே
  சீரான அஷ்டமியில் சிந்தையில் வந்தருள்க!

ராகு பகவான்



கருமை நிறமும் கருநாகக் குடையும்
  கோமேதக அணியும் கோலநீல ஆடையும்
உருமும் சிம்மமும் உயர்வான வாகனமாய்
  உளுந்தின் உள்ளிருந்து உயர்மந்தாரை மலரணிந்து
விரும்பும் நட்பாக விளங்குகன்னி மிதுனதுலாம்
  வளமைதரும் பசுவினம் வாழ்விக்கும் அதிதேவதை
இருபுறமும் தேவியர் இருந்து அருள்புரிய
  இடர்நீக்கி இன்னருள்தரும் ராகுவை பணிவோமே!